AI உலகின் 'பிளாக் பாக்ஸ்' மர்மம் - சுந்தர் பிச்சையின் பயத்துக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
'பிளாக் பாக்ஸ்' என்றதும் உங்கள் மனதில் முதலில் தோன்றுவது எது?
விமானத்தில் விபத்து ஏற்பட்டால், கடைசி நேரத்தில் விமானத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவும் Flight Recorder-ஐ 'பிளாக் பாக்ஸ்' என்பார்கள். இந்தச் சொல்லை நாம் அடிக்கடி செய்திகளின் வழியே கடந்து வந்திருப்போம்.
அல்லது மேஜிக் ஷோவில் மாயாஜாலங்கள் செய்ய பயன்படுத்தும் ஒரு கருப்பு பெட்டி உங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக இருக்கும் AI உலகில் இந்த பிளாக் பாக்ஸ் என்ற பெயருக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது.
இது பற்றி பேசிய கூகுளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, உங்களால் உருவாக்கப்பட்ட ஒரு புரோகிராம், நீங்கள் எதிர்பார்க்காத பதிலை அளிப்பது தான் பிளாக் பாக்ஸ் என்று விளக்கமளித்தார்.
கூகுளின் பிளாக் பாக்ஸ்

பட மூலாதாரம், Getty Images
கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) டெவலப்பர்கள், புரோகிராம் எழுதும் போது சமீபத்தில் மர்மமான பிளாக் பாக்ஸை கண்டனர்.
AI மென்மொருள் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, அந்த புரோகிராம் எதிர்பாராத விதமாக புதிய மொழியைப் புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றது.
கூகுளின் AI பிரிவின் தலைவர் ஜேம்ஸ் மேனகா, CBS-இன் சமீபத்திய ஒளிபரப்பில் அளித்த பேட்டியில், "மிகக் குறைந்த அளவிலான பெங்காலி மொழியை நாங்கள் AIயிடம் பதிவேற்றம் செய்தோம். ஆனால் அந்த புரோகிராம் பலமடங்கு அதிகமாக முழு பெங்காலியை மொழியையும் புரிந்துக் கொள்ள தொடங்கியது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்," என்றார்.
AI தொழில்நுட்பத்திடம் நாம் ஒரு புரோகிராமை குறிப்பிட்ட ஒரு செயலுக்காக தயார் செய்து அப்லோட் செய்கிறொம். ஆனால் அந்த செயலின் வழியாக நாம் தராத தரவுகளை வைத்து ஒரு புதிய செயலை AI தானாக செய்யத் தொடங்குவதை மென்பொருள் பொறியாளர்கள் பிளாக் பாக்ஸ் என்று அழைக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு ரோபோவிடம் நீங்கள், தண்ணீர் எடுத்து வரச் சொல்லி கட்டளை இடுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு சளி, இருமல் இருப்பதை கண்டறியும் அந்த ரோபோ, தண்ணீரை சுட வைத்து உங்களுக்கு தருவது தான் பிளாக் பாக்ஸ்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அண்மையில் அதிகமாகியுள்ளது. Google Bard, Microsoft ChatGPT போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சாட்பாட்களை உருவாக்க பெரிய தொகையை முதலீடு செய்கின்றன. இதில் தானும் இணைய உள்ளதாக ஈலோன் மஸ்க் சமீபத்தில் அறிவித்தார்.
அதே நேரத்தில், ஒரு தொழில்நுட்பம் அதை உருவாக்கியவர்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அந்த தொழில்நுட்பம் தானாக கற்று செய்யத் தொடங்கும் செயல்களை யார் கட்டுப்படுத்த முடியும் என்ற அச்சத்தை பல AI வல்லுநர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
அதன் சமீபத்திய எபிசோட் தான் பிளாக் பாக்ஸ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் உருவாக்கிய இரண்டு AI ஒன்றுடன் ஒன்று பேச முயற்சி செய்தது. இதையொட்டி சில காலம் வரை அந்த ஆய்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஒயிட் பாக்ஸ்

பட மூலாதாரம், Getty Images
பிளாக் பாக்ஸ் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதமாக செயல்படுவது தான் 'ஒயிட் பாக்ஸ்' என்று AI வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தொழில்நுட்ப நிறுவனமான ப்ளூரல் நிறுவனத்தின் இணை நிறுவனரும், 'The Status of AI Reports' என்ற புத்தகத்தின் ஆசிரியருமான இயன் ஹோகார்த் பிபிசியிடம் பேசிய போது ஒயிட் பாக்ஸ் குறித்து விளக்கினார்.
"ஒரு மென்பொருள் வல்லுநர், ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கும் போது அவர் செய்ய சொல்லும் செயலை அப்படியே செய்து அவுட்புட் கொடுப்பதை ஒயிட் பாக்ஸ் என்று அழைக்கிறார்கள்," என இயன் ஹோகார்த் கூறினார்.
உதாரணமாக ஜனவரி மாதத்தில் எத்தனை நாள் என கண்டுபிடிக்க புரோகிராம் செய்தால் அதன் விடை 31ஆக இருக்கும்.
"ஆனால் AI உலகில், ஒயிட் பாக்ஸ் என்பது மிகவும் வேறுபட்டவை. அவை பல வழிகளில் பிளாக் பாக்ஸ் உடன் நெருக்கமான குணாதிசயங்களை கொண்டுள்ளன, ஏனெனில் உள்ளே என்ன நடக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது," என்று அவர் கூறுகிறார்.
சாதாரண முடிவுகளை பெற்றுத்தரும் வழக்கமான புரோகிராம் போல இல்லாமல், மனிதர்களின் சிந்தனை திறனை ஒத்த முடிவுகளை பெற AI பொறியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த செயற்கை நுண்ணறிவின் அமைப்பு மனிதர்களின் மூளை நரம்பியல் மண்டலத்தை போல பல லட்சம் அடுக்குகளாக செயல்படும்.
பங்குச் சந்தைகளில் விலைகளைக் கணிக்க மெஷின் லேர்னிங்கை பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான ஜி-ரிசர்ச்சின் மேலாளர் டேவிட் ஸ்டெர்ன், "சமீபத்திய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றம் என்பது தரவுகள் சார்ந்த பிளாக் பாக்ஸ் ஆய்வு," என்று எச்சரிக்கிறார்.
நியூரல் நெட்வெர்க் முறையில், AI புரோகிராம்களுக்கு தரவுகளை வழங்கி பயிற்றுவிப்பது பல லட்சம் அம்சங்களை உள்ளடக்கியது. அதை மிகச்சாதாரணமாக செய்ய முடியாது.
மற்றொரு முக்கியமான ட்ரெண்ட், "deep reinforcement learning" என்று அழைக்கப்படுகிறது. இதன் முலம் புரோகிராமை உருவாக்கும் நபர், அந்த AI எப்படி சில அம்சங்களை கற்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லித்தருவார். அதன் வெளிப்பாடாக அந்த AI அமைப்பு தானாக சோதித்து கற்றுக் கொள்ளும். அதன் கற்றல் திசை சீராக செல்கிறதா என்பதை மட்டும் கண்காணித்தால் போதுமானது.
இத்தகைய டீப் லேர்னிங் AI மாடல் மூலமாக மனித மூளையை விட பல மடங்கு கடினமான அடுக்குகளை உருவாக்கி பல லட்சம் கோடி செயல்களை ஒரே நேரத்தில் துல்லியமாக செய்ய முடியும் என பொறியாளர்கள் நம்புகின்றனர்.
AI அமைப்பின் வளர்ச்சி கவலை அளிக்கக்கூடியதா?

பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய இண்டெர்நெட் ட்ரெண்டான ChatGPT, Bard போன்ற சாட்பாட்கள் நமக்கு எளிமையான தொழில்நுட்பமாக தெரியலாம். ஆனால் இதன் கற்றல் 2012இல் தொடங்கியது. இத்தனை ஆண்டுகளாக இந்த AI அமைப்பு பல மாடல்கள் மூலம் நமது தேடுதலுக்கான விடையை கொண்டு வந்து தருகிறது, என்கிறார் இயான் ஹோக்வெர்த்.
சமீபத்திய இந்த ரோபோக்களின் வளர்ச்சி சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அக்கறை பலருக்கும் உள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் தனிநபர்களின் தகவல் பாதுகாப்பு, வேலை இழப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் ஏற்பட காரணமாக இருக்குமோ என்ற கவலையை சிலர் முன்வைக்கின்றனர்.
CBSஇன் நிகழ்ச்சியில் கூகுளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
Bard போன்ற கூகுளின் பொருட்களை உருவாக்கிய மென்பொருள் வல்லுநர்களால் கூட பிளாக் பாக்ஸ் குறித்து இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை எனில், அவை பாதுக்காப்பானதா என்று கேட்கப்பட்டது.
நான் இந்த கேள்விக்கு இப்படி பதிலளிக்கிறேன். இப்போது வரை மனித முளையின் செயல்பாடு குறித்தும் நமக்கு முழுமையாக தெரியவரவில்லை, என்று சுந்தர் பிச்சை கூறினார்.
AI தொழில்நுட்பம் அதன் தொடக்க நிலையில் இருக்கிறது. அதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள கொஞ்ச காலம் ஆகும். ஆனால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என அவர் நம்புகிறார்.
AI மாடல்களை உருவாக்குவதில் பொறியாளர்கள் பங்கு மட்டுமின்றி, சமூக விஞ்ஞானிகள், நெறியாளர்கள், தத்துவவாதிகள் என பலரையும் உள்ளடக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமது சமூகத்தின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்று அனைத்து தரப்பினரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று CBS நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












