"இதற்குதான் நாட்டுக்கு பதக்கங்களை வென்று வந்தோமா?" மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் - நள்ளிரவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், CHANDAN SINGH RAJPUT/BBC
- எழுதியவர், வாத்சல்யா ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லியில் புதன்கிழமை பகல் முழுவதும் காலம் தவறிய மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் வானத்தில் இருந்து மழைப்பொழிவு நின்றுவிட்டது. ஆனால் இரவில் மல்யுத்த வீராங்கனைகளின் கண்களில் இருந்து கண்ணீர் பொழிய ஆரம்பித்தது. கண்ணீருடன் கோபம், வருத்தம் மற்றும் புகார்களின் வெள்ளமும் வெளியே வந்தது.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த 11 நாட்களாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மல்லிக், பஜ்ரங் புனியா மற்றும் காமன்வெல்த் பதக்கம் வென்ற வினேஷ் போகாட் ஆகியோரின் தலைமையில் பல சாம்பியன் மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷண் ஷரண் சிங்கிற்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.
"இங்கே பாருங்கள், நிலைமையைப் பாருங்கள். நாள் முழுவதும் மழை பெய்தது. நாங்கள் மடிப்பு கட்டிலை (தூங்குவதற்காக) கொண்டு வந்தோம். போலீசார் எங்களை அடித்தனர், எங்களை ஏசினர்,” என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் பிபிசி கேமரா முன் கூறினார்.
இரவு 10.30 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து பேசிய சாக்ஷி, "இரண்டு பேரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான செயல் நடந்துள்ளது. எங்களுக்கு ஆதரவாக வருமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இது உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் மரியாதை தொடர்பான விஷயம்." என்று கூறினார்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் செல்லும் இரு சாலைகளுக்கு முன்பும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. புதன்கிழமை இரவு ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தடுப்புகளை தாண்டி யாரையும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மற்றும் காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா ஆகியோர் போராட்ட இடத்திற்கு செல்ல முயன்றனர், ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பட மூலாதாரம், CHANDAN SINGH RAJPUT/BBC
மல்யுத்த வீராங்கனைகள் சொல்வது என்ன ?
இரவு 12.30 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வினேஷ் போகாட் அழுதுகொண்டே "இந்த நாளைப் பார்ப்பதற்காகத்தான் நாங்கள் நாட்டிற்காக பதக்கம் கொண்டு வந்தோமா?” என்று கேட்டார்.
"நான் கேட்கிறேன், ப்ரிஜ்பூஷண் படுக்கையில் மகிழ்ச்சியாக தூங்குகிறார். . தூங்குவதற்கு மடிப்பு கட்டில்களை நாங்கள் கொண்டு வந்தோம். அதற்கும்...."
"ஒரு போலீஸ்காரர் துஷ்யந்தின் தலையை உடைத்தார். அவர் இப்போது மருத்துவமனையில் உள்ளார். இந்த அப்பாவியை (ராகுல்) பாருங்கள், அவரது தலையிலும் பலத்த காயம் உள்ளது."
"நாங்கள் மரியாதைக்காக, மதிப்பிற்காக போராடுகிறோம், அந்த போலீஸ்காரர் பெண்களை மார்பை பிடித்து தள்ளுகிறார்."
"நாங்கள் இவ்வளவு பெரிய குற்றவாளிகளா? எங்கள் மீது இத்தனை அக்கிரமம் நடத்தும் அளவிற்கு நாங்கள் கிரிமினல்கள் அல்ல."
"நாட்டின் எந்த வீரரும் பதக்கம் கொண்டு வரக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர்கள் எங்களுக்கு அந்த அளவிற்கு தீங்கு செய்துவிட்டார்கள். இதுவரை யாரும் உணவு கூட சாப்பிடவில்லை."
ஜந்தர் மந்தரில் திரண்ட மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் வழக்கில் பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர். பிரிஜ் பூஷண் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறார்.
அனுமதியின்றி மடிப்புக்கட்டிலை எடுத்துச் சென்றதால் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெவித்தனர்

பட மூலாதாரம், ANI
ஜந்தர் மந்தரில் போலீஸ் vs மல்யுத்த வீரர்கள்
• பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் மீது டெல்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
• ஆம் ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிப்பு கட்டிலை கொண்டு வந்ததாக டெல்லி போலீஸ் கூறுகிறது.
• சோம்நாத் தடுத்து நிறுத்தப்பட்டபோது, மல்யுத்த வீராங்கனைகளின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.
• சம்பவத்தில் சில காவலர்கள் மற்றும் மல்யுத்த வீரர்கள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
• டெல்லி காவல்துறையின் கூற்றை மல்யுத்த வீரர்கள் நிராகரித்தனர். சோம்நாத் பாரதி மடிப்பு கட்டிலை கொண்டு வரவில்லை என்று மல்யுத்த வீரர்கள் கூறுகின்றனர்
• மழையால் மெத்தைகள் ஈரமாகிவிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் இந்த கட்டில்களை கொண்டுவருமாறு கூறினர்.
• மறியல் நடக்கும் இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் மல்யுத்த வீரர்கள் கூறுகின்றனர்.
• பஜ்ரங் புனியாவின் மனைவி சங்கீதா, போகட்டின் சகோதரர் துஷ்யந்த் போகட் மற்றும் ராகுல் இதில் காயமடைந்தனர்.
• தனது கூற்றுகளை சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்த முடியும் என்று பஜ்ரங் புனியா கூறுகிறார்.

பட மூலாதாரம், CHANDAN SINGH RAJPUT/BBC
மூலைமுடுக்கெல்லாம் போலீஸ்
மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தும் இடத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாததால் இரவு நேரத்தில் அங்கு சூழுந்த இருள், ஊடகவியலாளர்களின் கேமரா விளக்குகளால் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த பிறகு, மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து மறியல் தளத்தை அடைந்தவண்ணம் இருந்தனர். ஆனால் சில பத்திரிகையாளர்களைத் தவிர வேறு யாரையும் முதல் தடுப்பைத்தாண்டி செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. தடுப்புகளுக்கு வெளியே நின்றவர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அங்கிருந்து செல்லாதவர்களை தடுப்புக்காவலில் வைத்து பேருந்தில் அமர வைத்தனர்.
செய்தியாளர்களுடன் வினேஷ் மற்றும் பஜ்ரங் பேசினர். கூடவே இடையிடையில் போனில் பேசி தங்கள் நண்பர்களை ஜந்தர் மந்தரை அடையுமாறு சொன்னார்கள்.
கடுமையான போலீஸ் காவல் காரணமாக அவர்களது ஆதரவாளர்கள் சிலரால் மட்டுமே மறியல் நடக்கும் இடத்திற்குச் செல்ல முடிந்தது. மல்யுத்த வீரர்கள், காயமடைந்த ராகுலின் தலையில் ஏற்பட்ட காயத்தை செய்தியாளர்களிடம் காட்டிக் கொண்டிருந்தனர். இரவு ஒரு மணியளவில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து ராகுலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
இதற்கு முன் மல்யுத்த வீரர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். செய்தியாளர் சந்திப்பின் போது, சாக்ஷி மாலிக் அதிக நேரம் தலை குனிந்து நின்றிருந்தார். இந்த சம்பவம் குறித்து வினேஷ் போகாட் மற்றும் அவரது உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், ANI
மல்யுத்த வீரர்களின் செய்தியாளர் சந்திப்பு
"நீங்கள் உள்ளே சென்று பாருங்கள். தண்ணீர் நிரம்பியுள்ளது. எங்களுக்கு தூங்க இடம் இல்லை. நாங்கள் மடிப்பு கட்டில் கொண்டுவந்து தூங்கலாம் என்று நினைத்தோம். கட்டிலை கொண்டுவரும்போது தர்மேந்திரா (போலீஸ்காரர்) எங்களை தள்ளத்தொடங்கினார். அங்கு பெண் போலீஸ்காரர் யாரும் இருக்கவில்லை. அவரே எங்களை தள்ளத் தொடங்கினார்,” என்று வினேஷ் போகாட் தெரிவித்தார்.
"நானும் தள்ளப்பட்டேன். முறைகேடான வார்த்தைகளால் ஏசப்பட்டேன். இரண்டு அல்லது மூன்று பேர் (காவல்துறையினர்) குடிபோதையில் இருந்தனர்."என்று பஜ்ரங் புனியா கூறினார்.
"நான் உள்ளே நின்று கொண்டிருந்தேன். அவர் (போலீஸ்காரர்) என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டினார்" என்று வினேஷ் குற்றம் சாட்டினார்.
"ஒரு போலீஸ்காரர் துஷ்யந்தின் தலையை உடைத்தார். அவர் இப்போது மருத்துவமனையில் உள்ளார். இந்த அப்பாவியை (ராகுல்) பாருங்கள், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது."
இதற்கிடையில் படுகாயம் அடைந்த மல்யுத்த வீரர் ராகுல் தலைசுற்றி கீழே விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தால்...
சோம்நாத் பாரதி அனுமதியின்றி படுக்கையை கொண்டு வந்தாரா என்று நிலைமை சற்று சீரானதும் மல்யுத்த வீரர்களிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த பஜ்ரங் புனியா, "இங்கே சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அவற்றை ஒரு முறை பாருங்கள். சோம்நாத் பாரதி இங்கே நின்று கொண்டிருந்தார். கட்டில் அங்கிருந்து 10-15 நிமிடங்கள் கழித்து வந்தது. நாங்கள் கொண்டுவரச்சொல்லியிருந்தோம்,” என்று கூறினார்.
“ யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எப்படி கூடாரம் போட்டிருக்கிறோம் என்று பாருங்கள். நாங்கள் என்ன இவ்வளவு பெரிய குற்றவாளிகளா? இப்படி நடந்துகொள்ளும் அளவிற்கு நாங்கள் கிரிமினல்களா என்ன,” என்று வினேஷ் குறிப்பிட்டார்.
தலையில் அடித்த அவர் (காவலர்) மது அருந்திக் கொண்டிருந்தார்” என்று வினேஷ் குற்றம் சாட்டினார்.
"எங்கள் விளையாட்டை முடித்துவிட்டனர். எங்கள் உயிரைப் பணயம் வைத்தோம். சாலையில் அமர்ந்திருக்கிறோம். இன்னும் சித்திரவதைக்கு உள்ளாகிறோம். ஏன் அவர்கள் பிரிஜ்பூஷணை கைது செய்யவில்லை?"
"போலீஸ்காரர் தலையில் அடித்த பிறகு, டிசிபி அல்லது ஏசிபி, அவரின் (போலீஸ்காரரின்) தடியை மறைத்து வைத்தார். இன்னும் எங்களிடம் வாக்குமூலம் எடுக்கவில்லை. வீரர்கள் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று பொய்களைப் பரப்புகிறார்கள்" என்று பஜ்ரங் குற்றம் சாட்டினார்.
வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை இருக்கிறது, இந்த விஷயத்தை அங்கு சொல்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வினேஷ், "(விசாரணை) நாளை உச்சநீதிமன்றத்தில் உள்ளது, இன்று இரவு எங்கே தங்குவது, எங்கு செல்வது?” என்று கேட்டார்.
"நாங்கள் யாரிடமாவது தவறாக நடந்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொரு போலீஸ்காரர்களிடம் கேளுங்கள். 10 நாட்களாக தரையில் படுக்கை விரித்து தூங்குகிறோம். கட்டிலை கொண்டு வரச் சொல்லவில்லை. இன்று எல்லாமே நனைந்துவிட்டது. எங்கே போவது, எங்கே தூங்குவது" என்று மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினவினார்.
"எங்களுக்கு அனைவரின் ஆதரவும் தேவை. யாரால் முடியுமோ எல்லோரும் வாருங்கள். நிறைய தவறுகள் நடந்துள்ளன. மகள்களின் மரியாதையை பணயம் வைத்துள்ளனர், அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம், முடிந்தவரை அனைவரும் வாருங்கள்," என்று அழுது கொண்டே வினேஷ் போகாட் ஊடகங்கள் முன் முறையிட்டார்.

பட மூலாதாரம், ANI
போலீசார் சொல்வது என்ன?
அனுமதியின்றி கட்டில்களை கொண்டு வந்ததால்தான் கைகலப்பு நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக்கட்டிலை சோம்நாத் பாரதி கொண்டு வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
"ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சோம்நாத் பாரதி சில மடிப்பு கட்டில்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு அனுமதி இல்லை., போராட்டக்காரர்கள், மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்கள் தடுப்புகளில் ஏறி கட்டில்களை கொண்டுவர முயற்சி செய்தனர். அதில் கைகலப்பு ஏற்பட்டது. சில போலீஸ்காரர்களும் அவர்கள் தரப்பில் (மல்யுத்த வீரர்கள்) சிலரும் காயமடைந்தனர்,"என்று டெல்லி போலீஸ் டிசிபி பிரணவ் தாயல் கூறினார்.
டெல்லி காவல்துறையின் ஏசிபி ரவிகாந்த் குமார் ஜந்தர் மந்தரில் இருந்தார். செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு மல்யுத்த வீரர்கள் சார்பில் அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.
"எங்களுக்கு புகார் கிடைத்துள்ளது. நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் மல்யுத்த வீரர்களின் கூற்றுகளை சரிபார்ப்போம்," என்று ரவிகாந்த் குமார் பிபிசியிடம் கூறினார்.
ரவிகாந்த் இடையிடையே போனில் மற்ற அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தின் நடப்பு நிகழ்வுகளை விவரித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் ஜந்தர் மந்தரில் உள்ள ஜேடியு அலுவலகத்தில் இருந்து கிசான் மோர்ச்சா ஆதரவாளர்கள் சிலர் போராட்ட இடத்திற்கு வர முயன்றனர்.
கதவு மூடப்பட்டதால் அவர்களால் மறியல் பகுதிக்கு செல்ல முடியவில்லை. அங்கேயே கோஷம் எழுப்ப ஆரம்பித்தார்கள்.பிறகு போலீஸார், சிலரை உள்ளேவர அனுமதித்தனர்.

பட மூலாதாரம், CHANDAN SINGH RAJPUT/BBC
சுவாதி மாலிவால், திபேந்திர ஹூடா தடுத்து நிறுத்தப்பட்டனர்
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலும் போராட்ட இடத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
" டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரை ஏன் நிறுத்துகிறீர்கள்?" என்று தடுத்து நிறுத்தப்பட்ட, ஸ்வாதி மாலிவால் வினவினார்.
மகளிர் போலீஸ்காரர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆரம்பித்ததும் ஸ்வாதி, "என்னை தொட உங்களுக்கு என்ன தைரியம்? மேடம் என்னை தொடாதீர்கள்," என்றார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரி ஒருவர், ‘அவர்களை இங்கிருந்து தூக்குங்கள்’ என பெண் போலீசாரிடம் அறிவுறுத்தினார். உடனே மகளிர் போலீசார் அவருடைய கை கால்களை பிடித்து தூக்கி வண்டியில் அமர வைத்தனர். அவரை மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார்.
பின்னர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடாவும் மல்யுத்த வீரர்களின் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தான் கைது செய்யப்பட்டு வசந்த் விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஹூடா ட்விட்டரில் தெரிவித்தார்.
சோம்நாத் பாரதியும் இந்த சம்பவம் தொடர்பாக தான் அதிர்ச்சியடைந்ததாகவும் வெட்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், CHANDAN SINGH RAJPUT/BBC
மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம்
மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்கள் பலர் வெளிப்புற தடுப்புகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ஆதரவாளர்கள் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில ஆதரவாளர்கள் போலீசாரிடம், " இதற்கு (நிறுத்த) எழுத்துப்பூர்வ உத்தரவு உள்ளதா?"என்று கேட்டனர்.
தடுப்பு வேலியில் நின்றிருந்த போலீஸ் அதிகாரி, "எழுத்துபூர்வ உத்தரவு உள்ளது. நீங்கள் அலுவலகத்திற்குச் சென்று கொண்டு வாருங்கள். அதை இங்கு கொடுக்க முடியாது. உங்களோடு என்னால் வாதிட முடியாது" என்று பதிலளித்தார்.
"உள்ளே சட்டம்-ஒழுங்கு பிரச்சனை நடக்கிறது. வாக்குவாதம் செய்யாதீர்கள். அமைதியை சீர்குலைக்க முயன்றால் காவலில் வைப்போம்" என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார்.
இதற்கிடையில் உள்ளே நுழைய முடிந்த ஆதரவாளர்கள் தர்ணா நடக்கும் இடத்திற்கு முன் சாலையில் மெத்தைகள் விரித்து அமர்ந்தனர். சில ஆதரவாளர்கள் தடுப்புகளுக்கு வெளியில் இருந்து மல்யுத்த வீரர்களை உற்சாகப்படுத்தி, "கவலைப்படாதீர்கள் சகோதரிகளே, நாங்கள் இருக்கிறோம்" என்று கூச்சலிட்டனர்.
இருப்பினும் மல்யுத்த வீராங்கனைகளின் கண்களில் இருந்து பெருக்கெடுத்தோடிய கண்ணீர் நிற்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












