`எங்களுக்கு காதல்தான் முக்கியம் மதம் அல்ல` - இந்து முஸ்லிம் தன்பாலின பெண்களின் கதை

தன்பாலின ஈர்ப்பாளர்கள்
    • எழுதியவர், சுஷீலா சிங்
    • பதவி, பி பி சி நிருபர்

"அவள் ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், ஆனால் அது எங்களுக்கு ஒரு பொருட்டில்லை. எங்களிடையிலான அன்பும் அதற்காக எந்த எதிர்ப்பையும் இணைந்து எதிர்கொள்வோம் என்பதும் மட்டும் உறுதி. எங்களின் மதங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை”

இது மாலதியும் ருபீனாவும் சொல்லும் வார்த்தைகள். (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன.)

மாலதியும் ருபீனாவும் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களின் காதல் கதை, அவர்கள் சந்தித்துக்கொண்ட பள்ளியில் தொடங்கியது.

இருவரும் 11வது படிக்கும்போது ருபீனா மிகவும் அமைதியாக இருப்பதை மாலதி கண்டார்.

மாலதி, “எனக்கு எப்போதுமே பெண்களைப் பிடிக்கும், ஆனால் அது குறிப்பிட்ட பெண் என எனக்குத் தெரியவில்லை. நான் தான் முதலில் ருபீனாவை அணுகினேன். நான் அவளை விரும்பினேன். எங்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது ஆழமாகத் தொடங்கியது. ருபீனா அமைதியாக இருந்தாள். அது ஏன் என்று நான் அவளிடம் கேட்டேன். மெதுவாக அவள் தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினாள்,” என்கிறார்.

இதற்கிடையில் தனக்கு ஓர் இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவன் தன்னை உறவு கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் ருபீனா கூறுகிறார்.

அதற்கு ருபீனா மறுத்துவிட்டதால் அந்தப் பழக்கம் முறிந்தது. ஆனால் அவரது குடும்பத்திற்கு அந்த இளைஞனுடனான ருபீனாவின் நட்பு குறித்த தகவல் கிடைத்தது.

இதற்குப் பிறகு, துன்பம் மேலிட, ருபீனா கூறுகிறார், "என்னை மிகவும் கிண்டல் செய்து, திட்டி, அடித்தார்கள். பட்டினி போட்டார்கள். அந்த நேரத்தில்தான் என் வாழ்வில் மாலதி வந்தாள், என் வாழ்க்கையில் முதல்முறையாக, என் அடிமன வலிகளை அறிய விரும்பிய ஒரு பெண்ணைச் சந்தித்தேன். பேச ஆரம்பித்தேன், நட்பு மெல்ல, காதல் ஆனது.”

23 வயதான ருபீனா பிஏ (வரலாறு ஹானர்ஸ்) மற்றும் 22 வயதான மாலதி பிஏ (வங்காளம்) படித்து வருகின்றனர்.

மாலதி என்சிசி கேடட்டாக இருந்து காவல்துறையில் சேரத் தயாராகி வருகிறார், ருபீனா ஆசிரியப் பணியில் சேர முயன்று வருகிறார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், SOPA IMAGES

நட்பு காதலானது

மாலதிக்கு முதல் பார்வையிலேயே ருபீனா மீது காதல் ஏற்பட்டது.

ரூபினா மெல்ல தன் இதயத்தைத் திறந்து தன் வலியைப் பகிர்ந்து கொண்டார்.

`மாலதி தன் மீது அக்கறை காட்டுகிறாள், தன் இதயத்திலிருந்து தன் சோகத்தை அகற்ற விரும்புகிறாள், பொறுமையுடன் அவள் சொல்வதைக் கேட்கிறாள்` என்று ருபீனா உறுதியாக நம்பினார்.

இருவரும் பள்ளியில் அதிகம் பேசுவதுடன், ஒருவரது வீட்டிற்கு மற்றவர் செல்ல ஆரம்பித்தனர். சந்திப்புகளால் தூரம் குறைய ஆரம்பித்து நட்பு காதலாக மாறியது.

ருபீனா கூறும்போது, “முதலில் எனது குடும்பத்தினர் மாலதி எனக்கு வேறு ஒரு பையனுடன் பேசவும், சந்திக்கவும் உதவுகிறார் என்று நினைத்தார்கள், ஆனால் பின்னர் நானும் மாலதியும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பது அவர்களுக்குத் தெரிய வந்தது” என்றார்.

"எங்களுக்குள் ஏதோ இருக்கிறது என்று அவர்கள் உணர ஆரம்பித்தார்கள், அதன் பிறகு எனக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். மீண்டும் பட்டினி. திருமணத்தின் அழுத்தமும் தொடங்கியது. நம் சமூகத்தில், பொதுவாகவே, ஒரு பெண்ணுக்கு 21 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.”

“என் தந்தை என்னைத் திருமணத்திற்கு வற்புறுத்தவில்லை, ஆனால் அவர் என்னை அடித்தார். என் அம்மா என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் சித்திரவதை செய்தார். இது மட்டுமின்றி, என் தாய்வழி தாத்தாவின் குடும்பத்தில் இருந்தும் துன்புறுத்தல், வன்முறை, கேலி பேசுதல் போன்ற செயல்கள் அரங்கேறி வந்தன.”

“எங்கள் இருவருக்கும் இடையில் என்ன உறவு என்று என்னிடம் கேட்டார்கள். அப்படி உண்மையைக் கூறிவிட்டால், எங்கள் இருவரையும் ஒன்றாக வாழ வைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அவர்களிடம் வெளிப்படையாகச் சொன்னால் என் பெற்றோர் என்னை அனுப்பிவிடுவார்கள் என்பது புரிந்தது.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் எங்களைப் போன்றவர்களின் கதைகளைப் பார்த்து, நாமும் நம் விருப்பப்படி வாழ்வோம் என்று முடிவு செய்தோம். ஆனால் கிராமத்தில் இப்படி வாழ முடியாது, கிராமத்தில் தலைமறைவாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருக்கும்”

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தன்பாலின உறவை குற்றப் பிரிவில் இருந்து நீக்கியது.

தனிபாலின திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை ஏப்ரல் 18 அன்று தொடங்கியது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

தனது பிரமாணப் பத்திரத்தில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தோர் செய்துகொள்ளும் திருமணத்தை அங்கீகரிக்கும் மனுவை மத்திய அரசு எதிர்த்துள்ளது.

தனி நபர் சட்டத்திற்குள் செல்லாமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் தன்பாலின சமூகத்தினருக்கு உரிமை வழங்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

அதே நேரம், உரிமைகள், சிக்கல்கள் மற்றும் சமூக பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை நாடாளுமன்றத்திடமே விட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

LGBTQIA+ தம்பதிகள் சந்திக்கும் சிரமங்களை ஆராய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று மே 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

வீட்டை விட்டு வெளியேறும் திட்டம்

தனது கதையைத் தொடர்ந்து கூறிய மாலதி, கிராமத்தைவிட்டு நகரத்திற்கு ஓடிவிட முடிவு செய்ததாகவும், வேலைக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்படும் என்று தெரிந்ததால் அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார்.

“2021ஆம் ஆண்டில் நாங்கள் உதவித்தொகை பணத்தை சேகரிக்கத் தொடங்கினோம். ஒரு திருநம்பியிடம் உதவி கோரினோம். அவர், Safe for Equality என்ற அமைப்புடன் எங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அங்கு எங்களுக்கு உதவிக்கான உத்தரவாதம் கிடைத்தது, இதனால் நாங்கள் கொல்கத்தாவுக்குச் செல்வதற்கு வழி கிடைத்தது.”

சேஃபோ ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பு LGBTQI+ சமூகத்தின் உரிமைகளுக்காகச் செயல்படுகிறது.

இப்போது மாலதியும் ருபீனாவும் இந்த அமைப்பின் தங்குமிடத்தில் இருந்து கொண்டு, தங்களுடைய எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றி வருகின்றனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், NURPHOTO

வீட்டு நினைவு

"உங்களுக்கு வீட்டு நினைவு வரவில்லையா? பெற்றோர் குறித்த கவலை இல்லையா?" என்ற கேள்விக்கு மாலதி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கிராமத்தை விட்டுத் தாங்கள் வெளியேறிய பிறகு ருபீனாவின் குடும்ப உறுப்பினர்கள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறுகிறார்.

மாலதி தழுதழுத்த குரலில், “என் அம்மா, எங்களின் இந்த உறவுக்கு ஒப்புக் கொள்ளலாம், ஆனால் எனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் என் அம்மாவை இதற்காகத் துன்புறுத்துவார்கள். ருபீனாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தால்தான் திரும்பி வரவேண்டும், இல்லையேல் ரூபினாவை நான் கடத்திச் சென்றதாகக் குற்றச்சாட்டுகள் வந்து இரு சமூகத்தினருக்கு இடையிலான பிரச்னையாகிவிடும் என அம்மா கூறியுள்ளார்,” என்கிறார்.

“எனது வீட்டுச் சாப்பாட்டிற்காக நான் ஏங்குகிறேன். என் அம்மா மற்றும் குடும்பத்துடன் ஜாலியாக இருப்பதை மிஸ் செய்கிறேன். பல நேரங்களில் அவர்களின் முகங்கள் என் கண் முன்னே தோன்றி மறைகின்றன. ஆனால் ருபீனா இல்லாமல் நான் வீட்டிற்குச் செல்ல மாட்டேன்,” என்று உறுதியாகக் கூறுகிறார் மாலதி.

இந்த உறவைத் தனது குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று மாலதி கூறுகிறார்.

“நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்று நான் சொன்னபோது, ஏன் ஒன்றாக வாழ வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர். அவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. எங்களாலும் புரிய வைக்க முடியாது.

ருபீனா, “என் தந்தையுடனான எனது உறவு நன்றாக இல்லை. ஆனால் நான் அவருக்கு மூத்த மகள், அவர் வெளியில் இருந்து வரும்போதெல்லாம், அவர் முதலில் என் முகத்தைத் தான் பார்ப்பார். அவர் என்னை அடித்தாலும் என்னை நேசித்தார்,” என்றார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

"நான் இப்போது பழைய சிம் கார்டை தூக்கிப் போட்டுவிட்டு புது சிம் பயன்படுத்துகிறேன். ஆனால் என் பழைய எண்ணுக்குத் தொடர்பு கொள்ள என் தந்தை முயல்வதாகவும் தொழுகையின்போது அழுவதாகவும் இன்ஸ்டாகிராமில் என் சகோதரி தெரிவித்தாள். நானும் அழுகிறேன்.’

தற்போது, தன்பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மாலதியும் ருபீனாவும், இந்தச் சமூக மக்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றால், அது மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினரின் சம்மதம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மாலதி கூறுகையில், “எங்கள் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வர வேண்டும். நிச்சயமாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம் ஆனால் அவர்களுடைய சம்மதம் இல்லாமல் எப்படிச் செய்வது?

இதற்குப் பதிலளித்த ருபீனா, மாலதியின் குடும்பத்தினர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும், காதலைவிட மதம் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் அழுத்தமாக கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: