மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு – அதிரடியாக களமிறங்கிய அரசுப்பள்ளி

திருவாரூர் அரசுப் பள்ளி
    • எழுதியவர், பி. சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களில் ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் மற்ற அனைவருக்கும் எவர்சில்வர் பாத்திரமும் குலுக்கல் பரிசு மூலம் வழங்கி, அரசுப்பள்ளியில் சேர மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரொனா காலகட்டத்தில் அதிகளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, சில பள்ளிகளில் அமர்வதற்குக்கூட இடமின்றி மாணவர்கள் சிரமப்பட்டனர். கொரொனாவிற்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்தது.

தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளியில் சேரும் மாணவருக்கு ஆயிரம் ரூபாய், சைக்கிள், விளையாட்டு உபகரணங்களை வழங்கியும் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளியில் மேம்படுத்தியும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் சேர்க்கைக்கு விளம்பரம்

திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்காலிபுரம் கிராமத்தில் 4000 பேர் வசிக்கின்றனர். விவசாயம் சார்ந்தே இவர்களின் தொழில் உள்ளது. அதிலும் பெரும்பான்மையான மக்கள் விவசாயக்கூலிகளாக இருக்கின்றனர்.

சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024ஆம் கல்வியாண்டில் 2 முதல் 5ஆம் வகுப்பு வரை புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், அந்த மாணவ, மாணவிகளுள் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப்பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் பள்ளியின் சேரும் அனைவருக்கும் இதர பரிசுகளும் வழங்கப்படும் என்று தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச வேன் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அந்தத் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துண்டு பிரசுரத்தில் பள்ளியின் சிறப்பம்சங்களாக பாதுகாப்பான உட்கட்டமைப்பு வசதிகள், நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள், மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா அரசு நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகள், அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல்வேறு சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் "உங்கள் அன்பு தங்கத்தை சேர்ப்பீர்! தங்க நாணயம் வெல்வீர்!” என்றும் அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துண்டறிக்கைகளை தலைமையாசிரியர் இந்திரா அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.

திருவாரூர் அரசுப் பள்ளி

பள்ளி பெற்ற விருதுகள்

சேங்கலிங்கபுரம் அரசு ஆரம்பப் பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதை 2008ஆம் ஆண்டு பெற்றது. கர்மவீரர் காமராஜர் விருது மூலம் 25,000 ரூபாயும் பெற்றோர் ஆசிரியர் கழக விருதாக 50,000 ரூபாயும் பெற்றுள்ளது. இந்த விருதுத் தொகை முழுவதும் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர் இந்திரா தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் கல்வி சீர் விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஊர்மக்கள் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கி விழா எடுத்து சீர்வரிசையாகக் கொடுத்து வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளில் இதுவரை 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. 20 புரவலர்கள் மூலம் ரூ.20,000 வைப்பு தொகை வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதாக பள்ளி தலைமையாசிரியை தெரிவித்தார்.

இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் இந்திரா பிபிசி தமிழிடம் பேசியபோது, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்தார். அவருடன் ஐந்து ஆசிரியர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ் வழிக் கல்வியில் 50 மாணவர்களும், ஆங்கில வழிக் கல்வியில் 92 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

திருவாரூர் அரசுப் பள்ளி

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டம்

இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, மாணவர் அறிமுக விழா, விடுமுறை எடுக்காத மாணவருக்குப் பரிசு போன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்தக் கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், “அரசுப் பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு 152 மாணவர்கள் இருந்தார்கள். இந்த ஆண்டு 142 மாணவர்கள் தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பரிசுப் பொருட்கள் வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட 14 பொருட்களை இலவசமாக அரசாங்கம் வழங்கி வருகிறது. நாம் பணியாற்றும் பள்ளி நமது பள்ளி என்பதால், அதை வளப்படுத்த இங்குப் பணியாற்றும் ஆசியர்களான நாங்கள் இணைந்து செயல்படுகிறோம்,” என்று கூறினார்.

இந்த ஆண்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 75 மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுத்து வருகிறோம்.

இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்களில் ஒருவருக்கு குலுக்கல் மூலம், தலைமை ஆசிரியர் ஒரு கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் மற்ற 5 ஆசிரியர்கள் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 250 ரூபாய் மதிப்புள்ள எவர்சில்வர் பாத்திரம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருவாரூர் அரசுப் பள்ளி

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேன் வைக்கும் திட்டம்

இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். கடன் வாங்கி படிக்க வைப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அவர்கள் தங்களது குழந்தைகள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்க முடியாது என்பதால், வாகனம் வைத்து அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, “இந்த ஆண்டு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், தன்னார்வ நிறுவனத்தின் உதவியோடு வேன் வாங்கி, அருகில் இருக்கும் அன்னவாசல், புதுக்குடி உள்ளிட்ட சில ஊர்களில் இருந்தும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக குரலில் மகிழ்ச்சி ததும்பக் கூறினார் தலைமை ஆசிரியர் இந்திரா.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து, அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து படிக்க வைக்கிறோம்.

திருவாரூர் அரசுப் பள்ளி

2017 முதல் 2020ஆம் ஆண்டு வரை தன்னார்வ நிறுவனத்தின் மூலம் காலை உணவு கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரவுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

“பரிசுப் பொருட்கள் வாங்க அரசு பணம் தருவதில்லை என்றாலும், ஆசிரியர்கள் நாங்கள் பணிபுரியும் பள்ளியை மேம்படுத்த எங்களால் இயன்றதை, ஊர் மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தோடு இணைந்து செய்கிறோம்.

பரிசுப்பொருட்கள் கொடுப்பதால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்திருக்கிறது,” என்றவர், பெற்றோர்களின் கடன் சுமை குறைவதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அரசுப்பள்ளி பூர்த்தி செய்யும் வண்ணம் தங்களால் இயன்றதைச் செய்வதாகத் தெரிவித்தார்.

மேலும், ஆரம்பக்கல்வி மட்டும் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால், வளமான வாழ்க்கைக்குத் தொடக்கமாக இருக்கும் என்பதால், சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசுப் பொருள் வழங்குவதாக தெரிவித்தார்.

அரசுப் பள்ளிக்காக பெற்றோர் வழங்கும் சீர்வரிசை

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தாய் கீதா பிபிசி தமிழிடம் பேசும்போது, “கழிப்பிடம் இல்லாத பள்ளியில் கழிப்பிடம் கட்டி, தண்ணீர் வசதிக்கு வழி செய்து கொடுத்துள்ளார்கள். தனியார் பள்ளியைவிட பல போட்டிகள், விழாக்களை நடத்துகிறார்கள். எங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

விவசாயக் கூலிகளாக நாங்கள் வேலைக்குச் சென்றாலும், எங்களது குழந்தைகளுக்கு காலை, மதியம் உணவளிக்கின்றனர். எங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கப் பெருமையாக உள்ளது.

பெற்றோர்கள் நாங்களும் ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சீர்வரிசை வழங்குகின்றோம். பெற்றோர்களான நாங்களும் இதன்மூலம் பள்ளிக்கு எங்களால் முடிந்ததைச் செய்ய முயல்கின்றோம். பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசுப்பொருள் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மாணவர்களைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஊக்குவிக்கும்,” என்று தெரிவித்தார்.

“குடவாசல் கல்வி வட்டாரத்தில் 92 அரசுப் பள்ளிகளில் 5872 மாணவர்கள் படித்து வருகின்றனர். குடவாசல் வட்டாரத்திலேயே அதிக மாணவர்கள் (142) படிக்கக்கூடிய பள்ளியாக சேங்காலிபுரம் தொடக்கப்பள்ளி இருக்கிறது,” என்று கூறுகிறார் குடவாசல் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி.

மேலும், இந்த ஊரின் அருகே அன்னவாசல், திருமங்கலம், உள்ளிட்ட ஊர்களிலுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாகவே இருக்கிறது. இந்தப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இங்கு தலைமையாசிரியர் தவிர்த்து நான்கு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கவேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மேலும் ஒரு ஆசிரியர் என 6 பேர் இருப்பதாகத் தெரிவித்தார்.

“குடவாசல் வட்டாரத்தில் மாணவர்கள் இடைநிற்றல் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவன் பள்ளியைவிட்டு நின்றாலும், என்ன பிரச்சனை என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதால் கட்டாயம் அடிப்படைக் கல்வி கிடைக்கப்பதற்கான வாய்ப்பாக அமைகிறது,” என்றும் அவர் கூறினார்.

திருவாரூர் அரசுப் பள்ளி

பரிசு கொடுத்துதான் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியுமா?

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பரிசு பொருள்கள் கொடுத்து மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், “கல்வி குறித்த புரிதல், பார்வை இன்றைக்கு மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அரசுப்பள்ளியில் சேர்க்காமல், குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்குப் பரிசு கொடுத்தால் வந்துவிடுவார்கள் என்ற தவறான புரிதல் கல்வி அதிகாரிகளுக்கு இருக்கிறது. அதிலிருந்துதான் குழந்தையை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்ற நிலை வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கல்வியைப் பற்றிய முழுமையான புரிதல் வேண்டும்,” என்றார்.

மேற்கொண்டு பேசியவர், “இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 14 சமத்துவக் கோட்பாட்டை பற்றிப் பேசுகிறது. இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 21 சுதந்திரமான வாழ்க்கையை பற்றிப் பேசுகிறது. அதில் வாழ்வாதாரத்திற்கான உரிமை என்பது கன்னியம் மிக்க வாழ்க்கைக்கான உத்திரவாதம் பற்றிப் பேசுகிறது.

அப்படி கண்ணியம் மிக்க கல்வியை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். ஒரு சில பள்ளிகளை மாதிரி பள்ளிகள் எனவும் ஒரு சில பள்ளிகளைச் சிறப்பு பள்ளிகள் எனவும் பாகுபடுத்திப் பார்க்கும்போது, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க எப்படி வாய்ப்பு இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.

திருவாரூர் அரசுப் பள்ளி

“மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, பெற்றோர்களை ஈர்க்க பரிசுப் பொருள்கள் கொடுப்பது கல்வி வளர்ச்சியில் பயன்படாது. கல்வி வளர்ச்சி பெற வேண்டுமானால், பள்ளிக் கல்வித்துறை வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர், நிலையான விளையாட்டு ஆசிரியர் விளையாட்டு உபகரணஙகள்தான் தேவையே தவிர பரிசுப்பொருள்கள் அல்ல,” என்றார்.

அதுமட்டுமின்றி, “5 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வருவது எழுத்தறிவுக்காக அல்ல, விளையாடவும் நட்பு பாரட்டவும் ஆடல் பாடலுக்காகவும்.

ஆகவே, குழந்தையை ஈர்க்க வேண்டுமென்றால் வசதியான விளையாட்டு மைதானம் இருக்கிறது. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பார்கள், கூடவே மகிழ்ச்சியாக விளையாடவும் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்வதில்லை. ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு, அரசு கேட்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும், அவர்களே செய்து அனுப்ப வேண்டிய சூழலுக்கு உள்ளாகின்றனர்.

ஒவ்வொரு பணிக்கும் நிரந்தர ஊழியர்களை நியமித்து, ஆசிரியர்களும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பை உருவாக்கி கொடுக்க அரசு முன்வர வேண்டும்,” என்று கூறினார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: