சர்வதேச விண்வெளி நிலையம் 29000 கி.மீ. வேகத்தில் விழுந்து நொறுங்கப் போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜொனாதன் ஓ கேலகன்
- பதவி, பிபிசி
விண்வெளி ஆய்வில் ஓர் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்,( International Space Station) இன்னும் எட்டு ஆண்டுகளில் (2031 இல்) தமது ஆயுட்காலத்தை முடித்துகொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. நாசாவின் இந்த அறிவிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
1998 இல் தொடங்கிய பயணம்
அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் Roscosmos, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA- Europe),, ஜப்பானின் JAXA மற்றும் கனடிய விண்வெளி நிலையம் (CSA- Canada) ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, 1998 இல் சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிர்மாணம் தொடங்கப்பட்டது. ஒற்றை தொகுதியாக (Single Module) ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம், பின்னர் சோலார் பேனல்கள், வெப்பத்தை வெளியேற்றும் ரேடார்கள் என 16 தொகுதிகளுடன் பிரம்மாண்டமாக உருவெடுத்தது.
109 மீட்டர் நீளத்தில் (356 அடி) ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியதாகவும், 200 யானைகளுக்கும் மேலான எடை கொண்டதாகவும் (400 டன்) விளங்கும் சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைகோள்களிலேயே மிகவும் பெரியது என்ற பெருமையை பெற்றுள்ளது.
250 விண்வெளி வீரர்கள்
பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது.
“2000 நவம்பர் மாதத்தில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வருகை தந்ததில் இருந்து இதுநாள்வரை மொத்தம் 20 நாடுகளை சேர்ந்த 250 -க்கும் மேற்பட்ட வீரர்கள், இங்கு வருகை தந்துள்ளனர்.
இயற்பியல், உயிரியல், வானிலை, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி முகமையின் தலைவர் ஜோசப் ஆஷ்பேச்சர்.
சோவித் யூனியன் பிரிந்த பின்னர், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு இந்த விண்வெளி நிலையம் ஆகச்சிறந்த அடையாளமாக திகழ்கிறது எனக் கூறும் நாசாவின் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவரான தாமஸ் சுர்புசென், இது உண்மையில் சர்வதேச அளவிலான மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும்” என்று பூரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி நிலையத்துக்கு வந்த சோதனை
அமெரிக்காவின் ஸ்கைலேப், ரஷ்யாவின் சல்யுட் 7 ஆகிய விண்வெளி நிலையங்களை ஒப்பிடும்போது, சர்வதேச விண்வெளி நிலையம் மிகவும் பிரம்மாண்டமானதாக திகழ்ந்து வருகிறது.
விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படும் ISS க்கு தற்போது சோதனை காலம் தொடங்கி உள்ளது. ஆம்… இது தமது நீண்ட பயணத்தின் இறுதி கட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
என்ன காரணம்?
சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கிய கூறுகளாக உள்ள பவ்வேறு வன்பொருட்கள் ( Hardwares) பல ஆண்டுகள் பழமையானவை உள்ளன. இதன் காரணமாக ISS தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அது தமது கட்டுப்பாட்டை இழந்து, புவிவட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலகி செல்லும் அபாயம் இருக்கிறது.
இதன் விளைவாக ஒட்டுமொத்த விண்வெளிக்கே ஆபத்து நேரிடலாம் என்பதால், 2030 க்கு பிறகும் ISS இன் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து யோசிப்பது நல்லதல்ல என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
தங்களது இந்த எச்சரிக்கையை மீறி விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டால், அது ஸ்கைலேப், சல்யுட் 7 ஆகிய விண்வெளி நிலையங்கள் கட்டுப்பாடற்று சிதைந்ததால் ஏற்பட்ட எதிர்விளைவுகளை சந்தித்தை போன்று மற்றொருமுறை பூமி சந்திக்க நேரிடும் என்கின்றனர் அவர்கள்.
விண்வெளி அறிஞர்களின் இந்த அச்சத்தை கருத்தில் கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையம் குறித்த அதிரச்சி தகவல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2024 வரை நீட்டிக்கப்படுவதாக, அமெரிக்க அரசு 2021 டிசம்பரில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக,‘ 2024 பின் இதனை செயலிழக்க ( de-orbit) செய்யும் பணிகள் தொடக்கும் என்றும், இந்தப் பணி தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு 2031 ஜனவரியில், நியூசிலாந்துக்கும் ,தென்அமெரிக்காவுககும் இடையே, தெற்கு பசிபிக் பெருங்கடலில் மனிதர்களே இல்லாத ‘பாயிண்ட நெமோ’ பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விழச் செய்து அதனை செயலிழக்க செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது’ என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
விஞ்ஞானிகளின் திட்டம் என்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்தை செயலிழக்கச் செய்யும் பணிகள் 2026 இல் தொடங்கும் என்று கூறும் நாசா விஞ்ஞானிகள், இதன் முதல்கட்டமாக, ISS இன் சுற்றுப்பாதையானது வளிமண்டல இழுவையின்கீழ் தானாக சிதைவதற்கு அனுமதிக்கப்படும் என்கின்றனர்.
இதன் அடுத்தக்கட்டமாக, 2030 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரம் என்ற விண்வெளி நிலையத்தின் தூரத்தை 320 கிலோமீட்டராக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும் இந்த காலக்கட்டத்தில் விண்வெளி வீரர்களை கொண்ட ஒரு குழுவை நிலையத்துக்குள் அனுமதிக்கவும், அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அகற்றப்படாத பொருட்கள் குறித்து அந்த குழுவைக் கொண்டு உறுதிச் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
விண்வெளி நிலையத்தின் எடையை குறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் குழு நிலையத்தை விட்டு வெளியேறிவிடும்.
அதன் பிறகு நிலையத்தின் உயரம் 280 கிலோமீட்டராக குறைக்கப்படும். அதன் பின்னர் பிரத்யேக விண்கலத்தின் உதவியுடன் நிலையத்தின் தூரத்தை 120 கிலோமீட்டராக குறைக்கும் வகையில் இறுதி உந்துதல் அளிக்கப்படும்.
இந்த முயற்சிகள் திட்டமிட்டப்படி வெற்றியடையும்பட்சத்தில், பூமியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவை சர்வதேச விண்வெளி நிலையம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவை அடைந்தால், அப்போது புவி வளிமண்டலத்தை அது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதிபயங்கர வேகத்தில் தாக்கும். இதன் விளைவாக சோலார் பேனல்கள், ரேடார்கள் உள்ளிட்ட நிலையத்தின் முக்கிய கட்டமைப்புகள் தனியே பெயர்ந்து விழும் என்றும், அவற்றின் பெரும்பகுதி பூமியின் வெப்பத்தில் உருகிவிடவும் செய்யும் எனவும் விண்வெளி ஆராய்ச்சியாளரான மெக் டோவல் கூறுகிறார்.
ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தை விட (140 டன் எடை), சர்வதேச விண்வெளி நிலையத்தின் எடை கிட்டத்தட்ட மூன்று மடங்கு (400 டன்) அதிகம் என்பதால், இது செயலிழக்க செய்யப்படும்போது 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் அந்த சம்பவம், விண்வெளியின் அற்புத நிகழ்வாக இருக்கும் என்கிறார் அவர்.
விஞ்ஞானிகள் விருப்பம்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலத்தை மீண்டும், மீண்டும் நீட்டிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை நாசா கருத்தில் கொண்டிருந்தாலும், ISSயை செயலிழக்க (டிஆர்பிட்) செய்வது குறித்த வருத்தமும் சில ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கதான் செய்கிறது.
சோலார் பேனல்கள், வெப்பத்தை வெளியேற்றும் ரேடார் என பல மதிப்புமிக்க உபகரணங்களை சர்வதேச விண்வெளி நிலையம் தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கூறும் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி கொள்கை நிபுணரான ஜான் க்ளீன், இவையாவும் அதிக பொருட்செலவில் விண்வெளிக்கு கொண்ட செல்லப்பட்டவை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, விண்வெளி நிலையத்தை கடலில் முழ்கடிக்க செய்வதற்கு முன், அதிலுள்ள உபகரணங்களில் நம்மால் முடிந்ததை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
சர்வதேச விண்வெளி நிலையம் குறித்த ஜான் க்ளீன் போன்றோரின் விருப்பத்தில் உள்ள நியாயத்தை புரிந்து, அமெரிக்காவில் உள்ள CisLunar Industries மற்றும் Astroscale உள்ளிட்ட நிறுவனங்களின் குழு, அமெரிக்க அரசுக்கு இதுதொடர்பான யோசனைகளை சில மாதங்களுக்கு முன் வழங்கி உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களை தனியாக பிரித்தோ அல்லது அவற்றை உருக்கியோ, புதிய விண்வெளி நிலையத்தின் உருவாக்குதலுக்கு பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த குழு முன்வைத்துள்ள யோசனைகளில் முக்கியமானது.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற புதிய யோசனைகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்த நாசா செய்தித் தொடர்பாளர், ஆனால் விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு பகுதிகளை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஸ்கைலேப், சல்யூட் 7 இல் நிகழ்ந்தது என்ன?
அமெரிக்க விண்வெளி நிலையமான ‘ஸ்கைலேப்’ பூமியை 34,981 முறை வெற்றிகரமாக சுற்றி முடித்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் விளைவாக 1979 ஜுலை 11 தேதி அன்று தமது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, பூமியின் வளிமண்டலத்துக்குள் இழுக்கப்பட்டு சிதைந்து உருகுலைந்தது.
பிரம்மாண்டமான ஸ்கைலேப் நிலையத்தின் உள்கட்டமைப்பு பாகங்கள் ஆப்பிரிக்காவின் தென்பகுதியிலும், இந்திய பெருங்கடலிலும் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிதைந்த விண்வெளி நிலையத்தின் பல்வேறு பாகங்களின் குறிப்பிட்ட பகுதிகள், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள தென்மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் , விண்வெளி கழிவுகளாக விழுந்தன. 1000 கிலோமீட்டர் அளவிலான பரந்த நிலப்பரப்பில் 200 கிலோமீட்டர் அகலத்துக்கு இந்த விண்வெளி கழிவுகள் பரவிக் கிடந்தன.
இதேபோன்று, 1994 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் சல்யுட் 7 விண்வெளி நிலையம், எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சில தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக, 1991 பிப்ரவரி 7 ஆம் தேதியே தமது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக சிதைந்த நிலையத்தின் கட்டமைப்புகள், அர்ஜென்டினாவின் மலைப்பகுதிகளில் குப்பை குவியலாக விழுந்து கிடந்தன என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஸ்கைலேப், சல்யுட் 7 ஆகியவற்றைவிட கட்டமைப்பில் மிகப்பெரியதான சர்வதேச விண்வெளி நிலையம், தனது கட்டுப்பாட்டை இழந்து, தானாக செயலிழக்க நேரிட்டால், அதனால் உண்டாகும் விண்வெளி கழிவுகள் 6,000 கிலோமீட்டர்கள் நீளம் வரை பரவி கிடக்கும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அதனை கவனமாக, பசிபிக் பெருங்கடலில் விழும்படி செயலிழக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை நாம் அனைவரும் உணர வேண்டும் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












