இந்தியாவின் 'சிலிகான் வேலி' ஆகும் பெங்களூருவின் கனவு கலைவது ஏன்? – கள அறிக்கை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுபம் கிஷோர்
- பதவி, பிபிசி செய்தியாளர், பெங்களூர்
" நீங்கள் எங்காவது செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கூகிள் கூட சொல்ல முடியாத ஒரு நகரம் பெங்களூரு"
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் ஒன்றின் நிறுவனர் தொலைபேசியில் இவ்வாறு கேலியாகக் கூறினார், ஆனால் அது உண்மை என்பதை நாங்கள் விரைவில் உணர்ந்தோம். ஞாயிற்றுக்கிழமை, ராமண்ணாவிலிருந்து HSR லேஅவுட் அலுவலகத்தை (சுமார் எட்டு கிலோமீட்டர்) நாங்கள் 20 நிமிடங்களில் அடைந்தோம். ஆனால் அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை, இந்த தூரத்தை கடக்க 50 நிமிடங்கள் ஆனது.
திங்கட்கிழமையன்று கால்வைப்பதற்குக் கூட இடம் இல்லாத அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வேலைக்குச் செல்வதை நாங்கள் கண்டோம். கொளுத்தும் வெயிலுக்கும், ஹார்ன் சத்தத்துக்கும் நடுவே சில்க் போர்ட் சந்திப்பில் நிற்பது சிரமமாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் நகரத்தின் லட்சக்கணக்கான மக்கள் இந்த நெரிசலில் மணிக்கணக்கில் சிக்கித் தவித்து தங்கள் அலுவலகத்தை அடைகிறார்கள். இந்த நகரத்தில் எந்த இடத்திற்குச் செல்வதற்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யாராலும் சரியாக சொல்ல முடியாது. பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
“நண்பர்களுடன் அமர்ந்திருக்கும்போதெல்லாம், போக்குவரத்து நெரிசல் பற்றிய பேச்சு எப்போதுமே இருக்கும்,” என்று கூறுகிறார் ஸ்டார்ட்-அப் ஒன்றின் இணை நிறுவனர் ரமணா.
"பணத்தை திரட்டி, விமான நிலையத்தின் மறுபுறத்தில் ஒரு சிறிய ஸ்டார்ட்-அப் கிராமத்தை உருவாக்கலாம், அதன்மூலம் குறைந்த பட்சம் போக்குவரத்து நெரிசலில் இருந்து மட்டுமாவது தப்பித்துவிடலாம் என்றுகூட ஒரு நாள் நினைத்தோம்,” என்று சிரித்தபடி அவர் கூறுகிறார்.
பெங்களூருவின் ’சிலிக்கான் வேலி கனவு’ போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது

கர்நாடகாவின் பொருளாதார வெற்றி பெங்களூருவைச் சார்ந்தே உள்ளது. மாநிலத்தின் வருவாயில் 60% க்கும் அதிகமான பங்கு இந்த நகரத்திலிருந்து வருகிறது.
இந்த நகரம் 13,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் 100 யூனிகார்ன்களில் 40% இங்குதான் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரத்திற்கு வருகிறார்கள். இங்கு கடந்த 15 ஆண்டுகளில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.
இப்போது இங்கு சுமார் 1.25 கோடி மக்கள் வசிக்கின்றனர். சாலைகளில் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் காணப்படுகின்றன. 2027-ம் ஆண்டுக்குள் இந்த நகரின் வாகனங்களுடைய எண்ணிக்கை இங்குள்ள மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பதிலிருந்தே, இதன் எண்ணிக்கை எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை அறியலாம்.
ஆனால், அத்தகைய பெருமளவிலான சுமையைத் தாங்க இந்த நகரம் தயாராக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். நகரம் முழுவதும் மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து வருவதால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

"இங்கே சில தூண்கள் கட்டப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இவை கட்டப்படுகின்றன. எஸ்.எஸ்.ஆர்.க்கு வரும் சாலை இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? மெட்ரோ கட்டுமானம் பல ஆண்டுகளாக நடக்கிறது. நீங்கள் ஏதாவது கட்ட வேண்டும் என்றால் குறைந்த பட்சம் சாலையையாவது கவனித்துக்கொள்ள வேண்டாமா,” என்று கூறுகிறார் ரமணா.
"பெங்களூரு நிச்சயமாக ஒரு சிலிக்கான் வேலி நகரம்தான். ஆனால் நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஸ்டார்ட்அப்கள் இந்த நகரத்தைவிட்டு வெளியேறிவிடும்" என்றும் ரமணா குறிப்பிடுகிறார்.
ரவிச்சந்திரன் கடந்த 50 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நகரம் தொடர்பான பல திட்டங்களில் பணியாற்றியுள்ளார். பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதாகவும், போக்குவரத்து உள்ளிட்ட பிற பிரச்சனைகளுக்கு இதுவே மூல காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
இங்கு பெரும்பாலானோர் ஐடி துறைகளில் பணிபுரிய வந்துள்ளனர். ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரின் வசதிகள் அதிகரிக்கவில்லை.
பெங்களூரு மக்கள் தொகை
- ஆண்டு 2001 - 56 லட்சம்
- ஆண்டு 2011 – 87 லட்சம்
- ஆண்டு 2023 - சுமார் 1.25 கோடி
பெங்களூரு மெட்ரோ
- மெட்ரோ பணிகள் 2007 ஆம் ஆண்டு தொடங்கியது
- மெட்ரோ பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகின்றன
- இதுவரை 63 மெட்ரோ நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன
- மொத்த நீளம் - 70 கி.மீ
- மெட்ரோவில் ஆண்டுக்கு 16 லட்சத்திற்கும் குறைவான மக்களே பயணம் செய்கிறார்கள்
நகரின் பிற பிரச்சனைகள்

கடந்த ஆண்டு பெங்களூரு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இரண்டு முறை ஏற்பட்ட வெள்ளம், தாழ்வான பகுதிகளில் நடந்துள்ள சட்டவிரோத கட்டுமானத்தை அம்பலப்படுத்தியது. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. பல நிறுவனங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
"இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆடம்பரமான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் கூட தண்ணீர் புகுந்தது, வாகனங்கள் நீரில் மூழ்கின,"என்கிறார் ரமணா.
"கடந்த ஆண்டு பெங்களூருவில் இரண்டு முறை வெள்ளம் வந்தது. வெள்ளப்பெருக்கு பெங்களூருவின் இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என்று நான் நினைக்கிறேன். பெங்களூருவில் பருவமழையின் போது எப்போது வேண்டுமானாலும் கடுமையான வெள்ளம் ஏற்படலாம்,"என்று வி. ரவிசந்திரன் குறிப்பிடுகிறார்.
வெள்ளத்திற்கான முக்கிய காரணங்கள்
- மழைநீரை வெளியேற்றும் பெரிய வடிகால்களின் பற்றாக்குறை
- அடைப்பு ஏற்பட்டுள்ள வடிகால்கள்
- மூடப்பட்ட குளங்கள் மற்றும் வாய்க்கால்கள்
- நில ஆக்கிரமிப்பு
- சட்டவிரோத கட்டுமானம்
- திறந்த பகுதிகள் இல்லாத நிலை
- வடிகால், பைப்லைன் பராமரிப்பில் குறைபாடு
ஆதாரம் - ORF
வெள்ளம், வறட்சி மற்றும் அதிகரித்து வரும் வாடகைச் சுமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதுதான் ஆச்சரியமான விஷயம். ஜோவியன் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ், தண்ணீர் பற்றாக்குறையால் அதிக வாடகையுள்ள வீட்டிற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
‘‘நாங்கள் குடியிருந்த வீட்டில் தண்ணீர் பிரச்சனை அதிகம். தண்ணீர் டேங்கர் சில சமயம் வரும், சில சமயம் வராமல் போகும். தண்ணீர் பிரச்னை அதிகமாக இருந்தது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டன. ஏனெனில் வீட்டில்தான் அலுவலகமும் இருந்தது. இந்த பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய வீட்டு உரிமையாளர் உள்ள இடத்திற்கு நாங்கள் மாற வேண்டியிருந்தது. ஆனால் இதன் காரணமாகவே வாடகையும் அதிகரிக்கிறது. செலவுகளும் அதிகரிக்கின்றன."என்கிறார் அவர்.
தண்ணீர் பற்றாக்குறை ஏன்?
- நீர் ஆதாரங்கள் 79 சதவிகிதம் குறைந்துவிட்டது
- 1973-ல் 8 சதவிகிதமாக இருந்த கட்டுமானப் பணிகள் தற்போது 77 சதவிகித பகுதிகளில் நடந்து வருகின்றன.
- 40 சதவிகித மக்கள் நிலத்தடி நீரை நம்பியிருக்கிறார்கள்
- பைப்லைன் எல்லா பகுதிகளையும் சென்றடையவில்லை
- நகரத்திற்கு 650 MLD தண்ணீர் குறைவாக கிடைக்கிறது
- 1997இல் நீர்மட்டம் 10-12 மீட்டராக இருந்தது. தற்போது 70 மீட்டருக்கும் அதிகமாக இருக்கிறது.
அதிகரித்து வரும் செலவுகள் தன்னுடைய வியாபாரத்தை நேரடியாக பாதிக்கிறது என்று ஆகாஷ் கூறுகிறார்.
இதுதவிர நல்ல வானிலைக்கு பெயர் பெற்ற பெங்களூரு மற்ற நகரங்களைப் போலவே வெப்பமாகி வருகிறது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, நகரில் வீடுகளின் வாடகை கணிசமாக அதிகரித்துள்ளது என்று மக்கள் புகார் கூறுகின்றனர். அதனால் மக்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். அதிக பணம் கொடுப்பது சிறு நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.
நகரத்திற்கு புதிதாக ஒரு சிறந்த திட்டமிடல் தேவை என்றும் அது இல்லாமல் நிலைமை மேம்படாது என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
"இப்போது நாம் செய்வது கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு. எங்காவது வெள்ளம் வந்தால் அதை சரிசெய்ய அங்கு செல்கிறார்கள். சாலையில் பள்ளம் பற்றிய செய்தி வந்தால் அதை சீர் செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இங்கு பிரச்சனை நிர்வாக அமைப்பில் உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும்," என்று வி. ரவிச்சந்திரன் கூறுகிறார்.
ஊழல் பிரச்சனையை எதிர்கொள்கிறதா பெங்களூரு?

பெங்களூருவில் கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சித் தேர்தல் நடைபெறவில்லை. மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே நகரப் பணிகளை கவனித்து வருகின்றனர். அதனால்தான் நகரின் நிலவரம் பற்றி பாஜக என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சித்தோம்.
பெங்களூருவின் முன்னாள் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் இந்த முறை பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நகரை மேம்படுத்த தனது அரசு தொடர்ந்து உழைத்து வருவதாக அவர் கூறுகிறார்.
சமீபகாலமாக மெட்ரோ பணியால் போக்குவரத்து நிலைமை மோசமாகி வருகிறது. விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பெங்களூருவின் மண் வடமாநில நகரங்களின் மண்ணுடன் ஒப்பிடும்போது வேறுபட்டு இருப்பதால், மெட்ரோ பணிகளில் தாமதம் ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
நகரின் மோசமான உள்கட்டமைப்புக்குப் பின்னால் ஊழல் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் நகரின் சாலைகளுக்கு 20,000கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆயினும் நிலைமை சீரடையவில்லை. வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், தாழ்வான பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெறுவது நிறுத்தப்படாததாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை ராவ் மறுக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் எதுவும் நடக்காது என்று அவர் கூறுகிறார்.
"சாலை மற்றும் தண்ணீர் மட்டுமே உள்கட்டமைப்பு இல்லை. இங்கே சட்டம் ஒழுங்கு, கல்வி, அரசு இயற்றும் உபயோகமான சட்டங்கள் போன்றவைகள் நன்றாகவே உள்ளன. அவையும் உள்கட்டமைப்புதான். தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க முடியும். உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது என்கிறீர்கள், பிறகு ஏன் மக்கள் இங்கு வருகிறார்கள். ஏன் பிகார் அல்லது உ.பி.க்கு அவர்கள் போவதில்லை?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
முந்தைய அரசுகள் வேலை செய்யவில்லை - பிரதமர்

சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். இது 4250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சில பகுதிகளில், மெட்ரோ வருகையால் நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனால் திட்டம் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
’பெங்களூருவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவும் இரட்டை இஞ்சினாக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது’ என்று அப்போது பிரதமர் கூறினார். நகரின் மோசமான நிலைக்கு முந்தைய அரசுகளின் அணுகுமுறையே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசு கூறிக்கொள்ளும் தன்னுடைய சாதனைகள்
- 5 ஆண்டுகளில் சாலைகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
- தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க 67 குளங்களுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- வெள்ளத்தை தவிர்க்க புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான அறிவிப்பு
- மழைநீர் வடிகாலுக்கு 300 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளுக்கு 300 கோடி வழங்குவதாக அறிவிப்பு
- மெட்ரோவுக்கு 13,000 கோடி ரூபாய் வழங்கியது
- சாட்டிலைட் நகரத்துக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியது
நம்பிக்கையுடன் இருக்கும் மக்கள்

அரசியல் குற்றச்சாட்டுகளுக்கும், சீரழிவுகளுக்கும் மத்தியில், மக்கள் இன்னும் இழக்காத ஒன்று இருக்கிறது – அதுதான் நம்பிக்கை.
இந்த நகரத்தில் பிறந்து வளர்ந்த தேஜஸ்வினி ராஜ், ஒரு ஸ்டார்ட்அப்பை நடத்தி வருகிறார். பெங்களூரு மீது மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதாகவும், அதனால்தான் இங்குள்ள பிரச்சனைகள் அதிக செய்திகளை உருவாக்குவதாகவும் அவர் கூறுகிறார்.
"மற்ற நகரங்களைப்போலவே இங்கும் வீட்டுவசதி அல்லது போக்குவரத்து சிக்கல்கள் உள்ளன. ஆனால் இந்த நகரத்திற்கு வேறுபட்ட தன்மை இருக்கிறது. வானிலை இப்போதும் சிறப்பாகவே உள்ளது. நாட்டின் மிகச்சிறந்த நகரங்களில் இதுவும் ஒன்று," என தேஜஸ்வினி குறிப்பிடுகிறார்.
’சிலிக்கான் வேலி’ ஆகவேண்டும் என்ற இந்த நகரத்தின் கனவு நிச்சயமாக நனவாகும்” என்கிறார் அவர்.
நகரின் தற்போதைய நிலையைக் கண்டு கோபப்படும் ஆகாஷ், ரமணா போன்றவர்கள் கூட, இன்னும் சிறிது கவனம் செலுத்தினால், பெங்களூரு சிலிக்கான் வேலியாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள்.
இந்த நகரில் காணப்படும் உற்சாகம், பாசிட்டிவிட்டி மற்றும் எனர்ஜி பிரமிக்க வைக்கிறது’’ என்கிறார் ஆகாஷ்.
”கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும். அடிப்படை விஷயங்களில் வேலை செய்யவேண்டும். பூஜ்ஜியத்தில் இருந்து துவங்கினால், நிலைமை மெதுவாக மேம்படத்தொடங்கும்,” என்று கூறுகிறார் ரமணா.
மே 10-ம் தேதி நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவு

பட மூலாதாரம், SOCIAL MEDIA
மே 10ஆம் தேதி கர்நாடகா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் நகரின் உள்கட்டமைப்பு குறித்து சரியான மற்றும் விரைவான முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், ’சிலிக்கான் வேலி’ ஆகவேண்டும் என்ற கனவு நொறுங்கிவிடும். எனவே அடுத்த தேர்தல் பெங்களூருக்கு முக்கியமானது என்று பிபிசியிடம் பேசிய பலரும் கருதுகிறார்கள்.
பெங்களூருவில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு, கூர்க் நோக்கிச் செல்வதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தவுடன், அகலமான வழுக்கலான நெடுஞ்சாலையில் எங்கள் கார் வேகம் பிடித்தது.
நாங்கள் கூர்கை அடையும் வரை சோதனைச் சாவடிகளில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருந்தது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பொருட்களை அவர்கள் சோதனையிட்டபோது, எங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது - ‘வண்டியில் பணம் ஏதும் இல்லையே?.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












