இஷாந்த் ஷர்மாவின் மேஜிக் பந்துகள் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய திவாட்டியாவை கட்டிப் போட்டது எப்படி?

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இது பந்துவீச்சாளர்களின் ‘கோதா’ என்றுதான் சொல்லலாம்! ஐ.பி.எல். தொடரில் முதல் பகுதியில் பெரும்பாலான ஆட்டங்கள் பேட்ஸ்மேன்களின் ஆதிக்க போட்டிகளாக மாறிய நிலையில், 2வது பாதிப் போட்டிகள் பந்துவீச்சாளர்களின் வல்லமையை நிரூபிக்கும் ஆட்டங்களாக அமைந்துள்ளன.

அந்த வகையில் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 44-வது ஆட்டத்தில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை 125 ரன்களில் சுருட்டி 5 ரன்னில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் என்று தடுமாறிக் கொண்டிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை 130 ரன்களை சேஸிங் செய்யவிடாமல் டிஃபெண்ட் செய்தது.

டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா மிகப்பெரிய “கம் பேக்” கொடுத்தார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்றபோது, இசாந்த் சர்மா தனது அனுபவம், பந்துவீச்சில் மாற்றம் ஆகியவற்றால் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் பந்துவீசி டிஃபெண்ட் செய்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

ஷமியின் ‘டாப் கிளாஸ்’ பந்துவீச்சு

ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்தவீச்சாளர் முகமது ஷமிதான் நேற்று “ஹீரோ”. உலகத் தரம் வாய்ந்த டெஸ்ட் பந்துவீச்சை நேற்று டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஷமி வெளிப்படுத்தி, திணறவிட்டார்.

ஷமியின் “சீமிங்”, ஸ்விங் செய்யும் திறமை ஆகியவை டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களைச் சரணடையச் செய்தது. முதல் ஓவர் முதல் பந்திலேயே பில் சால்ட் விக்கெட்டை வீழ்த்திய ஷமி, பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள், பிரியம் கார்க், ரோஸ்ஸோ, மணிஷ் பாண்டே விக்கெட்டுகளை தனது ஸ்விங் பந்துவீச்சில் வீழ்த்தி பெரிய பாதாளத்துக்குள் டெல்லி கேபிடல்ஸை தள்ளினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடக்க இருக்கும் நிலையில் ஷமி பந்துவீச்சு மெருகேறியிருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். 4 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 19 டாட் பந்துகள் அளித்து, 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஷமி வீசிய 24 பந்துகளில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் வெறும் 5 பந்துகளில் மட்டும்தான் ரன் சேர்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

கணிப்புகள் மாறின

இரு அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியநிலையில், யாருடைய பந்துவீச்சு சிறப்பானது என்ற போட்டியில் இறுதியில் குஜராத் பந்துவீச்சைவிட, டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சுதான் ஆதிக்கம் செலுத்தியது.

வலிமையான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி 130 ரன்களை சேஸிங் செய்ய முடியாதா?, குஜராத் டைட்ஸன் அணி வெற்றிக்கு 85% வாய்ப்பு இருக்கிறது என்று கணிப்புகள் தொடக்கத்தில் வந்தன. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு, நெருக்கடி ஆகியவை கணிப்புகளை கடைசி நேரத்தில் மாற்றின.

இந்த போட்டி பல டிவிஸ்ட்களைக் கொண்ட ஆட்டமாகவும், தொடக்கத்தில் ஸ்வாரஸ்யம் குறைந்த ஆட்டமாக ரசிகர்களை வெறுப்பேற்றி, சேஸிங்கில் இருக்கை நுணியில் அமரவைத்தது. இந்த ஆட்டத்தின் பென்டுலம் பல்வேறு கட்டங்களில் பலமுறை சுழன்றது.

முதல் பாதியில் முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் அக்ஸர் படேல், அமான் கான் அரைசதம் முயற்சியால் பள்ளத்தில் இருந்து மீண்ட 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்தது.

