ப்ளேஆஃப் பந்தயத்தில் மும்பை: 'பெருமையை மீட்ட' இஷான், சூர்யகுமார் - சிஎஸ்கே நிலை என்ன?

பட மூலாதாரம், BCCI/ IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2008-ம் ஆண்டு ஐ.பி.எல். முதல் சீசன் அறிமுகமாகும்போது, 20 ஓவர்களில் 140 முதல் 150 ரன்களை சேஸிங் செய்தாலே அது பெரிதாகப் பேசப்பட்டது. அதுதான் அதிகபட்ச ஸ்கோராகக்கூட இருந்தது.
ஆனால், காலங்கள் உருண்டோட புதிய இளம் பேட்ஸ்மேன்கள், ஒவ்வொரு அணிக்குள் வந்தபின், புதிய விதிகள், மாற்றங்கள் அறிமுகமாகியபின் சேஸிங் ஸ்கோர் அளவு அதிகரித்தது. கடந்த சீசன் வரை சராசரியாக 180 ரன்களைக் கூட அணிகள் எளிதாக சேஸிங் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், இந்த சீசனில் “இம்ஃபாக்ட் பிளேயர்” என்ற அம்சம் அறிமுகமாகியபின் , ஒவ்வொரு அணியின் சராசரி சேஸிங் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் என்ற நிலை உருவாகி ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து 5 முறை வெவ்வேறு அணிகள் 200-க்கும் மேற்பட்ட ரன்களை எளிதாக சேஸிங் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மொஹாலியில் நேற்று நடந்த ஐ.பி.எல். லீக்கின் 46-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் சேஸிங் செய்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அதுமட்டும்லலாமல் மொஹாலி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்த முதல் அணியும் மும்பை இந்தியன்ஸ்தான்.
மும்பையில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 215 ரன்களை குவித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஹோம் கிரவுண்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மொகாலியில் மும்பை வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், BCCI/ IPL
மும்பை இந்தியன்ஸ் சாதனைகள்
ஆட்டநாயகன் விருது பெற்ற இஷான் கிஷன்(41பந்துகளில் 75), சூர்யகுமார் யாதவ்(31பந்துகளில் 66 ரன்கள்), திலக் வர்மா(26), டிம் டேவிட்(19) ஆகியோரின் ஆர்ப்பரிப்பான ஆட்டத்தின் காரணமாக இமாலய இலக்கை தொடர்ந்து 2வது முறையாக மும்பை அணியால் சேஸிங் செய்ய முடிந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு குயின்டன் டீ காக், இஷான் கிஷன் 100 ரன்களுக்கும் மேல் சிஎஸ்கே அணிக்கு எதிராக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதன்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆட்டத்தில் 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து பெறும் 2வது வெற்றி இதுவாகும். தொடர்ந்து 2வது முறையாக 200-க்கும் மேற்பட்ட ரன்களை அந்த அணி சேஸிங் செய்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் 200க்கும் மேற்பட்ட ரன்களை தொடர்ந்து 2வது முறையாக சேஸிங் செய்த 3வது அணியாக மும்பை இந்தியன்ஸ் மாறியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியும் இந்த சீசனில் முரட்டுத்தனமாக ஆடி வருகிறது, தொடர்ந்து 4வது முறையாக 200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்ததுள்ளது. இதில் மும்பைக்கு எதிராக மட்டும் 2முறை 200க்கும் மேற்பட்ட ரன்களையும், சிஎஸ்கே, லக்னெள அணிகளுக்கு எதிராக தலா ஒருமுறையும் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் குவித்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/ IPL
பந்துவீச்சாளர்களைக் குறை சொல்வதா?
மொஹாலி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகும். இங்கு சுழற்பந்துவீச்சுமட்டுமே ஓரளவுக்கு கைக்கொடுக்கும். மற்றவகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசும்பந்து பேட்ஸ்மேன்களின் பேட்டுக்கு நன்றாக எழும்பி, வேகமாக வரும். இதனால் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதால், இந்த ஆடுகளத்தில் இரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் அடித்து தங்கள் வலிமையை நிரூபித்தன.
இதில் பந்துவீச்சாளர்களின் நிலைமைதான் படுமோசம். இதுபோன்று ஆடுகளில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களில் ஒரு சிலர் ரன்வேட்டைக்கு இலக்காவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் நேற்று 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை வாரி வழங்கினார், இது ஐபிஎல் வரலாற்றில் 3வது மோசமான பந்துவீச்சாகும். அதைத் தொடர்ந்து சாம் கரன் 3 ஓவர்கள் வீசி 41 ரன்கள் வழங்கினார்.
மும்பை அணி பந்துவீச்சாளர்களும் சளைத்தவர்கள் இல்லை. அர்ஷத் கான் 4 ஓவர்கள் வீசி 48, ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 56 ரன்களை வாரி வழங்கினர். பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் நடக்கும் இதுபோன்ற “ஹைஸ்கோர் பிட்ச்களில்” பந்துவீச்சாளர்கள் பலியாவதை தடுப்பது என்பது கடினம்தான்.

பட மூலாதாரம், BCCI/ IPL
லிவிங்ஸ்டன்-ஜிதேஷ் சர்மா கூட்டணி
பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே அதிரடி வீரர் பிரப்சிம்ரன் விக்கெட்டை இழந்தது. கேப்டன் ஷிகர் தவண்(30), மேத்யூ ஷார்ட்(27) என சோபிக்கவில்லை. இதனால், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்திருந்தது. 12-வது ஓவர்கள்வரை பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள்தான் சேர்த்திருந்தது. 200 ரன்களை எட்டுமா என்ற கேள்வியும் இருந்தது.
ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் கூட்டணி ஆட்டத்தின்போக்கை மாற்றி மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன.
12 ஓவர்கள் வரை 92 ரன்கள் சேர்த்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15 –வது ஓவர்கள் முடிவில் 150 ரன்களை எட்டியது. ஏறக்குறைய அடுத்த 8 ஓவர்களில் 119 ரன்கள் சேர்த்து 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை கொண்டு சென்றனர்..
அதிலும் 15 ஓவர்களுக்குப்பின் லிவிங்ஸ்டன் ஆட்டம் டாப் கியருக்கு மாறியது. ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்து 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 44 பந்துகளில் 4வது விக்கெட்டுக்கு இருவரும் 100ரன்களைச் சேர்த்தனர்.
இந்த சீசனில் கலக்கிவரும் ஜிதேஷ் சர்மாவும் களத்துக்கு வந்தது முதல் மோசமாக வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசத் தவறவில்லை. அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 27பந்துகளில் 49 ரன்கள்(2சிக்ஸர், 5பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த சீசனின் இடைப்பகுதியில் வந்த லிவிங்ஸ்டன் சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை, ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிராக இவரின் அதிரடிதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்திலும் 15 ஓவர்களுக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து(4சிக்ஸர், 7பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருவரின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா 6 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் கடைசிவரை இருவரையும் பிரிக்க முடியாமல் தோல்வி அடைந்தார்.

பட மூலாதாரம், BCCI/ IPL
பஞ்சாப் கிங்ஸ் தோல்வி ஏன்?
பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா விக்கெட்டுகளை வீழ்த்தியவுடனே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வாய்ப்பை தவறவிட்டது. மொஹாலி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால், கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யவில்லை, மாறாக, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் இருவரும் கட்டுக் கோப்பாகவே பந்துவீசினர், ஆனால், இருவருக்குமே 4 ஓவர்களை முழுமையாக கேப்டன் தவண் வழங்கவில்லை. இருவருக்கும் முழுமையாக 4 ஓவர்கள் வழங்கி இருந்தால் மும்பை பேட்ஸ்மேன்களின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்திருக்கும். அதிலும் நடுப்பகுதியில் 3 ஓவர்களை இருவரும் வீசச் செய்திருந்தால், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்க முடியும்.
அதேபோல ரிஷி தவண் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 3 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார், அவருக்கும் கூடுதலாக ஒரு ஓவரை தவண் வழங்கவில்லை. ஆனால், அர்ஷ்தீப் சிங், சாம் கரன் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார்கள் எனத் தெரிந்தும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து ஓவர்களை வழங்கியதுதான் ரன் குவிப்புக்கு காரணமாகும்.
இதுபோன்ற ஹை-ஸ்கோர் ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களை குறைகூறுவது இயல்புக்கு மாறானது. ஆனால், அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது, ரொட்டேட் செய்வது, சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீசச் செய்வது என்பதை கேப்டன் தவண் முடிவு செய்திருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருந்தும் அதை டிபெஃண்ட் செய்ய முடியாமல், தோற்றது என்பது பந்துவீச்சாளர்களை சரியாக கையாள முடியாத கேப்டன்ஷிப் தோல்வியால் கிடைத்த தோல்வியாகும்.
அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியவுடனே ஆட்டம் தங்கள் கைகளுக்கு வந்துவிட்டது என்ற அதீத நம்பிக்கையும் பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு காரணம். மும்பை இந்தியன்ஸ் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பதை உணர்ந்து நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கத் தவறியதும் தோல்விக்கு காரணமாகும்.

பட மூலாதாரம், BCCI/ IPL
“சுழற்பந்துவீச்சை பயன்படுத்தவில்லை”
தோல்விக்குப்பின் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண் கூறுகையில் “ நாங்கள் சிறப்பாகவே தொடங்கினோம், நல்ல ஸ்கோரையும் அடித்தோம். ஆனால், துரதிர்ஷ்டம் அதை டிபெண்ட் செய்ய முடியவில்லை. ரிஷி தவண் நன்றாகப் பந்துவீசினார், பவர்ப்ளேயில் கட்டுக்கோப்பாக பந்துவீசியிருக்க வேண்டும். இஷான் கிஷன், சூர்யா இருவரும் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டனர்.
பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றஆடுகளமாக இருப்பதால் இன்னும் கட்டுக்கோப்பாக பந்துவீசியிருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி வீசுவது நல்ல பலனை அளித்தது, நாதன் எல்லீஸ் சிறப்பாக இதைச் செய்தார், ஆனால், இதை மற்ற பந்துவீச்சாளர்கள் பின்பற்றவில்லை. இன்னும் கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர்களை நாங்கள் பயன்படுத்தியிருந்தால், வெற்றி பெற்றிருப்போம்” எனத் தெரிவித்தார்
மும்பை இந்தியன்ஸ் வெற்றி நாயகர்கள்
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இந்த சீசனில் மோசமான ஃபார்மில் இருப்பது வேதனைக்குரியது. இந்த ஆட்டத்திலும் டக்அவுட்டில் ரோஹித் வெளியேறி, ஐபிஎல் தொடரில் 15-வது டக்அவுட்டை பதிவு செய்தார்.
ரோஹித் சர்மா வெளியேறியபின் ஏற்பட்ட அழுத்தத்தை இஷான் கிஷன், கேமரூன் க்ரீன் ஓரளவுக்கு சமாளித்து பேட்செய்தனர். சிறிய கேமியோ ஆடிய கேமரூன் 23 ரன்னில் எல்லீஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்திருந்தது.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் கூட்டணி சேர்ந்தபின்புதான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஓவருக்கு 11.50 ரன் ரேட் வீதம் வெற்றிக்கு 161 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் 10வது ஓவரில் இருந்து அதிரடியைத் தொடங்கினர்.
ஹர்ப்ரீத் பிரார் பந்துவீச்சில் இஷான் கிஷன் சிக்ஸர் , பவுண்டரி என 14 ரன்களை விளாச, ராகுல் சஹர் பந்துவீச்சில் இரு சிக்ஸர்கள் உள்ளிட்ட 14 ரன்களை சூர்யகுமாரும் அடித்தார். ஒரு கட்டத்தில் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் கையில்தான் இருந்தது. 8 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிக்கு 100 ரன்கள் வரை தேவைப்பட்டது.

பட மூலாதாரம், BCCI/ IPL
திருப்புமுனை ஓவர்
இந்த சூழலில்தான் சாம் கரன் வீசிய ஓவர் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சாம் கரன்வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 23 ரன்களை சூர்யகுமார் விளாசி 23 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.
அர்ஷ்தீப் வீசிய ஓவரில் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரிகள் என இஷாந் கிஷன் அடித்து நொறுக்க ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் கைகளுக்கு வந்தது. கடைசி 30 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 45 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
எல்லீஸ் வீசிய 16வது ஓவரில் சூர்யகுமார் யாதவ்(66) ரன்னில் ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் வீசிய 17-வது ஓவரில் இஷான் கிஷன் 75 ரன்னில் தவணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இரு செட்டிலான பேட்ஸ்மேன்கள் வெளியேறியபின் மும்பை வெற்றிக்கு தடுமாறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், களத்தில் இருந்த டிம் டேவிட், திலக் வர்மா இருவருமே ஆபத்தான பேட்ஸ்மேன்கள். திலக் வர்மா களமிறங்கியவுடன், அர்ஷ்தீப் வீசிய 17வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரியை விளாசி 16 ரன்கள் சேர்த்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்த நெருக்கடி பாதியாகக் குறைந்து கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் டேவிட் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார், அதன்பின் ஒரு ரன் அடித்து திலக் வர்மாவிடம் ஸ்ட்ரைக்கை அளித்தார். திலக் வர்மா 2 ரன்கள் சேர்த்தபின், கடைசிப் பந்தில் 103 மீட்டர் நீளத்துக்கு மிகப்பெரிய சிக்ஸரை விளாசி மும்பை இந்தியன்ஸுக்கு வெற்றி தேடித்தந்தார்.
திலக் வர்மா 26(10பந்துகள் 3சிக்ஸர்,ஒரு பவுண்டரி ), டிம் டேவிட்(19 ரன்கள்) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பட மூலாதாரம், BCCI/ IPL
“ஜாக்பாட்” பியூஷ் சாவ்லா
இந்த ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாமல் ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே வாங்கப்பட்டத மூத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா கலக்கி வருகிறார். கோடிகளுக்கு வாங்கப்பட்ட பந்துவீச்சாளர்கள் சொதப்பி வரும்நிலையில், அனுபவத்தின் மூலம் பியூஷ் சாவ்லா தனது இருப்பை நிரூபித்து வருகிறார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 வி்க்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 50 லட்சத்துக்கு பியூஷ் சாவ்லாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸுக்கு நிச்சயம் சாவ்லா ஜாக்பாட்டாவே இருந்து வருகிறார்.

பட மூலாதாரம், BCCI/ IPL
சக்திக்கு காரணம் இவர்தான்
ஆட்டநாயகன் விருது வென்ற இஷான் கிஷன் கூறுகையில் “ ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றார்போல் இருந்தது, அதனால்தான் ஸ்கோரை சேஸிங் செய்ய முடிந்தது, 20 ஓவர்கள்வரை பேட் செய்ய நினைத்தேன். சேஸிங்கில் இருக்கும்போது, அதற்கான தருணம் அமைந்தால் எளிதாகும் அது எங்களுக்கு கிடைத்தது. எங்களின் திட்டத்தையும், பயிற்சியாளரின் அறிவுரையையும் சரியாகச் செயல்படுத்தினோம். நல்ல பந்துவீச்சு இருந்தால்கூட, திட்டமிடல் சரியாக இருந்தால் சேஸிங் பற்றி கவலையில்லை, கடைசிஓவர்வரை ஆட்டத்தை பரபரப்பாகக் கொண்டு செல்லவும் தேவையில்லை. விரைவாக சேஸிங் செய்ய முயலும்போது, புதிய பேட்ஸ்மேன்களுக்கும் அது எளிதாக இருக்கும். இதற்கு முன் பல மூத்த வீரர்கள் எங்களுக்கு உதாரணமாக இருந்துள்ளார்.
போட்டிகளின்போது நான் செய்யும் உடற்பயிற்சி, கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, பெரிய ஷாட்களை ஆடுவதற்கு உதவியாக இருக்கிறது. என்னுடைய உடல் கட்டுக் கோப்புக்கும், சக்திக்கும் என்னுடைய அம்மா என்னுடனே இருந்து சமையல் செய்து கொடுப்பதும், வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுவதுதான் காரணம். என்னுடைய சக்திக்கு என் அம்மாதான் காரணம்” எனத் தெரிவித்தார்
புள்ளிப் பட்டியல் எப்படி உள்ளது?
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள் என 10 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. குஜராத் டைடன்ஸ் 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், லக்னௌ, சிஎஸ்கே ஆகிய அணிகள் தலா 11 புள்ளிகளுடன் முறையே 2,3வது இடங்களில் உள்ளன. 10 புள்ளிகளுடன் மட்டும் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகள் உள்ளதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடுமையான போட்டி இனிவரும் ஆட்டங்களில் இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை லக்னௌவுடனான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்குமே தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், இரு அணிகளும் 11 புள்ளிகளுடன் உள்ளன. மும்பை- மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் வரும் மே 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், வெற்றி பெறுவது என்பது ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்வதற்கு இரு அணிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்பதால் இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












