கர்நாடக தேர்தல்: அமித் ஷா ஆதரவுடன் நடந்த இடஒதுக்கீடுக்கு பிறகும் ஆளும் கட்சிக்கு தொடரும் தலைவலி

அமித் ஷா

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

முக்கிய அம்சங்கள்

  • கர்நாடக மக்கள் தொகையில் 16 முதல் 17 சதவிகிதம் பேர் லிங்காயத்துகள்.
  • வொக்கலிகாக்கள் சுமார் 12-14 சதவிகிதம்
  • OBC, SC, ST மற்றும் சிறுபான்மையினர், மக்கள் தொகையில் 60 சதவிகிதம் உள்ளனர்
  • வடக்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் லிங்காயத்துகள் பெரும்பான்மை சமூகமாக உள்ளனர்.
  • கடலோர கர்நாடகாவில் அதிக என்ணிக்கையில் OBC மற்றும் பட்டியல் ஜாதி மக்கள் உள்ளனர்.
  • பி.எஸ். எடியூரப்பா லிங்காயத்துகளின் மிகப்பெரிய தலைவராக கருதப்படுகிறார்.
  • தற்போதைய முதல்வர் பொம்மையும் லிங்காயத் தான்
  • முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகெளடா வொக்கலிகாஸின் மிகப்பெரிய தலைவராக கருதப்படுகிறார்.
  • முன்னாள் முதல்வர் சித்தராமையா ஓபிசியின் மிகப்பெரிய தலைவராகக் கருதப்படுகிறார்.
  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலித்துகளின் மிகப்பெரிய தலைவராக கருதப்படுகிறார்.

இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் கர்நாடகாவின் ஆளும் கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இட ஒதுக்கீடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் இதே நிலையில் இருந்தது. ​​லிங்காயத் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான முன்மொழிவுக்காக அப்போது அக்கட்சி எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றங்களைப் பரிந்துரைத்தது மற்றும் SC, ST ஒதுக்கீட்டில் பல ஜாதிகளுக்கான இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை மாற்றுவது போன்ற முடிவுகளின் சிக்கலில் பாஜக மாட்டிக்கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் சமயசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) ஆகிய கட்சிகள் இடஒதுக்கீட்டில் செய்த மாற்றங்களுக்காக பாஜகவைத் தாக்கின. இதையடுத்து பாஜக தன்னை தற்காத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்சி ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்தை நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முஸ்லிம்களுக்கான நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டை நீக்கியதற்காக முதல்வர் பசவராஜ் பொம்மையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியபோது அவருக்கு தைரியம் வந்தது.

ஏறக்குறைய ஒரு வருடத்தில் அமித் ஷா, பொம்மையை பாராட்டியது இதுவே முதல்முறை. மற்ற சமூகங்களுக்கும் இது ஒரு முக்கியமான செய்தியாக இருந்தது.

அமித்ஷாவுடன் முதல்வர் பொம்மை.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அமித்ஷாவுடன் முதல்வர் பொம்மை.

முஸ்லிம்களுக்கான நான்கு சதவிகித இடஒதுக்கீடு வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு இடையே தலா இரண்டு சதவிகிதம் என சமமாக பிரிக்கப்பட்டது. இருப்பினும் இதைவிட அதிகமாக இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்த இரு சமூகத்தினரும் கோரிக்கை விடுத்திருந்ததால் இந்த நடவடிக்கையை மதத் தலைவர்கள் விரும்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் அமித் ஷா இதை புகழ்ந்து பேசிய பிறகும் சர்ச்சை முடிவுக்கு வரவில்லை, மாறாக பெரிதாகிவிட்டது. இதற்குக் காரணம் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது அல்ல. மாறாக, பாஜகவுக்கு வாக்களிக்கும் மற்ற பிரிவினர் இந்த முடிவால் குழப்பமடைந்திருப்பதுதான்.

"இந்த நடவடிக்கையால் உங்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை மக்களுக்கு உறுதியான சொற்களில் எவ்வாறு விளக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் ஒரு பாஜக தலைவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

முக்கிய பிரச்னைகள் என்ன?

அடிப்படையில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. முதலாவது பட்டியல் ஜாதிகள் மற்றும் பழங்குடியினர் தொடர்பானது. இரண்டாவது பிரச்சனை லிங்காயத் சமூகத்தின் மிகப்பெரிய பிரிவான பஞ்சமசாலி லிங்காயத்துகள் தொடர்பானது.

முதல் பிரச்சனை என்னவென்றால், எஸ்சிக்களுக்கான இடஒதுக்கீடு சதவிகிதத்தை 15 இல் இருந்து 17 ஆகவும், எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்த அரசு முடிவு செய்தது. ஆனால் இதன் மூலம் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற வரம்பு மீறப்பட்டது. இப்போது மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதமாகிவிட்டது.

SC மற்றும் ST பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு மீறப்பட்டதால், மற்ற ஜாதியினர் OBC பிரிவின் கீழ் கூடுதல் இடஒதுக்கீடு கோரத் தொடங்கினர்.

இப்போது இடஒதுக்கீடு வரம்பில் செய்யப்பட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் சேர்க்க மத்திய அரசை மாநில அரசு கேட்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் 'நீதி மறுபரிசீலனைக்கு' வெளியே போய்விடும்.

பொம்மை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பஞ்சமசாலி லிங்காயத்துகளின் குரு பாசவஜய மிருத்யுஞ்சய சுவாமிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை.

இரண்டாவது பிரச்சனை, லிங்காயத்துகளின் மிகப் பெரிய பிரிவான பஞ்சமசாலி லிங்காயத்துகளின் கோபம்.

ஓபிசி பிரிவின் '2ஏ' பிரிவின் கீழ் சேர்க்கப்பட்ட 101 ஜாதிகளில் தங்கள் சமூகத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததே அவர்களின் அதிருப்திக்கு காரணம்.

பஞ்சமசாலி சமூகத்தினர் மாநிலம் முழுவதும் பரவியிருப்பதால் அவர்களை அரசால் புறக்கணிக்க முடியாது. மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 75 இடங்களில் இந்த சமூகத்தினர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

தெற்கு கர்நாடகாவில் உள்ள பெரிய சமூகமான வொக்கலிகாக்களும் பாஜகவின் சிக்கலுக்குக் காரணமாக உள்ளனர்.

வொக்கலிகாக்கள் தங்களின் இடஒதுக்கீட்டை நான்கிலிருந்து 12 சதவிகிதமாக அதாவது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். தெற்கு கர்நாடகாவில் காலூன்ற பாஜக முயற்சித்து வருகிறது. அதனால்தான் அவர்களின் கோரிக்கையை புறக்கணிக்க முடியாது.

வொக்கலிகா சமூகத்தை '3A' பிரிவில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட '2C' வகைக்கு அரசு ஜனவரியில் மாற்றியது. அதே நேரம் லிங்காயத் போன்ற சமூகங்கள், '3பி' பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, '2டி'க்கு மாற்றப்பட்டது.

இந்த இரு சமூகத்தினருக்கும் ஒதுக்கீடு ஒரே மாதிரியாகவே இருந்தது. அதாவது வொக்கலிகாக்களுக்கு நான்கு சதவிகிதம் மற்றும் லிங்காயத்துகளுக்கு ஐந்து சதவிகிதம்.

இந்த முடிவு பஞ்சமசாலி லிங்காயத்துகளின் இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த பிரச்சனையை சமாளிக்க, அரசு மற்றொரு முடிவை எடுத்தது.

பொம்மை மற்றும் பிஎஸ் எடியூரப்பா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பொம்மை மற்றும் பிஎஸ் எடியூரப்பா

அரசு என்ன முடிவு எடுத்தது?

பிரிவு ஒன்றில் சிறு சமூகங்களுக்கு நான்கு சதவிகித இடஒதுக்கீடு தொடரும். மேலும் 2ஏ பிரிவில், சுமார் 101 பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 15 சதவிகித இடஒதுக்கீடு இருக்கும் என்று மார்ச் 27 ஆம் தேதி வெளியான அரசு ஆணை ஒன்று கூறியது.

2சி பிரிவில், வொக்கலிகா ஒதுக்கீடு நான்கிலிருந்து ஆறு சதவிகிதமாகவும், 2டியில் லிங்காயத் ஒதுக்கீடு ஐந்தில் இருந்து ஏழு சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது. இதில் வீரசைவ லிங்காயத், பஞ்சமசாலி லிங்காயத் போன்ற பிரிவுகள் அடங்கும்.

முஸ்லிம்கள் இந்தப் பிரிவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பிரிவு 2B யில் பூஜ்ஜிய சதவிகிதம் என்பது ஏன் வைக்கப்பட்டுள்ளது என்ற எந்த விளக்கமும் இந்த உத்தரவில் இல்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) பிரிவில் முஸ்லிம்களை சேர்த்ததன் காரணமாகவே வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு தலா இரண்டு சதவிகித இடஒதுக்கீடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி விவகாரத்தில் ஏ.ஜே.சதாசிவ் கமிட்டியின் பரிந்துரை இனி பொருந்தாது. எனவே அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரையை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அரசு கூறியுள்ளது.

'உள் இட ஒதுக்கீடு' என்று கூறி, SC யின் இடதுசாரி மதிகா பிரிவினருக்கு ஆறு சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மறுபுறம், வலதுசாரி பிரிவுகள் என்று அழைக்கப்படும் ஹோலேயா மற்றும் மூன்று ஜாதிகளுக்கு, 5.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாரே, போவிஸ், கோராச்சா, கோராமா ஆகிய பிரிவினருக்கு 4.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள்தொகை குறைவாக உள்ள எல்லா ஜாதிகளுக்கும், சில பட்டியல் ஜாதியினர் மற்றும் 89 ஜாதிகளின் 4 வது பிரிவுக்கும், ஒரு சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் ஒரு முக்கிய அம்சம் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"உள் இடஒதுக்கீட்டுடன் பட்டியலிடப்பட்ட சமூகங்களை பின்வரும் குழுக்களாகப் பிரித்து, இந்திய அரசியலமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்ய கர்நாடக ஆளுநரின் ஒப்புதலுடன், இந்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது," என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளுடன் தொடர்புடைய சட்ட தடைகள்

அமித் ஷா

பட மூலாதாரம், ANI

மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பேராசிரியர் ரவி வர்மா குமார் பிபிசி இந்தியிடம் பேசினார்.

“மகாராஷ்ட்ராவில், மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்கான அடிப்படை தரவுகள் எதுவும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது மகாராஷ்டிராவால் இயற்றப்பட்ட சட்டம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு அரசு உத்தரவை ஒப்பிடும்போது சட்டம் என்பது மிகவும் வலுவானது,” என்றார் அவர்.

”பிற்படுத்தப்பட்ட வகுப்பை (முஸ்லிம்) அகற்றுவதா அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை (பஞ்சமாலி லிங்காயத்) சேர்ப்பதா என்பதற்கு அந்த சமூகத்தின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி நிலை தொடர்பான தரவுகள் இருப்பது அவசியம். ஜாட்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்ததற்கும் உச்ச நீதிமன்றம் இதே காரணத்தை கூறியது. தரவுகளை சேகரிக்க இங்கு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது,” என்று ரவி வர்மா குமார் கூறினார்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“பஞ்சமசாலி லிங்காயத்துகள் தொடர்பான தகவல்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை என்று மார்ச் 15 ஆம் தேதி ஆணையத்தின் தலைவரே கூறினார். இவ்வாறான நிலையில் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுத்திருப்பது ஏன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, EWS வகைக்கு மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று அவர் வினவினார்.

ஆகவே இந்த சமீபத்திய முடிவு ’கண்ணில் மண்ணை தூவுவது’ போன்றது என்கிறார் அவர்.

”முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வொக்கலிகாக்களோ அல்லது லிங்காயத் சமூகத்தினரோ புகார் அளிக்கவில்லை. இது இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்..

எஸ்சி சமூகத்தினருக்கு வழங்கப்படும் உள்ஒதுக்கீட்டை ஒரு 'நாடகம்' என்று அவர் கூறினார்.

​​“ஆளுநர் தனது கையெழுத்துடன் கூடிய குறிப்பாணையை மத்திய அரசுக்கு அனுப்புவார் என்று அரசு உத்தரவு கூறுகிறது. கர்நாடகாவின் சில அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாஜாதிதிகள் தொடர்பாக அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை. இது சட்டவிரோத உத்தரவு. உண்மையில் இது வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் தந்திரம்,” என்று பேராசிரியர் ரவி வர்மா குமார் குறிப்பிட்டார்.

கர்நாடகா அரசியல்

பட மூலாதாரம், GOPICHAND TANDLE

படக்குறிப்பு, கர்நாடக அரசியலில் லிங்காயத்துகளின் செல்வாக்கு மிக அதிகம்.

“ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

மத சிறுபான்மையினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை அளிக்க முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,” என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் கே.என்.லிங்கப்பா கூறினார்.

பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் உள் இடஒதுக்கீடு குறித்தும் அரசு விமர்சனத்துக்குள்ளானது.

“மாநில அரசு அத்தகைய பரிந்துரையை வழங்க முடியாது. நீதித்துறை குழுவோ நிபுணர் குழுவோ மட்டுமே தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்ப முடியும். இதற்கு முதலில் சமூக-பொருளாதார ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அரசு எப்படி முடிவெடுக்க முடியும்?” என்று இந்துதாரா ஹொன்னபுரா என்ற தலித் ஆர்வலர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"இது எந்த சமூகக் குழுவையும் மகிழ்ச்சியடையச் செய்யாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சமசாலிகளின் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தியதை தவிர வேறு எதுவும் வழங்கப்படவில்லை. இந்த முயற்சி மனமார்ந்த முறையில் செய்யப்பட்டிருந்தால் பஞ்சமசாலிகளின் வாக்குகள் பிரிவதை தடுக்கமுடியும்,” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஏ. நாராயண் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: