ஈலோன் மஸ்க் பிபிசி பேட்டி: நரேந்திர மோதி குறித்த டாக்குமென்டரியை டிவிட்டரில் இருந்து நீக்கியது ஏன்?

elon interview
    • எழுதியவர், ஜேம்ஸ் க்ளேடன்
    • பதவி, வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்த பிபிசி டாக்குமெண்டரியின் சில பகுதிகளை டிவிட்டரில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து ட்விட்டரை அண்மையில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் வாங்கியவரான பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் பதில் அளித்துள்ளார்.

பிபிசிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இது பற்றிக் கூறிய அவர், டிவிட்டரை நடத்துவது “வலி மிகுந்த பணி” அது “ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வை போன்றது” என தெரிவித்த அவர், சரியான ஆள் கிடைத்தால் டிவிட்டரை விற்கவும் தயார் என்று கூறினார்.

இந்த நேர்காணல் டிவிட்டரின் தலைமையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகப்படியான நபர்களை பணியிலிருந்து நீக்கியது, போலி செய்திகள், ஈலோன் மஸ்கின் பணி வழக்கங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசப்பட்டது.

அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஈலோன் மஸ்க், கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார்.

டிவிட்டரை வாங்கியது குறித்து வருந்துகிறீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு, “இது ஏதோ ஒரு பார்ட்டிக்கு செல்வது போல அல்ல. அந்த வலி மிக அதிகம்.” என தெரிவித்தார்.

டிவிட்டரை நிர்வகிப்பது குறித்து கேட்டதற்கு, “அது சலிப்பாக இல்லை. அது ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வு” என தெரிவித்தார்.

“கடந்த பல மாதங்களாக அழுத்தம் நிறைந்துள்ளது” என்று தெரிவித்தாலும் நிறுவனத்தை வாங்கியது சரியான முடிவு என்றே தான் நினைப்பதாக மஸ்க் தெரிவித்தார்.

பிபிசி டாக்குமென்டரி பற்றி...

பிபிசி டாக்குமென்ட்ரி குறித்து பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்வியும், அதற்கு ஈலோன் மஸ்க் அளித்த பதிலும்:

பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் கிளேடன்: குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோதி மற்றும் அவரது தலைமை செயல்பட்ட விதம் குறித்து பிபிசி ஓர் ஆவணப்படம் (டாக்குமெண்டரி) தயாரித்துள்ளது. அந்த உள்ளடக்கத்தில் சில டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறோம். இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் அப்படி செய்யப்பட்டதா?

ஈலோன் மஸ்க்: அந்த சூழ்நிலை பற்றி எனக்குத் தெரியவில்லை. சமூக ஊடகங்களுக்கான விதிமுறைகள் இந்தியாவில் மிகவும் இறுக்கமானவை. அந்நாட்டின் சட்டங்களை மீறி நாம் செல்ல முடியாது. எங்கள் ஊழியர்கள் சிறைக்குச் செல்லவேண்டுமா? நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப நடக்கவேண்டுமா? என்று கேட்டால் நாங்கள் சட்டத்தை மதித்தே நடந்துகொள்வோம். பிபிசி விஷயத்திலும் இதுதான்.

அலுவலகத்தில் தூங்கவேண்டிய நிலை

மேலும் டிவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்த எலான் மஸ்க், அதிகப்படியான வேலை பளுவால் சில நேரங்களில் தான் அலுவலகத்தில் தூங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிவித்தார். “நூலகத்தில் நான் தூங்குவதற்கு என்று ஒரு இடம் உண்டு அங்கு யாரும் செல்ல மாட்டார்கள்.” என்றார்.

சில நேரங்களில் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை பதிவிடுவது குறித்து கேட்டதற்கு, “நான் அதிகாலை 3க்கு பிறகு டிவீட் செய்யக்கூடாது என நினைக்கிறேன்” என்றார்.

பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து கேட்டதற்கு, “பொதுவாக பிபிசி, அரசு ஊடகம் என சொல்வதை விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியும்” என்றார்

இந்த வாரத் தொடக்கத்தில், பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்ய வேண்டும்” என பிபிசி டிவிட்டரிடம் கேட்டுக் கொண்டது.

“பிபிசி எப்போதும் சுதந்திரமாக செயல்படும். பிரிட்டன் மக்கள் செலுத்தும் அனுமதி கட்டணத்திலிருந்தே பிபிசிக்கு நிதி வருகிறது.” என பிபிசி தெரிவித்திருந்தது.

பிபிசியின் அடையாளத்தில் “வெளிப்படையான நிதி” என டிவிட்டர் மாற்ற முயன்றதாக தெரிவித்த ஈலோன் மஸ்க் “நாங்கள் முடிந்தவரை துள்ளியமாக இருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

“எனக்கு பிபிசியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்த மஸ்க், இந்த நேர்காணல் சில கேள்விகளை கேட்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் வித்தியாசமாக செய்யும் சில விஷயங்கள் குறித்து கருத்துகளை பெறுவதற்கு இது உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் டிவிட்டரில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை 1500ஆக குறைத்தது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்று தெரிவித்த ஈலோன் மஸ்க், தான் தனிப்பட்ட முறையில் யாரையும் பணியைவிட்டு நீக்கவில்லை என்று தெரிவித்தார். “ஒவ்வொரு ஊழியரிடமும் சென்று பேசுவது என்பது இயலாத ஒன்று” என அவர் தெரிவித்தார்.

ஈலோன் மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து அங்கு பணிபுரிந்த பொறியாளர்கள் பலர் பணியிலிருந்து சென்றதால் டிவிட்டரின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்தன.

டிவிட்டரில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த நேர்காணலில் எலான் மஸ்க் பேசினார். சில நேரங்களில் ஏற்படும் செயலிழப்புகள் குறித்து கேட்டதற்கு, அது நீண்ட காலத்திற்கு இல்லை என்றும் தற்போது சரியாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

சான் ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து நேரடியாக டிவிட்டர் ஸ்பேசஸில் ஒளிபரப்பான இந்த நேர்காணலில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் குறித்தும் பேசினார்.

தான் டிவிட்டரை வாங்கியதிலிருந்து போலிச் செய்திகள் குறைந்திருப்பதாகவும், பாட் என்று அழைக்கப்படும் தானியங்கு கணக்குகளை அழித்த தனது முயற்சியின் மூலம் போலிச் செய்திகள் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

elon musk

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இதனை பல நிபுணர்கள் மறுக்கின்றனர். ஈலோன் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு போலிச் செய்திகள் டிவிட்டரில் அதிகமாகியுள்ளன என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பத்திரிகையாளர்கள் நடுநிலையாக உண்மையை மட்டுமே பேசுபவர்களா என திரும்ப திரும்ப கேட்ட ஈலோன் மஸ்க், தனக்கு சாதாரண மக்கள் மீது அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்கு ப்ளூ டிக்குகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நேர்காணல் குறித்து பேசிய டிவிட்டரின் முன்னாள் நிர்வாகி ப்ரூஸ் டெய்ஸ்லி, இது எலான் மஸ்கின் வித்தியாசமான வாழ்க்கை குறித்த சில குறிப்புகளை தனக்கு தந்துள்ளதாக தெரிவித்தார். ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் எட்டு வருடங்களாக டிவிட்டரின் நிர்வாகத்தை கவனித்து கொண்டவர் ப்ரூஸ் டெய்ஸ்லி.

“பரிவர்த்தனைகளை சரிபார்க்க நீதிபதி கட்டாயப்படுத்துவார் என்பதற்காகதான் அவர் டிவிட்டரை வாங்கினார் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இதுவரை அந்த தகவலை அவர் ஒப்புக் கொண்டதில்லை. அது ஒரு விசித்திரமான நேர்காணல்.” என தெரிவித்த டெய்ஸ்லி, அவர் சொல்வதை எப்போதும் செய்பவர் அல்ல என்பது இந்த நேர்காணல் மூலம் தெரிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஈலோன் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 190 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அவர் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: