சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவது யுக்ரேன் நடவடிக்கையை விட கடினமாக இருப்பது ஏன்?

சூடான் மோதல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த திங்கட்கிழமை 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளனர். இதன் மூலம் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் நடவடிக்கை தொடங்கியது.

இந்த இந்தியர்கள் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

சூடானில் கடல் வழியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சூடானின் வான்வெளி முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், எந்த விமானமும் பறக்க முடியாது.

ஆபரேஷன் காவேரியின் கீழ் 500 இந்தியர்கள் துறைமுகத்தை அடைந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் திங்களன்று ஒரு ட்வீட் மூலம் தெரிவித்தார்.

”நமது கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்தியர்களை அழைத்து வர தயாராக உள்ளன,” என்று அவர் பதிவிட்டார்.

யுக்ரேனில் எந்த வேகத்தில் நடவடிக்கை எடுக்க முடிந்ததோ அதே வேகத்தில் சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற முடியவில்லை.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி, யுக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ’ஆபரேஷன் கங்கா’ வை தொடங்கியது.

முதல் தொகுதியில் 219 இந்தியர்கள் யுக்ரேனில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

2022 பிப்ரவரி 26 முதல் 2022 மார்ச் 3 ஆம் தேதி வரை யுக்ரேனில் இருந்து 18000 இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இப்போது சூடானில் சிக்கிய இந்தியர்களைப் பற்றி பேசலாம்.

ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது. ஆனால் ஒன்பது நாட்களுக்குப் பிறகும் இந்தியா தனது 3000 குடிமக்களை வெளியேற்ற முடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, செளதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இரண்டு பெரிய விமானங்களையும், சூடானில் உள்ள துறைமுகத்தில் ஒரு கப்பலையும் இந்தியா நிறுத்தியது.

"எங்கள் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இந்திய அரசு பல மாற்று வழிகளை தேடுகிறது. இரண்டு இந்திய விமானங்கள் C-130J, ஜெட்டாவில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் INS சுமேதா, சூடான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது," என்று ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியுறவு அமைச்சகம் கூறியது.

சூடானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசிக்கும் இந்திய குடிமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கார்ட்டூமில் இருந்து இந்தியர்களை எப்படி வெளியேற்றுவது என்பது பற்றிய சாத்தியமான வழியையும் தூதரகம் தேடுகிறது.

சூடான் இந்தியர்கள்

பட மூலாதாரம், IMRAN QURESHI

படக்குறிப்பு, தங்களுக்கு அருகில் இன்னும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது என்று மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்தியர்களின் நிலை என்ன?

சூடானில் சிக்கியுள்ள பல இந்தியர்களுக்கு குடிநீரும், மின்சாரமும் கிடைக்காமல் இருப்பதுதான் மிகப்பெரும் சிரமமாக உள்ளது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சு, போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுவிட்ட ஒரு ஹோட்டலில் பல இந்தியர்களுடன் வசித்து வருகிறார். ஆனால் அங்கே அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரோ, சாப்பிட உணவோ இல்லை.

"நாங்கள் எஞ்சியிருக்கும் ரொட்டி துண்டுகளை சாப்பிட்டு, பாத்ரூம் குழாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு அறையில் பத்து பேர் வசிக்கிறோம்."என்று அவர் கூறினார்.

சஞ்சுவும் அவரது மனைவியும் ஏப்ரல் 18 ஆம் தேதி இந்தியாவுக்கு வரவிருந்தனர், ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 15 முதல் சூடானில் உள்நாட்டுப் போர் தொடங்கியது மற்றும் இங்குள்ள வான்வெளி மூடப்பட்டது.

இந்த பாத்ரூம் தண்ணீர் இன்னும் எவ்வளவு நாட்களுக்குக்கிடைக்கும் என்று தெரியவில்லை என்கிறார் சஞ்சு.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஆனால் கேள்வி என்னவென்றால், சூடானில் மீட்புப் பணியைத் தொடங்க இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது?

இதே கேள்வியை லிபியா, ஜோர்டன் மற்றும் மால்டாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ள அனில் திரிகுனாயத்திடமும் பிபிசி கேட்டது.

"சூடானில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. நாட்டில் ராணுவமும் துணை ராணுவப் படையும் போரிடுகின்றன. இரு தரப்பிலிருந்தும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடக்கிறது, அவர்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை. இதில் ஒரு இந்தியர் இறந்தார். ஒரு அமெரிக்க குடிமகனும் காலமாகிவிட்டார். மக்களை வெளியேற்றும் போது, நமது குழு தாக்கப்படுவதை இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ விரும்பாது. அதனால்தான் இரு தரப்பும் பேசுவது அவசியம், பின்னர் நடவடிக்கை தொடங்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

"வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மக்களை பத்திரமாகத் திரும்பக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் திறமையானது. இராக்கில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்களை வெளியேற்றினோம். நான் லிபியாவில் இருந்தபோது, இதே போன்ற நிலைமை இருந்தது. இரண்டு மூன்று தொகுதிகளாக நாங்கள் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தோம். அதிகாரத்தின் மையம் கடாஃபியின் கைகளில் இருந்தவரை வெளியேறும் வழிகள் அனைத்தையும் ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அங்கு பல போராளிக் குழுக்கள் உருவாயின. அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன, தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கின. அதே நிலைதான் இங்கும் உள்ளது. இங்கு ஒருவர் கையில் மட்டுமே கட்டுப்பாடு இல்லை," என்று கூறினார் அவர்.

சிக்கிய சில இந்தியர்கள் வெளியேற்றம்

சூடான் மோதல்

பட மூலாதாரம், Getty Images

சூடானில் சிக்கியிருந்த 66 பேரை பத்திரமாக வெளியேற்றியதாக செளதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதில் இந்தியாவின் சிலரும் அடங்குவர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பிரான்ஸும் சூடானில் சிக்கியிருந்த 388 பேரை பத்திரமாக மீட்டெடுத்தது. இதில் சில இந்திய குடிமக்களும் அடங்குவர்.

இரு நாடுகளாலும் எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் ஆபரேஷன் கங்காவை வெற்றிகரமாக நடத்திய இந்தியா, சூடானில் உள்ள தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, யுக்ரேன் நடவடிக்கையிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?

"யுக்ரேனில் நடந்து கொண்டிருந்த போர் இரண்டு நாடுகளுக்கு இடையிலானது. ஆபரேஷன் கங்காவை தொடங்கும் பேச்சு எழுந்தபோது அதிகாரம் யுக்ரேனிடம் இருந்தது. வெளியேறும் வழிகள் ரஷ்யாவிடம் இருந்தன. இந்தியா விரைவாக இரு தரப்புடனும் பேசி சுமார் 20,000. பேரை வெளியேற்றியது,” என்று அனில் திரிகுனாயத் கூறினார்.

" அதன் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரியில் அரசுகள் வலுவாக இருந்தன. இந்த நாடுகளும் வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கான பாதைகளைக்கொடுத்தன. இதன் காரணமாகவும் எங்கள் செயல்பாடு மிகவும் வெற்றிகரமாக இருந்தது. ஆனால் சூடானில் இரண்டு தரப்புகளும் பரஸ்பரம் சண்டையிடுகின்றன. இந்த சூழ்நிலையில் மனிதாபிமான வழித்தடத்தை அமைக்கும் பணி கடினமாகிறது,” என்றார் அவர்.

“அமெரிக்கா, பிரிட்டன் அல்லது இந்தியா, எல்லாருக்குமே இதுதான் பிரச்சனை. நான் இப்படிப்பட்ட ஆபரேஷன்களை செய்திருக்கிறேன். அதனால் இது மிகவும் கடினமான வேலை என்று எனக்குத் தெரியும். சண்டையிடும் இரண்டு ஜெனரல்களை சமாதானப்படுத்தி, மீட்பு நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ளச்செய்வது ஒரு பெரிய சவால்,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இது ஒரு அதிகாரப் போராட்டம். இதில் கென்யா, ஜிபூட்டி மற்றும் தெற்கு சூடான் அதிபர்கள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஜெனரல்களுக்கு இடையிலான இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தையின் பாதையில் அவர்களைக்கொண்டு வர செளதி அரேபியாவும் விரும்புகிறது. வெளிநாட்டினருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவர்களை வெளியே செல்ல அனுமதிப்போம் என்று இரு தளபதிகளும் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளதால், ஒரு வாரத்தில் நிலைமை சிறிது சீரடையக்கூடும் என்று நான் கருதுகிறேன்.” என்றார் அவர்.

அல்ஜசீராவிடம் பேசிய வளைகுடா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தூதர் ஜேம்ஸ் மோரன்,"மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முக்கியமாக தேவைப்படுவது விமான நிலையம். கார்ட்டூமில் இருந்து துறைமுகத்திற்கு நீண்ட தூரம் உள்ளது. எனவே பாதுகாப்பான விமான நிலையம் அவசியம். இதுபோன்ற சூழலில், கார்ட்டூமில் இருந்து துறைமுகத்திற்கு மக்களை வெளியேற்றுவது ஆபத்தான பணி. விமானம் மூலம் மக்களை தலைநகரில் இருந்து வெளியேற்றுவது பாதுகாப்பானது. விமான நிலையம் பாதுகாப்பானது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா உட்பட பல நாடுகள், துறைமுகம் வழியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றன,” என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

சூடானில் என்ன நடக்கிறது?

கடந்த பத்து நாட்களாக சூடானின் தலைநகர் கார்ட்டூம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இரு ராணுவப் படைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன.

இந்த மோதலின் மையத்தில் இரண்டு தளபதிகள் உள்ளனர். சூடான் ஆயுதப் படைகளின் (FAS) தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவ படையான ரேப்பிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) தலைவரான ஹெமெத்தி என்றும் அழைக்கப்படும் முகமது ஹம்தான் தகாலோ.

2021 ஆம் ஆண்டில் இருவரும் இணைந்து செயல்பட்டு, கூட்டாக நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டனர், ஆனால் இப்போது இருவருக்கும் இடையிலான ஆதிக்க சண்டை சூடானை மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக நாட்டின் ராணுவ ஆட்சியாளராக இருந்த உமர் அல்-பஷீர், ராணுவத்தை சமநிலைப்படுத்த ஹெமெத்தி மற்றும் RSF ஐ பெரிதும் நம்பியிருந்தார். ஒரே ஒரு ராணுவக் குழுவால் தன்னை வீழ்த்த முடியாது என்று அவர் நம்பினார்.

ஆனால் பல மாதங்கள் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்த நிலையில் 2019 ஏப்ரலில் இரு ஜெனரல்களும் ஒன்றிணைந்து பஷீரை வீழ்த்தினர்.

துணை ராணுவ ஆர்எஸ்எஃப் தலைவர் முகமது ஹம்தான் தகாலோ மற்றும் ராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்

2021 அக்டோபரில் சிவில்-ராணுவ கூட்டு அரசின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைக்கு இடையே சண்டை நிலவுகிறது.

தற்போது, ராணுவமும் ஆர்எஸ்எஃப் அமைப்பும் இறையாண்மை கவுன்சில் மூலம் நாட்டை நடத்தி வருகின்றன. ஆனால் அரசின் உண்மையான கடிவாளம் ராணுவத் தளபதி அப்துல் ஃபதே அல்-புர்ஹானின் கைகளில் உள்ளது. அவர் ஒரு வகையில் நாட்டின் அதிபர்.

இறையாண்மை கவுன்சிலின் துணைத்தலைவர் மற்றும் RSF இன் தலைவரான முகமது ஹம்தான் தகாலோ அதாவது ஹெமெத்தி நாட்டின் இரண்டாவது தலைவர்.

சுமார் ஒரு லட்சம் பேர் கொண்ட விரைவு ஆதரவுப் படை(ஆர்எஸ்எஃப்) இணைந்த பிறகு உருவாகும் புதிய ராணுவத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.

எல்லா ராணுவ தளங்களும் கைப்பற்றப்படும் வரை தனது சண்டை தொடரும் என்று ஆர்எஸ்எஃப் தலைவர் கூறுகிறார். அதே சமயம், பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறு இல்லை என கூறியுள்ள ராணுவம், துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கலைக்கப்படும் வரை தனது நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளது.

இந்தப் போர் முழு பிராந்தியத்தையும் எவ்வாறு பாதிக்கலாம்

சூடான் மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனரல் ஹம்தான் தாகலோ என்ற ஹெமெத்தி, ஜெனரல் ஃபத்தா அல்-புர்ஹான்

சூடானின் புவியியல் இருப்பிடம் அதை ஆப்பிரிக்க பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நாடாக மாற்றுகிறது. இது எகிப்து, எத்தியோப்பியா, லிபியா, சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, எரித்திரியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஏழு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

சூடானின் இந்த உள்நாட்டுப் போர் அதன் அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாடுகளில் ஏற்கனவே உள்நாட்டு எதிர்ப்புகள் நடந்து வருகின்றன. இது நடந்தால் இந்த முழு பிராந்தியமும் நிலையற்றதாக மாறும்.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம் பேசிய சர்வதேச நெருக்கடி குழுவின் உறுப்பினரான ஆலன் போஸ்வெல், "சூடானில் நடப்பவை, இந்த நாட்டிற்கு வெளியேயும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறுகிறார்.

"குறிப்பாக, சாட் மற்றும் தெற்கு சூடான் ஆகியவை, சூடான் ராணுவத்திற்கும் ஆர்எஸ்எஃப்-க்கும் இடையே நடந்து வரும் மோதலால் விரைவில் பாதிக்கப்படக்கூடிய நாடுகள். இது இப்படியே தொடர்ந்தால் விரைவிலேயே சூடானில் வெளி நாட்டுப் படைகளும் இணைந்துவிடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: