அண்ணாமலையை குறிப்பிட்டு நிலக்கரி சுரங்க ஏல ரத்து அறிவிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

பட மூலாதாரம், Twitter/ Pralhad Joshi
தஞ்சாவூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், ஏலத்தில் இருந்து டெல்டா பகுதிகளுக்கு விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளதாக நிலக்கரி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஏழாம் சுற்று ஏல அறிவிப்பில் இருந்து தமிழ்நாட்டின் மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
கூட்டாட்சி தத்துவத்தின் மாண்பைக் காக்கவும், தமிழ் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து அந்த குறிப்பிட்ட 3 சுரங்கங்களை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளேன்` என்று டிவீட் செய்துள்ளார். இதில் முதலமைச்சர் ஸ்டாலினையும் அவர் டேக் செய்துள்ளார்.
இந்த டிவீட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரி-டிவீட் செய்துள்ளார். அதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துனை நிற்பவர் பிரதமர் மோடி. தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
தமிழக அமைச்சர் விமர்சனம்
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம் பற்றியும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஒருமித்த எதிர்ப்பு குறித்தும் மத்திய அமைச்சர் குறிப்பிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், காவிரி டெல்டா பகுதியில் 3 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை ரத்து செய்யும் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் அறிவிப்பை உளமாற வரவேற்கிறோம். டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது முற்றிலும் தேவையற்றது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியது.
அதேவேளையில், தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம் குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒட்டுமொத்த எதிர்ப்பு குறித்தும் மத்திய அமைச்சர் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது. உண்மையில் தங்கள் நலனுக்காக யார் வேலை செய்கிறார்கள் என்பதும், பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது யார் என்பதும் மக்களுக்கு தெரியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பின்னணி என்ன?
நிலக்கரித் துறையில் ஆத்ம நிர்பார் பாரத்-சுயசார்பு இந்தியா என்ற நிலையை அடைவதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் MMDR சட்டம் ஆகிய சட்டங்களின்படி இந்தியா முழுவதும் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறையைப் பின்பற்றி வருகிறது.
இந்த வழிமுறையின் கீழான ஏழாம் சுற்று ஏல அறிவிப்பை கடந்த மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டில் வருகின்றன. சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய இடங்களுக்கு அருகே இந்த நிலக்கரி சுரங்கங்களை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவே இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருவதால் இந்த இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று டெல்டா பகுதி விவசாயிகள், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.
தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்திக்க திமுக எம்பிகள் முயற்சிசெய்தனர் என்றும், அவர் வெளியூரில் இருப்பதால், தொலைபேசியில் பேசியபோது, தமிழ்நாடு அரசின் கடிதம் கிடைத்தது என்றும் மாநில அரசின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.
''மத்திய அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். அதேபோல, நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதால், நேரடியாக பிரதமர் மோதியை சந்தித்து எனது கடிதத்தை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவிடம் அறிவுறுத்தியுள்ளேன். நானும் 'டெல்டாகாரன்' என்பதால் இந்த திட்டத்தை கொண்டுவருவதை எதிர்க்கவேண்டும் என்பதில் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களை போலவே நான் உறுதியாக உள்ளேன். எந்த காலத்திலும் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது'' என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












