அரங்கை அதிர வைத்த சிஎஸ்கே வெற்றி: ரோஹித் போட்ட வியூகத்தை தவிடுபொடியாக்கிய தோனி

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

13 ஆண்டுகள், 4,777 நாட்கள்... சென்னை ரசிகர்கள் இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது.

ஆம், கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்த ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்ல முடியாமல் சிஎஸ்கே அணி தவித்து வந்தது.

அனைத்து தவிப்புகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், இன்று நடந்த ஆட்டத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

அது மட்டுமல்ல இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை வான்கடேவிலும், சேப்பாக்கத்திலும் வென்று தனது 13 ஆண்டுகாலப் பகையை தீர்த்துள்ளது தோனி ஆர்மி.

இதைவிட “ஹைலைட்டான” விஷயம் ஒன்று இருந்தது. அதான் தோனி களமிறங்கிய தருணம். ஆரோன் பின்ச் ட்விட்டர் பதிவில் “நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால், தோனி மைதானத்தில் பேட் செய்ய களமிறங்கும்போது அந்தத் தருணத்தை ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டும்,” எனத் தெரிவித்திருந்தார்.

தோனியின் வருகைக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை விவரிக்க இதைவிட வார்த்தைகள் இல்லை…

ஒருதரப்பான ஆட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 49வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 139 ரன்கள் இலக்கை, சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 14 பந்துகள் மீதம் இருக்கையில் அடைந்து வென்றது.

இரு பெரிய அணிகள் மோதும் போட்டி என்பதால், ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் புஸ்வானமாகி, போட்டியே ஒருதரப்பாக அமைந்துவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டிம் டேவிட், கேமரூன் ஆகியோர் ஏமாற்றத்தை அளித்ததால், மோசமான தோல்வியை அந்த அணி சந்தித்தது.

சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்விகள் என 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு இந்த வெற்றியின் மூலம் முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தொடர்கிறது.

பந்துவீச்சாளர்களின் வெற்றி

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களான தீபக் சஹர், தேஷ்பாண்டே, பதிரண ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த முக்கியக் காரணமாக இருந்தன.

இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

தோனிக்காக… அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்

சென்னை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த சம்பவமும் இன்று நடந்தது. சிஎஸ்கே கேப்டன் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி, வெற்றிக்கான கடைசி ஒரு ரன்னை அடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்.

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களமிறங்கியபோது, அரங்கமே அதிரும் வகையில், விசில் சத்தமும், இசை முழக்கமும், ரசிகர்களின் கரகோஷமும், தோனி, தோனி என்ற கோஷமும் காதைப் பிளந்தன.

ரசிகர்களின் அன்பில் நனைந்தவாரே சிஎஸ்கே கேப்டன் தோனி களம் புகுந்தார். பல மணிநேரம் காத்திருந்து டிக்கெட் பெற்று இந்தத் தருணத்தைக் காணவே ரசிகர்கள் வந்திருந்தார்கள், அவர்களின் ஆசையை தோனியும் நிறைவேற்றினார்.

தோனி களமிறங்கும்போது சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. தோனியின் மாயஜால பேட்டிலிருந்து சிக்ஸர் வரும் என ரசிகர்கள் காத்திருந்தது மட்டும்தான் ஏமாற்றமாகிப் போனது. மற்ற வகையில் தோனியின் ஆட்டத்தை கொடுத்த காசுக்கு ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

சொதப்பல் பேட்டிங்

“ஹை-பிரஷர்” ஆட்டம் என்பதால் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் புதிய உத்திகளுடன் களம் கண்டன. பவர்ப்ளேயில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி, நெருக்கடியில் தள்ளினாலே ஏறக்குறைய ஆட்டம் கைக்குள் வந்துவிடும் என்ற திட்டத்துடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது.

அதற்கு ஏற்றாற்போல், தீபக் சஹர், தேஷ் பாண்டே இருவரும் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தனர். தேஷ் பாண்டே வீசிய முதல் ஓவரில் கேமரூன் க்ரீன்(6) போல்டானார். தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் இஷான் கிஷன்(7) மிட்-ஆனில் தீக்சனாவிடம் கேட்ச் ஆனார்.

அதே ஓவரின் 5வது பந்தில் கேப்டன் ரோஹித் சர்மா டக்அவுட்டில் சஹர் பந்தில் வெளியேற மும்பை அணி பெரிய நெருக்கடியில் விழுந்தது, சிஎஸ்கே திட்டமும் வெற்றிகரமாக நடந்தது. 14 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. பவர்ப்ளேவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். ஆனால் சூர்யகுமாரின் முயற்சியை ரவீந்திர ஜடேஜா தகர்த்தார். ஜடேஜா வீசிய 11வது ஓவரில் க்ளீன் போல்டாகி சூர்யகுமார் 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சூர்யகுமார்-நேஹல் இருவரும் சேர்ந்து 55 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்தான் மும்பை அணியில் அதிகபட்சம்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்களை ரன் அடிக்கவிடாமல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால், ரன்ரேட் உயரவே இல்லை.

5வது விக்கெட்டுக்கு வதேரா, ஸ்டப்ஸ் கூட்டணி விக்கெட்டை இழக்கக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர். 15 ஓவரில்தான் மும்பை அணி 100 ரன்களை எட்டியது.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

ஆபத்பாந்தவன் வதேரா

மும்பை அணி இந்த சீசனில் எப்போதெல்லாம் இக்கட்டான நேரத்தில் சிக்கிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் நேஹல் வதேரா கைகொடுத்துள்ளார். 22 வயதான நேஹல் வதேரா ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் அறிமுகமாகி மும்பையின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய வதேரா 44 பந்துகளில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

மும்பை அணியை நிமரச் செய்த வதேரா 64 ரன்னில் பதிரண பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸுடன் சேர்ந்து 54 ரன்கள் சேர்த்தார். இதன்பின் மும்பை அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.

123 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 16 ரன்களை சேர்ப்பதற்குள் அடுத்த 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. மும்பை இந்தியன்ஸ் கடைசி வரிசை பேட்டிங் சரிவுக்கு பதிரண காரணமாக அமைந்தார்.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

பதிரண வேகம், சஹரின் ஃபார்ம்

சிஎஸ்கே கேப்டன் தோனியின் செல்லப்பிள்ளை பதிரணவின் பந்துவீச்சு மும்பை அணிக்கு சிம்மசொப்னமாக இருந்தது. அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஏற்கெனவே விக்கெட்டுகளை இழந்து தவித்த மும்பைக்கு, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போன்று பதிரண பந்துவீச்சு அமைந்தது.

பதிரண 13வது ஓவரில் 5 ரன்களும், 15வது ஓவர் வீசி 7 ரன்களும், 18வது ஓவர் வீசி 2 ரன்களும் ஒரு விக்கெட்டையும், 20வது ஓவரை வீசி 5 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

பதிரண தனது டெத் ஓவர்களில் ஒரு பவுண்டரிகூட மும்பை அணி பேட்ஸ்மேன்களை அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி 17 ரன்களை சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

தீபக் சஹர் காயத்திலிருந்து திரும்பி தனது இயல்பான பந்துவீச்சை இன்று வெளிப்படுத்தினார். 3 ஓவர்கள் வீசிய சஹர் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ரன்களை வாரி வழங்கும் தேஷ்பாண்டே இந்த முறை 26 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

ரோஹித் சர்மா டக்அவுட் சாதனை

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் மட்டுமல்ல, டக்அவுட் ஆவது இந்த ஆட்டத்திலும் தொடர்கிறது. கடந்த 2020 சீசனுக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் ஐபிஎல் சராசரி 30 ரன்களை தாண்டவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை ரோஹித் சர்மா டக்அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில் ரோஹித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.

சுனில் கவாஸ்கர் முன்பு அளித்த ஆலோசனையின்படி, “ சில போட்டிகளுக்கு ரோஹித் சர்மா விளையாடாமல் ஓய்வு எடுத்து, முக்கிய ஆட்டங்களில் மட்டும் ஆடலாம். மோசமான ஃபார்ம் அவரின் நம்பிக்கையைக் குலைத்துவிடும்,” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் மோசமான ஃபார்ம் காரணமாக ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்காமல், 3வது வீரராகக் களமிறங்கினார். ஆனால், 3வது வீரருக்கும், தொடக்க வீரருக்கும் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் ரோஹித் சர்மா இந்த முயற்சியைச் செய்திருக்கத் தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா வித்தியாசமாக ஷாட்களை ஆடுவார் என்பதால், அவருக்கு தோனி ஸ்டெம்ப் அருகே விக்கெட் கீப்பிங் செய்ததும், அதற்கு ஏற்றாற்போல், ரோஹித் சர்மா ஸ்கூப் ஷாட் அடிக்க முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதுபோன்ற ஸ்கூப் ஷாட்கள், ஸ்விட்ச் ஹிட் போன்றவற்றை ஃபார்மில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும்போதுதான் ஷாட் கிளிக் ஆகும். ஆனால் ரோஹித் சர்மா ரன் அடிக்கவே திணறும்போது, இதுபோன்ற ஷாட்களைத் தவிர்த்து விக்கெட்டை காப்பாற்றி இருக்கலாம்.

“காரணத்தைத் தேடுகிறேன்”

தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “எங்கு தவறு நடந்தது என அனைத்து இடங்களிலும் தேடுகிறேன். பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. திலக்வர்மா இல்லாததை இப்போது உணர்கிறோம்.

நடுவரிசை ஓவர்களில் விளையாடுவதற்கு நல்ல பேட்ஸ்மேன்கள் தேவை, ஆனால், பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்துவிட்டோம். பியூஷ் சாவ்லா சிறப்பாகப் பந்துவீசினார்.

இந்தத் தோல்வியில் இருந்து ஏராளமான பாடங்களைக் கற்போம், அடுத்தடுத்து முன்நோக்கிச் செல்வோம். தரமான கிரிக்கெட்டை விளையாடுவது அவசியம். அடுத்து வரும் மும்பையில் நடக்கும் 2 ஆட்டங்களும் முக்கியமானவை,” எனத் தெரிவித்தார்.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

பேட்ஸ்மேன்களின் தோல்வி

அது மட்டுமல்லாமல் முக்கிய பேட்ஸ்மேன்கள் டேவிட், சூர்யகுமார், கேமரூன், இஷான் ஆகியோர் ஏமாற்றம் அளித்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம்.

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதற்கு இந்த 4 பேட்ஸ்மேன்களும் முக்கியக் காரணம். இவர்களின் ஏமாற்றமான பேட்டிங், இயல்பாகவே தோல்வியில் தள்ளியது.

சிஎஸ்கே போன்ற வலிமையான அணிக்கு எதிராக இதுபோன்ற குறைந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்வது நடக்காத செயல். இந்த ஸ்கோரை மும்பை இந்தியன்ஸ் சேர்த்தபோதே, அவர்களின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்பதுதான் நிதர்சனம். மும்பை அணி இதற்கு முன் நடந்த ஆட்டங்களில் பெற்ற வெற்றி பெரும்பாலும் பந்துவீச்சாளர்களை நம்பிப் பெறவில்லை, பேட்ஸ்மேன்களை நம்பித்தான் பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி மும்பை இந்தியன்ஸ் தோல்வியல்ல, பேட்ஸ்மேன்கள் தோல்வி.

டி20 போட்டியில் கடைசி 4 ஓவர்கள்தான் ரன் சேர்க்கும் பரபரப்பான ஓவர்களாகும். ஆனால், அந்த டெத் ஓவர்களில் அடித்து ஆடுவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாததால் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை.

நடுவரிசை பலமாக வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி, கீழ்வரிசையில் திலக் வர்மா போன்றோர் இல்லாத குறையை உணர்ந்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 17 ரன்களைச் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

ஒரே ஆறுதல் சாவ்லா

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் பியூஷ் சாவ்லாவின் பந்துவீச்சு மட்டும்தான்.

“வாங்கிப்போடுங்க, பாத்துக்கலாம்” என ரூ.50 லட்சத்துக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பியூஷ் சாவ்லா, ஒவ்வொரு போட்டியிலும் தனது அனுபவத்தை காண்பிக்கிறார்.

இந்த சீசனில் இதுவரை 17 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பந்துவீச்சை நிரூபித்துள்ளார். இந்த போட்டியிலும், தனது முதல் பந்திலேயே கெய்க்வாட் வி்க்கெட்டை சாவ்லா வீழ்த்தி, 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிஎஸ்கேவுக்கு எளிதான இலக்கு

சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் கெய்க்வாட், கான்வே 140 ரன்கள் இலக்கை வேகமாகத் துரத்தினர். 4 ஓவர்களிலேயே சிஎஸ்கே 44 ரன்கள் சேர்த்தது. இதில் கான்வே நிதானமாக ஆட, கெய்க்வாட் 2 சிக்ஸர், 4 பவுண்டரி என 30 ரன்கள் சேர்த்தார்.

ஆனால், சாவ்லாவின் அனுபவத்தைக் குறைத்து மதிப்பிட்ட கெய்க்வாட்(30) அவரின் பந்தை புல்ஷாட் அடிக்க முற்பட்டு பேட்டின் முனையில் பட்டு இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனது. கெய்க்வாட் ஆட்டமிழந்தாலும் ஏற்கெனவே வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துவிட்டுச் சென்றார்.

ரஹானே(21) ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியன் திரும்பினார். அம்பதி ராயுடு(12) பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைத்தும் தேவையற்ற ஷாட்டால் ஸ்டப்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை கோட்டைவிட்டார்.

கான்வே, துபே இருவரும் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அருகே நகர்த்தினர். அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் ஷிவம் துபே, 3 சிக்ஸர்களை விளாசினார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த, கான்வே(44), ரன்னில் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. சிஎஸ்கே கேப்டன் தோனி, ரசிகர்களின் கரகோஷம், உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி 2 ரன்கள் சேர்த்து அணிக்கான வின்னிங் ஷாட்டை அடித்தார். துபே 26 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

IPL: CSK vs MI

பட மூலாதாரம், BCCI/IPL

“பதிரானா அந்தப் பக்கம் போகாதிங்க”

வெற்றிக் கேப்டன் தோனி கூறுகையில் “10 புள்ளிகளுடன் பல அணிகள் டிராபிக் ஜாமில் இருந்ததால், இது முக்கியமான ஆட்டமாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு வசதியான நிலையை ஏற்படுத்தி, அடுத்த இடத்துக்குச் செல்ல உதவும்.

காலநிலையைப் பார்த்து நான் முதலில் பேட்டிங் செய்யத் தயங்கினேன், ஆனால், நான் எடுத்த முடிவுக்கு ஏற்றாற்போல் நாங்கள் செயல்பட்டோம். பதிரனா சிறப்பாகப் பந்து வீசுகிறார்.

அவரைப் பற்றிக் கூறுவது என்னவென்றால், பதிரனா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடக்கூடாது, அதற்கு அருகே கூட செல்லக்கூடாது. ஒருநாள் போட்டிகளிலும் குறைவாக ஆடி, ஐசிசி போட்டிகளில் மட்டும் பதிரனா கவனம் செலுத்த வேண்டும்.

பதிரனாவால் இலங்கை அணிக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. கடந்த முறை பதிரனா என்னைச் சந்தித்தபோது ஒல்லியாக இருந்தார், இந்த முறை வலுவாக இருக்கிறார்,” எனத் தெரிவித்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: