ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பறந்த பிரியாணி- என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோயா மதீன், மெரில் செபாஸ்டின்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
‘பிரியாணி என்பது வெறும் சாப்பாடு மட்டுமல்ல அது ஒரு உணர்வு’
இந்த வாக்கியத்தை நிரூபிக்கும்படி அமைந்துள்ளது அனிரூத் சுரேசனின் செயல். டெல்லியை சேர்ந்த இவர், ஹைதராபாத் பிரியாணியை சொமேட்டோ செயலி மூலம் ஆர்டர் செய்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இவர் ஆர்டர் செய்தது ஹைதராபாத்தில் உள்ள ஒரு கடையில். அதேபோல லக்னெளவிலிருந்து கபாப்பும், கொல்கத்தாவிலிருந்து ரசகுல்லாவையும் இவர் ஆர்டர் செய்துள்ளார்.
இத்தனை மெனக்கெட்டு ஆர்டர் செய்தவரின் அனுபவம் அவ்வளவு திருப்தியாக இல்லை.
பிபிசியிடம் பேசிய அனிரூத், பிரியாணி ‘பிரியாணி’ மாதிரியாகவே இல்லை என்று தெரிவித்தார். அதேபோல கபாப்பும், இனிப்பும் சுவையற்று இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
இதை எல்லாம் அனிரூத் முயற்சி செய்து பார்த்தது சொமேட்டோவின் இன்டர்சிட்டி சேவையில். 10 நகரங்களை சேர்ந்த 120 உணவகங்களுடன் சொமாட்டோ கூட்டணி வைத்து இந்தியாவின் சிறப்பான உணவுகளை 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்வதுதான் இந்த இன்டர்சிட்டி சேவை.
இந்த சேவையை முதன்முதலில் ஆகஸ்டு மாதம் தெற்கு டெல்லி மற்றும் குருகிராமின் சில பகுதிகளில் மட்டுமே சோதனை முயற்சியாக தொடங்கியது சொமேட்டோ நிறுவனம். அதன்பிறகு மும்பை மற்றும் பெங்களூரு உட்பட இந்த சேவை ஆறு நகரங்களுக்கு விரிவடைந்தது. தற்போது இதற்கான தேவை அதிகரிப்பதால் நாடு முழுவதும் இந்த சேவையை தொடங்க சொமேட்டோ நிறுவனம் முயற்சித்து வருகிறது.
இந்த சேவையின் முக்கிய நோக்கமே, “பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வருவதும், புதிய உணவு வகைகளை சுவைப்பதும்” ஆகும் என்கிறார் இந்த சேவையின் தலைவர் கமாயானி சத்வானி.
“எங்களின் வாடிக்கையாளர்கள் அவர்களின் பூர்விக உணவுகளை சுவைக்க வழி செய்வதும், இந்தியாவின் பன்முக உணவுகளை சுவைக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதும்தான் இந்த சேவையின் இலக்கு” என்கிறார் அவர்.
அனிரூத் மாதிரி இந்த சேவையை பயன்படுத்திய பிற வாடிக்கையாளர்களிடம் பேசும்போது முடிந்தவரை உணவு சூடாக இருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
தங்களுக்கு அதீத வரவேற்கு கிடைத்து வருவதாக கூறும் சத்வானி, இந்த சேவை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரிக்க மறுத்துவிட்டார்.
“இந்த சேவையை நாங்கள் தொடங்கும்போது இது ஒரு விலை உயர்வான சேவையாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் இந்த சேவையை தொடங்கி சில காலம் சென்ற பிறகு இது விலை உயர்வான சேவை இல்லை என்பது எங்களுக்கு புரிய வந்தது” என கடந்த வருடம் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் சொமேட்டோவின் சர்வதேச வளர்ச்சியின் துணை தலைவர் சித்தார்த் ஜாவர் தெரிவித்தார்.
டெலிவரிக்கான கட்டணத்தை குறைப்பது, காத்திருக்கும் நேரத்தை குறைப்பது, மளிகைப் பொருட்களை குறைந்த காலத்தில் டெலிவரி செய்வது என பல சோதனை முயற்சிகளை சொமேட்டோ மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாதிரியான பல சலுகைகளின் மூலம் சந்தையில் லாபத்தை அடைய சொமேட்டோ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சேவைகளை நம்பியிருந்த சமயத்தில் இந்த நிறுவனம் லாபகரமாக இயங்கியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த சொமேட்டோ இன்டர்சிட்டி சேவையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் உணவின் பாதுகாப்புத் தன்மை.
இந்த நீண்ட பயணத்தில் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவிக்கிறது.
உணவுகளுக்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் பேக்கிங் செய்யப்படுவதாகவும், உணவை உறைய வைக்க வேண்டிய அல்லது ரசாயனம் ஏதும் கலக்க வேண்டிய தேவையற்ற நவீன முறையில் உணவுகளை பாதுகாப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
நிறுவனத்துடன் இணைந்திருக்கும் பல உணவகங்கள் கொரியர் சேவை நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
இன்டர்சிட்டி சேவை தங்களின் இனிப்புகளை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் கொல்கத்தாவில் புகழ்பெற்ற இனிப்புக் கடை உரிமையாளார் பல்ராம் முல்லிக் மற்றும் ராதாராமன் முல்லிக்
இந்த சேவையின் மூலம் தங்களது ரசகுல்லாவையும் சந்தேஷ் என்ற இனிப்பையும் அதிகம் டெலிவரிக்கு அனுப்புவதாக முல்லிக் தெரிவிக்கிறார்.
ஒரு கட்டத்தில் டெலிவரி அதிகம் வர தொடங்கியதால் அதை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இதேபோன்றதொரு நேர்மறையான கருத்தை தெரிவிக்கிறார் ஹைதரபாத்தில் பிரியாணிக்கு புகழ்பெற்ற பிஸ்தா ஹவுஸின் நிர்வாக இயக்குநர் ஷோயப் முகமது.
வார இறுதி நாட்களில் 100க்கும் மேற்பட்ட டெலிவரிகள் தங்களுக்கு வருவதாகவும் அது பெரும்பாலும் டெல்லி மும்பை போன்ற பகுதிகளிலிருந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “சமீபமாக ஒரு நாளில் 800 டெலிவரிகளை நாங்கள் வழங்கினோம்” என்கிறார் அவர்.
இதே பிஸ்தா ஹவுஸ் செப்டம்பர் மாதம் குருகிராமில் ஒரு ஆர்டரில் பிரியாணிக்கு பதிலாக வெறும் குழம்பை மட்டும் வைத்திருந்ததாக புகார் எழுந்தது.
ஆனால் தொலைந்த ஆர்டரை கண்டறிந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டதாகவும் ஷோயப் முகமது தெரிவிக்கிறார்.
தற்போது இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் நீண்டகாலத்திற்கு இதை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சுட்டிக் காட்டுகிறார் பத்திரிகையாளர் சோஹினி மிட்டர்.
இந்த சேவை பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என்ற யோசனை நன்றாக இருந்தாலும், இதில் உள்ள நீண்ட பயணங்கள் மற்றும் ஏற்கனவே போதுமான கட்டமைப்புகளற்ற சூழல் போன்றவை சொமேட்டோ நிறுவனத்திற்கு அதிக செலவைதான் கொண்டு வரும் என்கிறார் சோஹினி மிட்டர்
இது ஒரு புறம் இருக்க, அதிக கூச்சல் நிறைந்த சாலையில் அல்லது கடைக்குள் நின்று கொண்ட நமக்கு விருப்பமானவற்றை கேட்டு வாங்கும் அனுபவத்தை இந்த தொலைதூர சேவை கொடுத்துவிடுமா என்ன?
“நிச்சயம் இல்லை. உணவு கெட்டுப்போகாமல் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே அதன் சுவை காற்றில் கரைந்து சென்றிருக்கும்” என்கிறார் சோஹினி.
இதை அனிரூத்தும் ஒப்புக் கொள்கிறார். ஹைதராபாத்தில் மசாலா மணத்திற்கு நடுவில் நமது உணவை உண்ணும் உணர்வு இந்த டப்பாக்களில் அடைத்த உணவில் இருக்காது என்கிறார் அவர்.
கூட்டத்தில் முந்தியடித்து கொண்டு, சுவை மணக்க மணக்க பிரியாணியை ருசித்து, தேவையான ரைத்தா, பச்சடியை கேட்டு வாங்கி உண்ணும் என அந்த அனுபவமே தனி என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












