'ஆர்எஸ்எஸ் அமைப்பை வீடு வீடாக கொண்டு சேர்த்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி' - ஆர்.எஸ்.எஸ். பேரணியால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததா?

ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாடு
    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழ்நாட்டில் 45 இடங்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அணிவகுப்பு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடந்தது.

நேற்று நடைபெற்ற பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சீருடை பேரணியின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்த்து இருப்பதாக அந்த அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கூட்டங்கள் மூலமாக ஆதிக்கம், மத பிரிவினை, மூட நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கின்றன. மக்களுக்கு எதிரான இந்த கொள்கைகள் இருக்கும் அமைப்பை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கூறினார்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு

ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாடு

கடந்த ஆண்டு அக்டோபர் 2அம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தது.

பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு வாதத்தை முன்வைத்தது.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்ட ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயம் இல்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து காவல்துறை அனுமதியுடன் தமிழ்நாட்டின், 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நேற்று மாலை சீருடை அணிவகுப்பு நடத்தினர்.

சென்னை, கோவை என தமிழ்நாட்டில் மொத்தம் 45 இடங்களில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடையுடன் பலர் கலந்து கொண்டனர்.

'தமிழ்நாடு அரசுக்கு நன்றி'

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்காமல் தமிழ்நாடு அரசு 7 மாதம் காலம் தாழ்த்தியது. ஆனால் இன்று பேரணியை அமைதியாக நடத்தி முடித்துள்ளோம் என்று சென்னையில் நடந்த பேரணிக்கு பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.

"எங்கள் பேரணி குறித்து நாங்கள் எந்த பிரச்சாரமும் செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்காமல் ஏழு மாதங்கள் தாமதப்படுத்தியதால், இன்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஊடகங்கள் வழியாக சென்று சேர்ந்துள்ளோம். இதற்காக தமிழ்நாடு அரசு என் நன்றியை தெரிவிக்கிறேன்," என்றார் அவர்.

ஜனநாயக உரிமை

ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்தியாவில் உள்ள எந்த அமைப்பாக இருந்தாலும், ஜனநாயக அடிப்படையில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது என்றால் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வளர்ச்சி அடையும் என்ற பயத்தில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்று கேள்வியை அவரிடம் முன்வைத்தோம்.

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பார்த்து யாருக்கும் பயமில்லை. அந்த அமைப்பின் மாநில தலைவர் யார்?, நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள் என்று எந்த தகவலும் வெளிவந்ததே இல்லை. அப்படி இருக்கும் ஒரு அமைப்பை பார்த்து அரசு ஏன் பயப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதற்கு முன்பு ராம நவமி, விநாயகர் சதுர்த்தியின் போது நடத்திய ஊர்வலங்களில் கலவரங்கள் நடந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது," என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

ஜனநாயகத்தில் ஊர்வலம், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த அனைவருக்கும் அனுமதி உள்ளது, என்று அதிமுகவின் அமைப்புச் செயலாலர் ஜெயக்குமார் கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை

ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறைக்கு எந்த மூகாந்திரமும் இல்லை என்றார் ஜெயக்குமார்.

"தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கும் போது, ஆர்.எஸ்.எஸ். பேரணியால் புதிதாக என்ன பிரச்னை வரும்," என்றார் அவர்.

இது போன்ற பேரணிகளால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார் பத்திரிகையாளர் ஷ்யாம்.

"எத்தனையோ அரசியல் கட்சிகள் பேரணிகள் நடத்துகின்றன. ஆரம்பத்திலேயே சில கட்டுப்பாடுகளோடு நடத்த அனுமதி கொடுத்திருக்கலாம். இப்போது அதற்கு அகில இந்திய முக்கியத்துவம் கிடைத்துள்ளது," என்று தெரிவித்தார் ஷ்யாம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமைதியாக அணிவகுப்பு பேரணி நடத்தியபோது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்று அந்த அமைப்பினர் தெரிவித்தார்.

