தமிழ்நாட்டில் 45 இடங்களில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி - சீருடையில் பங்கேற்ற எல்.முருகன், ஹெச்.ராஜா

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி அண்மையில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் இன்று பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்
- ஊர்வலத்தின்போது லத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது
- எந்தத் தனி நபர் குறித்தோ, சாதி, மதம் குறித்தோ பாட்டுப்படவோ, கருத்துகளைப் பேசவோ கூடாது
- நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது
- பேரணியில் போது எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்துக்கள் சேதமடைந்தாலும் அதற்கான இழப்பீடு கொடுக்கப்படும் என உறுதிமொழி அளிக்கவேண்டும்
ஆர்எஸ்எஸ் கொடிக்கு ஆரத்தி எடுத்து தொடங்கிய பேரணி
சென்னை, கொரட்டூரில் இன்று மாலை 4.15 மணி அளவில் ஆர்எஸ்எஸ் பேரணி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் இருந்து தொடங்கி நடைபெற்றது.
இதில் மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் கொடிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியையொட்டி 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பேரணி செல்லும் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதே நேரத்தில் ட்ரோன் பறக்க விடப்பட்டும், உயரமான கட்டடங்களில் நின்று கொண்டும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியானது அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொரட்டூர் மத்திய நிழற்சாலையில் இருந்து தொடங்கி, கிழக்கு நிழற்சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கொரட்டூர் மத்திய நிழற்சாலைக்கு வந்தடைந்தது.
சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவுக்கு இந்தப் பேரணி நடைபெற்று விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

கோவை மாநகரில் ஆர்எஸ்எஸ் பேரணி
கோவை மாநகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி பொன்னைய ராஜபுரம் பகுதியில் தொடங்கி ராஜவீதி தேர்முட்டு திடலில் முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்பைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை ராஜவீதி தேர்முட்டி சாலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி முடிந்தவுடன் கொடி ஏற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணை ஆணையர் தலைமையில் சுமார் 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. அபிராமி திரையரங்கில் தொடங்கி நடூர் வழியாக அன்னூர் சாலை சென்று காரமடையில் இந்தப் பேரணி நிறைவுற்றது.
இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருப்பூரில் காவிக்கொடி அசைத்து ஆதீனம் தொடங்கி வைத்த பேரணி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணி அளவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் காவிக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி சாலை வடுகம்பாளையம் பகுதியில் ஆரம்பித்து ஹாஸ்டல் ரோடு, கொசவம்பாளையம் சாலை மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரணி நிறைவு பெற்றது.
பேரணி சென்ற பாதையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இந்தப் பேரணியில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கு பெற்றனர்.
பேரணியைத் தொடர்ந்து கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அங்காளம்மன் கோவில் எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அரண்மனையில் இன்று மாலை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.
அரண்மனை பகுதியில் புறப்பட்ட ஆர்எஸ்எஸ் பேரணி மீன் மார்க்கெட், ரோமன் சர்ச் பகுதி வழியாக மீண்டும் அரண்மனை பகுதிக்கு வந்து சேர்ந்தது.
முன்னதாக அரண்மனையில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணியை இஸ்லாமியர் ஒருவர் 'மலர் தூவி, வரவேற்றார். இதேபோல், விருதுநகர், சிவகங்கை, தெங்காசி போன்ற மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.
பின்னணி என்ன?
கடந்த ஆண்டு, காந்தி பிறந்த நாளான அக்டோர் 2ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது.
கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டார்.
ஆகவே, ஏற்கெனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம்.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டுத் திடல்களைத் தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால், ஆர்எஸ்எஸ் இதை ஏற்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பேரணிக்கு அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமையிலான அமர்வு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












