சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - ரொட்டி, கழிவறை நீர் மூலம் உயிர் வாழும் அவலம்

பட மூலாதாரம், Getty Images
- சூடானின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான 'ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸுக்கும்’ (RSF) இடையே கடந்த ஒருவாரமாக மோதல் நடைபெற்று வருகிறது.
- தலைநகர் கார்ட்டூமில் நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் மக்கள் ஊரை விட்டு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
- ரமலானை ஒட்டி இருதரப்பும் 24 மணி நேரம் வரை போர் நிறுத்தத்தில் ஈடுபட ஒப்புக்கொண்டனர்.
- நகரின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுள்ளனர். அவர்களில் ஏராளமான வெளிநாட்டவர்களும் உள்ளனர்.
- 181 இந்திய குடிமக்கள் சூடானில் சிக்கியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- சூடானில் 2021 ஆம் ஆண்டு முதல் சிவில் அரசுக்கு அதிகாரத்தை மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
- முக்கிய சர்ச்சை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையான 'ஆர்எஸ்எஃப்' இன் இணைப்பு பற்றியது ஆகும்.
- பல நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு சமீபத்திய சண்டை மூண்டது. RSF ஜவான்களை அச்சுறுத்தலாகக் கருதும் ராணுவம், அவர்களை பணியமர்த்துவதற்கான புதிய ஏற்பாட்டை கடந்த வாரம் தொடங்கியது.
- 2021 அக்டோபரில் சிவில்-ராணுவ கூட்டு அரசின் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப்பிறகு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் சண்டையிட்டு வருகின்றன.
- சூடானின் விமானப்படை அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கார்டோமில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே தொடர்ந்து குண்டு மழை மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்து வரும் நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஹோட்டல் அறைகள் அல்லது வீடுகளில் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.
சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. அப்போது கடுமையான துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
சூடானின் தலைநகரான கார்டூமில் மட்டுமல்லாமல் அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள அல்-ஃபஷிரிலும் இந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images
"போர் நிறுத்தம் என்று சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை நம்பி சொந்த ஊருக்கு செல்ல வீடுகளில் இருந்து பலர் கிளம்பிச் சென்றனர். ஆனால் போர் நிறுத்தத்தை இருதரப்பும் பின்பற்றவில்லை. அதனால் வெளியே சென்றவர்கள் நிலை என்ன ஆனது என தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் சூடானில் வசிக்கும் தமிழரான ராவுத்தர்.
கடைகள் இல்லாததால், உணவு பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகிறோம். பகல் முழுவதும் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்கிறது. அதனால் பொருட்கள் வாங்க வெளியே செல்லாமல் குடும்பத்துடன் வீடுகளில் முடங்கி இருப்பதாக தலைநகர் கார்டூமுக்கு அருகேயுள்ள உம்துர்மான் என்ற நகரில் சிக்கி இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராவுத்தர் தெரிவித்தார்.
கார்டூமில் இருக்கும் மற்றொரு தமிழரான ராஜ் மற்றும் அவரது நண்பர்களும் தலைநகரை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ளூர் மக்களை கார்டூமை விட்டு வெளியேற ராணுவம் அனுமதிக்கிறது. ஆனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இங்கிருந்து எங்களை வெளியே செல்ல இருதரப்பும் அனுமதிக்கவில்லை என்றார் அவர்.
"தமிழர்கள் உட்பட சூடானில் இருக்கும் இந்தியர்கள் ஒரு வாட்சாப் குழுவில் இருக்கிறோம். இந்த குழுவின் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் குறித்து சூடானில் உள்ள இந்திய தூதரகம் தகவல்களை எங்களிடம் தெரிவிக்கிறது. ஆனால் இப்போது வரை மீட்பு நடவடிக்கை எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை," என்றார் ராஜ்.
தலைநகரில் ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்ற போரினால் சாலைகளில் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ராஜ் கூறினார்.
"எனக்கு தெரிந்த இந்தியர்கள் சிலர் போன வாரம் வேலைக்காக சென்றனர். ஆனால் வேலை முடிந்து அவர்களின் பலர் இன்னும் திரும்பவில்லை. ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்டது, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மின்சாரம் இல்லாததால் போன் சார்ஜ் செய்ய முடியாமல் மாட்டி இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை," என பிபிசியிடம் பேசிய சதீஷ் குமார் கூறினார்.
குறைவான உணவை வைத்து குடும்பத்தை பராமரித்து வருவதாக ராவுத்தர் தெரிவித்தார்.
"வீட்டில் உள்ளவர்கள் இன்னும் பயத்துடன் இருக்கிறார்கள். மின்சாரம் இல்லாததால் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்க முடியவில்லை. வெளியே சென்று உணவு பொருட்கள் வாங்கவும் முடியவில்லை. கார்டூமில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது," என்று கூறினார் அவர்.
சூடானில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு தொழில் செய்து வருவதாகவும், சிலர் தனியார் நிறுவனங்களின் பணியாற்றுவதாகவும் ராஜ் தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 30 பேர் வரை இங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கழிவறை குழாய் தண்ணீர்

பட மூலாதாரம், Getty Images
"கடந்த வாரம் மோதல் தொடங்கியதில் இருந்து ஒரு ஹோட்டலில் நாங்கள் தங்கியுள்ளோம். இங்கு ரொட்டியும், கழிவறையில் இருக்கும் குழாயில் இருந்து வரும் தண்ணீரைக்குடித்து உயிருடன் இருக்கிறோம். இப்போது இந்த ஒரு அறையில் நாங்கள் பத்து பேர் வசிக்கிறோம்,"என்று கர்நாடகாவைச் சேர்ந்த சஞ்சு, பிபிசியிடம் கூறினார்.
"இது மிகவும் பயங்கரமாக உள்ளது. திரைப்படங்களில் பார்க்கும் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புகளை விட ஆபத்தான சூழ்நிலையில் நாங்கள் சிக்கி இருக்கிறோம். நாங்கள் இங்கு 31 பேர் இருக்கிறோம். நேற்று அரை மணி நேரம் ஒரு கடை திறக்கப்பட்டது. அங்கிருந்து எங்களுக்கு கொஞ்சம் அரிசி மற்றும் தண்ணீர் கிடைத்தது," என்று அல்-ஃபஷீரில் சிக்கியுள்ள பிரபு கூறினார்.
"பின்னணியில் துப்பாக்கிச் சூடு சத்தத்தை நீங்கள் கேட்கலாம். மணிக்கணக்கில் இடைவிடாமல் இது நடந்து வருகிறது,” என்று சஞ்சு கூறினார். அப்பகுதியில் மின்சாரம் இல்லாதது குறித்தும் அவர் புகார் தெரிவித்தார்.
“பக்கத்தில் உள்ள ஐந்து மாடி ஹோட்டலில் 98 பேர் இருக்கிறார்கள். நமது தூதரக அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டு, வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் எவ்வளவு காலம் இருக்கமுடியும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சஞ்சுவும் அவரது மனைவியும் ஏப்ரல் 18 அன்று இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவிருந்தனர், ஆனால் விமான நிலையம் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.
”சில இடங்களில் சூடான் நாட்டு மக்கள் எங்களுக்கு உணவு வழங்கினர். இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள என் மகள், மருமகனிடம் பேசினேன். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்களுடன் பேச முடியவில்லை,"என்று கர்நாடகாவின் ஷிவமோகாவில் வசிக்கும் ஹக்கி-பிக்கி பழங்குடியினரின் முதல் பொறியாளர் குமுதா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தியர்களின் நிலைமை என்ன?

பட மூலாதாரம், Getty Images
சூடானில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சூடானில் தலைநகர் கார்டூம் நகரில் இந்தியாவின் தூதரகம் அமைந்திருக்கிறது. இருதரப்பு மோதலின் போது ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
சூடானில் நடைபெறும் மோதல் முடிவுக்கு வர சில காலம் ஆகும் என்பதால், மீட்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதுவரை இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் தங்கியிருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
சௌதியின் ஜெட்டா வழியாக சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்களை சூடானில் இருந்து மீட்கும் போது இந்தியா, பாகிஸ்தான், குவைத் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 66 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சௌதி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும் இந்தியர்களை தாயகம் மீட்டு வர இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஜெட்டா விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சுமேதா கப்பல் போர்ட் சுடானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சூடானில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
சூடானில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அப்போதிருந்து அந்நாட்டை ராணுவப் படைத்தலைவர்களைக் கொண்ட ஒரு குழு நிர்வகித்து வருகிறது.
இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சிக்கலில் பிரதானமாக இரண்டு ராணுவத் தளபதிகள் உள்ளனர். ஜெனரல் ஃபத்தா அல்-புர்ஹான், சூடானின் படைத்தலைவர். இதனால் நடைமுறைப்படி இவர் நாட்டின் ஜனாதிபதி.
அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ. இவர் ஹெமெத்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூடானின் துணை ராணுவமான Rapid Support Forces இன் (RSF) தலைவர்.
இருவருக்கும் இடையே நாடு செல்லும் திசை, ஜனநாயக அரசினை அமைப்பது போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இருவருக்குமிடையே முக்கியமான பிரச்சனைகள் RSFஇன் ஒரு லட்சம் வீரர்களை ராணுவத்தில் இணைப்பதும், அப்படி நடந்தால், படைகளுக்கு யார் தலைமை தாங்குவது ஆகியவை.
இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னை கடந்த வாரம் மோதலாக வெடித்தது. இருதரப்புக்கும் இடையே நடக்கும் மோதலிலின் காரணமாக 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ராணுவ ஆட்சி ஏன்?

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டு, சூடானின் நீண்டநாள் அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து நிலவிவந்த இறுக்கத்தின் சமீபத்திய விளைவுதான் இந்த மோதல்.
பஷீர் அதிபராக இருந்தபோது, 30 ஆண்டுகளுக்குமேல் நீண்டு கொண்டிருந்த அவரது ஆட்சிக்கு முடிவுவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ராணுவம் அவருக்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தியது.
அதன்பின்னும், ஜனநாயக அரசுவேண்டி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதைத்தொடர்ந்து, மக்களும் ராணுவமும் இணைந்த ஒரு அரசு நிறுவப்பட்டது. ஆனால் இதுவும் 2021ஆம் அண்டு நிகழ்ந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பினால் வீழ்த்தப்பட்டது.
அப்போதிருந்து ஜெனரல் புர்ஹான் மற்றும் ஜெனரல் தாகலோ ஆகியோருக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்து வந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், ஜனநாயக அரசினை நிறுவுவதறகான ஒரு ஒப்பந்தம் சம்மதமானது, ஆனால் இறுதிகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












