சூடான் உள்நாட்டுப் போர்: தப்பி வந்த தமிழர்களுக்கு சொந்த ஊரில் காத்திருந்த பிரச்னைகள்

சூடான், இந்தியா

பட மூலாதாரம், Rajasekaran

    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்

சூடானில் உள்நாட்டு மோதல் தொடங்கி சரியாக 10 நாட்களுக்குப் பின் குண்டுகள், துப்பாக்கிகளை விட்டு தூரமாக இந்தியா வந்திறங்கியது ராஜசேகரின் குடும்பம்.

14 வயதான தனது மகளையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு இந்திய அரசின் மீட்பு நடவடிக்கை மூலமாக தாயகம் திரும்பியுள்ளார் ராஜசேகரன்.

ஏ.கே. 47 துப்பாக்கியை காட்டி தன்னிடம் இருந்த உடமைகளை போராளிக் குழுக்கள் பெற்று சென்ற அந்த தருணம் தனக்கு மீண்டும் நிகழாது என்ற மன நிம்மதி அவரின் குரலில் தெரிந்தது.

சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து சொந்த ஊரான சென்னைக்கு திரும்பிய ராஜசேகரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"சூடானில் இப்போது நடக்கும் பிரச்னை சரி ஆனாலும், இனிமேல் என் குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்ல மாட்டேன். அந்த அதிர்ச்சியில் இருந்து என் மனைவி இன்னும் மீளவே இல்லை," என்று விவரித்தப்படி இந்தியர்கள் மீட்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரித்தார் அவர்.

துப்பாக்கி முனையில் வழிப்பறி

சூடான், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் 45 வயதான ராஜசேகரன். விமான நிலையத்திற்கு அருகிலேயே தனது நிறுவனம் அளித்த வீட்டில் மனைவி கிருத்திகா, மகள் தியாவுடன் குடும்பமாக வசித்து வந்தார் இவர்.

சூடானின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான 'ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸுக்கும்’ (RSF) இடையே ஏப்ரல் 15ஆம் மோதல் வெடித்தது.

மோதல் தொடங்கிய முதல் சில நாட்களுக்கு வீட்டிலேயே குடும்பத்துடன் முடங்கி இருந்த ராஜசேகரனுக்கு, வெளியே செல்ல முடியாததால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது சவாலாக இருந்தது.

மின்சாரம் இல்லாததால் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படவே, ஏப்ரல் 18ஆம் தேதி தனது வீட்டில் உள்ள ஜெனரேட்டர் மூலமாக மின் இணைப்பு பெற்று மின் சாதனங்களை இயக்கி இருக்கிறார்.

அப்போது அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற RSF படையைச் சேர்ந்த வீரர்கள், துப்பாக்கியால் சுட்டு வீட்டிற்குள் வர முயற்சி செய்துள்ளனர்.

"துப்பாக்கி சத்தம் கேட்டு நான் கீழே சென்று அவர்களை பார்க்க வந்தேன். எனது வீட்டின் கேட்டை திறக்க முடியாததால் 10 முறை அதை நோக்கி RSF வீரர் சுட்டார். நான் ஒரு இந்தியர் என்று அவர்களிடம் சொன்னேன். பயப்பட வேண்டாம் என்று என்னிடம் சொன்ன அந்த வீரர்கள், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை என்னிடம் கேட்டார்கள். மேலும் என்னிடம் இருந்து பணத்தையும் அவர்கள் கேட்டார்கள். ஏ.கே.47 துப்பாக்கி முனையில் நானும், என் குடும்பமும் இருந்ததால் அவர்கள் கேட்டதும் என்னிடம் இருந்த அமெரிக்க டாலர்களை கொடுத்தேன். பிறகு என் வீட்டு வாசலில் நின்ற என் காரையும் RSF வீரர்கள் எடுத்துச் சென்றனர்," என்று ராஜசேகரன் அன்று நடந்ததை விவரித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தன் மனைவி மிகவும் பயந்து விட்டதாகவும், அதனால் நண்பர் ஒருவர் மூலமாக அந்த வீட்டிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கிளம்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் காவிரி

சூடான், இந்தியா

பட மூலாதாரம், Twitter/MOS_MEA

படக்குறிப்பு, ஆபரேஷன் காவிரி மூலமாக சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல் காரணமாக அங்கிருந்த வெளிநாட்டவர் அனைவரும் அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

ராஜசேகரன் போல சூடானின் பல்வேறு பகுதிகளில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு இறங்கியது.

சூடானில் வசித்து வந்த 3,500 இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை சூடானில் இருந்து 2,400 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'ஆபரேஷன் காவிரி' என்று அழைக்கப்படும் இந்த மீட்பு நடவடிக்கை மூலமாக அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் சௌதி அரேபியாவின் ஜெட்டா வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது வரை 1900 பேர் தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.

சூடானில் இருந்த இந்தியர்களை வாட்ஸ்ஆப் குழு மூலமாக ஒருங்கிணைத்து பேருந்து மூலமாக சூடானின் பல்வேறு நகரங்களில் இருந்து துறைமுக நகரான போர்ட் சூடானுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலமாகவும், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலமாக அவர்கள் சௌதி அரேபியா அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கை மூலமாக ராஜசேகர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் ஜெட்டாவில் இருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலமாக டெல்லி வந்தடைந்தார்.

அங்கிருந்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சூடான், இந்தியா

பட மூலாதாரம், Twitter/MOS_MEA

படக்குறிப்பு, ஆப்ரேஷன் காவிரி மூலமாக சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்

கல்விக்கு முட்டுக்கட்டை

சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சில நாட்கள் ஆன பிறகும், தன் மனைவி இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றார் ராஜசேகரன்.

"சூடானில் நடந்த துப்பாக்கிச் சூட்டை பார்த்து என் மனைவியும், மகளும் அதிகமாக பயந்தனர். பத்திரமாக வீடு திரும்பி சில நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். ஆனால் என் மனைவி இன்னும் பயத்தில் இருந்து மீளவில்லை."

சூடானில் நடக்கும் மோதல் முடிவுக்கு வந்து பழைய நிலைமைக்கு திரும்ப இன்னும் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்று அங்குள்ள நண்பர்கள் கூறியதால். சென்னையில் உள்ள பள்ளியில் தனது மகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ராஜசேகர்.

சூடானில் இருந்து ஊருக்கு இப்படி வருவோம் என எதிர்பார்க்கவில்லை. ஒரு லேப்டாப், சில துணிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினோம். அடுத்து என் மகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் சென்னையில் சில பள்ளிகளை அணுகினேன். இந்த ஆண்டுக்கான சேர்க்கை முடிந்து விட்டது என்று கூறுகிறார்கள். சிலர், 10ஆம் வகுப்பில் திடீரென சேர்க்க முடியாது என்கிறார். போரில் இருந்து தப்பித்து ஊருக்கு வந்தால் அடுத்து இந்த பிரச்னை வருகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை, என்றார் அவர்.

தன்னுடைய வேலையும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், மகளின் கல்விக்காக அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறார் ராஜசேகர்.

சூடான், இந்தியா

பட மூலாதாரம், Rajasekaran

படக்குறிப்பு, தனது குடும்பத்துடன் ராஜசேகரன்

ஒரே தலைநாளில் தலைகீழான வாழ்க்கை

தென்காசியைச் சேர்ந்த ஹெரால்ட் ஆண்டனி, சூடானில் மீன்வளத்துறை ஆலோசகராக பணியாற்றி வந்தார். சூடானில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த சேர்ந்த அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை சீராக சென்று கொண்டு இருந்தது. ஆனால் அங்கு ஏற்பட்ட மோதலால் ஒரே நாளில் நிலைமை தலைகீழானது. உயிர் தப்பினால் போதும் என்ற நினைப்புடன் அங்கிருந்து தப்பித்து வந்தேன். என் எல்லா உடமைகளும் அங்கேயே விட்டு வந்து இருக்கிறேன். திரும்பிச் செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை," என்றார் ஹெரால்ட்.

கார்டூமில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்த உஸ்மானும் அரசின் நடவடிக்கை மூலமாக இந்தியாவுக்கு வந்தடைந்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "பொருளாதார ரீதியாக இது எனக்கு பெரிய அடி. அடுத்து என்ன செய்வது என்று இன்னும் யோசிக்கவே முடியவில்லை. சூடானில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அதுவரை எங்கு வேலைக்கு போவது, என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை. திடீரென கிளம்பியதில் என் காரை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு கிளம்பினேன்."

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக சிறப்பு கொள்கை

சூடான், இந்தியா

பட மூலாதாரம், Rajasekaran

படக்குறிப்பு, சூடானில் இருந்து டெல்லி வந்த தமிழர்களை சென்னைக்கு அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்தது

திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோன்ஸ் திரவியம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் ஆசிரியராக பணி செய்து வந்தார். அவரின் மனைவியும் அங்கு ஆசிரியராக பணி செய்து வந்துள்ளார்.

தற்போது சொந்த ஊருக்கு திரும்பிய ஜோன்ஸ், தனது இரண்டு மகள்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவிக்கிறார்.

எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் முதலாம் ஆண்டு மருத்துவர் படிக்கிறார். சூடானில் நடக்கும் பிரச்னையால் இப்போது இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். ஆனால் இங்கு என் மகள்களின் படிப்பை எப்படி தொடர்வது என்று தெரியவில்லை. இதே நிலைமை தான் யுக்ரேன் போரினால் இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்பிய போதும் நடந்தது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், நெருக்கடி சமயங்களில் இந்தியா திரும்பும் போது, அவர்களின் கல்வியை இந்தியாவில் தொடரும் வகையில் ஏதாவது மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பி வரும் போது பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வகையில் கொள்கை ரீதியாக மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று ஜோன்ஸ் திரவியம் கோரிக்கையை முன்வைத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: