ஐபிஎல் டி20: "தோனிக்கும் அது நடக்குமா?" தொடரும் மாயாஜால ரகசியம் என்ன?

பட மூலாதாரம், ANI
1999-ம் ஆண்டு ஜனவரி 31....
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய அந்த காட்சி கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒன்று. அரசியல் மட்டுமின்றி விளையாட்டிலும் பரம எதிரிகளாக வலம் வந்த இந்தியா - பாகிஸ்தான் மோதிய டெஸ்ட் போட்டி அது. முதுகுவலியை தாங்கிக் கொண்டு, சதம் அடித்து இந்தியாவுக்காக கடைசி வரை போராடிக் கொண்டிருந்த சச்சினின் சவாலை முறியடித்து நூலிழையில் பாகிஸ்தான் வெற்றிக் கனியை பறித்த போது மைதானத்தில் திரண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி பாகிஸ்தான் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
விளையாட்டை விளையாட்டாக மட்டுமே அணுகக் கூடிய புத்திசாலி ரசிகர்கள் என்பதை சென்னை ரசிகர்கள் நிரூபித்த தருணம் அது.
எதிரணி வென்றதையே ஜீரணித்துக் கொண்டு கைத்தட்டி விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அதே சென்னை ரசிகர்கள் சொந்த அணி எளிதில் வென்றதற்காக வருத்தப்பட்ட அதிசயமும் நடந்தே இருக்கிறது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கொண்ட போது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் சற்று வருத்தமும் இருக்கவே செய்தது. சி.எஸ்.கே. கேப்டன் தோனியின் பேட்டிங்கை காண முடியவில்லையே என்பதே அதற்குக் காரணம்.
2008 முதல் சி.எஸ்.கே. முகமாக தோனி
இந்தியாவுக்காக ஐ.சி.சி.யின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த பெருமைக்குரிய தோனி, 2014-ம் ஆண்டு டெஸ்ட், 2020-ம் ஆண்டு ஒருநாள், இருபது ஓவர் போட்டிகள் என படிப்படியாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்து விட்டார். இருந்த போதிலும், ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடங்கிய காலம் தொட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமாக தோனி திகழ்ந்து வருகிறார்.
தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். கோப்பையை 4 முறையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளப்கள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்று அசத்தியுள்ளது. 2022-ம் ஆண்டு தவிர, பங்கேற்ற மற்ற அனைத்து ஆண்டுகளிலும் ஐ.பி.எல். தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த வெற்றிப் பயணத்தில் தோனிக்கு பிரதான இடம் உண்டு.

பட மூலாதாரம், Getty Images
தோனி சமிக்ஞைகள் உணர்த்துவது என்ன?
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெருமை சேர்த்த தோனி நடப்புத் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிற்கும் குட்பை சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
அதற்கு வலு சேர்ப்பது போலவே தோனியின் செயல்பாடுகளும் உள்ளன. நடப்புத் தொடரில் சென்னை அணி பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலுமே தனது ஓய்வு அறிவிப்பு குறித்த சமிக்ஞைகளை அவர் கொடுத்துக் கொண்டே வருகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பால், வார்த்தைகளாலேயே அவர் உறுதிப்படுத்திவிட்டார்.
"என் கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி கட்டம் இது"
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய தோனி, "நாம் எவ்வளவு விளையாடினாலும் ஐபிஎல்லை ரசிப்பது மிகவும் முக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இங்கு கூட்டமாக கூடி ஆட்டத்தை ரசிக்கின்றனர். இங்கு விளையாடுவது நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பு நெகிழச் செய்கிறது" என்றார்.
இப்போதும் கூட உங்களால் வேகமாக ஸ்டம்பிங் செய்ய முடிகிறதே என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கேட்ட போது, "நிச்சயமாக எனக்கு வயதாகிவிட்டது, அதை நான் மறைக்க முடியாது. என் கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி கட்டம் இது" என்று தோனி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், BCCI/IPL
"எனக்கு சிறப்பாக விடை கொடுக்க முயற்சி"
அதுவே, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வெற்றி கொண்ட பிறகு பேசிய தோனி, "ரசிகர்கள் அளித்த பேராதரவுக்கு நன்றி. இன்று மஞ்சள் ஜெர்சி அணிந்து வந்து சென்னைக்கு ஆதரவு அளித்த ரசிகர்களில் பெரும்பாலானோர் அடுத்து வரும் போட்டிகளில் கொல்கத்தாவுக்கு ஆதரவு அளிப்பார்கள். எனக்கு சிறப்பான முறையில் விடை கொடுக்க அவர்கள் முயல்கிறார்கள். அவர்களுக்கு நன்றி" என்று கூறினார்.
தோனியின் இந்த கூற்றுக்குக் காரணம், ஈடன் கார்டன் மைதானத்தில் கூடியிருந்த பெரும்பாலான ரசிகர்கள் சி.எஸ்.கே. அணியின் மஞ்சள் ஜெர்சி அணிந்து வந்திருந்ததே. போட்டி நடப்பது கொல்கத்தாவிலா அல்லது சென்னையிலா என்ற சந்தேகம் நேரலையில் பார்க்கும் அனைவருக்கும் வரும் அளவுக்கு ஈடன் கார்டன் மைதானமே மஞ்சள்மயமாக காட்சி அளித்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
சொந்த அணி வீரர் ஆட்டமிழக்க ரசிகர்கள் பிரார்த்தனை
ஈடன் கார்டன் மைதானத்தில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களைக் குவித்தது. தோனி பேட்டிங்கை காண விரும்பிய சி.எஸ்.கே. ரசிகர்கள், கடைசி ஓவரில் பேட்டிங் முனையில் இருந்த ரவீந்திர ஜடேஜாவை அவுட்டாகி வெளியேறுமாறு குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். சொந்த அணி வீரரே அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திக்கும் அளவுக்கு தோனி ஃபீவர் உச்சத்தில் இருந்ததை காண முடிந்தது.
பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஒரு பந்தை சந்தித்த தோனி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஆனால், தோனி களத்திற்குள் நுழையும் போதே அரங்கம் அதிரும் அளவுக்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுவே, தோனி பீல்டிங் செய்ய களம் புகுந்த போதும் தொடர்ந்தது. அதனைக் கண்ட, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, "அவர்கள் தோனியை விரும்புகிறார்கள்" என்று கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய உச்ச நட்சத்திரமாக விராட் கோலியும், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் வலம் வந்தாலும் கூட, தோனிக்கு நாடெங்கும் கிடைக்கும் வரவேற்புக்கு அருகில் அவர்களால் நெருங்கவே முடியாது. அதுதான் இன்றைய நிதர்சனம். மும்பையோ, கொல்கத்தாவோ, பெங்களூருவோ, தோனி எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரையும், அவரது தலைமையின் கீழ் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையுமே பெருவாரியாக ஆதரிப்பதை காண முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
சச்சின் விஷயத்தில் நடந்தது தோனிக்கும் நடக்க ரசிகர்கள் விருப்பம்
கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் 2008-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதேபோன்ற வரவேற்பைப் பெற்றார். அவரது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணமாக அது இருக்கக் கூடும் என்று அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்ததே அதற்குக் காரணம். அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி 2011-12-ம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். அப்போதும், ஒவ்வொரு போட்டியின் போதும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் எழுந்து நின்று அவரை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.
தோனி விஷயத்திலும் அதுவே நடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இதுவே கடைசித் தொடராக இருக்கலாம் என்று எண்ணி ஒவ்வொரு போட்டியின் போதும் தோனியை உற்சாகமூட்டும் ரசிகர்களின் எண்ணத்தை பொய்யாக்கி, அவர் மேலும் சில ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஓய்வு குறித்து தோனி என்ன சொல்கிறார்?
இந்த நேரத்தில், 2021ம் ஆண்டு நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தோனி பேசியதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
“நான் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது சென்னையில்தான். ஏலத்தில் சென்னை அணியால் தேர்வு செய்யப்படுவேன் என்று நினைக்கவே இல்லை. இது, நான் பிறந்த ஊரில் இருந்து மிகவும் வேறுபட்ட கலாசாரத்தை அறிந்துகொள்ள எனக்கு உதவியது.
இங்குள்ள ரசிகர்கள் அவர்களின் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரத்தில் மற்ற அணிகள் தோற்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். என் கடைசி ஆட்டம் சென்னையில் தான் நடைபெறும்”
இவைதான் தோனி உதிர்த்த வார்த்தைகள்.

பட மூலாதாரம், CSK
சுமார் 4 ஆண்டுகள், இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் 1,426 நாட்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். ஆட்டங்கள் இந்த ஆண்டுதான் அரங்கேறுகின்றன. தோனியின் வார்த்தைகள் இந்த ஆண்டோ அல்லது இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்தோ எப்போது வேண்டுமானாலும் உண்மையாகலாம்.
ஆனால், எப்போது கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தாலும் தோனியை ஒரு சாம்பியனாகவே ரசிகர்கள் கம்பீரமாக வழியனுப்புவார்கள் என்பதை நடப்புத் தொடரில் அரங்கேறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












