ஆன்லைன் ரம்மி தடை மசோதா சர்ச்சையால் ஆளுநர் ரவி மீது பிரதமர் மோதி அதிருப்தியா?

- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்து விட்டபோதிலும், அந்த ஒப்புதல் கிடைத்த கால கட்டம் புதிய சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதுவரை மசோதாவுக்கு எதிரான சமிக்ஞைகளை காட்டிக் கொண்டிருந்த ஆளுநர், திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒப்புதல் கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான நெருக்கடியுடன், ஆளுநர் மீதான பிரதமர் மோதியின் அதிருப்தியும் சேர்ந்து கொண்டதே இதற்குக் காரணம் என்ற கருத்து வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆளுநர் மாற்றமும் அரங்கேற, புதிதாக பதவியேற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கும் பல விஷயங்களில் முரண்பாடுகள் காணப்பட்டன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
நீட் விலக்கு, கூட்டுறவுச் சங்க தலைவர் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைப்பது, தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிப்பது என பல்வேறு மசோதாக்கள் அவற்றில் அடக்கம்.
கடந்த வாரம் வரையிலும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவும் அந்த பட்டியலில்தான் இருந்தது. ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதலை புதிய உச்சத்திற்கு சென்றதில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆன்லைன் ரம்மியை அடிப்படையாக வைத்து நடந்த தற்கொலைகள், அதனை தடை செய்தே தீர வேண்டிய நெருக்கடியை மாநில அரசுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தன.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா மீது முடிவெடுக்காமல் கால தாமதம்
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத் திருத்தத்தை 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசு புதிய சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆளுநர் ஒப்புதலுடன் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.
அதேநேரத்தில் ஆன்லைன் ரம்மியை நிரந்தரமாக தடை செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, அந்த கமிட்டி தந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு வரைவு செய்தது.
2022 அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 26ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த தடையை நிரந்தரமாக்க வகை செய்யும் இந்த மசோதாவுக்கும் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து பதிலேதும் வரவே இல்லை.

அதிகரித்த தற்கொலைகள் - மக்கள் அதிருப்தி
சட்டப்பேரவை கூடிய 6 வாரங்களுக்குள் அவசர சட்டம் முறையான சட்டமாகாவிட்டால் அவசர சட்டம் காலாவதியாகிவிடும் என்ற விதிப்படி ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது.
இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தங்குதடையின்றி விளையாடும் நிலை ஏற்பட்டது.
'ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள் பணத்தை வெல்லுங்கள்' என்பது போன்ற வாசகங்களுடன் பளபளக்கும் உடையில் நட்சத்திரங்கள் அணிவகுக்க, ஆன்லைன் ரம்மி மோகம் மீண்டும் அதிகரித்தது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கின.
ஒரு குடும்பத்தையே தலைகீழாக மாற்றிப் போடக் கூடிய இந்த ஒவ்வொரு தற்கொலைகளும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் உறுதிப்படுத்தின.
அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஆன்லைன் ரம்மி தடைக்காக குரல் கொடுக்க, மாநில அரசோ, ஆளுநர் மாளிகையின் பதிலை எதிர்பார்த்திருந்தது. ஆளுநர் மாளிகையோ மெளனத்தையே பதிலாக அளித்தது.

பட மூலாதாரம், FANATIC STUDIO VIA GETTY IMAGES
மசோதாவை முதல் முறையாக நிராகரித்த ஆளுநர்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில்தான், பல மாதங்களாக பரிசீலனையில் வைத்திருந்த மசோதாவை ஆளுநர் பிறகு திருப்பி அனுப்பினார்.
அதற்கு அவர் முன்வைத்த காரணங்களில் ஒன்றாக அரசு வட்டாரங்கள் மூலம் வெளிவந்த தகவல் பிரதானமானது.
இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது என்பதே.
இதனால், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசோ, அதே மசோதாவை எந்தவொரு மாற்றமும் இன்றி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
மக்களவையில் மத்திய அமைச்சர் பதிலால் புது உத்வேகம்
மக்களவையில் மாநில அரசின் அதிகார வரம்பு தொடர்பாக, திமுக உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அரசு, "பந்தயம் மற்றும் சூதாட்டம்" என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-இன் 34ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது." என்று குறிப்பிட்டார்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை முதல் முறை நிராகரிக்க ஆளுநர் முன்வைத்த காரணத்திற்கு முரணாக மத்திய அமைச்சரின் பதில் அமைந்தது. இதனால், ஆளுநர் இனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்தது. ஏனெனில், சட்டப்பேரவையில் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே தீர வேண்டும் என்பது அரசியல் சாசன விதி.

பட மூலாதாரம், ANI
"நிலுவையில் வைத்தால் நிராகரிப்பு என்று பொருள்" - ஆளுநர் பேச்சு
ஆனால், ஆளுநர் தரப்பில் இருந்து வேறு மாதிரியான சமிக்ஞைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றில், கடந்த வியாழக்கிழமை இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் உரையாடுகையில் ஆளுநர் ஆர்.என். ரவி, "நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம்" என்றார்.
அவரது இந்தப் பேச்சு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் - நிதி விதிமீறல் புகார்

அதன் தொடர்ச்சியாக, கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆளுநர் மீது பல நிதி விதிமீறல் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தினார். அக்ஷயபாத்ரா என்ற காரணத்தைச் சொல்லி ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதற்கு என்றே தெரியாமல் சுமார் 11 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வேளையில்தான், அன்று மாலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுத்து விட்டதாக தகவல் வெளியானது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பும் அதனை உறுதிப்படுத்தியது.

மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தது எப்போது?
இதையடுத்து சமூக வலைதளங்களில், காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக பலரும் கூற ஆரம்பித்தனர்.
ஆனால், இந்த மசோதாவுக்கு தான் மூன்று நாட்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்து விட்டதாக பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவைப் பொருத்தவரையிலும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே தமிழ்நாடு அரசியலில் விவாதத்திற்குரியதாகவே இருந்து வந்துள்ளது.
மசோதா மீது முடிவெடுக்காமல் கால தாமதம் செய்தது, முதல் முறை மசோதாவை நிராகரித்தது, மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இரண்டாவது முறை அனுப்பிய போதும் மவுனம் காத்தது, நிலுவையில் வைத்தால் நிராகரித்ததாக பொருள் என்று பேசியது என்று ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாயின. மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது எப்போது என்பதிலும் கூட சர்ச்சைகள் எழுந்தன.

"ஆளுநர் ரவியை பிரதமர் மோதி கண்டித்தார்" - பத்திரிகையாளர் ஷ்யாம்
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை முன்னிறுத்தி இத்தனை சர்ச்சைகள் ஏன்? எதிரான சமிக்ஞைகளை கொடுத்துக் கொண்டிருந்த ஆளுநர் திடீரென மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பிபிசி தமிழ் தரப்பில் பேசினோம்.
"தமிழ்நாடு அரசு தரப்பில் மட்டுமின்றி மத்திய அரசு தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதன் விளைவாகவே ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகமே ஆளுநரை கடிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால்தான், பிரதமரின் தமிழ்நாடு வருகையின் போது கூட, அவரை சந்திக்கும் ஆளுநரின் முயற்சி ஈடேறவில்லை. மசோதாவை நிலுவையில் வைத்ததும், நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு சமம் என்ற அவரது பேச்சும் தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்கி விட்டதாக மத்திய அரசு கருதுகிறது" என்று அவர் கூறினார்.
"ஆளுநர் ரகசிய காப்புப் பிரமாண உறுதிமொழியை மீறுகிறார்"

பட மூலாதாரம், THARASU SHYAM
அவர் மேலும் கூறுகையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரம்புகளை மீறி பேசி வருகிறார். குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுடன் அவர் உரையாடுவதால் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? இதையெல்லாம் தாண்டி, குடிமைப்பணி நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் பட்டியல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். அது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எப்படி கிடைத்தது? யு.பி.எஸ்.சி. சார்பில் அவரிடம் கொடுக்கப்பட்டதா? இந்த கலந்துரையாடல் மூலம் அந்த மாணவர்கள் யார் என்ற ரகசியம் வெளிப்பட்டு விடாதா?" என்ற கேள்வியும் எழுவதாக குறிப்பிட்டார்.
"குடிமைப் பணி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை 5 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், நிதியை கையாள்வதில் ஆளுநர் விதிகளை மீறியிருப்பதையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரத்தில், ஆளுநருக்கு அரசியல் ரீதியாகவும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுக்கு தலைமையேற்றுள்ள திமுக நெருக்கடி கொடுத்து வருகிறது. குடியரசு தலைவரிடம் அவர் மீது புகார் அளித்திருப்பதுடன், நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் சார்பாக தனிநபர் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையெல்லாம் தாண்டி, உச்சநீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுப்பது நல்லது." என்று பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












