ஆளுநர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது எப்போது?

ஆளுநர் ரவி
படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர் (கோப்புப்படம்)

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பாகவே அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தமிழ்நாடு அரசு இன்று மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு முதல்வர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின்போது, இந்த மாமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் நல்விளைவாக, ஆளுநர் இன்று மாலை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சட்டம் இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மசோதா

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் அதற்காக கடன் வாங்கி, அந்தக் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து முந்தைய அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு அமைத்தது. அந்தக் குழு 2022ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி 71 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

அதன்பிறகு, மாநில அமைச்சரவை செப்டம்பர் 26ஆம் தேதி இது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இதற்குப் பிறகு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா 2022ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேறியது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் கொடுத்த அவசர சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவை பல மாதங்களாக பரிசீலனையில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் பிறகு திருப்பி அனுப்பினார்.

இதற்குப் பிறகு அதே சட்டத்தை மாநில அரசு திரும்பவும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டங்களின் காரணமாக தற்கொலைசெய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அரசியல் கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அழுத்தம் தந்து வந்தன.

இந்த நிலையில்தான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி

ஒப்புதல் அளிக்கப்பட்டது எப்போது?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் குறித்து கடுமையான கருத்துகளை முன்வைத்தனர். இந்த நிலையில்தான் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த தகவல் வெளியானது.

இதையடுத்து சமூக வலைதளங்களில், காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக பலரும் கூற ஆரம்பித்தனர்.

ஆனால், இந்த மசோதாவுக்கு தான் மூன்று நாட்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்து விட்டதாக பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த நிலையில், அவரது கூற்றுக்கு முரணாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று மாலையே ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், Getty Images

தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத்தை பந்தயம் என வரையறுக்கிறது. மேலும், பணம் அல்லது பிற வகை கட்டண முறை மூலம் ஆடப்படும் ஆன்லைன் கேம்களை விளையாடுவதை அது உள்ளடக்கியுள்ளது.

இந்த கட்டண முறையில் மெய்நிகர் கிரெடிட்கள், டோக்கன்கள், பொருள்கள் அல்லது கேமில் வாங்கிய கட்டண மதிப்பு என அனைத்தும் உள்ளடக்கியிருக்கலாம்.

சில ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தடை செய்தல்: பணம் அல்லது பிற முதலீட்டை வைத்து விளையாடப்படும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் கேம்களை புதிய மசோதா தடை செய்கிறது.

போக்கர், ரம்மி ஆகியவை இதில் அடங்கும். பின்வரும் நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைச் சந்திக்கும் வாய்ப்புக்கான ஆன்லைன் கேம்களை இது வரையறுக்கிறது:

(i) திறனை விட வாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவது

(ii) கேம்கள் வாய்ப்பின் விளையாட்டுகளாக வழங்கப்படுவது

(iii) வாய்ப்பின் தன்மையை மிகையான திறமையால் மட்டுமே முறியடிக்க முடிவது

(iv) கேம்களில் சீட்டுகள், பகடை அல்லது ரேண்டம் நிகழ்வு ஜெனரேட்டர்களில் இயங்கும் அதிர்ஷ்ட சக்கரம் மூலம் ஆடுவது ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு கேமிங் ஆணையத்தை நிறுவுதல்: வாய்ப்புள்ள ஆன்லைன் கேம்களைக் கண்டறிந்து, தடைசெய்யப்பட்ட கேம்களின் அட்டவணையில் அவற்றைச் சேர்க்க மாநில அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். இந்த ஆணையம் கீழ்கண்ட அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

(i) மாநிலத்தில் செயல்பட உள்ளூர் ஆன்லைன் கேம் வழங்குநர்களுக்கு சான்றிதழ்களை வழங்குதல்

(ii) ஆன்லைன் கேம்களுக்கான நேர வரம்பு, பண வரம்பு மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்குதல்

(iii) தகவல்களைச் சேகரித்து பராமரித்தல் மற்றும் ஆன்லைன் கேம் வழங்குநர்களின் செயல்பாடுகள் தொடர்பான தரவை வைத்திருத்தல்

உள்ளூர் அல்லாத கேம் சேவை வழங்குநர்களின் கட்டுப்பாடு: தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள கேம் வழங்குநர்கள், மாநிலத்தில் உள்ள பயனர்களுக்கு தடை செய்யப்பட்ட கேம்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும்.

(i) ஆன்லைன் விளையாட்டில் பங்குபெறும் நபரின் இருப்பை உடல் ரீதியாக அவர் அங்குதான் இருக்கிறாரா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு விளையாட ஒப்பந்தம் செய்தல்

(ii) மாநிலத்தில் தங்கள் உடல் இருப்பை நிலைநாட்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்தல்

(iii ) ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சில ஆன்லைன் கேம்களை அரசு தடைசெய்கிறது என்று வருங்கால வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தல்

(iv) மாநிலத்தில் உடல் ரீதியாக விளையாட்டில் பங்கெடுக்கும் நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட கேம்களுக்கான அணுகல் இல்லை என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அபராதம்: தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்த விதிமுறைகள் உள்ளூர் அல்லாத கேம் வழங்குநரால் மீறப்பட்டால், மாநிலத்தில் உள்ள நபர்கள், அத்தகைய கேம்களை அணுகுவதைத் தடுக்குமாறு தமிழ்நாடு கேமிங் ஆணையம் மத்திய அரசை கேட்டுக் கொள்ளும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: