பாகிஸ்தானின் 100 வருட பாம்பே பேக்கரி: இந்து குடும்பத்தின் வெற்றிகர தொழில் ரகசியம் என்ன?

பாகிஸ்தான் பாம்பே பேக்கரி
    • எழுதியவர், ரியாஸ் சோஹைல்
    • பதவி, பிபிசி செய்தியாளர், ஹைதராபாத் (சிந்து)

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் சதர் பகுதியில் அமைந்துள்ள சிவப்பு நிற கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

மரச்சட்டத்தால் செய்யப்பட்ட கதவு திறந்ததும், வரிசையில் நின்றவர்களில் ஒருவர் அறையின் உள்ளே செல்கிறார். அறைக்கு உள்ளே இன்னும் மக்கள் வரிசைகள் உள்ளன. ஒரு பக்கத்தில் பணம் செலுத்தப்படுகிறது. மறுபுறம் டோக்கனை கொடுத்து மக்கள் கேக் வாங்கிச்செல்கின்றனர்.

இங்கே எல்லோரும் தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள். பின்னர் ஒன்று அல்லது இரண்டு கேக் பெட்டிகளைச் சுமந்துகொண்டு முகத்தில் வெற்றிகரமான புன்னகையுடன் வெளியே வருகிறார்கள்.

இந்தக் கட்டடத்திற்கு வெளியே 'பாம்பே பேக்கரி' என்று எழுதப்பட்டு, அது நிறுவப்பட்ட ஆண்டு - 1911 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கரி மற்றும் அதனுடன் தொடர்புடைய வீட்டின் கதை சுமார் 125 ஆண்டுகள் பழமையானது.

பங்களாவில் நிறுவப்பட்ட மும்பை பேக்கரி

ஃபலாஜ் ராய் கங்காராம் ததானி 1911 இல் ஹைதராபாத்தில் உள்ள சதர் பகுதியில் பாம்பே பேக்கரியை நிறுவினார். ஒரு பங்களாவில் நிறுவப்பட்ட இந்த பேக்கரியில் தங்கும் வசதியும் செய்யப்பட்டது. ஃபலாஜ் ராய் தனது மூன்று மகன்களான ஷியாம் தாஸ், கிஷன் சந்த் மற்றும் கோபி சந்த் ஆகியோருடன் இங்கு வசித்து வந்தார்.

பாம்பே பேக்கரியில் சாக்லேட் அடிப்படையிலான ரொட்டிகள், பிஸ்கட்கள் மற்றும் கேக்குகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் சுத்தமான பொருட்கள் சேர்க்கப்பட்டன.

ஃபலாஜ் ராய் 1948 இல் காலமானார். அதன் பிறகு அவரது மகன் கிஷன் சந்த், கேக் மற்றும் பிஸ்கட் சுவையை மேம்படுத்தினார். அதே நேரத்தில் 1960 இல் கிஷன் சந்த் இறந்த பிறகு, அவரது மகன் குமார் தனது சித்தப்பாவுடன் குடும்ப வியாபாரத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவர் 2010 ஜூன் மாதம் ஹைதராபாத்தில் காலமானார்.

'டான்' ஆங்கில நாளிதழ் குமார் ததானியின் மரணச் செய்தியில், ’குமாரின் தாத்தா அதாவது பேக்கரியை நிறுவிய ஃபலாஜ் ராய் தனது வீட்டில் பேக்கரி பொருட்கள் செய்யும் சுவிஸ் பெண்ணை மணந்தார்’ என்று எழுதியிருந்தது. அவர் பிரபலமடைந்த பிறகு, பேக்கரி தொழிலைத் தொடங்கினார்.

குல்ஹோரா ஆட்சியாளர்கள் ஹைதராபாத்தை தலைநகராக ஆக்கிக்கொண்டபோது தாதானி குடும்பமும் பழைய தலைநகரான குதா அபாத் தாதுவிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறியது. ஹைதராபாத்தைச் சேர்ந்த கடு மல்லுடன் அவருக்கு குடும்ப உறவு இருந்தது. அதன் பெயரில் கடு துறைமுகம் உள்ளது.

பாகிஸ்தான் பாம்பே பேக்கரி

ரகசியம் காக்கும் கேக் செய்முறை

கடந்த ஒன்றேகால் நூற்றாண்டாக பாம்பே பேக்கரியில் பழைய முறையிலேயே கேக் தயாரிக்கப்படுகிறது. எந்த இயந்திரமும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த கேக்கின் சுவைக்கு பின்னால் கைகளின் அதிசயம் நிரம்பியுள்ளது. மிக்ஸிங் போன்றவை பாரம்பரிய முறையில் செய்யப்படுகின்றன. பாதாம் அரைக்க மட்டுமே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

குமார் ததானி மிகவும் அரிதாகவே வெளியுலகத்தினரை சந்திப்பார். அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பேட்டி அளித்துள்ளார்.

ரேடியோ பாகிஸ்தான் ஹைதராபாத்தின் முன்னாள் நிலைய மேலாளர் நசீர் மிர்சாவுக்கு அளித்த நேர்காணலில் அவர், சாக்லேட், காபி மற்றும் மக்ரோன் கேக்குகளுக்கான சமையல் குறிப்புகள் தனது தந்தையினுடையது என்றும் அவர் இறந்த பிறகு ஆங்கில புத்தகங்களில் வந்த கேக்குகள் மற்றும் பிஸ்கட்களின் செய்முறையை கடைப்பிடித்ததாகவும், அவை விரும்பப்பட்டதாகவும் கூறினார்.

தற்போது நான்காம் தலைமுறை இந்த தொழிலை கையில் எடுத்துள்ளதாக குமார் ததானியின் நண்பர் வழக்கறிஞர் எம்.பிரகாஷ் தெரிவித்தார். பாம்பே பேக்கரியின் கேக் பாகிஸ்தான் முழுவதும் பிரபலமானது என்றாலும், இது ஹைதராபாத்திற்கு கிடைத்த பரிசு.

"இந்த பேக்கரி நிறுவப்பட்டபோது, அந்த நேரத்தில் தின்பண்டங்களின் இந்தப்போக்கு புதிதாக இருந்தது. பாம்பே பேக்கரி புதிய சுவைகளை அறிமுகப்படுத்தியது மற்றும் பல்வேறு வகையான கேக்குகளை உருவாக்கியது. அவர்களின் ரொட்டிகள் மற்றும் பேஸ்ட்ரிகளும் மக்களால் விரும்பப்பட்டன,” என்று சிந்துவின் புகழ்பெற்ற இலக்கியவாதியும் ஆராய்ச்சியாளருமான மதத் அலி சிந்தி கூறுகிறார்,

அதைத் தயாரிப்பதற்கான சூத்திரம் யாருக்கும் சொல்லப்படுவதில்லை என்றும் வீட்டில் இருக்கும் ஒரு வயதான பெண்மணியிடம் அதன் செய்முறை இருப்பது வழக்கம் என்றும் அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் பாம்பே பேக்கரி

பட மூலாதாரம், M.PRAKASH

படக்குறிப்பு, குமார் ததானி (வலது) அவரது நண்பர் எம் பிரகாஷுடன்

ஒரு நாளைக்கு மூன்று நேரங்களில் மட்டுமே கிடைக்கும்

பேக்கரி நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களில் 20 கேக்குகள் செய்யப்பட்டன, ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது. இங்கு கேக் வாங்க ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. ஏனென்றால் கேக்குகள் எல்லா நேரத்திலும் கிடைக்காது.

பேக்கரி காலை 8:00 மணிக்கு திறக்கும் ஆனால் வாடிக்கையாளர்கள் அதற்கு முன்பே வரிசையில் நிற்கிறார்கள். ஆனாலும் இந்த கேக் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில், பேக்கரியில் மதியம் 2 மணி மற்றும் இரவு 7 மணிக்கு கேக்குகள் கிடைக்கும். 2:00 மணிக்கு சாக்லேட் மற்றும் காபி கேக்குகளும், இரவு 7:00 மணிக்கு கிரீம் மற்றும் மக்கரோன்களும் விற்பனைக்கு இருக்கும்.

ஒரு நேரத்தில் ஒரு சுவை மட்டுமே கிடைப்பதாகவும், மற்றொரு சுவை வேண்டுமென்றால் மீண்டும் வர வேண்டியுள்ளது என்றும் மக்கள் புகார் கூறினர். அதன் பிறகு தீர்வு காணப்பட்டு நான்கு சுவைகளும் ஒரே நேரத்தில் கிடைக்கும்படி செய்யப்பட்டன என்று பேக்கரி நிர்வாகம் தெரிவித்தது.

இப்போதெல்லாம் கேக்குகள் காலை 8:00 மணி, மாலை 3:00 மணி மற்றும் மாலை 6:00 மணி என மூன்று வெவ்வேறு நேரங்களில் கிடைக்கிறது. அதே நேரத்தில் பேக்கரி 13 மணி நேரம் திறந்திருக்கும்.

குமார் ததானியைப் போலவே அவரது மகன் சோனு என்ற சல்மான் ஷேக்கும் ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களிலிருந்து விலகியே இருக்கிறார். குமார் ததானி அவரை தத்தெடுத்தார். பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டார்.

பாம்பே பேக்கரி

பிபிசி உருதுவின் வேண்டுகோளின் பேரில் சல்மான் ஷேக் என்னை சந்தித்தார். ஆனால் முறையான நேர்காணலுக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஹைதராபாத் கோட்டத்தின் மக்கள் தொகை 1.25 கோடி. அதிகரித்து வரும் மக்கள்தொகையுடன், பாம்பே பேக்கரியின் கேக்குகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“குடும்பத்தினர் கற்றுக் கொடுத்ததை மக்களுக்குக் கிடைக்கச் செய்கிறேன். அதன் தரத்திலும் நம்பிக்கையிலும் வித்தியாசம் இல்லாமல் கொடுக்கிறேன் என்று குமார் கூறுவார்,”என்று குமார் ததானியின் நண்பர் எம்.பிரகாஷ் தெரிவித்தார்.

"அவர் பணத்தின் மீது பேராசை கொண்டவர் அல்ல. கராச்சி, லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் பேக்கரியின் கிளையைத் திறக்க அவருக்கு பல முறை யோசனை கூறப்பட்டது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த வேலைகளைச் செய்வேன், ஆனால் தரத்தை பராமரிப்பேன் என்று குமார் எப்போதும் சொல்வார்,” என்று பிரகாஷ் குறிப்பிட்டார்.

குமாருக்குப் பிறகும் அவருடைய குடும்பம் அவருடைய இந்தக் கொள்கையைத் தொடர்கிறது. கேக்குகளின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரித்தது, ஆனால் குறைந்த அளவில் மட்டுமே. கேக், இயந்திரங்கள் மூலமாக இல்லாமல் கைகளால் செய்யப்படுகிறது என்று இதற்கு காரணம் கூறப்பட்டது. தயாரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், இடமும் தேவைப்படும். ஆனால் இந்த எண்ணிக்கையில் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

பல தசாப்தங்களாக பேக்கரிக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள்

பாம்பே பேக்கரி கேக்கை வாங்குபவர்கள் பலர் சிறுவயது முதல் முதுமை வரை இந்த இடத்தின் கேக்கைமட்டுமே விரும்பி வாங்கி வருகின்றனர். வேறு எங்கும் செல்ல இன்றும் அவர்கள் தயாராக இல்லை.

ஹைதராபாத் சிவில் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஹாதிபக்ஷ் ஜதோய் பேக்கரிக்கு வெளியே இரண்டு கேக்குகளை கையில் பிடித்தபடி எங்களை சந்தித்தார்.

கடந்த 60-65 ஆண்டுகளாக இங்கிருந்து தான் கேக் வாங்கி வருவதாக டாக்டர் ஹாதி பக்ஷ் ஜதோய் கூறினார்.

கேக் சாப்பிடத் தொடங்கியபோது தான் இங்கிருந்து வாங்கியதாகவும், இன்றும் அதே பழைய சுவையுடன் அவை இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறையும் அந்தச் சுவையை அப்படியே வைத்திருக்கிறது.

டாக்டர். ஹாதி பக்ஷ் ஜதோய் உடன் இருந்த ஆசம் லெகாரி, தனக்கு 73 வயதாகிறது என்றும், சிறுவயதில் இருந்தே இந்த கேக் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.

"என் மருமகள் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து வந்திருந்தார். இங்குள்ள பிஸ்கட்களை குறிப்பாக இஞ்சி பிஸ்கட்களை அவர் சாப்பிட்டார். அது அவருக்கு மிகவும் பிடித்தது. திரும்பிச்செல்லும்போது தன்னுடன் ஐந்து கிலோ பிஸ்கெட்டை எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவற்றை மீண்டும் ஆர்டர் செய்தார்,” என்று ஆசம் லெகாரி கூறினார்.

பாகிஸ்தான் பாம்பே பேக்கரி
படக்குறிப்பு, தான் குழந்தையாக இருந்தபோது பாம்பே பேக்கரியின் கேக்கை விரும்பியதாகவும், இப்போது தன் குழந்தைகள் அதை விரும்பிக்கேட்பதாகவும் கூறுகிறார் அமார் பின் மல்லிக்.

`பிறந்த நாளாக இருந்தாலும் சரி பண்டிகையாக இருந்தாலும் சரி, இங்கிருந்துதான் கேக்.`

இங்கு கேக் வாங்க வரிசையில் காத்திருக்கும் அமார் பின் மல்லிக் கராச்சியிலிருந்து வந்துள்ளார்.

தான் குழந்தையாக இருந்தபோது பாம்பே பேக்கரியின் கேக்கை விரும்பியதாகவும், இப்போது தன் குழந்தைகள் அதை விரும்பிக்கேட்பதாகவும் அமார் பின் மல்லிக் கூறினார்.

`ஈத், ஷப்-இ-பாரத், பிறந்தநாள் அல்லது வேறு எந்த பண்டிகையாக இருந்தாலும் கேக்கை இங்கிருந்துதான் வாங்கிச்செல்லவேண்டியுள்ளது.`

இதை குழந்தைகளின் பிடிவாதம் என்று சொல்லமுடியாது. இங்குள்ள பேக்கரியின் சுவை அப்படிப்பட்டது, மிகவும் வித்தியாசமானது என்று அவர் குறிப்பிட்டார். கராச்சியில் பல பேக்கரிகள் உள்ளன. ஆனால் இதை விட அதிக விலை கொடுத்த பிறகும் அவற்றின் தரத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று அவர் சொன்னார்.

பிலால் அக்பர் இங்கிருந்து இரண்டு கேக் பெட்டிகளை வாங்கியுள்ளார். கராச்சியிலிருந்து பைசலாபாத் செல்வதாக அவர் கூறினார். பாம்பே பேக்கரியின் கேக்குகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதால் இங்கு வந்ததாக அவர் சொன்னார்.

35 நிமிடம் வரிசையில் காத்திருந்த பிறகு கேக் கவுண்டரை வந்தடைந்தார் முகமது இம்ரான். நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்குள்ள கேக்கை சாப்பிட்டு வருவதாகவும், வேறு எந்த பேக்கரிக்கும் போவதில்லை என்றும் முகமது இம்ரான் கூறினார்.

பாம்பே பேக்கரியில் சாக்லேட் தவிர, காபி, எலுமிச்சை கேக், மக்ரோன்கள், பழ கேக்குகள் மற்றும் பிஸ்கட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் எந்த டிஸைனும் இருக்காது. வாடிக்கையாளரின் வேண்டுகோளின் பேரில் கேக் மீது டிஸைன்கள் போடப்படுவதில்லை. கேக்கைப் போலவே, பேக்கிங் பெட்டியும் எளிமையானது. வெள்ளை நிற பெட்டியில் சிவப்பு மற்றும் பச்சை எழுத்துக்களில்,' The shop in a Bungalow’ என்று எழுதப்பட்டுள்ளது.

கேக் பாக்ஸின் பச்சை நிற ரிப்பனைத் திறந்தால், உள்ளே இருந்து வெண்ணெயால் தயாரிக்கப்பட்ட கேக்கின் வாசனை வரும்.

பாகிஸ்தான் பாம்பே பேக்கரி
படக்குறிப்பு, பாம்பே பேக்கரி

பாம்பே பேக்கரி உரிமையாளர்களின் தாராளமனம்

இந்தியாவின் பிரிவினைக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள சிந்து நகரத்தில் பெரும் எண்ணிக்கையில் இந்து சமூகத்தினர் வணிகம் செய்து வந்தனர். பிரிவினைக்குப் பிறகு பல குடும்பங்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தன. ஆனால் பாம்பே பேக்கரி மட்டுமே இங்கு தொடர்கிறது.

அதன் நிறுவனர் ஃபலாஜ் ராயும் பாகிஸ்தான் உருவாகி ஒரு வருடம் கழித்து ஹைதராபாத்தில் காலமானார்.

ஃபலாஜ் ராயின் பேரனும், பாம்பே பேக்கரியின் உரிமையாளருமான குமார் ததானி, ஒளிபரப்பாளர் நசீர் மிர்சாவுக்கு அளித்த பேட்டியில், சிந்துவில் ரத்தக்களரி மற்றும் கலவரம் நடந்தபோது ஹைதராபாத்தில் மிக்குறைந்த அளவு கலவரங்களே நடந்ததால் இங்கிருந்து செல்லவேண்டிய அவசியத்தை உணரவில்லை என்று கூறினார். ஹைதராபாத்தின் இந்தப்பகுதியில் ஒரு பிணம் விழுவதைக்கூட அவர் பார்க்கவில்லை. எனவே அவர் தனது நிலத்தை விட்டு வெளியேறவில்லை.

குமார் ததானி இந்து மத புத்தகங்கள், குரு கிரந் மற்றும் குரான் ஆகியவற்றைப் படிப்பார். அவர் தன்னை குருநானக் மற்றும் சிந்துவின் சூஃபி கவிஞர் ஷா அப்துல் லத்தீஃப் பட்டாய் ஆகியோரின் சீடர் என்று அழைத்துக் கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள பாம்பே பேக்கரியின் அடையாளம் அதன் கேக். ஆனால் ஹைதராபாத் மக்களுக்கு, அதன் அடையாளங்களில் ஒன்று அதன் உரிமையாளர்களின் தாராள மனப்பான்மை.

குமார் ததானியின் வாழ்க்கையில் கேக் வாங்குபவர்களைத் தவிர, தேவையுள்ளவர்களின் வரிசையும் இருந்தது. அவர் மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவியது மட்டுமல்லாமல், தகனம் செய்யும் இடங்களிலிருந்து இதய மருத்துவமனைகள் வரை மற்றும் ரேடியோ பாகிஸ்தானில் இசையை பாதுகாக்கவும் நன்கொடை அளித்தார்.

`எனக்கு ஏதேனும் கஷ்டமோ, நோயோ வரும்போது, இறைவனின் பாதையில் குறைவாக கொடுப்பதாக நான் நினைப்பேன். கொடுப்பதை அதிகமாக்கும்போது கஷ்டம் குறைகிறது,` என்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் பாம்பே பேக்கரி
படக்குறிப்பு, பாம்பே பேக்கரியின் எல்லைச் சுவர் முன்பு உயரம் குறைவாக இருந்தது. 1980களில் ஹைதராபாத்தில் மொழியியல் எழுச்சிக்குப் பிறகு இது உயர்த்தப்பட்டது.

பாம்பே பேக்கரியை தேசிய பாரம்பரியமாக அறிவிக்க பரிந்துரை

பாம்பே பேக்கரி கட்டிடத்தின் நிறம் முன்பு வெள்ளையாக இருந்தது. இப்போது சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. அதன் எல்லைச் சுவரின் உயரம் குறைவாக இருந்தது. 1980 களில் ஹைதராபாத்தில் மொழியியல் எழுச்சிக்குப் பிறகு இது உயர்த்தப்பட்டது.

இந்தக் கட்டிடத்திற்குள் நுழைய ஒரே ஒரு கதவுதான் இருந்தது. இப்போது இரண்டு ஜன்னல்கள் கதவுகளாக மாற்றப்பட்டுள்ளன. கேக்குகளை வைக்கும் கண்ணாடி ஷோகேஸ்கள் தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை மற்றும் கதவுகளும் பழையவை. அவற்றில் சில இப்போது மாற்றப்பட்டுள்ளன.

முன்பு கேக் வாங்கும் அறையில் ஒரு வரிசைதான் இருக்கும். ஆனால் இப்போது நான்கு வரிசைகள் உள்ளன. பெண் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஷாப்பிங் அறைக்கு அடுத்த அறையில் மூன்று உலை அடுப்புகள் உள்ளன. பளிங்கு மேசையில் சுமார் ஒரு டஜன் பேர் பெரிய கத்திகளால் கேக்கின் ஒரு பகுதியில் வெண்ணெய் தடவுவதை பார்க்கமுடிகிறது.

அந்த அறைக்கு அருகில் தங்கும் அறைகள் உள்ளன. பேக்கரியில் இருந்து குடியிருப்பு வரை ஒரே ஒரு வராண்டா மட்டுமே உள்ளது. 1.25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய புல்வெளி மற்றும் குடியிருப்பு அறைகளுடன் ஒரு சிறிய தோட்டமும் உள்ளது.

பாம்பே பேக்கரியை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க சிந்து அரசின் தொல்லியல் துறை பரிந்துரை செய்துள்ளது. 100 ஆண்டு கால பேக்கரி, அதன் கட்டிடம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று அந்தஸ்து காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிந்து மாகாணத்தின் கலாசாரம் மற்றும் அரிய பாரம்பரியங்களுக்கான அமைச்சர் சர்தார் அலி ஷா கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: