கர்நாடக காங்கிரஸில் முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் என்ன குழப்பம்?

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்நாடக காங்கிரஸில் இருக்கும் முக்கிய பிரச்சனை தொடர்பாக அம்மாநில தலைவர்களை வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தீர்க்கமான பதிலை அளித்துள்ளார்.

மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் யார் முதலமைச்சர் என்பது குறித்து கர்நாடகாவில் உள்ள தலைவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், அதற்கு பதிலாக 150-160 இடங்களில் வெற்றி பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸில் தற்போது முதலமைச்சர் கனவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் இந்த மழுப்பலான கருத்தை மல்லிகார்ஜுன கார்கே வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழப்பதற்கு காரணமான மோதி பெயர் குறித்த கருத்துகளை உதிர்த்த அதே கோலார் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் மல்லிகார்ஜுன கார்கே , இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

“உங்கள் அனைவருக்கும் இதை நான் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். யார் முதலமைச்சர் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், இந்திரா உணவகம், மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் பிற திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமே என் முக்கிய கவலையாக உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், மேலிடம் ஆகியோரின் எண்ணப்படி முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார். நீங்கள் மக்களை பற்றி நினைத்துப்பாருங்கள், அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள், மற்றவற்றையெல்லாம் எங்களிடம் விட்டுவிடுங்கள்” என்று கார்கே கூட்டத்தில் பேசினார்.

கர்நாடகாவில் உள்ள தலைமைப் பூசல் குறித்து கார்கே, அதுவும் பொதுவெளியில் பேசுவது இதுவே முதல் முறை. 1962 ஆம் ஆண்டு அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியை (இந்தியாவின் 6-ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர்) போலல்லாமல், தாம் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியதும் இதுவே முதல் முறை.

அனைவருக்குமான செய்தி

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தன்னை விட பல ஆண்டுகள் மூத்தவரான கார்கேவின் கீழ் வேலை செய்வதை தான் மிகவும் விரும்புகிறேன் என்று கடந்த வாரம் ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்ட சிவக்குமாருக்கான பதிலாகவும் கார்கேவின் பேச்சு அமைந்துள்ளது.

அந்த சந்திப்பின்போது, கார்கேவிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அவர் என்னுடைய தலைவர் மட்டுமல்ல அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்கூட. அவருக்கு கீழ் வேலை செய்வதை நான் விரும்புகிறேன். நம்முடைய மாநிலத்துக்கும், நாட்டுக்கும் அவர் முக்கிய சொத்து. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அவர் என்னைவிட 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். நான் சட்டப்பேரவைக்குள் 1985ல் நுழைந்தேன், அவர் 1972லேயே வந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சிவக்குமார், “காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியை நள்ளிரவில் ராஜினாமா செய்தவர் கார்கே( தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி மேலிடம் கேட்டுகொண்டதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியை சித்தராமையா 2009ல் ஏற்றார்.) கட்சியில் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அகில இந்திய தலைவராக உயர்ந்துள்ளார், இது வேறு எந்த கட்சியிலும் சாத்தியமில்லாதது. அவர் அகில இந்திய தலைவரான பின்னர் கர்நாடக காங்கிரஸுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. எனவே, அவருடைய விருப்பதற்கு எதிராக நான் செயல்பட மாட்டேன் ” என்றும் குறிப்பிட்டார்.

தலைமை தொடர்பான எம்.எல்.ஏ.க்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளும் என்று பொதுவெளியில் சித்தராமையா கூறிய சில நாட்களிலேயே சிவக்குமார் தனது கருத்துகளை கூறியிருந்தார்.

முதலமைச்சராகும் வாய்ப்பை கார்கே மூன்று முறை தவறவிட்டுள்ளார். முதன்முதலாக, 1999-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணாவை கட்சி மேலிடம் முதலமைச்சராக நியமித்தது. 2004இல், காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை தரம் சிங் வழிநடத்த , தேவகவுடா விரும்பியதால் 2-ஆவது முறையாக முதலமைச்சர் வாய்ப்பை கார்கே இழந்தார். மூன்றாவது முறை 2013ல், சித்தராமையா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து லாபி செய்து முதலமைச்சர் பதவியை பெற்றதால் தவறவிட்டார்.

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம், twitter@DKShivakumar

காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ்காரர்களால் மட்டுமே முடியும்

முதலமைச்சர் பதவி தொடர்பான போட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது முதல், சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் பொதுவெளியிலும், கட்சிக்குள்ளும்இது குறித்து பேசி வருகின்றனர். இந்த போக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமையா போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ. ஒருவர் பெங்களூரு நகரில் தனது தொகுதியை விட்டுக்கொடுக்கவும் முன்வந்தார்.

சில எம்.எல்.ஏ.க்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள், கட்சி தலைமை கடிவாளம் போட்டது. பொதுவெளியில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துவிட வேண்டாம் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. ஒரு காலத்தில் கார்கேவின் பெயர் கூட முதலமைச்சர் பதவி தொடர்பான பேச்சில் இடம்பெற்றது. சித்தராமையா, சிவக்குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே நடந்த அறிக்கைப் போர் 2012இல் தாவணகேரேயில் நடந்த கட்சித் தலைவர்கள் மாநாட்டில் ராகுல் காந்தி பேசிய புகழ்பெற்ற வாசகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும் நிலையை ஏற்படுத்தியது.

அந்த கூட்டத்தில், “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் யாராலும் தோற்கடிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

கோலாரில் நடைபெற்ற கூட்டத்தில் கார்கே பேசும்போது, “உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து ஒற்றுமையாக இருங்கள். நான் இலக்கு நிர்ணயித்த இடங்களை வெல்வது என்பது முடியாத காரியமல்ல. கடந்த காலங்களில் 130 மற்றும் அதற்கு அதிகமான இடங்களை நாம் வென்றுள்ளோம். ”என்றும் அவர் தெரிவித்திருந்தார். (1989 தேர்தலில் 177 தொகுதிகளில் வெற்றிபெற்றதே காங்கிரஸின் அதிகபட்சம் ஆகும்)

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம், Twitter@@INCKarnataka

முதல் அமைச்சர் பதவி தொடர்பான சச்சரவு

மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் பாஜக வெற்றி பெற்றாலும் தற்போதைய முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மைதான் மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. சித்தராமையாவும் சிவக்குமாரும் மாநிலம் முழுவதும் முதல் சுற்று பிரசாரத்தை இணைந்து முடித்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் அவர்கள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் வடக்கு, மத்திய மற்றும் கடலோர பகுதிகளில் சித்தராமையாஅ பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், அவர் பிறந்த சமூகமான வொக்கலிகா மக்கள் அதிகமுள்ள தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளார்.

நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகி ஒருவர், 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வில் சித்தராமையா, சிவக்குமார் ஆகிய இருவரும் தங்களது பரிந்துரைகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், பெரும்பான்மையான இடங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அகில இந்திய தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவை கர்நாடக தேர்தலுக்கான பொறுப்பாளராக கட்சி நியமித்துள்ளது. கட்சி நடவடிக்கையாக உன்னிப்பாக கவனிப்பது, கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்வது போன்றவற்றை அவர் கவனிப்பார்.

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக முதலமைச்சராக கார்கே தேர்வு செய்யப்படக் கூடுமா?

கார்கேவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

“ முதலமைச்சர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியம் ஒருகாலத்தில் அவருக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் முதலமைச்சர் பதவிக்கும் மேலே உயர்ந்துள்ளார். எனவே, அவர் அதைவிட்டு கிழே இறங்க மாட்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தையும், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபலையும் சந்திக்க கார்கே காத்திருக்கும் காலம் இருந்தது. இன்று, அவரைச் சந்திக்க பலர் காத்திருக்கின்றனர்,” என அரசியல் விமர்சகர் டி.உமாபதி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆனதை உதாரணம் காட்டி, அவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். நீலம் சஞ்சீவ ரெட்டி, 1960 முதல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆனார், 1962 வரை அந்தப் பதவியில் நீலம் சஞ்சீவ ரெட்டி இருந்தார்.

அதன் பின்னர், மீண்டும் 1962 முதல் 1964 வரை முதலமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர், மத்திய அமைச்சரவையில் இணைந்து மக்களவையின் சபாநாயகராக பதவி வகித்த அவர், பின்னர் இந்திய குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்.

அரசியல் ஆய்வாளரும் மைசூர் பல்கலைக் கழகத்தின் கலைத் துறையின் தலைவருமான பேராசிரியர் முசாபர் அசாதி பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “இன்றைய சூழலில், கார்கே மாநில அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்தால், அது மாநில காங்கிரஸின் ஒற்றுமையைப் பாதிக்கும். தற்போது தேசிய அளவில் தலைவராகவும், பாஜகவை எதிர்க்கும் குரலாகவும் கார்கே வலம் வருகிறார். அவர் கர்நாடக அரசியலுக்கு திரும்ப முடிவு செய்யும் தருணம், அது தவறான சமிக்ஞையை அனுப்பும். தற்போது தேசிய அளவில் முக்கிய தலீத் தலைவராக அவர் உள்ளார் என்பதையும் அவரது புகழ் தலித் வாக்குகளை பெற உதவும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ”என்று குறிப்பிட்டார்.

மேலும், “அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினால், அந்த பதவிக்கு அவருக்கு பதிலாக வேறு யார் தேர்ந்தெடுப்படுவார் என்ற கேள்வியும் எழும்” எனவும் பேராசிரியர் அசாதி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: