பொன்னியின் செல்வன் நாவல் கதாபாத்திரங்கள் பேசப்பட இதுவே காரணம்

பட மூலாதாரம், Madrastalkies/twitter
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வரவிருக்கும் நிலையில், அந்த நாவலில் உள்ள முக்கியப் பாத்திரங்கள் எவை, அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
பொன்னியின் செல்வன் நாவலில் மொத்தம் 55 பாத்திரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வருகின்றன. அதில் 37 கதாபாத்திரங்கள் முக்கியமானவை. அவற்றிலும் முக்கியமான 15 பாத்திரங்கள் எவை, அவை அந்த நாவலில் என்ன பங்கை வகிக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
வல்லவரையன் வந்தியத்தேவன்

பட மூலாதாரம், @Karthi_Offl/Twitter
பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகன் வந்தியத்தேவன்தான். அருள்மொழி வர்மனின் பட்டப் பெயரிலேயே நாவல் அமைந்திருந்தாலும், அதில் மிக முக்கியப் பாத்திரமாக வருவதென்னவோ வந்தியத்தேவனின் பாத்திரம்தான். இந்தப் பாத்திரத்தின் பார்வையில்தான் நாவலின் பெரும் பகுதி நகர்கிறது. இந்த நாவலில், வந்தியத்தேவன் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனின் நண்பன். சோழ இளவரசி குந்தவைப் பிராட்டியின் காதலன். பிறகு, அருள்மொழி வர்மனின் உயிர்த் தோழன்.
டி.வி. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரம் நூலில், "குந்தவைப் பிராட்டி வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மணம் செய்து கொடுக்கப் பெற்றனள். அவ்வரச குமரன் வேங்கி நாட்டில் வாழ்ந்த கீழைச் சாளுக்கிய மரபினனாதல் வேண்டும்" என்கிறார். ஆனால், கல்கி இதில் இரண்டாவது கருத்தை ஏற்கவில்லை. வந்தியத்தேவன், வல்லத்து வாணர் குல இளவரசனாய் இருக்கலாம் என்ற நோக்கிலேயே நாவலில் அவனது பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.


தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் "ஸ்ரீ ராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்" என வந்தியத்தேவனது பெயர் காணப்படுகிறது. சதாசிவ பண்டாரத்தாரின் நூலிலும் தஞ்சை கல்வெட்டிலும் சேர்த்து வல்லவரையன் குறித்து நமக்குக் கிடைக்கும் செய்திகள் சில வரிகள்தான். ஆனால், கல்கியின் நாவலில் பல ஆயிரம் வரிகளில் வந்தியத்தேவனின் பெயர் வருகிறது.
பொன்னியின் செல்வன் நாவல் மட்டுமல்லாமல், வந்தியத்தேவன் வாள், நந்திபுரத்து நாயகி, வேங்கையின் மைந்தன், உடையார் ஆகிய நாவல்களிலும் வந்தியத்தேவன் வருகிறான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.
அருள்மொழி வர்மன்

பட மூலாதாரம், @actor_jayamravi/twitter
பொன்னியின் செல்வன் என்பது அருள்மொழிவர்மனையே குறிக்கிறது. பிற்காலத்தில் ராஜராஜசோழன் (ஆட்சிக் காலம்: கி.பி. 985 - கி.பி. 1014) என சரித்திரத்தில் இடம்பெற்ற மன்னனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அருள்மொழி வர்மன். சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனுக்கும் அவனது பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த மூன்றாவது மகன்.
பொன்னியின் செல்வன் நாவலில், குந்தவையின் தம்பி, வந்தியத்தேவனின் தோழன் என்ற வகையில் இந்தப் பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தனது சித்தப்பனான உத்தமசோழனுக்கு விட்டுக் கொடுத்ததாகவும் இந்தப் பாத்திரம் புகழப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளின்படி பார்த்தால், தன் தமக்கை குந்தவைப் பிராட்டி மீது பெரும் பற்றுக் கொண்டவராக ராஜராஜ சோழன் காணப்படுகிறார். அதை, பொன்னியின் செல்வன் நாவல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.
குந்தவைப் பிராட்டி

பட மூலாதாரம், @trishtrashers/twitter
சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனின் புதல்வி. ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. வல்லவரையன் வந்தியத்தேவனின் மனைவி. பொன்னியின் செல்வன் நாவலில், பெரும்பாலான சம்பவங்களின் பின்னணியில் குந்தவையின் பாத்திரமே இருக்கிறது. தெளிவான, முக்கியமான முடிவுகளை குந்தவையே எடுப்பதாகக் காட்டப்படுகிறது.
சுந்தர சோழன் தஞ்சையில் வசித்தாலும் பழையாறை நகரில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள் குந்தவை. வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க குந்தவையே முடிவெடுப்பதாகவும் நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதாகவும் இந்த நாவலில் கல்கி காட்டியிருக்கிறார். தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுகளில் "ஸ்ரீ ராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்" என குந்தவையின் பெயர் குறிப்பிடப்படுகிறது. தன் தந்தை மற்றும் தாயின் உருவங்களை தஞ்சை பெரிய கோவிலில் வடிக்கச் செய்த குந்தவை, தன் தந்தையின் பெயரால் சுந்தர சோழ விண்ணகர் ஆதூர சாலை என்ற மருத்துவ நிலையத்தை நடத்த நிலங்களை அளித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.
அநிருத்த பிரம்மராயர்

பட மூலாதாரம், mohanraman0304/instagram
சுந்தர சோழனின் முதன்மை அமைச்சராக பொன்னியின் செல்வன் நாவலில் வருகிறார். மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் என்பது இவருடைய முழுப் பெயர்.
தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு திருவழுந்தூரில் உள்ள கருணாகரமங்கலம் என்ற ஊரை சுந்தரசோழன் வழங்கிய செய்திகள் அன்பில் செப்பேடுகளின் மூலம் தெரியவருகின்றன. இதுவரை கிடைத்துள்ள சோழர் காலச் செப்பேடுகளிலேயே இந்த அன்பில் செப்பேடுகளே பழமையானவை.
சோழ நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் அறிந்தவராக அநிருத்த பிரம்மராயர் நாவலில் காட்டப்படுகிறார். சுந்தர சோழரின் குடும்பத்திற்கு எதிராக நடக்கும் சதிகளை முறியடிப்பதில் முக்கியப் பங்கு விகிக்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மோகன் ராமன் இந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார்.


பெரிய பழுவேட்டரையர்
பொன்னியின் செல்வன் நாவலில் கதாநாயகர்களுக்கு இணையான ஆளுமையும் முக்கியத்துவமும் கொண்ட பாத்திரம் இது. கண்டன் அமுதன் என்பது இவரது பெயர். சோழ நாட்டிந் தன அதிகாரியாகவும் சுங்க வரி விதிக்கும் அதிகாரியாகவும் இருப்பதாக நாவலில் காட்டப்படுகிறது. தற்போதைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழுவூர் பகுதி இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
சுந்தர சோழ சக்கரவர்த்தியின் குடும்பத்திற்கு எதிராக கடம்பூர் அரண்மனையில் நடத்தப்படும் சதியாலோசனைக் கூட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார் பெரிய பழுவேட்டரையர். சோழர்களுக்காக போரில் ஈடுபட்டு அறுபத்தி நான்கு காயங்களைப் பெற்றவராக இந்த நாவலில் பெரிய பழுவேட்டரையர் அறிமுகப்படுத்தப்படுகிறார். சுந்தர சோழருக்குப் பிறகு, பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக, உத்தம சோழன் எனும் மதுராந்தகச் சோழன் அரியணைக்கு வர வேண்டுமென பழுவேட்டரையர் விரும்புவதாக நாவலில் காட்டப்படுகிறது. ஆதித்த கரிகாலனை சோமன், ரவிதாஸன், பரமேஸ்வரன், ரேவதாஸ கிரமவித்தன் ஆகியோரே கொலை செய்ததாக கல்வெட்டுகள் கூறும் நிலையில், கடம்பூர் அரண்மனையில் கத்தியை எறிந்து பழுவேட்டரையரே ஆதித்த கரிகாலனைக் கொன்றதாக நாவலில் வருகிறது.
நாவலின் முடிவில் பழுவேட்டரையர் தன்னைத் தானே குத்திக்கொண்டு இறந்துவிடுகிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் சரத் குமார் நடிக்கிறார்.
நந்தினி

பட மூலாதாரம், Lyca Productions/Twitter
பொன்னியின் செல்வன் நாவலிலேயே மிகவும் கவர்ச்சிகரமான அதே சமயம் மிக ஆபத்தான கதாபாத்திரமாக புனையப்பட்டுள்ள பாத்திரம். சிறு வயதில் ஆதித்த கரிகாலனை காதலித்தவள். பின் வீரபாண்டியனின் மனைவியாவதாக காட்டப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்ற பின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளைய ராணியாகிறாள். வீர பாண்டியனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் ஆசைகொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள்.
இந்தப் பாத்திரத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. துவக்கத்தில் வீர பாண்டியன் மனைவியாக காட்டப்படும் நந்தினி, ஓரிடத்தில் பாண்டிய மன்னனின் மகளாகவும் குறிப்பிடப்படுகிறாள்.
இந்த நாவலில் மட்டுமல்லாமல், நா. பார்த்தசாரதி எழுதிய பாண்டிமாதேவி நாவலிலும் இந்தப் பாத்திரம் வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
சின்ன பழுவேட்டரையர்
நாவலில் பெரிய பழுவேட்டரையரின் தம்பியாக வரும் இவரது பெயர் காலாந்தகக் கண்டர். இவரது கட்டுப்பாட்டில்தான் தஞ்சை அரண்மனை நாணய சாலை, தானிய அறை, பாதாளச் சிறை, சுரங்கப்பாதை ஆகியவை இருந்தன. தன்னுடைய அண்ணன் நந்தினியிடம் சிக்கியிருப்பது குறித்து அவ்வப்போது வருத்தத்தை வெளியிடுவார். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவராகவும் சோழ நாட்டின் விசுவாசியாகவும் நாவலில் வருகிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
ஆதித்த கரிகாலன்

பட மூலாதாரம், Lyca Productions/Twitter
சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனின் மகன். சுந்தர சோழனுக்குப் பிறகு அரசனாக வேண்டிய பட்டத்து இளவரசன். நாவலில் வந்தியத்தேவனின் நண்பன். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனை இளம் வயதிலேயே போரிட்டுக் கொன்றதாக ஆனை மங்கலத்துச் செப்பேடுகள் கூறுகின்றன. கி.பி. 966ல் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.
பொன்னியின் செல்வன் நாவலில், மிகவும் நிலையற்ற ஒரு கதாபாத்திரமாக ஆதித்த கரிகாலனின் பாத்திரம் காட்டப்படுகிறது. சிறு வயதில் நந்தினியைக் காதலித்ததாகவும் பிறகு அவள் கண் முன்பாகவே, அவளது கணவனான வீர பாண்டியனைக் கொன்றதாகவும் அதை நினைத்து நினைத்து வருந்துவதாகவும் நாவல் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் பொன்னாலான மாளிகையை கட்டியவன் இந்த ஆதித்த கரிகாலன்.
பட்டம் கட்டப்பட்ட மூன்றாவது ஆண்டில், 969ல் சிலரால் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு, ஆதித்த கரிகாலனைக் கொன்ற நான்கு பேரைப் பட்டியலிடுகிறது. சுந்தர சோழருக்குப் பிறகு அரசனான உத்தம சோழனின் காலத்தில் இந்த நால்வரும் தண்டிக்கப்படவில்லை. உத்தம சோழனுக்குப் பிறகு அருள்மொழி வர்மன் அரசனான பின், நால்வரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு, விரட்டப்படுகின்றனர்.
பொன்னியின் செல்வன் பாத்திரத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.
ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
நாவலில் முதன்மந்திரி அநிருத்த பிரம்மராயரின் ஒற்றன். தீவிர வைணவராக நாவலில் சித்தரிக்கப்படும் ஆழ்வார்க்கடியான், நந்தினியின் சகோதரனாகவும் குறிப்பிடப்படுகின்றான். திருமலை என்பது இவனது இயற்பெயர். ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டு தன் பெயரை ஆழ்வார்க்கடியான் நம்பி என்று மாற்றிக் கொண்டவன். உடல் முழுவதும் நாமம் இட்டுக் கொண்டு, கையில் எப்போதும் தடியுடன் இருப்பவர். வைணவத்தின் மீதான பற்றினால் சைவர்களை காணும் பொழுதெல்லாம் சண்டையிடுபவராக நாவலில் வருகிறார்.
தன்னுடைய வளர்ப்புச் சகோதரியான நந்தினி சோழ நாட்டிற்கு தீங்கு செய்ய நினைத்தாலும் சோழ நாட்டின் விசுவாசியாகவே ஆழ்வார்க்கடியான் இருக்கிறான்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.
சுந்தர சோழர்
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் என வரலாற்றில் குறிக்கப்படும் இந்த மன்னரின் இறுதிக் காலத்தில்தான் பொன்னியின் செல்வன் நாவல் நடைபெறுகிறது. இவரது ஆட்சிக் காலம் கி.பி. 957 முதல் கி.பி. 970 வரை. அரிஞ்சய சோழனின் இரண்டாவது மகன். இவரது இயற் பெயர் இரண்டாம் பராந்தகச் சோழன். ஆனால், மிகுந்த நல்ல தோற்றமுடையவர் என்பதால் மக்கள் இவரை சுந்தர சோழன் என்று அழைத்தனர்.
மதுரை கொண்ட கோ ராசகேசரிவர்மன், பாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமாள் ஸ்ரீ சுந்தரசோழ தேவர் என கல்வெட்டுகள் இவரைக் குறிப்பிடுகின்றன. தன் மகனும் பட்டத்து இளவரசனுமாகிய ஆதித்த கரிகாலன் இறந்த துக்கத்திலேயே சுந்தரசோழன் இறந்தார். இவருடைய உருவமும் மனைவி வானவன் மாதேவியின் உருவமும் தஞ்சை பெரிய கோவிலில் சிலைகளாக உள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.
செம்பியன் மாதேவி
சுந்தரசோழனின் பெரியம்மா. அதாவது சுந்தர சோழனின் தந்தையான அரிஞ்சய சோழனின் அண்ணன் கண்டராதித்த சோழனின் மனைவி. கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜராஜ சோழன் என பல சோழ மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கும் உயர்ந்த இடத்தில் இருந்தவர்.
கண்டராதித்த சோழன் மறைந்தபோது, தம்முடைய மகன் குழந்தையாக இருந்ததால், தன் கொழுந்தனான அரிஞ்சய சோழனை அரசனாக்கியவர் இவரே. சோழ நாட்டில் உள்ள சைவத் திருத்தலங்கள் அனைத்தும் செங்கலால் கட்டப்பட்டிருந்த நிலையில், அவற்றை மாற்றி கல்லால் கட்டியவர் இவர்தான். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோவில்களை இவர் கற்கோவில்களாக மாற்றியுள்ளார். அவை தற்போதும் நிலைத்திருக்கின்றன.
சுந்தர சோழனின் குழந்தைகளான ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழிவர்மன் ஆகியோரை வளர்த்தவர். இவரது சமாதி செம்பியன் கிழானடி நல்லூர் என்ற சேவூரில் இருக்கிறது. திருவேள்விக்குடி கல்வெட்டுகளில் இவரது பெயர் குறிப்பிடப்படுகிறது.
பொன்னியின் செல்வன் நாவலில் போலியான மதுராந்தகச் சோழனை இவர் வளர்ப்பதாகவும் பிறகு உண்மையான மதுராந்தகச் சோழன் பட்டம் ஏற்பதாகவும் வருகிறது. கி.பி. 1001ஆம் ஆண்டுவரை இவர் உயிர்வாழ்ந்தார். செம்பியன் மாதேவியில் உள்ள திருக்கைலாயமுடையார் கோவிலில் இவருடைய உருவச் சிலை இருக்கிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஜெயசித்ரா நடித்திருக்கிறார்.
பூங்குழலி
பொன்னியின் செல்வன் நாவலில் மிகுந்த உள்ளக் கொந்தளிப்புள்ள மற்றொரு பாத்திரம் பூங்குழலி. தனியாக படகோட்டிச் செல்வது, மிகுந்த துணிச்சலுடன் பிரச்னைகளைச் சமாளிப்பது, வந்தியத்தேவனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் உதவிகளைச் செய்வது என மிக வலுவான பாத்திரமாக பூங்குழலி படைக்கப்பட்டிருக்கிறால். இளவரசன் அருள்மொழிவர்மன் மீது ஆசை கொண்டவளாகக் காட்டப்படும் பூங்குழலி, பிறகு சேந்தன் அமுதனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.
நாகப்பட்டனத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொள்ளும் தியாகவிடங்கரின் மகள்.
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?" என்ற பாடலை அவள் அடிக்கடி பாடுவதாக வரிகள் பூங்குழலி பாடுவதாய் பொன்னியின் செல்வன் நாவலில் அமைந்துள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.
வானதி

பட மூலாதாரம், @sobhitad/twitter
கொடும்பாளூர் இளவரசியாகவும் குந்தவை பிராட்டியின் தோழியாகவும் பொன்னியின் செல்வன் நாவலில் வருகிறார் வானதி. கொடும்பாளூர் சிற்றரசரும் சோழநாட்டு சேனாதிபதியுமான பூதிவிக்கிரம கேசரியின் சகோதரரின் மகள் இவர். சுந்தர சோழனின் காலத்தில் இவளுடைய தந்தை ஈழத்துப் போரில் உயிரிழக்கிறார்.
அருண்மொழிவர்மன் மீது மிகுந்த காதல் கொண்ட பெண்ணாக நாவலில் வானதி காட்டப்படுகிறாள். அருள்மொழிவர்மனை வானதி திருமணம் செய்துகொண்டாலும், அவரது பட்டமகிஷியாக இருந்தவர் உலகமாதேவி என்ற வேறொரு பெண். அருள்மொழிவர்மனை திருமணம் செய்துகொண்டதும் வானவன் மாதேவி என்ற பெயரில் இவர் அறியப்படுகிறார். இவருடைய மகனே ராஜேந்திரச் சோழன் என்ற பெயரில், ராஜராஜசோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வருகிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஷோபிதா துலிபலா நடிக்கிறார்.
சேந்தன் அமுதன்
பொன்னியின் செல்வன் நாவலில் இந்தப் பாத்திரம் மிக எளிமையான முறையில் அறிமுகமாகும் சேந்தன் அமுதன், முடிவில் உத்தம சோழன் என்ற பெயரில் அரசனாகிறான். வந்தியத்தேவனின் நண்பனாகவும் பூங்குழலியின் காதலனாகவும் நாவலின் பெரும் பகுதியில் வரும் சேந்தன் அமுதன், பிற்பகுதியில் சோழ இளவரசனாக முன்னிறுத்தப்படுகிறான். கண்டராதித்தருக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்த உண்மையான மகன் இவர்தான் என சொல்லப்படுகிறது.
அருள்மொழிவர்மனுக்கு முடிசூட்டும் தினத்தில், கிரீடத்தை சேந்தன் அமுதனுக்குச் சூட்டி, அவனை அரசனாக்குவதாகக் காட்டப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் அஸ்வின் நடித்திருக்கிறார்.
மதுராந்தகச் சோழர்
பொன்னியின் செல்வன் நாவலின் துவக்கத்தில், கண்டராதித்த சோழனுக்கும் செம்பியன்மாதேவிக்கும் பிறந்த மகனாக காட்டப்படும் பாத்திரம் இது. ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக இந்த மதுராந்தகச் சோழனுக்கு முடிசூட்டவே பெரிய பழுவேட்டரையர் கடம்பூர் அரண்மனையில் சதியாலோசனைக் கூட்டத்தை நடத்துவார்.
சரித்திரத்தில், மதுராந்தகச் சோழராக ஒருவரே உண்டு. அந்தப் பாத்திரத்தையே கல்கி, தனது நாவலில் மதுராந்தகச் சோழன், சேந்தன் அமுதன் என இரு பாத்திரங்களாக பிரித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












