மீனவர்கள்தான் சென்னையின் பூர்வகுடிகளா? - பழவேற்காடு முதல் கோவளம் வரை வாழும் இவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. மீனவர்களை கடல்பகுதியில் இருந்து நீக்கும் முயற்சி என்று இந்த நடவடிக்கைக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது.
இதையொட்டி மீனவர் சமூகம் குறித்தும் சென்னையின் பூர்வகுடிகள் குறித்தும் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. சென்னை என்றால் ஃபில்டர் காபி, பிரியாணி, ஐடி நிறுவனங்கள், நெருக்கடி மிக்க சாலைகள் போன்றவையே இன்று நிலவுக்கு வருகின்றன.
ஆனால், இவை எல்லாவற்றுக்கும் முன்பாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சென்னையின் வரலாற்றில் மீனவர்கள் பங்கு பெற்றுள்ளனர். சென்னையின் காற்றில் பல நூற்றாண்டுகளாக மீன் குழம்பு மற்றும் கருவாட்டின் மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
மீனவர் சமூகத்தினர் சென்னையின் பூர்வகுடிகளா? சென்னை நகரத்தின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு என்ன? நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் பகுதியில் வாழும் மீனவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்?
சென்னை நகரத்தின் தோற்றம்

பட மூலாதாரம், Getty Images
சென்னை அல்லது மெட்ராஸ் என்ற நகரம், ஆங்கிலேயர் காலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கபட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மெட்ராஸ் என்பது செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் உட்பட்ட பகுதியாக மட்டுமே இருந்தது. பிறகு நிர்வாக வசதிக்காக பிராட்வே என்று அழைக்கப்படும் ஜார்ஜ் டவுன் பகுதியும் அதனுடன் சேர்த்து நிர்வாகம் செய்யப்பட்டது.
இந்தப் பகுதிகளைத் தவிர தற்போதைய சென்னையின் அங்கமாக இருக்கும் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் என்று பல பகுதிகளில் தனித்தனி கிராமங்களாக இருந்தன என்று சென்னையின் வரலாறு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஸ்ரீராம் கூறினார்.
அதன்பிறகு மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்பவும் தொழில் வளர்ச்சிக்காகவும் சென்னையின் பிற பகுதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன.
19ஆம் நூற்றாண்டில், சென்னைக்கு வடக்கே இருந்த ராயபுரம், காசிமேடு, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளும், சென்னைக்கு தெற்கே இருந்த மயிலாப்பூர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளும் ஒரே நகரமாக இணைக்கப்பட்டன.
சென்னையின் பூர்வகுடிகள்

பட மூலாதாரம், Getty Images
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின்போது சென்னை நகரத்தில் மீனவர்கள், நாயக்கர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்ததாக பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் குறிப்புகள் உள்ளது என்று பிபிசி தமிழிடம் பேசிய 'வாழும் மூதாதையர்' நூலின் எழுத்தாளரும் மானுடவியல் ஆய்வாளருமான முனைவர் அ.பகத்சிங் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே 300 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வாழ்ந்து வந்தது குறித்து, அறியப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு முந்தைய காலகட்டத்தின் சென்னை நகரம் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது என்றும் சென்னையில் யார் வாழ்ந்து வந்தார்கள் என்று வரலாறு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார் பகத்சிங்.
சென்னையை மெட்ராஸ் என்றும் மதராசப்பட்டினம் என்றும் ஆங்கிலேயர் காலத்தில் அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் வந்தது குறித்து அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் உறுதியான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆனால், "கடந்த 380 வருடங்களாகப் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் சென்னையை ஒட்டி பல மீனவ கிராமங்கள் இருந்துள்ளன.
சென்னைக்கு வடக்கே பழவேற்காடு தொடங்கி, சென்னைக்கு தெற்கே கோவளம் வரை இருக்கும் பல மீனவ கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த கிராமங்களில் வாழ்ந்த மீனவ சமூகம் தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து வருகின்றனர்," என்று குறிப்பிட்டார் பகத்சிங்.
சென்னை நகரத்திற்கு மதராசப்பட்டினம் என்ற பெயர், மீனவர்கள் வைத்த பெயரில் இருந்துதான் உருவாகியிருக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாக பிபிசி தமிழிடம் பேசிய கருப்பர் நகரம் புத்தகத்தின் எழுத்தாளர் கரன் கார்க்கி தெரிவித்தார்.
"அண்மையில் ராயபுரம் அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டில், 'மாதரசன்பட்டினம்' என்று குறிப்புகள் காணப்படுகிறது.
இந்தப் பெயர்தான் பின்னாளில் மதராசப்பட்டினம் என்றும் மெட்ராஸ் என்றும் அழைக்கப்பட்டது. கடலை ஒட்டியுள்ள ராயபுரம் பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடிகளான மீனவர்கள்தான் இந்தப் பெயரை வைத்து இருப்பார்கள்," என்று பிபிசியிடம் பேசும்போது தெரிவித்தார்.
சென்னையும் மீனவர்களும்

பட மூலாதாரம், Getty Images
"வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருமல்லிக் கேணியான் சென்று"
12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் பாடிய பாசுரம் இது. இதில் திருவல்லிக்கேணியில் இருந்து சூரியன் மறையும் காட்சியைப் பார்க்கும் போது கடற்கரை மணலில் பவளமும் முத்தும் கரைக்கு வந்து சேரும் என்று சென்னையை ஒட்டிய கடல் குறித்தும், அங்கு கிடைக்கும் முத்து, பவளம் போன்ற பொருட்கள் குறித்தும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்து அறியலாம் என்று வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பகுதியை ஒட்டிய மீனவர்கள், கடல் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்ட வாணிபர்களுக்காக கடல் கடந்து படகுகளை இயக்கியுள்ளனர். முத்து, சங்கு போன்ற பொருட்கள் பல ஆண்டு காலமாக இங்கிருந்து வணிகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் படகுகளை இயக்கும் முக்கிய வேலையை மீனவர்கள் செய்தனர் என்று பகத்சிங் தெரிவித்தார்.
1875ஆம் ஆண்டு சென்னையில் துறைமுகம் கட்டும் பணியை ஆங்கிலேயர் தொடங்கினர். அப்போது துறைமுகத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வேலையில் மீனவர்கள் ஈடுப்பட்டனர்.
"சென்னை துறைமுகம் கட்டுவதற்கு முன்பு வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, மயிலாப்பூர் செல்லும் சாலையில் வலதுபுறம் பல மீனவ கிராமங்கள் இருந்துள்ளன.
துறைமுகம் கட்டுவதற்காக கடலை ஆழப்படுத்திய பிறகுதான், இப்போது மெரினா கடற்கரை இருக்கும் பகுதியில் இவ்வளவு விசாலமான கடற்கரை கிடைத்தது.
ஆனால், தற்போது நொச்சிக்குப்பம் முதல் ஸ்ரீனிவாசபுரம் வரை உள்ள கிராமங்கள் இந்தத் துறைமுகக் கட்டுமானப் பணி தொடங்குவதற்கும் முன்பே அங்குதான் இருந்தது," என்றார் பகத்சிங்.
மீனவர்கள் வந்தேறிகளா?

பட மூலாதாரம், Getty Images
15ஆம் நூற்றாண்டில் சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் இருந்த காலத்தில் அந்தப் பகுதியில் பல மீனவ கிராமங்கள் இருந்தது என்று எழுத்தாளர் கரன் கார்க்கி கூறினார்.
ஆங்கிலேயர்கள், சென்னை என்ற பெயரில் ஒரு நகரத்தை கட்டமைக்க தொடங்கிய காலத்தில், ஆலைகளில் வேலை செய்ய வட தமிழக பகுதிகளான திண்டிவனம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மக்களை இடப்பெயர்வு செய்து ஆங்கிலேயர்கள் அழைத்து வந்தனர். இது பற்றிய குறிப்புகள் ஆங்கிலேயர்களின் நிர்வாக பதிவேடுகளில் உள்ளன.
"சென்னையில் மீனவ சமூகம் வாழ்ந்து வந்தாலும் இந்த வேலைகளுக்கு யாரும் செல்லவில்லை. பழங்குடியினர் காடுகளை சார்ந்து வாழ்வது போல மீனவர்கள் மட்டுமே கடலைச் சார்ந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மீனவர் சமுதாயத்தில் இடப்பெயர்வு நடந்திருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருக்கிறது," என பகத்சிங் தெரிவித்தார்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மீன்வளத்துறை என்று தனியாக ஒரு துறையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். மேலும் எண்ணூர் பகுதியில் மீன்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கண்காணிப்பகமும் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலர் நடுக்குப்பம் மீனவக் கிராமத்தில் பிறந்தவர். அவர் வாழ்ந்த வீடு கடற்கரையை பார்த்தவாறு அந்த சாலையில் இருந்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன.
1910ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்திற்கு அருகே சில கட்டடங்களை எழுப்ப ஆங்கிலேயர்கள் திட்டமிட்டபோது, அங்கு மீனவ கிராமங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அந்தத் திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி சிங்காரவேலர் ஆங்கிலேய கவர்னருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதமும் ஆங்கிலேயர்களின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று பகத்சிங் தெரிவித்தார்.
அன்று, செயின்ட் ஜார்ஜ் கோட்டை முதல் உயர்நீதிமன்றம் வரை இருந்த சென்னை நகரம் இன்று வடக்கே அரக்கோணம் வரையும், தெற்கே செங்கல்பட்டு வரையும் நீட்சியடைந்து இருக்கிறது. ஆனால் இன்று வரை சென்னையின் மாறாத பகுதியாக ஓரளவுக்கு நீடிப்பது இந்த பாரம்பரிய மீனவ கிராமங்கள் மட்டுமே என்றார் எழுத்தாளர் பகத்சிங்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