நெருக்கடியில் குஜராத்

130 ரன்களை சேஸிங் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி தொடங்கியபோது, டெல்லி வீரர் கலீல் அகமது முதல் ஓவரில் சாஹா விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஆட்டத்தின் பென்டுலம் டெல்லி பக்கம் வந்துநின்றது. கலீல் அகமது, இசாந்த் சர்மா, குல்தீப் யாதவ் அளித்த பதிலடியால் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி வரை களத்தில் இருந்து அரைசதம் அடித்தநிலையில், கடைசி 2 ஓவரில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் பக்கம் திரும்பியது. ஹர்திக் பாண்டியாவின் ஒட்டுமொத்த உழைப்பும் இரு ஓவர்களில் வீணானது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களின் பதிலடி தாக்குதலுக்கு குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

இசாந்த் சர்மா ‘கம் பேக்’

விருதிமான் சாஹாவை(0) கலீல் அகமது வீழ்த்தியநிலையில், அருமையான ஃபார்மில் இருக்கும் கில்(6) நோர்க்கியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இசாந்த் சர்மா வீசிய அற்புதமான “நக்குல் பந்தில்” விஜய் சங்கர் ஏமாந்து 6 ரன்னில் கிளீன் போல்டாகினார். இசாந்த் சர்மா வீசிய இந்த பந்துதீன் இந்த சீசனில் சிறந்த பந்தாக இருக்க வேண்டும், அந்த அளவுக்கு மிகவும் அழகான, நேர்த்தியான, மிகத் துல்லியமான பந்தாகும். மில்லர் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இதனால், 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாறியது. பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களைத்தான் குஜராத் சேர்த்தது.

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

பவுண்டரிகள், சிக்ஸர்கள் பற்றாக்குறை

ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 10 ஓவர்களில்தான் குஜராத் அணி 50 ரன்களை எட்டியது. கடைசி 10 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு, 82 ரன்கள் தேவைப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர்களை அடிக்க முடியாமல் ஹர்திக் பாண்டியா, மனோகர் திணறியது, ரன்ரேட் நெருக்கடியை அதிகரித்தது. இந்த ஆட்டத்தில் குஜாரத் அணி ஒட்டுமொத்தத்தில் 9 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி 4 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது.

குல்தீப் யாதவ் 17-வது ஓவரை வீசி, 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18வது ஓவரை வீசிய கல்லீல் அகமது முதல் பந்திலேயே அபினவ் மனோகர்(26) விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்கு நெருக்கடியை அதிகப்படுத்தி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

திவேட்டியா 'ஹாட்ரிக்' சிக்ஸர்கள்

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

அடுத்து திவேட்டியா களமிறங்கினார். நோர்க்கியா 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத ஹர்திக் பாண்டியா, 2வது பந்தில் 2 ரன்களும், 3வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ஸ்ட்ரைக்கை திவேட்டியாவிடம் வழங்கினார்.

நோர்க்கியா 148கி.மீ வேகத்தில் ஃபுல்டாஸாக வீசிய பந்தை டீப் ஸ்குயர் லெக் திசையில் திவேட்டியா சிக்ஸருக்கு தூக்கியவுடன் ஆட்டத்தில் சூடு பறந்தது. 5வது பந்தை நோர்க்கியா லெக் திசையில் ஸ்லாட்டில் வீச, திவேட்டியா மிட்விக்கெட் திசையில் 2வது சிக்ஸரை விளாசி ஆட்டத்துக்கு உயிர் கொடுத்தார். கடைசிப் பந்தை 88 மீட்டர் உயரத்துக்கு லாங் –ஆன் திசையில் திவேட்டியா சிக்ஸர் விளாச ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவர் திக்... திக்...

கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடி பேட்ஸ்மேன்கள், திவேட்டியா, ஹர்திக் பாண்டி இருவரும் களத்தில் இருந்ததால் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று கணிக்கப்பட்டது. கடைசி ஓவரை அனுபவம்மிகுந்த இசாந்த் சர்மா வீச ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டார்.

இசாந்த் சர்மா வீசிய முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 2 ரன்களும், 2வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்து 3வது பந்து ஸ்ட்ரைக்கை திவேட்டியாவிடம் அளித்தார். ஆனால், 3வது பந்து வைடு யார்கராகச் செல்லவே, அதற்கு குஜராத் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், 3வது நடுவர் வைடு தரவில்லை.

இதனால் 3 பந்துகளில் 9ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 4-வது பந்தில் திவேட்டியா(20) ரோஸோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் பக்கம் சென்றது. அடுத்துவந்த ரஷித்கான் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க ஆட்டம் முழுமையாக டெல்லி வசம் சென்றது. கடைசிப் பந்தில் ரஷித்கான் ஒரு ரன் மட்டுமே சேர்க்க 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வென்றது.ஹர்திக் பாண்டியா 59ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

ஹர்திக் பாண்டியா தோல்விக்கு காரணமா?

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ஒட்டுமொத்த உழைப்பும் கடைசிஓவரில் வீணாகிப் போனது என்றுதான் கூற முடியும். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருந்தில் இருந்து ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தார். இதுபோன்ற குறைந்த ஸ்கோர்களை சேஸிங் செய்யும்போது, அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பது தேவைப்படும் ரன்ரேட்டை உயரவிடாமல் கட்டுக்குள் வைக்கும், இதைச்செய்யாமல் விட்டது ஹர்திக் பாண்டியாவின் மிகப்பெரிய தவறாகும்.

அது மட்டுமல்லாமல் களத்தின் தன்மையை அறிந்து செட்டில் ஆன பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா இருக்கும் போது, கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை திவேட்டியாவிடம் வழங்கியிருக்கக் கூடாது. திவேட்டியா 19-வது ஓவரில் ஹாட்ரிக் சிஸ்கர்களை அடித்தாலும், வெற்றிக்கான ரன்களையும் அடிக்க அவர் மீது கடைசி ஓவரில் சுமையை ஏற்றியது தவறாகும்.

கடைசி ஓவரின் 2வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஒரு ரன் சேர்க்காமல், ஸ்ட்ரைக்கை தானே வைத்திருந்தால், இசாந்த் சர்மா பந்தில் நிச்சயம் சிக்ஸர் , பவுண்டரி விளாசி அணியை வெல்ல வைத்திருக்கலாம்.

நான்தான் பொறுப்பு

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வி குறித்துக் கூறுகையில் “ கடைசி நேரத்தில் 2 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தது ஆட்டத்தின் திருப்புமுனை. என்னால்முடிந்த வரை பங்களிப்பு செய்தேன், இருந்தும் என்னைவீழ்த்தியது. நடுப்பகுதியில் இரு ஓவர்களில் அடித்துஆடலாம் எனத் திட்டமிட்டோம், ஆனால், எங்களுக்கான ரிதம் கிடைக்கவில்லை. அபினவ் மனோகர் இதுபோன்ற சூழலை முதல்முறையாகச் சந்திக்கிறார்.

ஒட்டுமொத்த வெற்றியும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களுத்தான், என்னால் ஆட்டத்தை முடிக்கமுடியவில்லை. ஆடுகளம் நன்றாக இருந்தது, ஆடுகள சற்று மெதுவாக இருந்ததேத் தவிர பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்தத் தவறவிட்டனர். தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், செட்டில்ஆவதற்கு சிறிது அவகாசம் இருந்தது.

ஆனால், வெல்ல வேண்டும் என்ற நோக்கம், டெல்லி வீரர்களுக்கு அதிகமாக இருந்தது. திவேட்டியா போட்டியில்திருப்புமுனையை ஏற்படுத்தினாலும், ஆட்டத்தை என்னால் முடிக்கமுடியவில்லை. இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடவில்லை என்றாலும், குறிப்பாக நான் ஆட்டத்தை முடிக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. இந்த தோல்வி எங்களுக்குப் பாடம், இதில் கிடைத்த பாடங்களைக் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம் ” எனத் தெரிவித்தார்

டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் எப்படி?

குஜராத் பந்துவீச்சாளர் முகமது ஷமியின் வேகப்பந்துவீச்சின் கட்டுப்பாட்டுகள் முழுமையாக டெல்லி கேபிடல்ஸ் அணி வந்தது என்றுதான் சொல்ல முடியும். ஆனால், கடைசி நேரத்தில் அக்ஸர் டேல், ரிப்பால் படேல், அமான் கான் ஆகியோரின் ஆட்டம்தான் டெல்லி அணியை மிகப்பெரிய அவமானத்தில் இருந்து காத்தது. இவர்கள் 3 பேரும் சொதப்பி இருந்தால், டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர் 50 ரன்களைத் தாண்டுவதே கடினமாகி இருக்கும்.

பவர்ப்ளே ஓவருக்குள் ஷமியின் மிரட்டல் வேகம், ஸ்விங் பந்துவீச்சு ஆகியவற்றால் 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேபிடல்ஸ் அணி தடுமாறியது.

இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி 100ரன்களைத் தாண்டுவதே கடினம் என எண்ணப்பட்டது. ஆனால், அமன் கான், அக்ஸர் படேல் இருவரும் அணியை பெரிய பள்ளத்தில் இருந்து மீட்டு, 50 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். அக்ஸர் படேல் 27 ரன்னில் மோகித் சர்மாபந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்துவந்த ரிப்பால் படேலுடன்,அமான் கான் பார்ட்னர்ஷிப் அமைத்து 50ரன்களைச் சேர்த்தார். அமான் கான் 44 பந்துகளில் 51ரன்கள்(3சிக்ஸர்,3பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். ரிப்பால் படேல் 23 ரன்களில் வெளியேறினார். ரிப்பால் படேல், அமான் கான் இருவரும் சேர்ந்து 16 முதல் 18 ஓவர்கள் வரை 41 ரன்களையும் கடைசி 5ஓவர்களில் 52 ரன்களைச் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஸ்கோரால்தான் டெல்லி கேபிடல்ஸ் கவுரமான 130ரன்களை எட்ட முடிந்தது. இல்லாவிட்டால் 100 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது.

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

ஆடுகளம் எப்படி?

அகமதாபாத் ஆடுகளம் மிகவும் மோசமானது, பந்துவீச்சாளர்களுக்குத்தான் சாதகம் என்றெல்லாம் கூறவிடமுடியாது. பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத, லக்னெள ஆடுகளம் போல் இல்லை. புதிய பந்தில், வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஸ்விங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதைத் தவிர பெரியதாக சிரமம் ஏதும் இல்லை. சுழற்பந்துவீச்சாளர்களுக்குகூட பந்துகள் பெரியாத டர்ன் ஆகவில்லை.

பேட்ஸ்மேன்கள் இந்த ஆடுகளத்தில் விளையாடும்போது ஆடுகளத்தை அறிய களத்தில் சில ஓவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தாலே போதுமானது. பின் தங்களின் இயல்பு ஆட்டத்துக்கு திரும்பிவிடலாம். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் எந்த பேட்ஸ்மேனும் செட்டில் ஆகவில்லை என்பதுதான் நிதர்சனம். இதில் ஹர்திக் பாண்டியா, அமான் கான், அக்ஸர் படேல் ஆகியோர் மட்டுமே விலக்கு.

GT vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

ஷமிக்கு வார்னர் புகழாரம்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பாடு பிரமாண்டமாக இருந்தது, பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் தடுமாறினர். இருப்பினும் ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது, எங்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். அமன் கான், ரிப்பால், அக்ஸர் பக்கபலமாக இருந்தார்கள். ஆட்டம் இவ்வளவு பரபரப்பாகச் செல்லும் என நினைக்கவில்லை, எங்கள் வீரர்கள் நேர்மறை எண்ணத்துடன் ஆடியதும் ஒரு காரணம். கலீல், இசாந்த், ஆன்ரிச் பந்துவீச்சு அருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: