நடராஜனின் 'வேகத்தடை' பந்துகள்: ஒரே பந்தில் போட்டியின் முடிவு மாறிப் போனது எப்படி?

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, ஒரே ஓவரில் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பக்கம் திருப்பிய பிலிப்ஸ்
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்கூட வெற்றி பெறுவோம் என நம்பியிருக்கமாட்டார்கள். ஆட்டத்தின் ஒட்டுமொத்த தலை எழுத்தும், கடைசி 2 ஓவர்களில்தான் முடிவு செய்யப்பட்டது. அதிலும் கிளென் பிலிப்ஸின் ஹாட்ரிக் சிக்ஸர்கள், துணிச்சலான அப்துல் சமது கடைசிப்பந்து வரை போராடியது ஆகியவை சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

வெற்றியை கையில் வாங்கி கட்டியணைக்கத் தவறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அவலத்தை என்னவென்று சொல்வது. ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு 3 பேர்தான் காரணம்.

50 ஆட்டங்களில் இதுவே முதல் முறை

ஐ.பி.எல். டி20 தொடர் தொடங்கி 50 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் இதுபோன்ற பரபரப்பான, இதயத்துடிப்பை எகிறச் செய்யும், பல ட்விஸ்ட்களைக் கொண்ட ஆட்டத்தை ரசிகர்கள் முதல்முறையாக பார்த்துள்ளனர்.

இதுபோன்ற கடைசி நேர ட்விஸ்ட்கள் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் நடக்கும் என்பது நேற்றைய சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் புரிந்திருப்பார்கள்.

கடைசிப்பந்தில் 5 ரன்கள் தேவை என்றபோது ராஜஸ்தான் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா வீசிய பந்தை சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் அப்துல் சமது அடிக்கத் தவறவிட்டவுடன் ராஜஸ்தான் வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

வெற்றியைத் தடுத்த நோ-பால்

அங்குதான் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டது. 3வது நடுவர் சந்தீப் சர்மா வீசிய பந்தை நோ-பால் என்று அறிவித்தார். ராஜஸ்தான் வீரர்கள், ரசிகர்கள், சன்ரைசர்ஸ் வீரர்கள் யாரும் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை, ஆட்டம் உச்ச சுதியில் பரபரப்பை எட்டியது.

கிடைத்த வாய்ப்பை இதற்குமேல் தவறவிடக்கூடாது என்ற ரீதியில், சந்தீப் சர்மா வீசிய ப்ரீ ஹிட் பந்தை அப்துல் சமது ஸ்ட்ரைட் ட்ரைவில் சிக்ஸர் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசிப்பந் துநோபாலில் த்ரில்லாக வென்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான வெற்றியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அழகாகத் திருடிவிட்டது என்றுதான் கூறமுடியும். இந்தப் போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு ஆட்டத்தின் முடிவு ஒருபுறம் மகிழ்ச்சியையும், அச்சச்சோ...பாவம் ராஜஸ்தான் வீரர்கள் என்று பரிதாபப்பட வைத்தது.

ஆட்டத்தை மாற்றிய கிளென் பிலிப்ஸ்

சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி 2 ஓவர்கள்தான் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தது. இந்த சீசனில் முதல்முறையாக வாய்ப்புப் பெற்ற கிளென் பிலிப்ஸ் களமிறங்கி 7 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உள்ளிட்ட 25 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். குறைவான பந்தை சந்தித்து ஆட்டநாயகன் விருது வென்று ஐபிஎல் தொடரில் 2வது வீரர் பிலிப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி 12 பந்துகளில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.

இந்த சூழலில் அனைத்து ரசிகர்களும், ராஜஸ்தான் அணிக்குத்தான் வெற்றி என்று எண்ணினர். ஆனால், 19-வது ஓவரை அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை கேப்டன் சாம்ஸன் வீசச் செய்தார். கிளென் பிலிப்ஸ் எதிர்கொண்டார்

'ஹாட்ரிக்' சிக்ஸர் விளாசிய பிலிப்ஸ்

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

குல்தீப் யாதவ் முதல் பந்தை ஃபுல்டாஸாக வீச லாங்ஆனில் சிக்ஸருக்கு பிலிப்ஸ் பறக்கவிட்டார். 2வது பந்தையும் குல்தீப் ஃபுல்டாஸாக வீச, மீண்டும் லாங்-ஆன் திசையில் பிலிப்ஸ் சிக்ஸர் விளாசினார். 3வது பந்தை குல்தீப் ஆப்சைடில் வீச பிலிப்ஸ் அதை மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி ஹாட்ரிக் சிக்ஸரை அடித்தார்.

4வது பந்தில் பிலிப்ஸ் பவுண்டரி அடிக்க மொத்த ஆட்டமும் சன்ரைசர்ஸ் பக்கம் சென்றது. 5-வது பந்தில் பிலிப்ஸ் (7பந்துகளில் 25 ரன்) ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

த்ரில் கடைசி ஓவர்

கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு எதிராக சந்தீப் சர்மா ஏற்கெனவே டெத் ஓவரை சிறப்பாக வீசியிருந்ததால், அவரையே கேப்டன் சாம்ஸன் வீசச் செய்தார். அப்துல் சமது, ஜான்ஸன் இருவரும் களத்தில் இருந்தனர்.

சந்தீப் வீசிய முதல்பந்தை சமது எதிர்கொண்டு 2 ரன்கள் சேர்த்தார். 2-ஆவது பந்தில் அப்துல் சிக்ஸர் விளாச பரபரப்பானது. 3வது பந்தில் அப்துல் 2 ரன்களும், 4வந்து பந்தில் ஒருரன்னையும் சமது எடுத்தார்.

2 பந்துகளில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-ஆவது பந்தை ஜான்ஸன் ஒரு ரன்எடுத்தார். கடைசிப்பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமது ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசிப்பந்தை சந்தீப் வீச, அந்தப் பந்தில் பவுண்டரி அடிக்க முடியாமல் சமது கோட்டைவிட்டார்.

ஆட்டத்தை வென்று விட்டதாக எண்ணிணி மகிழ்ச்சியில் சந்தீப் சர்மா வானத்தை நோக்கி கையைத் தூக்கி வெற்றியைக் கொண்டாடினார். ஆனால், அடுத்த வினாடியில் வெற்றிக்கொண்டாட்டம் அனைத்தும் அடங்கியது.

3வது நடுவர் தலையிட்டு சந்தீப் சர்மா வீசிய பந்து நோபால் என அறிவிக்கவே, ப்ரீ ஹிட் சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்தது. நோபால் என்பதால் ஒரு ரன்னும் கிடைத்தது. ஆதலால் ப்ரீ ஹிட்டில் பவுண்டர் அடித்தால் சன்ரைசர்ஸ் வெற்றி என்ற ரீதியில் அப்துல் சமது எதிர்கொண்டார். சந்தீப் யார்கராக வீசிய பந்தை அப்துல் சமது லாங்ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

இருமுறை தப்பிய அப்துல் சமது

அப்துல் சமது இருமுறை ஆட்டமிழக்கும் வாய்ப்பில் இருந்து தப்பி வெற்றிக்கு வழிகாட்டினார். அப்துல் சமது 2ரன் சேர்த்தநிலையில் மெக்காய் ஒரு கேட்சை கோட்டைவிட்டார், அதன்பின், கடைசி ஓவரில் சிக்ஸருக்கு சென்ற பந்தை ஜோ ரூட் தாவிப்பிடிக்க முற்பட்டு முடியாமல் பந்து கையில் பட்டு சிக்ஸர் சென்றது. இந்த இரு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பில் அப்துல் சமது சிக்கி இருந்தால், சன்ரைசர்ஸ் தோல்வி உறுதியாகியிருக்கும்.

இதுதான் ஐபிஎல் ஸ்பெஷல்

தோல்விக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ ஐபிஎல் தொடரில் இதுபோன்ற ஆட்டங்கள்தான் ஸ்பெஷல். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என அறிவிக்கப்பட்டு உறுதி செய்யும்வரை, வெற்றி பெற்றதாக நீங்கள் உணரமுடியாது. சந்தீப் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், நோ-பாலை எதிர்பார்க்கவில்லை. சன்ரைசர்ஸ் வீரர்கள் அருமையாக பேட் செய்தனர். இந்த தொடரில் டி20 போட்டியில் விளையாடுவது வாழ்க்கையில் எளிதானது அல்ல. ஒவ்வொரு ஆட்டத்திலும், உங்களின்பங்களிப்பு தேவை. நாங்கள் மீண்டு எழுவோம்”எ னத் தெரிவித்தார்

தோல்விக்கு ராஜஸ்தானே காரணம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடிக்கவில்லை. ராஜஸ்தான் அணியினரே தோல்வியை விரும்பி பெற்றுக்கொண்டார்கள் என்றுதான் என்றுதான் கூறமுடியும். வெற்றியை தூக்கி சன்ரைசர்ஸ் அணியிடம் தாரை வார்த்து தோல்வி விரும்பி வாங்கிக்கொண்டனர்.

214 ரன்கள் ஸ்கோர் என்பது மிகப்பெரிய இலக்கு. இந்த இலக்கைக்கூட சன்ரைசர்ஸ் அணியால் அடையவிடாமல் தடுக்கக்கூட பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், தமிழக வீரர் முருகன் அஸ்வின், சந்தீப் சர்மா ஆகியோரின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது.

முருகன் அஸ்வின் பந்துவீச வரும்போதெல்லாம் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு நெருக்கடியளிக்கும் வகையில் முருகனின் பந்துவீச்சு அமையவில்லை. 3 ஓவர்கள் வீசிய முருகன் அஸ்வின் 42 ரன்களை வாரி வழங்கினார்.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

அடுத்ததாக, குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை வழங்கி வள்ளலாக மாறினர். அனுபவம் இல்லாத குல்தீப் யாதவை 19வது ஓவரை வீசச் செய்ததற்கு பதிலாக, அனுபவம் உள்ள மெக்காயை பந்துவீச கேப்டன் சாம்சன் முடிவு எடுத்திருக்கலாம்.

இதுபோன்ற ஹை-பிரஷர் ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் யார் வீசுகிறார்,எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதை வைத்தே கடைசி ஓவர் முடிவு செய்யப்படும். ஆனால், குல்தீப் வீசிய 19வது ஓவரில் பிலிப்ஸ் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி ஆட்டத்தை திருப்பிப்போட்டது.

சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி 48 ரன்களை வழங்கினார். டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர் என்று கூறப்பட்டாலும் கடைசி நேரத்தில் செய்த தவறுகள் தோல்விக்கு காரணமாகிவிட்டன. இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 140 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் என்பதன் மூலம் தோல்விக்கான காரணத்தை அறியலாம்.

அடுத்ததாக கேப்டன் சாம்ஸனின் தவறான முடிவுகள், திரிபாதிக்கு கேட்சை கோட்டைவிட்டது, ஸ்டெம்பை தட்டிவிட்டு ரன்அவுட்டை தவறவிட்டது போன்ற செயல்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வைத்துள்ளன.

ராஜஸ்தான் வீரர்கள் நேற்று கேட்சுகளை நழுவவிடவில்லை, வெற்றியை நழுவவிட்டனர். அப்துல் சமது தேர்டு மேன் திசையில் அடித்தபந்தை மெக்காய் கையில் விழுந்த பந்தை பிடிக்காமல் கோட்டைவிட்டார். கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த பந்தை ஜோ ரூட் கேட்ச் பிடிக்க கடும் முயற்சி செய்து தவறவிட்டார். இரு தருணங்களும் ஆட்டத்தை மாற்றின.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

மற்ற வகையில் யஜூவேந்திர சஹல், ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் ஆகச்சிறப்பாகப் பந்துவீசினர். சஹல் எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும் ஆட்டத்தில் திருப்புமுனையை வழங்கிய தருணங்கள் ஆனால், எதையும் மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ராகுல் திரிபாதி(47), கிளாசன்(26), மார்க்ரம்(6), அன்மோல்ப்ரீத் சிங்(33) ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தபோதெல்லாம் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் சென்றது. அதற்கான வழியையும் சஹல் வகுத்துக் கொடுத்தார். ஆனால், மற்ற வீரர்களின் பொறுப்பற்ற பந்துவீச்சு, கேப்டன் சாம்சனின் தவறான வியூகம், முடிவுகள் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ராஜஸ்தான் அணி நேற்று சந்தித்த தோல்வியால் நிச்சயமாக அவர்களுக்கு தூக்கமில்லா இரவாகவே கழிந்திருக்கும்.

ஃபார்முக்கு வந்த பட்லர்

ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் அருமையான தொடக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் வழக்கம்போல் அதிரடியாக ஆடி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் சேர்த்தது.

இந்த சீசனில் ஃபார்மின்றி தவித்துவந்த பட்லருக்கு நேற்று ரிதம் கிளிக் ஆகியது. சாம்ஸனுடன் சேர்ந்து, பட்லர் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். மார்கோ ஜான்ஸன், புவனேஷ்வர், மார்க்கண்டே ஓவர்களை பட்லர் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார். 20 பந்துகளுக்கு 20 ரன்களைச் சேர்த்திருந்த பட்லர் அடுத்த 12 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சாம்ஸன் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 138ரன்கள் சேர்த்து அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் பட்லர் 5 ரன்னில்சதத்தை தவறவிட்டு 95 ரன்னில்(59 பந்துகள், 4 சிக்ஸர்,10 பவுண்டரி) ஆட்டமிழந்தார். சாம்ஸன் 66 ரன்களிலும்(38 பந்துகள் 5 சிக்ஸர், 4 பவுண்டரி), ஹெட்மெயர் 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

ராஜஸ்தான் ரன் ரேட்டை பாதித்த நடராஜனின் 'யார்க்கர்கள்'

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பட்லர், சாம்ஸன் ரன் குவிப்புக்கு கடைசி நேரத்தில் தங்களின் துல்லியமான பந்துவீச்சால் தமிழக வீரர் நடராஜனும், புவனேஷ்வர் குமாரும் நெருக்கடி அளித்தனர். 18-வது ஓவரை வீசிய நடராஜன், தனது துல்லியமான யார்கர்களால் பட்லரையும், சாம்ஸனையும் திணறவிட்டு வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் 7 ரன்களை வழங்கி பட்லர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இருவரின் பந்துவீச்சு கடைசி நேரத்தில் ராஜஸ்தான் ரன்வேகத்துக்கு பெரிய தடைக்கல்லாக அமைந்தது. இந்த இரு ஓவர்களில் அடிக்கவிட்டிருந்தால், ராஜஸ்தான் அணி கூடுதலாக 30 ரன்கள் ஸ்கோர் செய்திருக்கும். இருப்பினும் நடராஜன் 20வது ஓவரில் 17 ரன்களை வழங்கினார். இந்த ஓவரைத் தவிர நடராஜன் பந்துவீச்சு அருமை என சொல்லலாம்.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

பேட்ஸ்மேன்களின் வெற்றி

சன்ரைசர்ஸ் பந்துவீச்சு ஒருபோதும் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இல்லை. ஏனென்றால், விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமலும், ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியாமலும் தரமற்றதாகவே இருந்தது. ஆனால், பேட்டிங்கில் ஏதாவது செய்ய வேண்டும், வெற்றிக்கு முயற்சிக்கலாம் என்ற பேட்ஸ்மேன்களின் முயற்சி அவர்களுக்கு கை கொடுத்தது.

மயங்க் அகர்வால், ஹேரி ப்ரூக் ஆகியோருக்குப் பதிலாக பிலிப்ஸ், அன்மோல் ப்ரீத் சிங் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த சீசனில் கலக்கிவரும் அபிஷேக் சர்மா, அன்மோல்ப்ரீத் சிங்குடன் சேர்ந்து களமிறங்கினார். அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் இருவரும் ராஜஸ்தான் வீரர்கள் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை சீராகக் கொண்டு சென்றனர்.

அன்மோல் 33 ரன்கள் சேர்த்த நிலையில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பவர் ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி 52 ரன்களைச் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு வந்த திரிபாதி, அபிஷேக் கூட்டணி ஆட்டத்துக்கு திருப்புமுனையாக மாறினர்.

மெல்லமெல்ல சன்ரைசர்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினர். 11.3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் 100 ரன்களை எட்டியது. 33 பந்துகளில் அபிஷேக் சர்மா அரைசதம் எட்டினார். 12-வது ஓவருக்குப்பின், சன்ரைசர்ஸ் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது. திரிபாதி அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன் ரேட்டை உயர்த்தி, ராஜஸ்தான் அணிக்கு சவால் விட்டார்.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

ஆனால், அஸ்வின் வீசிய 13வது ஓவரில் அபிஷேக் 55 ரன்னில்(34 பந்து, 2 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அனுபவ வீரர் கிளாசன் சிறிய கேமியோ ஆடி 26 ரன்னில்(12 பந்து 2 சிக்ஸர்)வெளியேறினார்.

கடைசி 4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த திரிபாதி, வெற்றியை ராஜஸ்தான் வசம் செல்லாமல் இழுத்துப் பிடித்தவாறு இருந்தார். சஹல் வீசிய 18-வது ஓவரில் திரிபாதி 47 ரன்னில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்க்ரம் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் போக்கு ராஜஸ்தான் வசம் சென்றது.

அடுத்துவந்த கெளின் பிலிப்ஸ், சமது கூட்டணி ஆட்டத்துக்கு திருப்புமுனையாக இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் பிலிப்ஸ் பெரிதாக எந்த ஆட்டத்திலும் சாதிக்கவில்லை.

கடைசி 2 ஓவர்களில் சன்ரசைர்ஸ் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. எட்ட முடியாத இலக்கு, வெற்றி ராஜஸ்தானுக்கே என்று ரசிகர்கள் எண்ணி, அரங்கில் ராஜஸ்தான் கொடி பறக்கத் தொடங்கியது.

அப்போதுதான் திருப்பம் நடந்தது. குல்தீப் வீசிய 19வது ஓவரில் பிலிப்ஸ் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி என 24 ரன்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. இந்த சீசனில் முதல்முறையாக ஐபிஎல் வாய்ப்பைப் பெற்று பிலிப்ஸ் ஹீரோவாக மாறினார்.

அப்துல் சமது ஃபினிஷராக மாறவில்லையே என்று எண்ணியவர்களுக்கு கடைசிநேரத்தில் ப்ரீஹிட்டில் அவர் அடித்த சிக்ஸர் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

SRH vs RR

பட மூலாதாரம், BCCI/IPL

"உணர்ச்சிகள் சட்டென மாறின"

சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ எங்களின் உணர்ச்சிகள் திடீரென மாறின. ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தோம். அபிஷேக் சிறப்பான தொடக்கம் அளித்தார், அதை திரிபாதி இறுகப்பற்றி வழிநடத்தினார், மற்றவர்கள் சிறிய கேமியோ ஆடினர். பிலிப்ஸ், சமது ஆட்டத்துக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் வரலாற்றிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளது. இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் 6-வது முறையாக சேஸிங் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: