ஐபிஎல்: சிஎஸ்கே Vs லக்னெள தான் தோனிக்கு இறுதித்தொடரா? ரசிகர்களை தொற்றிய திடீர் பரபரப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
41 வயதாகிவிட்டது, இனிமேலும் தோனி ஐபிஎல் டி20 தொடரில் விளையாடுவாரா, இந்த சீசன்தான் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என கவலைப்பட்ட அவரின் ரசிகர்களுக்கு எம்.எஸ்.தோனி தீர்க்கமான பதிலை அளித்துள்ளார்.
லக்னெளவில் இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் மழை விளையாடியதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
லக்னெள அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாகியும் மழை குறைந்தபாடில்லை.
மழை விட்டால், சிஎஸ்கே அணியின் சேஸிங்கை 5 ஓவர்களாகக் குறைக்கவும் போட்டி நடுவர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், கள நடுவர்கள் இருவரும் குடையுடன் மைதானத்தின் தன்மையை ஆய்வு செய்து திரும்பினர்.
மழை சீராக பெய்து வந்ததையடுத்து, போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியது.
இதையடுத்து, ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்து, சிஎஸ்கே, லக்னெள அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கி அறிவித்தனர்.
பரபரப்பை எட்டும் புள்ளிக்கணக்கு

பட மூலாதாரம், Getty Images
இப்போது ஐபிஎல் டி20 தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
ஆனால், 11 புள்ளிகளுடன் லக்னெள 2வது இடத்திலும், சிஎஸ்கே 3வது இடத்திலும் உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது இடத்திலும், ஆர்பிசி 5வது இடத்திலும், பஞ்சாப் அணி 6வது இடத்திலும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன.
இன்று இரவு மும்பையில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றால், 10 புள்ளிகள் பெற்ற அணிகள் வரிசையில் இணைந்துவிடும்.
ஆனால், பஞ்சாப் அணி வெல்லும் பட்சத்தில், 12 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறிவிடும், அதாவது 6-வது இடத்திலிருந்து நேரடியாக 2வது இடத்துக்கு செல்லும். அதனால், இன்றைய இரவு ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை சிஎஸ்கே, லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்திருந்து, முடிவு கிடைத்திருந்தால் 12 புள்ளிகளுடன் லக்னெள அல்லது சிஎஸ்கே இருந்திருக்கும். ஆனால், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிவழங்கப்பட்டதால் தற்போது 11 புள்ளிகளுடன் உள்ளன.
இந்த சூழலில், பஞ்சாப் கிங்ஸ் வெற்றிபெற்றால், 12 புள்ளிகளுடன் சிஎஸ்கே, லக்னெளவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறும். நிகர ரன்ரேட் அடிப்படையில் இல்லாமல், புள்ளிக்கணக்கில் பஞ்சாப் நகர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு கடைசி சீசனா?

பட மூலாதாரம், @ChennaiIPL
லக்னெள மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கும் முன், சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி அளித்த பதில்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
41 வயதில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விளையாடி வரும் தோனி, இதுவரை ஏராளமான இளைஞர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.
தோனியின் சிஎஸ்கே பட்டறையில் கூர்தீட்டப்பட்ட பல வீரர்கள் இந்திய அணிக்குள் வந்து வலுவான இடத்தைப் பிடித்துள்ளனர்.
சிஎஸ்கே விளையாடும் போட்டிக்கு வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட இந்த சீசனில் எந்த நகரில் சிஎஸ்கே ஆட்டம் நடந்தாலும் கூட்டம் அலைமோதுகிறது.
தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என்ற தகவலும் இருப்பதாகக் கூறப்பட்டதால் ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
2022ஆம் ஆண்டில் தோனி அளித்த பேட்டி ஒன்றில், “ இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடர் விளையாடப்படும்போது, நான் ஓய்வு பெற விரும்புகிறேன். என்னுடைய ஓய்வு, கடைசிப் போட்டி என்பது, சென்னை ரசிகர்கள் முன், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில்தான் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், இந்த சீசன் எம்எஸ் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பாக வலம் வந்தது.
தோனியின் பதில்

பட மூலாதாரம், CSK
இந்தச் சூழலில் இன்று லக்னெள மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன் டாஸ் போடும் நிகழ்வில் தோனியிடம், வர்ணனையாளர் மோரிஸன் தோனியின் கடைசி சீசன் குறித்து கேள்வி எழுப்பினார்.
மோரிஸன் தோனியிடம், “உங்களின் கடைசி ஐபிஎல் சீசனுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு தோனி, “ எனக்கு கடைசி ஐபிஎல் சீசன் என்று ஊடகங்களும், ஒளிபரப்பாளர்கள்தான் முடிவு செய்துள்ளார்கள், நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், எனக்கு இது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்யவில்லை” என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
இதன் மூலம், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது அடுத்தத் தொடரிலும் தோனி தொடர்ந்து விளையாடுவேன் என்று தனது ரசிகர்களுக்கு சூசகமாகவும், தீர்க்கமாகவும் தெரிவித்துள்ளார்.
மந்தமான ஆடுகளம்

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி மற்றும் லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்த அதே ஆடுகளம்தான் இந்த போட்டிக்கும் பயன்படுத்தப்பட்டது.
பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத, தரையைவிட்டு எழும்பாத, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே ஒத்துழைக்கும் மந்தமான ஆடுகளத்தில் இன்றைய ஆட்டமும் கடந்த ஆட்டத்தைப் போல் தொடங்கியது.
சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரி
லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், மேயர்ஸ், மனன் வோரா ஆகிய இருவரும் அதிரடியாக ஆட முயன்றாலும் ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை.
தீபக் சஹர் ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து மேயர்ஸ் அதிரடிக்கு மாறினார்.
ஆனால் ஆடுகளத்தின் தன்மையையும், இடதுகை பேட்ஸ்மேன் களத்தில் இருப்பதை அறிந்த தோனி மொயின் அலியை பந்துவீச அழைத்தார். மொயின் அலி வீசிய 4வது ஓவரின் 4பந்தை மேயர்ஸ் தூக்கி அடிக்க, அதை கெய்க்வாட் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
அதன்பின் தீக்சனா வீசிய 6வது ஓவரில் லக்னெள அணி இரு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் இழந்தது. 6-வது ஓவரின் 4வது பந்தில் மனன் வோரா 10 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார், அடுத்த பந்தில் கேப்டன் குர்னல் பாண்டியா அடித்த ஷாட், ஸ்லிப்பில் இருந்த ரஹானேவால் கேட்ச் பிடிக்கடவே விக்கெட்டை இழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டாய்னிஷை அதிரவைத்த ஜடேஜா பந்துவீச்சு
அடுத்து ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டார். தோனியின் முடிவுக்கும் கைமேல் பலன் கிடைத்தது. ஜடேஜா வீசிய 7-வது ஓவரின் 5வது பந்து அருமையான டர்ன் ஆகி, போல்டாகி ஸ்டாய்னிஷ் விக்கெட்டை சாய்த்தது.
டெஸ்ட் போட்டி பந்துவீச்சு போன்று இருந்ததைப் பார்த்த ஸ்டாய்னிஷ் என்ன நடந்தது என்பதை அறியாமல், சில வினாடிகள் திகைத்துப் போனார். அதன்பின் போல்ட் என்று தெரிந்தபின் பெவிலியன் திரும்பினார்.
கரன் சர்மா, நிகோலஸ் பூரன் இருவரும் சிறிது நேரம்தான் தாக்குப் பிடித்தனர். மொயின் அலி வீசிய 10வது ஓவரில் 4-வது பந்தில் ஸ்ட்ரைட் டிரைவை வலிமையாக அடிக்காமல் அவரிடமே கேட்ச் கொடுத்து கரன் சர்மா ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேயில் 3விக்கெட் இழப்புக்கு 31 ரன்களும் 10 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே லக்னெள அணி சேர்த்து பரிதாப நிலையில் இருந்தது.
இதே நிலை நீடித்தால் லக்னெள அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட கடப்பது கடினம் என கருதப்பட்டது. ஆனால், பூரன், பதோனி கூட்டணி நம்பிக்கையளிக்கும் வகையில் பேட் செய்தனர்.
தனி ஒருவனாக பதோனி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதிரடியாக ஆடக்கூடிய பூரன், பொறுப்புடன் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக பேட் செய்தார். தீக்சனா வீசிய 17-வது ஓவரில் பதோனி, ஒருசிக்ஸர், பவுண்டரி விளாசினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை எட்டியது.
பதிரனா வீசிய 18-வது ஓவரில் நிகோலஸ் பூரன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட பூரன் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சாஹர் வீசிய 19-வது ஓவரில் பதோனி, 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். பதிரனாவீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் ஆட்டமிழந்தார்.
பதோனி 33 பந்துகளில் 59 ரன்கள்(2பவுண்டரி, 4சிக்ஸர்கள்) என ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது திடீரென மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், மழை நிற்காமல் தொடர்ந்து பெய்துவந்தது.
இருமுறை நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்துவந்தபோதிலும் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதையடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












