பயணத்தின் போது ஆண்களை விட பெண்களுக்கே வாந்தி அதிகம் வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இஃப்திகார் அலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
வாகனப் பயணத்தின் போது வாந்தி எடுப்பது ஒரு பொதுவான பிரச்னையாகும். மருத்துவ மொழியில், இது மோஷன் சிக்னஸ் (motion sickness) என்று அழைக்கப்படுகிறது.
பயணத்தின் போது இது ஏன் நிகழ்கிறது? மனம், கண்கள் மற்றும் உடல் சமநிலைக்கு இடையே என்ன தொடர்பு இருக்கிறது? இதைத் தடுக்க முடியுமா?
மோஷன் சிக்னஸ் என்றால் என்ன?
மோஷன் சிக்னஸ் என்பது, ஒரு நபர் பயணத்தின் போது தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி அல்லது அமைதியின்மையால் அவதிப்படும் நிலை. இந்த பிரச்னை பெரும்பாலும் கார், பேருந்து, ரயில், கப்பல் அல்லது விமானப் பயணத்தின் போது ஏற்படுகிறது.
சிலர் மலைப்பாதைகளில் இந்த பிரச்னையை அடிக்கடி அனுபவிக்கின்றனர். வாகனப் பயணத்தில் ஏற்படும் இந்த பிரச்னை கடல் அல்லது விமானப் பயணத்தின் போது ஏற்படும் பிரச்னைக்கு ஒப்பானதாகும்.
டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மோசின் வாலி கூறுகையில், "நமது மூளை நாம் பயணிக்கும் போது, உண்மையில் கண்கள் மற்றும் காதுகளில் இருந்து வெவ்வேறு சமிக்ஞைகளைப் பெறுகிறது." என்றார்.
"நீங்கள் கார் அல்லது பேருந்தில் அமர்ந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தால் அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் நகரவில்லை என்று உங்கள் மூளைக்கு உங்கள் கண்கள் சொல்கின்றன. ஆனால் உங்கள் காதுகளில் உள்ள சமநிலை அமைப்பு உங்கள் உடல் நகர்கிறது என்று மூளைக்குச் சொல்கிறது.
இந்த சமிக்ஞைகள் உங்கள் உடலுக்குள் ஏதோ நச்சுப் பொருள் நுழைந்துவிட்டது என்று உடலை நினைக்க வைக்கிறது. நச்சுத்தன்மையை கையாள உடலுக்குத் தெரிந்த ஒரே வழி அதை வெளியேற்றுவது, அதாவது வாந்தி எடுப்பது," என்று டாக்டர் மோசின் வாலி கூறுகிறார்.
இதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழி ஜன்னல் வழியாக தூரமாகப் பார்ப்பது. இது உங்கள் கண்கள் மற்றும் காதுகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை ஒத்திசைக்கிறது, அசௌகரியத்தைக் குறைக்கிறது.
2015-இல் பிபிசி நிருபர் காடியா மோஸ்க்விச் எழுதிய கட்டுரையின்படி, மோஷன் சிக்னஸ் என்பது ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவரைப் பாதிக்கும் நோயாகும்.
யாரை இது பாதிக்கும், எப்போது பாதிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. அதேபோல இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) நரம்பியல் துறையின் டாக்டர் மஞ்சரி திரிபாதி , "நமது உடலின் சமநிலை அமைப்பு சரியாக ஒருங்கிணைய முடியாததால் மோஷன் சிக்னஸ் ஏற்படுகிறது. இந்த அமைப்பு முக்கியமாக காதுக்குள் இருக்கும் சமநிலை உறுப்புடன் (வெஸ்டிபுலர் சிஸ்டம்) இணைக்கப்பட்டுள்ளது," என்று விளக்குகிறார்.
அவர்களின் கூற்றுப்படி, நாம் பேருந்து, கார், ரயில் அல்லது விமானத்தில் பயணிக்கும் போது, கண்கள், காதுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலிருந்து மூளை பெறும் தகவல்கள் பொருந்தாமல் இருக்கின்றன.
இது உடல் சமநிலை ஏற்பிகளை (receptors) அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுகிறது. இதன் விளைவாக, மூளையின் சில பகுதிகள், அதாவது மூளைத்தண்டு மற்றும் ஹைபோதாலமஸ், தூண்டப்படுகின்றன, இதனால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது.
எளிமையாக கூறுவதென்றால், காதுக்குள் இருக்கும் சமநிலை அமைப்பு மற்றும் உடல் இயக்கத்தை உணரும் ஏற்பிகளில் ஏற்படும் முரண்பாடுகளால் மோஷன் சிக்னஸ் ஏற்படுகிறது.
"நமது உடலில் ஏற்பிகள் என்று அழைக்கப்படும் சிறப்பு உணர்விகள் உள்ளன. இவை வெளிப்புற மற்றும் உள் மாற்றங்களை உணர்ந்து அவற்றை மூளைக்கு அனுப்புகின்றன," என்று டாக்டர் திரிபாதி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பயணத்தின் போது வாந்தி ஏற்படுவது ஏன்?
பயண நேரத்தில் வாந்தி, குமட்டல் பிரச்னை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் பயணத்தைத் தொடங்கியவுடன் அசௌகரியத்தை உணரத் தொடங்குகிறார்கள், மற்றவர்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு இதை அனுபவிக்கிறார்கள்.
கரடுமுரடான சாலைகள், மலைப்பாதைகள் வழியாகச் செல்வது, வாகனம் தொடர்ந்து அசைவது மற்றும் உள்ளே துர்நாற்றம் ஆகியவையும் இந்த பிரச்னையை மோசமாக்கலாம்.
டாக்டர் மோசின் வாலியின் கூற்றுப்படி, "பயணத்தின் போது, நமது மூளையில் ஒரு திரவம் இருக்கிறது. இந்த திரவம் நகரும் போது, அதில் உருவாகும் அதிர்வுகள் கழுத்தை அடைகின்றன. கழுத்தின் இயக்கத்துடன், இந்த அதிர்வுகள் மண்டையோட்டுக்குப் பயணிக்கின்றன. இந்த செயல்முறை மூளையின் சமநிலையை சீர்குலைத்து குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இது தாங்க முடியாதபோது, வாந்தி ஏற்படலாம்."
அவர் மேலும் கூறுகையில், "இந்த அறிகுறிகள் அனைத்தின் கலவையும் மோஷன் சிக்னஸ் என்று அழைக்கப்படுகிறது. பயணத்தின் போது வயிற்றின் நிலையும் முக்கியமானது." என்றார்.
வெறும் வயிற்றில் பயணிப்பவர்கள்: இதயம் மற்றும் கழுத்து நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள வயிற்றில் உள்ள வேகஸ் நரம்பு மிகவும் சுறுசுறுப்பானதாக மாறுகிறது. இது மூளை மற்றும் உடலைப் பாதிக்கிறது, தலைச்சுற்றல் உணர்வை ஏற்படுத்துகிறது.
அதிக உணவு சாப்பிட்ட பிறகு பயணிப்பவர்கள்: இவர்களுக்கு வாந்தி ஏற்படலாம். எனவே, பயணத்திற்கு முன் உணவு குறைவாக சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
"மோஷன் சிக்னஸ் எப்போதும் பயண தொடர்பான பிரச்னை மட்டும் அல்ல. இது சில சமயங்களில் மூளை நோயின் அறிகுறியாகவோ அல்லது மருந்தின் பக்க விளைவாகவோ இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், மோஷன் சிக்னஸ் மூளைக் கட்டியின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, பயணத்தின் போது அடிக்கடி வாந்தி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது முக்கியம்," என்றார் மோசின்.

பட மூலாதாரம், Getty Images
பயணத்தில் வாந்தியை தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:
பயணத்தின் போது வாந்தியைத் தவிர்க்க விரும்பினால் கீழ்க்கண்ட விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்.
அதிக உணவைத் தவிர்க்கவும்
- டாக்டர் வாலி பரிந்துரையின்படி, பயணத்திற்கு முன் அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
வெறும் வயிற்றில் பயணத்தைத் தவிர்க்கவும்
- உணவு அல்லது சிற்றுண்டியை குறைவாக சாப்பிடுங்கள்.
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பயன்படுத்தவும்.
- தேவைப்பட்டால், வாந்தி வராமல் தடுக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
நகரும் வாகனத்தில் தூங்காதீர்
- தூங்கும்போது நம் உடலின் சமநிலை சீர்குலைகிறது மற்றும் வாந்தி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
- குமட்டலை உணர்ந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தவும்
வாகனத்தை பக்கவாட்டில் நிறுத்தி, திரும்பவும் பின்னர் பயணத்தைத் தொடரவும்.
அதிகப்படியான வாந்தியை புறக்கணிக்காதீர்
- நீங்கள் மீண்டும்மீண்டும் வாந்தி எடுத்தால், மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
புத்தகங்கள்/ செல்போன் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஆய்வுக் கட்டுரைப்படி, நகரும் வாகனத்தில் படிப்பது மோஷன் சிக்னஸை அதிகரிக்கலாம்.
உடலை முடிந்தவரை ஒரே நிலையில் வைத்திருங்கள்
தலை, தோள்கள், இடுப்பு மற்றும் முழங்கால்களின் இயக்கத்தைக் குறைக்கவும். இருக்கையில் முன்னோக்கி அமரவும் அல்லது முன் இருக்கையைத் தேர்ந்தெடுக்கவும். முடிந்தால், நீங்களே வாகனத்தை ஓட்டுங்கள்.
நிகோடினைத் தவிர்க்கவும்
- புகைபிடிப்பவர்கள் வாந்தி எடுக்கும் வாய்ப்பு அதிகம்.
இனிமையான இசையைக் கேளுங்கள்
- தேசிய மருத்துவ நூலக (National Library of Medicine) இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, லேசான, இனிமையான இசையைக் கேட்பது குமட்டலைக் குறைக்கிறது மற்றும் பயண அனுபவத்தை சற்று மேம்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளது.

ஆண்களை விட பெண்களுக்கு வாந்தி அதிகம் வருவது ஏன்?
டாக்டர் மஞ்சரி திரிபாதியின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்களுக்கு மோஷன் சிக்னஸ் அதிகமாக ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் பல உடல் மற்றும் ஹார்மோன் காரணங்கள் உள்ளன.
நிபுணர்கள் நம்புவது என்னவென்றால், பெண்களின் வாழ்க்கை முறை ஆண்களிடமிருந்து வேறுபட்டது, அதனால்தான் இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
டாக்டர் மோசின் வாலி விளக்குகையில், முதன்மையான காரணம் இரத்த அழுத்தம் என்கிறார். "ஆண்களுக்கு பொதுவாக பெண்களை விட சராசரியாக அதிக இரத்த அழுத்தம் இருக்கும். குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், மோஷன் சிக்னஸின் அறிகுறிகள் விரைவாகத் தோன்றத் தொடங்குகின்றன."
மற்றொரு காரணம் நிலைசார் ரத்த அழுத்தக் குறைபாடு (postural hypotension). அவர்களின் கூற்றுப்படி, பல பெண்கள் வீட்டு வேலைகள் செய்யும்போது, குறிப்பாக சமையலறையில், நீண்ட நேரம் நின்றபடி இருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக நின்றபடி இருக்கும் நிலை பெண்களுக்கு ரத்த அழுத்தம் குறைவதற்குக் காரணமாக இருக்கலாம். இது நிலைசார் ரத்த அழுத்தக் குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. இது தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் மோஷன் சிக்னஸ் போன்ற அறிகுறிகளை அதிகரிக்கலாம்.
மோசின் வாலியின் கூற்றுப்படி, பெண்களின் உடலில் ஏற்படும் வழக்கமான ஹார்மோன் மாற்றங்களும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். மாதவிடாய் காலத்தில், உடலில் உப்பு, நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை தொடர்ந்து மாறுகிறது.
அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு ரத்த அழுத்தத்தை மேலும் குறையச் செய்து, மோஷன் சிக்னஸின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.
மருத்துவர் வாலி கூற்றுப்படி, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் சராசரி மூளை அளவில் சற்று சிறியது. பெண்களின் மூளை வெளிப்புற தாக்கங்களுக்கு ஆளாக இது காரணமாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
குறைந்த ரத்த அழுத்தம், நிலைசார் ரத்த அழுத்தக் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் அமைப்பு அனைத்தும் பெண்களிடையே மோஷன் சிக்னஸ் அதிகமாக காணப்படுவதற்கு காரணமாகின்றன என்கிறார் டாக்டர் மோசின் வாலி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