காவல்துறையினரின் கண்காணிப்பில் நடந்ததால் இந்த பேரணி அமைதியாக நடந்துள்ளது. கடந்த காலங்களில் பேரணியின் போது மசூதி, தேவாலயம் இருக்கும் பகுதிகள் வழியாக சென்று பிரச்னைகளை எழுப்பி இருக்கும் வரலாறு அந்த அமைப்புக்கு இருக்கிறது, என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் ஊர்வலத்தின் போது பல முறை கலவரங்கள் நடந்து, மத நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது என்று கூறினார் கலி.பூங்குன்றன்.

"ஜெயலலிதா ஆட்சியின் போது திருச்சியில் விஷ்வ ஹிந்து அமைப்பு நடத்திய பேரணியில் அனைவருக்கும் திரிசூலம் வழங்கப்பட்டது. அதில் மூன்று முனைகளும் இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், மதசார்பற்றவர்கள் என்று அவர்கள் சொன்னார்கள். பாபர் மசூதி இடிப்பின் போது நாடு முழுவதும் என்ன நடந்தது என்று அனைவரும் பார்த்தோம். அதனால் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை குறிப்பிட்டு அனுமதி மறுத்தது சரியான முடிவு," என்று கலி.பூங்குன்றன் தெரிவித்தார்.

நேற்று நடந்த பேரணி அமைதியாக நடந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களுக்கு வந்து பலமுறை பிரச்னை செய்துள்ளனர். ராமர், அனுமான், கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழகம் அவதூறாக பேசும் என்று கூட்டங்களுக்கு தடை கோரியுள்ளனர், என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கு உதவுமா?

பேரணிக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேரணியால் என்ன தாக்கம் ஏற்பட்டும் என்று கேட்ட போது, செய்தியாளர்களை சந்திக்கும் வழக்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கிடையாது என்று கூறினர். பிறகு பேரணி குறித்து அந்த அமைப்பு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய பேரணியால் பொதுமக்கள், இந்து சமுதாய மக்களிடையே நம்பிக்கை பிறந்துள்ளதாக பேரணிக்கு பிறகு அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கத்திற்கு ஆதரவான ஒரு அமைப்பு என்று கூறினார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாலர் கலி.பூங்குன்றன்.

"மூடநம்பிக்கை, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, இடஒதுக்கீடு என மக்கள் சார்ந்த எந்த பிரச்னையிலும் ஆர்.எஸ்.எஸ். குரல் கொடுத்ததில்லை. இந்துக்களுக்கான அமைப்பு என்று கூறிக்கொண்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கும். அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும்," என்றார் அவர்.

ஒரு பேரணியின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வளர்ந்து விட்டது என்று முடிவுக்கு வரமுடியாது என்று தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார்.

ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாடு

"யாராக இருந்தாலும் கொள்கை முக்கியமானது. மக்களுக்கு பிரச்னை ஏற்படும் போது உடன் வந்து யார் நின்றார்கள், யார் போராடினார்கள், யார் குரல் கொடுத்தார்கள் என்று மக்கள் கவனித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி உடன் நிற்கும் நபர்களை மட்டுமே மக்கள் ஏற்பார்கள்," என்றார் அவர்.

"ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்ததால் அதற்கு ஓர் அரசியல் விளம்பரம் கிடைத்ததாக தான் நான் கருதுகிறேன்," என்றார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தமிழ்நாட்டில் எந்த அடையாளமும் கிடையாது, அதனால் இந்த பேரணியால் எந்த விளைவும் மக்களிடையே ஏற்படாது என்று கூறினார் திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, சுயமரியாதை இயக்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என மூன்றுமே 1920 காலகட்டங்களில் தான் உருவானது. ஆனால் 100 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தமிழ்நாட்டில் என்ன இடம் கொடுக்க வேண்டும் என்று மக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கலி.பூங்குன்றன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: