அண்ணாமலை ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்தாரா? தேர்தல் ஆணையம் பதில் என்ன?

பட மூலாதாரம், Twitter/annamalai_k
கர்நாடக மாநிலத்தின் உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்த பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அதே ஹெலிகாப்டரில் பெருமளவு பணத்தையும் எடுத்துவந்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை மறுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கவுப் தொகுதியில் போட்டியிடுகிறார் வினய் குமார் சொரகே. உடுப்பி காங்கிரஸ் பவனில் திங்கட்கிழமையன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினய் குமார் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.
உடுப்பி மாவட்ட பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான அண்ணாமலை கவுப்பிற்கு ஹெலிகாப்டரில் வந்தபோது தன்னுடன் பெருமளவு பணத்தைக் கொண்டுவந்ததாகக் குற்றம்சாட்டினார்.
"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அதில் (ஹெலிகாப்டரில்) பண மூட்டைகள் இருந்தன. மாவட்ட அதிகாரிகளுக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தெரிவித்தேன். மாவட்ட அதிகாரி மீது நம்பிக்கை உள்ளது. நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்," என்றார் வினய் குமார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை மறுத்திருக்கிறார். "எல்லோரையும் அவர்களைப் போலவே கருதுகிறார்கள். நான் சாமானியன். எங்களுடைய கொள்கை வேறு; அவர்கள் கொள்கை வேறு. கால விரயத்தைக் குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
தேர்தல் ஆணையம் விளக்கம்

பட மூலாதாரம், Twitter/annamalai_k
இதற்கிடையில் உடுப்பி மாவட்ட தேர்தல் அதிகாரி சீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், அண்ணாமலை வந்த வாகனம், ஹெலிகாப்டர் ஆகியவை சோதிக்கப்பட்டதாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் அதில் ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"திங்கட்கிழமையன்று காலை 9.55 மணியளவில் அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரும் அவரிடமிருந்த பைகளும் அதிகாரிகளால் சோதிக்கப்பட்டன. அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் எதுவும் இல்லை" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வாகனம் உடையவர் சோதனைச் சாவடியிலும் கடியலிக்கு அருகில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் எதுவும் கிடைக்கவில்லையென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
"இதற்கெனவே அதிகாரிகள் அறிவிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் நிலைமைக்குத்தக்கபடி நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், பணம் பிடிபட்டால் கூட, அது தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்காகக் கொண்டு வரப்பட்டது என்பதை நிரூபிப்பது கடினம். அதிகபட்சம் வருமான வரித் துறையிடம் தெரிவித்து, அந்தப் பணத்திற்கு வரி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம்" என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான என். கோபால்சுவாமி.
மேலும், தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சை போன்ற இடங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், வாக்காளர்களின் பெயர்களுடன் பணம் பிடிபட்டபோதே ஏதும் நடக்காததை சுட்டிக்காட்டுகிறார் அவர். "இம்மாதிரியான வழக்குகளில் வேட்பாளர் தண்டிக்கப்படுவதோ, தகுதிநீக்கம் செய்யப்படுவதோ மிகக் குறைவு" என்கிறார் அவர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான கே. அண்ணாமலை, மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக அக்கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












