கேப்டன் கூல் 2.0: தோனியுடன் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் ஒப்பிடுவது ஏன்?

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம், Facebook/Sanju Samson

2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது.

அதன் பின்னர், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், வாட்சன், ரஹானே என பலர் ராஜஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியிருந்தாலும் ஒருமுறை கூட அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.

இதனை சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு மாற்றிக்காட்டினார். கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ராஜஸ்தான் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 40 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த மூன்று போட்டிகளிலுமே அந்த அணி 10 அல்லது அதற்கும் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றுள்ளது.

நடப்புத் தொடரில் கேப்டன்சியில் அசத்தல்

வழக்கம் போலவே இந்த ஐ.பி.எல். தொடரிலும் வெற்றிகரமான அணியாக வலம்வரும் சிஎஸ்கே, ராஜஸ்தான் அணியை தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இரு அணிகளும் மோதிய கடைசி 7 ஆட்டங்களில் 6 முறை ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் சிறந்த செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சனின் கேப்டன்சிதான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஐபிஎல் தொடர்களை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி வெற்றிகரமான கேப்டனாகவே வலம் வருகிறார். தோனியைப் போன்று சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பிங்கோடு கேப்டன்ஸியை கவனிப்பது ஆகியவற்றை வைத்து சஞ்சு சாம்சனை கேப்டன் கூல் 2.0 என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம், Getty Images

சாம்சனுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கிரிக்இன்ஃபோ-விடம் பேசும்போது, தோனிக்கு நிகரான குணாதிசயங்கள் சஞ்சு சாம்சனிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

`நான் பார்த்தவரை அவர் மிகவும் அமைதியானவர், நிதானமானவர். அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், தனது வீரர்களுடன் நன்றாக தொடர்புகொள்கிறார். அவர் எவ்வளவு அதிகமாக வேலையைச் செய்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் அனுபவத்துடன் கற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கிறேன். தோனியைப் போன்றே முடிவுகளை அவரே எடுக்கிறார். அது சரியான முடிவோ, தவறான முடிவோ, சஞ்சு மேம்பட்டுள்ளார்.` என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

ஒற்றை ஆளாக போராடிய சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் அணிக்காக 2013ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், சூதாட்ட புகார் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டப் போது டெல்லி அணிக்காக விளையாடினார். 2018ல் ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பிய சஞ்சு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் அணிக்கு கேப்டனாக உயர்ந்தார்.

எனினும் 2021ல் ராஜஸ்தான் அணியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சஞ்சு சாம்சன் ஒற்றை ஆளாக ராஜஸ்தானுக்காக சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வழங்கியிருந்தார். பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 119 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். எனினும், அந்த தொடரில் ராஜஸ்தான் அணி 7வது இடத்தையே பிடித்தது. ஆனால், அடுத்த ஆண்டே ஃபீனிக்ஸ் பறவையாகவே மீண்டு ஃபைனல் வரை வந்து 2வது இடத்தை பிடித்தது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட 2021ல் அவருக்கு கேப்டன்சி பிடிபடவில்லை என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது கேப்டன்சி சிறப்பாக மேம்பட்டுள்ளது.

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம், BCCI/IPL

தோனியை கூலாக கையாண்ட சஞ்சு சாம்சன்

நடப்பு ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் சிறப்பான ஃபார்மிலேயே உள்ளது. ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், போல்ட், யுஸ்வேந்திர சஹால், ஜெய்ஸ்வால், படிக்கல் என சிறப்பான அணி அமைந்துள்ளதும் சஞ்சு சாம்சனுக்கு மிகப் பெரிய பலமாகும்.

ஆக்ரோசமான போக்கு அவரிடம் அதிகம் காணப்படுவது இல்லை. தோனியைப் போன்றே சஞ்சு சாம்சனும் மிகவும் சாந்தமாக சூழல்களை கையாள்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. சந்திப் சர்மா வீசிய அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட, 3 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்தது தோனி என்பதால் இது எளிதான இலக்காக தோன்றியது. அப்போது சஞ்சு சாம்சன் சந்திப் சர்மாவை அழைத்துப் பேசினார்.

இது குறித்து சந்திப் சர்மா குறிப்பிடும்போது, `இரண்டு சிக்ஸர்கள் போனதும் அடுத்த 3 பந்துகளை எப்படி வீசுவது என்று நானும் சஞ்சு சாம்சனும் ஆலோசனை செய்தோம். அவர் மிகவும் நிதானமாகவே இருந்தார். எனக்கு எந்த யோசனையையும் அவர் கொடுக்கவில்லை. என்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார். நான் என் திட்டத்தை கூறியதும் அவர் அதற்கு ஆதரவு தெரிவித்தார். அழுத்தம் நிறைந்த அந்த வேளையிலும் இதுபோன்று நிதானமாக இருப்பது அரிதிலும் அரிது` என்றார்.

சிஎஸ்கேவுக்கு எதிரான சமீபத்திய வெற்றிக்கு பின் அணி வீரர்களிடம் பேசிய ராஜஸ்தான் பயிற்சியாளர் சங்கக்காரா, 'சஞ்சு சாம்சன் எப்போதும் தன்னுடைய அணியை முன்னிலைப்படுத்திதான் ஆடுகிறார். ரன்கள் என்பது முக்கியம் அல்ல. அந்த ரன்களை அவர் எப்படி எடுக்கிறார் என்பதுதான் முக்கியம். அந்தவிதத்தில் அணியில் உள்ள எல்லோருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார். அணியின் வெற்றிக்காக அவர் காட்டும் முனைப்பு பாராட்டுக்குரியது. அவர் விளையாட்டில் வகுத்து வைத்திருக்கும் சில திட்டங்கள் மற்ற வீரர்கள் பின்பற்ற ஒரு சிறந்த முன் உதாரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்` என்று வெகுவாக பாராட்டி இருந்தார்.

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம், Getty Images

சாம்சன் கேப்டன்சியை புகழும் சஹால்

வெற்றியைப் போலவே தோல்வியையும் சஞ்சு சாம்சன் வெகு இயல்பாகவே எடுத்துக்கொள்கிறார்.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் தோல்வி அடைந்த பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடன் பேசிய சஞ்சு சாம்சன், ` ஐபிஎல் தொடரில் இரண்டு தோல்விகளையோ, வெற்றிகளையோ பெறுவதும் மேலேயோ, கீழேயோ செல்வதும் மிகவும் சாதாரணமானதுதான். ஆனால், உயரத்துக்கு செல்லும்போது தாழ்மையுடன் இருப்பதும், கீழே செல்லும்போது நம் மீது நாம் நம்பிக்கைக் கொள்வதுமே நம் அணியின் ஸ்டைல்` என்றார். எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் தொடரில் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார். தனக்கு பிடித்த கேப்டன் குறித்த கேள்விக்கு Humans of Bombay-க்கு சஹால் அளித்த பேட்டியில் குறிப்பிட்டது சஞ்சு சாம்சனை தான்.

`ஐபிஎல் தொடரை பொருத்தவரை நிச்சயமாக எனக்கு பிடித்த கேப்டன் சஞ்சு சாம்சன் தான். அவருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் பார்க்கிறேன். தோனியைப் போலவே அவரும் அமைதியாகவும் எளிமையாகவும் உள்ளார். கடந்த ஆண்டில் , ஒரு பந்துவீச்சாளராக நான் என்ன வளர்ச்சி அடைந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் சஞ்சு தான் காரணம்` என்று புகழ்ந்திருந்தார்.

தோனியுடன் ஒப்பிடுவது பற்றி சாம்சன் கூறியது என்ன?

தன்னை தோனியுடன் ஒப்பிடுவது குறித்து சஞ்சு சாம்சன் கடந்த 2020ல் ஒரு பதில் அளித்திருந்தார். `தோனியைப் போல் அனைவராலும் ஆக முடியும் என்று நான் நினைக்கவில்லை. தோனியைப் போல் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். நான் என்னைப் போல் இருக்கவே விரும்புகிறேன். சஞ்சு சாம்சனாக இருப்பதே நன்றாக இருக்கிறது` என்றார்.

கேப்டன் பொறுப்பை கவனித்துக்கொள்ளும் அதே வேளையில் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கான பங்களிப்பை தருவதிலும் அவர் தவறவில்லை. 2021, 2022 ஐபிஎல் தொடர்களில் தலா 450 ரன்களுக்கு மேல் அடித்திருந்த சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இதுவரை 2 அரை சதங்களுடன் 198 ரன்களை அடித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 150க்கு மேல் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த முறை இறுதிப்போட்டி வரை வழிநடத்தி, நூலிழையில் கோப்பையைத் தவறவிட்ட சஞ்சு சாம்சன், இம்முறை அந்த குறையைப் போக்கும் முனைப்பில் இருக்கிறார். நடப்புத் தொடரில் தொடக்கத்தில் இருந்தே புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்படுவதில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சிக்கும் முக்கிய பங்கு உண்டு. கேப்டன் கூல் 2.0 என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சஞ்சு சாம்சன் அதனை சாதிப்பார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: