இரங்கல்: மாணிக்கவாசகம் -"இலங்கை தமிழ் ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவான்"

- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி தெற்காசிய ஆசிரியர்
மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு. அவருடன் பல காலம் பணி புரிந்த எங்களுக்கு நம்மிடையே அவர் இன்று இல்லை என்பது மிக துயரமான நிகழ்வு. அவருக்கு வயது 77.
இலங்கையின் இனப் போர் நடைபெற்ற போது, வவுனியா மற்றும் பிற தமிழ் பகுதிகளில் அச்சுறுத்தல், மிரட்டல், சிறைவாசம், இவற்றை கடந்து, உண்மையை பிபிசி வாயிலாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் காட்டிய முனைப்பு போற்றத்தக்கது.
தமிழ் பொதுமக்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், ஆட்கடத்தல், திட்டமிட்ட கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளை நடுநிலையோடு அவர் செய்திகளாக தந்த விதம், ஊடக உலகில் பணிபுரிய விரும்பும் இளம் வயதினருக்கு ஒரு பாடமாக இருக்கும்.
பிபிசியின் தமிழ் சேவைக்கு மட்டுமல்லாது, ஆங்கில வானொலி, இணைய தளம் மற்றும் தொலைக்காட்சிக்கு செய்திகள் மற்றும் ஆய்வினை வழங்கியுள்ளார் மாணிக்கவாசகம். அவர் உயிருக்கு பலமுறை அச்சுறுத்தல் விடப்பட்ட போதிலும், அவற்றை பொருட்படுத்தாது அவர் செய்திகளை தந்தது அவரின் அசாத்திய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு.
2001ஆம் ஆண்டு ஜனவரியில் நான் பிபிசியில் பணிபுரிய தொடங்கிய போது, ஒவ்வொரு நாளும் எங்களது முதல் வேலை, மாணிக்கவாசகம் அவர்களோடு தொடர்பு கொண்டு, அன்றைய இலங்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வதுதான். அவருடைய தொலை பேசி எண் எங்களுக்கு மனப்பாடம்.
புதிதாக பணியில் சேர்ந்த என்னை போன்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அவர் இலங்கை நிகழ்வுகளையும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொறுமையாக விளக்குவார்.
குறிப்பிட்ட செய்தியை எங்களுக்கு தெரிவிப்பதற்கு முன், அவற்றை சேகரிக்கவும் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும் பல மணி நேரம் செலவிட்டிருப்பார்.
அந்த கால கட்டத்தில் கிளிநொச்சி உட்பட வன்னி பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் விடுதலை புலிகள் வசம் இருந்தன. அந்த இடங்களுக்கு சென்று வர சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
தமிழ் பத்திரிகையாளர்கள் பெருபாலானோரை 'விடுதலை புலிகள் ஆதரவாளர்கள்' என ராணுவம் சந்தேகித்த காலம் அது. ஒரு முறை விடுதலை புலிகள் பகுதிக்கு சென்று வந்த பின் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும், கண்காணிப்பும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி மாணிக்கவாசம் அவர்கள் செய்தி தந்த விதம் அவரின் நெஞ்சுறுதிக்கு எடுத்துக்காட்டு.

பிரசித்தி பெற்ற மடு மாதா ஆலய தாக்குதல், கடற் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள், மருத்துவ வசதி இன்றி மக்கள் பட்ட இன்னல்கள், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் சந்திக்கும் இன்னல்கள் போன்ற நிகழ்வுகளை தனி ஒரு செய்தியாளராக மாணிக்கவாசகம் பல வருடங்கள் தொடர்ந்து வெளிக்கொணர்ந்தார்.
இலங்கையின் வடக்கே நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களை அவர் செய்தியாக கொண்டு வந்தது சில அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு பிடிக்கவில்லை.
பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சில தினங்கள் சிறையிலும் இருந்தார்.
2005ல் நானும் அவரும் கிளிநொச்சி சென்ற போது என்னுடைய பாதுகாப்பில் மிக கவனமாய் இருந்தார். பி பி சி பணிகளை அவர் முடித்த போதும், நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். சில வருடங்களுக்கு முன் கிளிநொச்சி, மன்னார் என பல இடங்களுக்கு சென்று போர் நடைபெற்ற போது அப்பகுதிகள் எவ்வாறு இருந்தன என்று நினைவுகூர்ந்தோம்.
மே 2009ல் போர் முடிந்த பின் இடம் பெயர்ந்தோரின் இன்னல்கள், ராணுவ ஆக்ரமிப்பு, சண்டையில் காணாமல் போனோர், சரணடைந்த கைதிகளின் நிலை என பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து செய்திகளை தந்தார்.
சிறையில் இருந்த இரு தமிழ்க் கைதிகளுடன் அவர் தொலை பேசியில் பேசியதற்காக 2013ல் பயங்கரவாத புலனாய்வு துறை அவரை நேரில் வருமாறு பணித்தது. இதற்கு உலக ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பட மூலாதாரம், Getty Images
2009ல் போர் முழு மூச்சில் நடை பெற்ற சமயத்தில், பன்னாட்டு ஊடகவியலாளர் குழு ஒன்றினை இலங்கை அரசு யாழ்ப்பாணத்த்திற்கு கொண்டு சென்றது.
ராணுவ விமானத்தில் ஏறுவதற்கு வரிசையில் காத்திருக்கையில், எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இன்னொரு பத்திரிகையாளருடன் பேசிக் கொண்டிருந்தார்.
"பிரத்தியேக போர் செய்திகளை பிபிசி மட்டும் எப்படி உடனுக்குடன் வழங்குகிறது' என அப்பத்திரிகையாளர் வினவ, அதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பெண் பத்திரிகையாளர், "பிபிசி க்கு, மானிக்ஸ் என்ற செய்தியாளர் வவுனியாவில் இருக்கிறார். வடக்கில் அவருக்கு நல்ல தொடர்புகள் இருக்கின்றன. அவர் மூலமாகதான் அனைத்து செய்திகளும் வருகின்றன" என்றார். இதை நான் மாணிக்கவாசகம் அவர்களுக்கு தெரிவித்த போது மிக மகிழ்ந்தார்.
என்னதான் போர் நிலவரம் இருந்தாலும், ஊடகவியலாளர் உரிமைகள் பறி போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் மாணிக்கவாசகம். தாக்குதல் மற்றும் அச்சறுத்தல் விடப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்து பல்வேறு வகைககளில், தன்னுடைய தொடர்புகளின் மூலம் பன்னாட்டு கவனத்தை ஈர்த்தவர் அவர்.

பட மூலாதாரம், Getty Images
மாணிக்கவாசகம் அவர்களின் பங்களிப்பை நான் ஏன் இவ்வளவு முக்கியமாக குறிப்பிடுகிறேன் என்றால், இலங்கை இனப் போரினை முன்னணி வரிசையில் நின்று பார்த்தவர் அவர். அவருடைய, வானொலி மற்றும் இணையை செய்திகளை தொடர்ந்து கேட்டிருந்தால் போரின் வரலாறும், முடிவும் தெரியும்.
பி பி சிக்கு அவர் செய்திகளை தந்தது ஒரு புறம். ஆனால், அவர் பல மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் வெளிக் கொண்டு வர ஆங்கில பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை குழுக்களுக்கு பின்னணியில் இருந்து அனைத்து தகவல்களையும் வழங்கியவர். மனித உரிமை மீறல்கள் தொடர்பான என்னுடைய பல ஆங்கில கட்டுரைகள் மற்றும், தொலைக் காட்சி பெட்டகங்களுக்கு அவர்தான் பின்னணி.
போரில் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கையில், சர்வதேச மனித நேய அமைப்புக்கள் அடிப்படை உதவிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழங்குகின்றன என்ற சேதியை கொடுத்தபோது, மற்ற உலக, இலங்கை இந்திய நிகழ்வுகள் காரணமாக இன்றைய நிகழ்ச்சியில் சேர்க்க முடியவில்லை என்ற போது, "போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதிகம் கேட்பது பி பி சி செய்தியைத்தான். இந்த செய்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவியாய் இருக்கும்," என அவர் வலியுறுத்திய போது பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக எப்படி முனைப்பாக இருக்கிறார் என்பது புரிய வந்தது. அவருடன் இலங்கையில் வடக்கில் பயணம் செய்யும் போது அவர் தமிழ் மக்களிடையே எப்படி ஒரு பிரபலமான நபர் என்பது விளங்கியது.
நான் பி பி சி தமிழோசையை விட்டு விலகி ஆங்கில செய்தி துறைக்கு சென்ற போதும், தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்தார். தவிர, என்னுடைய கட்டுரைகள், தொலைக் காட்சி பெட்டகங்களை கண்டு பாராட்டுவார், ஊக்கம் கொடுப்பார். இலங்கை இனப்போர் செய்தி தொகுப்பில் மானிக்ஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
கடைசியாக அவரை வவுனியாவில் அவரது இல்லத்தில் சந்தித்தது டிசம்பர் 2021. சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வந்தார். கோவிட் பெருந்தொற்று காலம் அது. அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நினைக்கவில்லை.
மாணிக்கவாசகம் அவர்களிடம் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு எல்லாம் ஓர் அகல் விளக்காக, கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். அவரது பத்திரிகை துறை தாண்டி அவரது மனித நேயம் போற்றத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். யாராவது இலங்கையின் வடக்கு செல்ல வேண்டுமானால் அவரைத்தான் முதலில் தொடர்பு கொள்வோம். "நீங்கள் அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்.
சில வருடங்களுக்கு முன், உடல்நல குறை ஏற்படுவதற்கு முன் வரை, சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு எனலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












