அண்ணனை வீழ்த்திய தம்பி: அதிரடியில் மிரட்டியும் சாஹா கேலிக்குள்ளானது ஏன்?

பட மூலாதாரம், BCCI/IPL
விருதிமான் சாஹா(81), சுப்மான் கில்(94-நாட்அவுட்) ஆகியோரின் அருமையான பேட்டிங், பாட்னர்ஷிப் லக்னெள சூப்பர் ஜெயிட்ஸ் அணிக்கு எதிராக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இமாலய வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த சீசனில் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாஹா அதிவேகமாக 20 பந்துகளில் அரைசதம் அடித்து, 43 பந்துகளில் 81 ரன்கள்(4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஸ்டைலிஷ் பேட்ஸ்மேனான சுப்மான் கில் 51 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து(7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இமாலய ஸ்கோரை அடித்துக் கொடுத்து வெற்றியை உறுதி செய்த சாஹா, கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி இதுவரை நடந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக பவர்ப்ளே ஓவர்களை தாண்டியதில்லை என்ற வருத்தம் இருந்தது.
இரு பேட்ஸ்மேன்களும் தனித்தனியாக சிறப்பாக பேட் செய்தாலும், நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை என்ற வருத்தத்தை இந்த ஆட்டத்தில் துடைத்தெறிந்தனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
வரலாற்றில் பாண்ட்யா சகோதரர்கள்
சகோதரர்கள் இருவரும் களத்தில் எதிர் எதிர் அணிகளுக்குத் தலைமை தாங்கி மோதிக் கொள்வது கிரிக்கெட்டில் அரிதான சம்பவம்.
2015-16ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் மைக் ஹசி சிட்னி தண்டர்ஸ் அணிக்கும், டேவிட் ஹசி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கும் கேப்டன்களாக இருந்து இருவரும் மோதிக்கொண்டனர்.
அதன்பின் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டனாக க்ருனால் பாண்ட்யாவும் என சகோதரர்கள் எதிரணிகளின் கேப்டன்களாக மோதிக்கொண்டனர்.
சாஹா... அவசரத்தில் இப்படியா வருவீங்க…!
இந்த ஆட்டத்தில் விருதிமான் சாஹா பேட்டிங் செய்தபோது தொடையில் லேசாக தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு மாற்றுவீரராக பரத் களமிறக்கப்பட்டார்.
ஆனால், நடுவர் அதற்கு சம்மதிக்காமல், சாஹாவை களமிறக்க வேண்டும், அவரால் முடியாதபட்சத்தில் பரத் வரலாம், அதை ஆய்வு செய்தபின் அறிவிப்போம் என்றனர்.
இதையடுத்து, ஓய்வில் இருந்த சாஹா, அவரசரமாக ஜெர்ஸியை மாற்றிக்கொண்டு, பேட், கிளவ்ஸ்களை அணிந்து களத்துக்கு வந்தார்.
ஆனால், சஹா களத்துக்கு வரும் அவசரத்தில் பேண்ட்டை மாற்றி அணிந்துவிட்டார். பேண்டின் முன்பக்கம் இருக்கும் விளம்பரதாரர்களின் பெயர்கள் அனைத்தும் பின்பக்கம் தெரியுமாறு அணிந்து வந்தார். இதைப் பார்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, களத்தில் இருந்த பேட்ஸ்மேன் குயின்டன் டீ காக் உள்ளிட்ட வீரர்கள் சிரித்து கிண்டல் செய்தனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
சாஹா, கில் சரவெடி
கில், சாஹா இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியில் இறங்கி ரன்களை குவிக்கத் தொடங்கினர். அதிலும் சாஹா மோசின்கானின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசினார். ஆவேஷ் கான் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி விளாசி ரன் ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.
மோசின் கான் வீசிய 4வது ஓவரில் சாஹா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசியதால் 4 ஓவர்களில் குஜராத் அணி 50 ரன்களை எட்டியது.
ஓவருக்கு 10 என்ற ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. இதில் சாஹாவின் பங்களிப்பு மட்டும் 46 ரன்களாக இருந்தது. யஷ் தாக்கூர் ஓவரில் சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் அதிவிரைவாக சாஹா அரைசதம் அடித்தார்.
பவர்ப்ளேவில் குஜராத் அணி 78 ரன்களை குவித்தது. 37 பந்துகளில் 74 ரன்களை சேர்த்து சாஹாவின் பேட்டிங் லக்னெள பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. 20 பந்துகளில் அரைசதம் அடித்த சாஹா அடுத்த 17 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். சாஹா 81 ரன்கள் சேர்த்து ஆவேஷ்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேவில் சாஹாவின் அதிரடியை கில் வேடிக்கை மட்டுமே பார்த்தார். பெரிதாக எந்த ஷாட்களையும் கில் ஆடவில்லை. முதல் 4 ஓவர்களில் வெறும் 5 பந்துகளை கில் சந்தித்திருந்தார். ஆனால், சாஹா சற்று களைப்படைந்தவுடன் கில், தனது அதிரடியைத் தொடங்கினார். க்ருனால் பாண்ட்யா ஓவரில் சிக்ஸர், ரவி பிஷ்னோய் ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.
சுப்மன் கில் 29 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சீசனில் 4வது அரைசதத்தை பதிவு செய்தார். கில் சேர்த்த 68 ரன்களில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை, சிக்ஸர் மட்டுமே விளாசி இருந்தார். சாஹா ஆட்டமிழந்து சென்றபின் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறிய கேமியோ ஆடி 25 ரன்னில் மோசின்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டேவிட் மில்லர் 12 பந்துகளில் 21 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கில் இந்த சீசனில் சதத்தை அடிக்க வாய்ப்பு இருந்தும் 6 ரன்கள் குறைவாக 94 ரன்கள் சேர்க்க முடிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
திருப்புமுனையான ரஷித் கான் கேட்ச்
வெற்றிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் “மேயர்ஸுக்கு ரஷித் கான் பிடித்த கேட்ச் ஆட்டத்தை மாற்றியது. அதன்பின் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம்.
இரு அணிகளுமே சமமான வேகத்தில் சென்றன. ஆனால், விக்கெட் வீழ்ச்சிதான் எங்களை முன்னே கொண்டு சென்றது, ஊக்கத்தை அளித்தது,” எனத் தெரிவி்த்தார்.
அனுபவமில்லாத கேப்டன்ஷிப்
லக்னெள அணியின் பந்துவீச்சாளர்கள் கில், சாஹாவை பிரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களை நீண்ட போராட்டத்துக்குப் பின்புதான் பிரித்தனர்.
இருவரின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த க்ருனால் பாண்ட்யா 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பயனில்லை. பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு ரொட்டேட் செய்வது என்பது தெரியாததும், கேப்டன்ஷிப் அனுபமின்மையும் க்ருனால் பாண்ட்யாவிடம் நன்றாகத் தெரிந்தது.
வலுவான அடித்தளம்
228 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்தி, மேயர்ஸ், குயின்டன் டி காக் களமிறங்கினர். இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் டி காக் களமிறங்கினார்.
மேயர்ஸ், டி காக் இருவரும் சளைக்காமல் ஓவருக்கு 10 ரன்களை சேர்த்து குஜராத் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தனர். பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை லக்னெள அணி சேர்த்தது.
இருவரின் அதிரடியைக் கட்டுப்படுத்த ரஷித் கான், நூர் அகமதுவை அறிமுகம் செய்தார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால், சுழற்பந்துவீச்சையும் நொறுக்கி எடுத்த மேயர்ஸ், டி காக் கூட்டணி சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். குஜராத் அணிக்கு ஈடாக ரன்ரேட்டை இருவரும் கொண்டு சென்றனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
ஆனால், மோகித் சர்மா வீசிய 9வது ஓவரில் ஸ்லோவர் பந்து எனத் தெரியாமல் தூக்கி அடித்த மேயர்ஸ் 48 ரன்னில் (2 சிக்ஸர், 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 88 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
மேயர்ஸ் ஆட்டமிழந்து சென்றபின், லக்னெள அணியின் வெற்றித் தாகமும் அடங்கித் தணியத் தொடங்கியது. அதிலும் தீபக் ஹூடா(11), ஸ்டாய்னிஷ்(4), நிகோலஸ் பூரன்(3) பதோனி(21) குர்னல் பாண்டியா(0) ஆகியோரின் மந்தமான பேட்டிங் லக்னெள ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய ஸ்பீடு பிரேக்கராக மாறியது.
குயின்டன் டி காக் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி 31 பந்துகளில் அரைசதம் அடித்து, 40 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
114 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த லக்னெள அணி, அடுத்த 52 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் டி காக், மேயர்ஸ் இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை, பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டனர்.
மேயர்ஸ் ஆட்டமிழந்தபின் அடுத்த 6 ஓவர்களில் லக்னெள அணி 33 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. கடைசி 6 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 107 ரன்கள் இருந்தபோதே லக்னெளவின் தோல்வி உறுதியாகிவிட்டது.
ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்
தோல்விக்குப் பின் லக்னெள அணியின் கேப்டன் க்ருனால் பாண்ட்யா கூறுகையில், “நாங்கள் அதிகமான ரன்களை விட்டுவிட்டோம். 227 ரன்கள் எனும் இலக்கு பெரியது.
ஒவ்வொரு பந்தையும் வீணாக்கக்கூடாது. 200 ரன்களை சேஸிங் செய்யும்போதே, 2 ஓவர்களை வீணாக்கினால் நெருக்கடி ஏற்படும்.
எங்களின் கடைசி 6 ஓவர்களில் ரன் சேர்ப்பு மந்தமாகிவிட்டது. 200 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும், தவறிவிட்டோம். எதிரணியில கேப்டனாக என் சகோதரரை சந்திப்பது மகிழ்ச்சி,” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












