மகேந்திர சிங் தோனி பிறந்த நாள்: தமிழர்கள் தோனியை அதிகம் கொண்டாட காரணம் என்ன?

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஷ்ஃபாக் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தோனிதான் சென்னையின் அடையாளம். தமிழ்நாட்டின் பட்டிதொட்டிதோறும் தோனியின் முகம் மிகப் பிரபலம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட தோனி, இன்று (ஜூலை 7) தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை மீதான காதல்

"தோனிக்கு மோட்டார் பைக் பிடிக்கும் என்பதால் அவருக்கு அதை வழங்கினோம். அவர் அதை எடுத்துக்கொண்டு சென்னை முழுவதையும் சுற்றிப்பார்க்கக் கிளம்பிவிட்டார். சென்னையில் எப்போதெல்லாம் போட்டிகள் இருக்குமோ அப்போதெல்லாம் தோனி மோட்டார் பைக்கில் சென்னை சாலைகளில் வலம் வருவதை பார்க்க முடியும். சென்னையின் எல்லா பகுதிகளையும் சுற்றிப்பார்த்திருக்கிறார்" என, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்.

'தோனி ஒரு மஞ்சள் தமிழர்'

'தோனி என் வாழ்க்கையை மாற்றியவர்' தமிழர்கள் தோனியை அதிகம் கொண்டாட காரணம் என்ன?

பட மூலாதாரம், CSK

2021 ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது, சென்னையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். 'நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை. தோனியின் ரசிகராக வந்திருக்கிறேன். என் அப்பா, கலைஞர் கருணாநிதியும் தோனியின் ரசிகர். தமிழர்கள் பச்சைத் தமிழர் என்றால் தோனி ஒரு 'மஞ்சள் தமிழர்'. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தோனியும் கலைஞரும் கூலாக இருப்பார்கள்' என்றார்.

தோனி குறித்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் பேசியிருக்கின்றனர். கடந்த ஆண்டு 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தில் தோனி - விஜய் இருவரும் சந்தித்துக் கொண்டது பேசுபொருளானது. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தோனியை தமிழ்நாட்டின் சொந்தமாக வர்ணிப்பது காலம்காலமாக நடந்து வருகிறது. அதற்கு என்ன காரணம்?

'தோனி என் வாழ்க்கையை மாற்றியவர்' தமிழர்கள் தோனியை அதிகம் கொண்டாட காரணம் என்ன?

பட மூலாதாரம், Instagram/ChennaiIPL

தோனியை ஏன் தமிழ்நாடு கொண்டாடுகிறது?

"ஜார்கண்டை சேர்ந்த தோனியை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளும் புள்ளி மிகவும் நுட்பமானது. தமிழர்கள் விரும்பிய ஆட்டப் பாணிக்கும் தமிழ்நாட்டின் சார்பில் ஆடியவர்களின் ஆட்டப் பாணிக்கும் இடையே எப்போதுமே ஒரு பெரிய ஒத்திசைவு இருந்தது கிடையாது. ஆனால், இந்த ஆட்டப்பாணி மேல் கீழ் எனப் பிரியாமல் அனைத்து தமிழ்ச் சமூகத்திற்கும் விருப்பமான ஒன்று என்பதுதான் இதிலுள்ள சுவாரஸ்யமே. அது வெறுமனே ஆட்டப் பாணி என்பதோடு மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களின் அடையாள அரசியலுடன் தொடர்புடையது" என்கிறார், கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா.

"மேலோட்டமான புரிதலுக்கு சாத்தியமுள்ளது என்றாலும் தமிழ்நாட்டில் இதுநாள் வரை இருந்து வந்துள்ள நான் - பிராமின் அரசியலுடன் தமிழர்களின் தோனி ஏற்பை ஒப்பிடுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த முதலாளியால் நடத்தப்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி. ஆனால், அதேநேரம் அரசியல் தளத்தில் பிராமண விலக்கத்தை விரும்பும் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய ஐகான்களில் ஒருவரும் தோனிதான். இந்த இரட்டைத்தன்மைக்கு சில நேரங்களில் அவருடைய இயல்பே வலு கூட்டுவதைப் பார்க்க முடியும்."

"பிற கிரிக்கெட் நட்சத்திரங்களைப் போல தோனி ஆளும் கட்சிக்கு ஒத்துப் பாடுவதில்லை. ஆனால், இந்திய தேசியத்தை விளையாட்டு அரங்குக்குள் தூக்கிப் பிடிக்கும் காரியங்களை பெருமிதத்துடன் அவர் மேற்கொள்வார். புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராணுவ குறியீட்டை அவர் அணிந்து விளையாடியது ஓர் உதாரணம். இந்தப் புரிபடா அம்சமும் கூட எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் வைத்து தோனியைத் தமிழர்கள் கொண்டாவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார், கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா.

"தமிழ் மனதிற்கு எப்போதுமே மரபு மீறப்படுதல் அல்லது புனிதங்களை உடைத்தல் (Unodthodoxy) மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அதனை அரசியல், சினிமா தளங்களில் வைத்து நிகழ்த்துவதற்கு உள்ளேயே ஆளுமைகள் இருந்தனர். ஆனால், கிரிக்கெட் அரங்கில் அதற்கேற்ற ஆளுமையோ அந்த ஆளுமையை உருவாக்குவதற்கான சமூக சூழலும் இல்லாததால் வெளியாள் ஆன தோனியை அது தன்வயப்படுத்திக் கொண்டது" என தினேஷ் அகிரா குறிப்பிடுகிறார்.

'தோனி என் வாழ்க்கையை மாற்றியவர்'

'தோனி என் வாழ்க்கையை மாற்றியவர்' தமிழர்கள் தோனியை அதிகம் கொண்டாட காரணம் என்ன?

பட மூலாதாரம், Saravanan

தமிழ்நாட்டில் தோனிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால், அதிலும் தனித்து தெரிபவர் சரவணன் ஹரி. தோனி மீது அவ்வளவு பிரியம் வந்தது ஏன்? உடல் முழுக்க மஞ்சள் பெயிண்டை பூசிக்கொண்டு அவருக்காக கொண்டாடுவது ஏன்? என அவரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், "பெரிய விபத்தில் சிக்கி மீண்டு வந்தவன் நான். வாழ்க்கையில் இது எனக்கு 2வது இன்னிங்ஸ். சுமார் 6 -7 மாதங்கள் மருத்துவ ஓய்வில் இருந்தேன். அப்போதுதான் 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இறுதிப்போட்டியில் அவர் எடுத்த ரிஸ்கான முடிவால்தான் இந்தியா வென்றது. ஒருவேளை போட்டியை நழுவவிட்டிருந்தால் தோனி மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பார்.

அவரை கொண்டாடும் விதமாக 2013ல் இருந்து தோனியின் தீவிர ரசிகனானேன். கிரிக்கெட்டைத் தாண்டி வாழ்க்கையின் பல பாடங்களை தோனிதான் கற்றுத்தந்திருக்கிறார். நெருக்கடியான தருணங்களை கையாளுவது, தோல்வியை எதிர்கொள்வது என பல விஷயங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. தோனியால்தான் என் வாழ்க்கையே மாறியது. அவர்தான் என் குழந்தைக்கே பெயர் சூட்டினார் என பூரிப்புடன் சொல்கிறார் சரவணன் ஹரி.

வெறும் ஐபிஎல் அணி என்பதைத் தாண்டி 'சென்னை தனக்கு இன்னொரு வீடு' என்றே குறிப்பிட்டிருக்கிறார் எம்.எஸ்.தோனி. கடைசி ஐபிஎல் ஆட்டம் சென்னையில்தான் இருக்கும் எனவும் ஏற்கெனவே அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

காணொளிக் குறிப்பு, "தோனி அண்ணனை உலகளவு பிடிக்கும்" - ஒரு தோனி ரசிகரின் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: