காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அவசரத்தை மிகைப்படுத்த முடியாது. புவி வெப்பமயமாதல் குறித்து சமூக வலைதளங்களில் பலர் தவறான புரிதல் கொண்டுள்ளனர்.
எகிப்தில் தற்போது 27ஆவது காலநிலை உச்சிமாநாடு நடைபெற்றுவருவதால், காலநிலை மாற்றம் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இது தொடர்பான தவறான தகவல்களும் அதிகம் பரவிவருகின்றன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.
காலநிலை மாற்றம் என்பது உண்மையல்ல
சிலர் காலநிலை மாற்றம் உண்மையில்லை என்று நம்புகின்றனர். அவர்கள் இந்தப் பிரச்னையை சதிக்கோட்பாடுகளாக கருதுகிறார்கள்.
புவி வெப்பமடைதல் என்பது ஒரு ரகசியமான உலகமயக் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன புரளி என்று அவர்கள் நம்பலாம். மற்றவர்கள் இது பணம் சம்பாதிக்கும் திட்டம் அல்லது நமது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் குறைக்கும் ஒரு மோசமான சூழ்ச்சி என்று நினைக்கலாம்.
ஆனால், இத்தகைய கருத்துகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை.
99 சதவிகித விஞ்ஞானிகள் சில மதிப்பீடுகளின்படி காலநிலை மாற்றம் உண்மையானது மற்றும் இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
1850ஆம் ஆண்டு முதல் உலக சராசரி வெப்பநிலை 1.1 செல்சியஸ் உயர்ந்துள்ளதாக காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு (IPCC) கூறுகிறது.
இதன் விளைவாக, தீவிர வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமடைந்து உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகின்றன.
மனிதர்களின் ஆதிக்கம் வளிமண்டலம், கடல் மற்றும் நிலத்தை வெப்பமாக்கியுள்ளதாக 2021ஆம் ஆண்டின் ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.
“காலநிலை மாற்றம் தற்போது இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை நம்புவதற்கு இந்தாண்டின் தீவிரமான வானிலை நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டும்” என்கிறார் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானி எல்லா கில்பர்ட்.
காலநிலை மாற்றம் மேற்கத்திய நாடுகளின் பிரச்னை
புவி வெப்பமயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு முக்கிய காரணமாக உள்ளது. இது சூரியனில் இருந்து வெப்பத்தை இழுத்து, பூமியை சூடாக்குகிறது.
அதிகப்படியான உமிழ்வுகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.
எனவே ஏழை நாடுகளில் உள்ள பலர் காலநிலை மாற்றத்தை தீர்ப்பதை ஒரு மேற்கத்திய பிரச்னையாக கருதுகின்றனர்.
ஆனால் காலநிலை மாற்றத்திற்கு எல்லைகள் கிடையாது. அது ஏற்கனவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. உதாரணமாக, சமீபத்திய பாகிஸ்தான் வெள்ளத்திற்கு புவி வெப்பமடைதல் முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றத்தால் ஏழை நாடுகளே அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதற்கான பல காரணங்களில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவர்களிடம் போதுமான திறன் இல்லாததே முக்கிய காரணமாகும்.
"காலநிலை மாற்றம் உலகளாவிய பிரச்னை” என்கிறார் ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லிசா ஷிப்பர். COP27 உட்பட, காலநிலை தொடர்பான விவாதங்களில் ஏழை நாடுகளின் கருத்துகள் ஏன் கேட்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். COP27 மாநாட்டில் காலநிலை நீதி தொடர்பான விவாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும்
தொடர்ச்சியான குளிர் காலநிலை நிலவும் நாடுகளில் ‘வெப்பமான பூமி’ என்ற யோசனை மேலோட்டமாக பார்க்கும் போது சுவாரசியமான ஒன்றாகத் தெரியலாம்.
ரஷ்ய அதிபர் புடினின் ஒரு கருத்தை உதாரணமாகக் கூறலாம். "வெப்பமான ரஷ்யாவில், மக்கள் குளிர் தாங்கும் உடைகளுக்கு குறைவாக செலவழிப்பார்கள் மற்றும் தானிய அறுவடை அதிகரிக்கும்" என்று 2003ஆம் ஆண்டில் புடின் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தப் பார்வை ரஷ்ய சமூக ஊடகங்களில் இன்றும் வெளிப்படுகிறது.
இங்கு பிரச்னை என்னவென்றால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எந்தவொரு ஆதாயமும் கிரகம் முழுவதும் ஏற்படும் பெரும் பாதிப்பால் அர்த்தமற்றதாகிறது.
ஐபிசிசியின் மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸ் அதிகரித்தால், காலநிலை மாற்றத்தால் உலகிற்கு 54 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்படும். இதுவே, 2 செல்சியஸ் அதிகரித்தால் 69 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்படும்.
மத்திய கிழக்கு நாடுகளில் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறுவதைக் காணலாம். பசிபிக் தீவு நாடுகள் உயரும் கடல்மட்டத்தின் கீழ் மறைந்து போகலாம். மேலும், பல ஆப்பிரிக்க நாடுகள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம்.
வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறிவருவதால் ரஷ்யா போன்ற குளிர் நாடுகளில் கூட ஏற்கனவே காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுகிறது.
கடல் மட்டம் உயரவில்லை, இது அலைகளின் செயல்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் சமீபத்திய தசாப்தங்களில் ஏற்பட்ட வெப்பமயமாதலின் 90 சதவிகிதத்தை கடல்கள் ஏற்கனவே உறிஞ்சிவிட்டன.
இதனால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளது. மேலும் வெப்பநிலை அதிகரிப்பதால் கடல்களும் விரிவடைகின்றன.
சமூக ஊடகங்களில், காலநிலை மாற்றத்தை சந்தேகிப்பவர்கள் கடல்மட்ட உயர்வை ‘அலைகளின் வேலை’ என்று கூறுவதைப் பார்க்க முடிகிறது.
அலைகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி காலப்போக்கில் சமநிலையை அடையும் சிறிய தினசரி மாற்றங்களைக் குறிக்கின்றன. ஆனால், கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் உலக கடல் மட்டம் 160 முதல் 210 மிமீ வரை உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை விட சற்று அதிகம் எனக் கூறும் எடின்பர்க் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கென் ரைஸ், இந்தச் செயல்முறையின் வேகம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.
இந்த மாற்றம் வெறும் கண்களுக்கு அரிதாகவே தெரிந்தாலும், இது ஏற்கனவே தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல்மட்டம் உயரும்போது கரையோர அரிப்பு துரிதப்படுத்தப்பட்டு வெள்ள அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், 2100ஆம் ஆண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 மீ உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதன் பொருள், தற்போது கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக ஆசியாவில் வசிக்கும் மக்கள் விரைவில் தங்கள் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதையோ அல்லது நீருக்கடியில் இருப்பதைக்கூட பார்க்கலாம்.
இது மிகவும் தாமதம்
காலநிலை மாற்றம் தொடர்பான தலைப்புச் செய்திகளைக் கண்டு கவலைப்படாமல் இருப்பது கடினம். கடைசி வாய்ப்புகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள் பற்றிய அனைத்து பேச்சுகளும் மிகப்பெரியதாக இருக்கலாம்.
இது, இனி எதுவும் செய்ய முடியாது என்று எண்ணைத்தையும் சிலருக்கு கொடுக்கலாம்.
நமக்கு இரண்டு வழிகள் இல்லை. காலநிலை ஏற்கனவே மாறி வருகிறது. அந்த மாற்றங்களின் தாக்கம் வரவிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உணரப்படும்.
ஆனால் ஒரு நல்ல செய்தியும் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடியை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதற்கு காலநிலை விஞ்ஞானிகளுக்கு நன்றி கூற வேண்டும்.
பசுமை இல்ல வாயு உமிழ்வை நாடுகள் மிகப்பெரும் அளவில் குறைக்க வேண்டும். மேலும், ஏற்கனவே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களைக் கைப்பற்றுவதற்கான வழிகளையும் உருவாக்க வேண்டும்.
அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி பருவநிலை மாற்றத்திற்கு எதிரான அவர்களின் செயல் திட்டங்களை விவாதிக்க நல்ல வாய்ப்பு என்பதால் COP27 போன்ற உச்சிமாநாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
நமது பாதிப்பைக் குறைக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு செயலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று கூறும் விஞ்ஞானி கில்பர்ட், நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு சுருங்குகிறது, ஆனால் அது இன்னும் இருக்கிறது, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













