கோலி vs கம்பீர்: "இருவருக்கும் தடை விதியுங்கள்" - கொந்தளிக்கும் கவாஸ்கர், சமாதானத்துக்கு முயலும் ரவி சாஸ்திரி

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், SOCIAL MEDIA

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் ஐ.பி.எல். மேளாவின் பக்கம் பார்வையை பதித்திருந்த கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கோலி - கம்பீர் மோதலை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இந்த மோதல் எங்கிருந்து தொடங்கியது? ஆட்டத்தின் நடுவே நவீன் உல்ஹக் - விராட் கோலி இடையிலான வாக்குவாதம்தான் அதன் தொடக்கப்புள்ளியா? கோலி - கம்பீர் இடையே தனிப்பட்ட முறையில் ஏதேனும் மோதல் இருக்கிறதா? கோலி தனது ஷூவைக் காட்டி நவீனை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தது சரியா? அபராதம் விதிப்பதன் மூலம் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க முடியுமா? 2008-ம் ஆண்டு நடத்தை விதிகள் மீறப்பட்ட போது ஐ.பி.எல். நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது? என பல தரப்பிலும் பல விதங்களில் பெரும் விவாதமே நடந்து வருகிறது. கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் ஆகியோருடன் முன்னாள் வீரர்களும் கூட இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காட்டிலும், போட்டிக்குப் பின்னர் நடந்தேறிய கோலி - கம்பீர் மோதல்தான் இன்றும் கூட சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் பேசுபடு பொருளாக மாறி நிற்கிறது. அதன் பிறகு, நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் ஆட்டம் நடந்து முடிந்திருந்தாலும் கூட, அதையும் தாண்டி கோலி - கம்பீர் மோதலே தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான, பெரும் ரசிகர்களைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இன்று இருந்தாலும் கூட நிலைமையில் மாற்றம் இல்லை. அவற்றையெல்லாம் தாண்டி எங்கும் கோலி - கம்பீர் விவகாரமே விவாதிக்கப்படுகிறது.

கோலி vs காம்பீர் நடந்தது என்ன?

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், Getty Images

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 17-வது ஓவரின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த லக்னோ வீரர் நவீன் உல்-ஹக்கை விராட் கோலி சீண்ட, இருவருக்கும் நடுவே வாக்குவாதம் மூண்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவைக் காட்டி நவீனை நோக்கி ஏதோ கூற, அது போட்டி முடிந்த பின்னரும் எதிரொலித்தது. இரு அணி வீரர்களும் கைகுலுக்கும் நிகழ்வில் சந்தித்துக் கொண்ட போது இருவரும் சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்ள நிலைமை மோசமானது.

அடுத்த சில நிமிடங்களில் கோலியிடம் பேசிக் கொண்டிருந்த லக்னோ அணி வீரர் கைல் மேயர்சை அதன் ஆலோசகரும், முன்னாள் இந்திய வீரருமான கவுதம் கம்பீர் வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்துச் செல்லவும் நிலைமை ரசவாதமாகிப் போனது. கடுமையாக மோதிக் கொண்ட கோலி - கம்பீரை இரு அணி வீரர்களும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

களத்தில் கோலியால் கசப்பை எதிர்கொண்ட நவீன், போட்டிக்குப் பிறகு தனது அணி கேப்டன் லோகேஷ் ராகுல் சமாதானத்திற்கு அழைத்தும் பேச மறுத்துவிட்டார்.

தனிப்பட்ட கசப்பா? நவீன் மோதல்தான் காரணமா?

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், Getty Images

கோலி - கம்பீர் மோதலுக்கு காரணம் தனிப்பட்ட கசப்பா? ஆட்டத்தின் நடுவே நவீன் உல்ஹக் - கோலி வாக்குவாதமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், பெங்களூருவில் இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் லக்னோ வெற்றி பெற்றதும், மைதானத்தில் பெங்களூரு அணிக்காக ஆரவாரித்த ரசிகர்களை நோக்கி, "வாயை மூடி அமைதியாக இருங்கள்" என்று கம்பீர் சைகை காட்டுவது தொலைக்காட்சி நேரலையில் காட்டப்பட்டது.

லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் குருணால் பாண்டியா ஆட்டமிழந்ததும் ரசிகர்களை நோக்கி, "மவுனம் வேண்டாம், ஆரவாரம் செய்யுங்கள்" என்று சைகை செய்தது கம்பீருக்கு அவர் கொடுத்த பதிலடியாகவே ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டனாக கோலியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கேப்டனாக கம்பீரும் இருந்த போது களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் லக்னோவுக்கு எதிராக கோலி 'ஸ்பெஷல் உத்வேகம்' காட்டியதை ரசிகர்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதி வெகுவாக ரசித்தனர். களத்தில் கூடுதல் உத்வேகம் காட்டிய கோலி, அதன் நீட்சியாகவே நவீன் உல்ஹக்கை சீண்டியதாகவே அவர்கள் கருதினர். ஆனால், கோலி ஷூவைக் காட்டி ஏதோ கூறியது நவீனை வெகுவாக காயப்படுத்த, வீரர்கள் கை குலுக்கும் போது அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளும், கம்பீர் தலையிட்ட விதமும் நிலைமையை மோசமாகிவிட்டதாக ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகின்றனர்.

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், Getty Images

களத்திற்கு வெளியேயும் நீடிக்கும் கோலி vs நவீன் உல்ஹக்

கோலி - நவீன் இடையிலான மோதலின் எதிரொலி களத்திற்கு வெளியேயும் நீடிக்கிறது. போட்டி முடிந்த பிறகு கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நாம் கேள்விப்படும் அனைத்தும் கருத்துகள் தானே தவிர உண்மையல்ல. நாம் பார்க்கும் அனைத்தும் நமது கண்ணோட்டம்தானே தவிர, உண்மை அல்ல" என்ற மார்கஸ் அரேலியஸ் கூற்றை ஸ்டோரியாக வைத்திருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த வீடியோவில் தோன்றும் கோலி, "நீங்கள் எதைக் கொடுக்கிறாயோ அதனை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும. இல்லாவிட்டால் கொடுக்க வேண்டாம்" என்று கூறும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

மறுபுறம், கோலியுடன் களத்தில் மோதிக் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் நவீன் உல்-ஹக்கோ, "உங்களுக்குத் தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள், அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே செல்கிறது" என்ற வாசகங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தார்.

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், Getty Images

கோலிக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் ஏன்?

ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதாக கோலி, கம்பீருக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவீதமும், நவீன் உல்ஹக்கிற்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கம்பீரும், நவீன் உல் ஹக்கும் சில லட்ச ரூபாய்களை இழக்கும் அதேநேரத்தில் விராட் கோலிக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு நேரிடுகிறது. கோலி, கம்பீர் ஆகிய இருவருக்கும் 100 சதவீதம் அபராதம்தான் என்றாலும், ஒரு போட்டிக்கு கோலி பெறும் ஊதியம் அதிகம் என்பதே இந்த வித்தியாசத்திற்கு காரணமாகிறது.

ஒரு சீசனில் ஓர் அணி அதிகபட்சம் 16 போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும் என்பதால், ஒரு போட்டிக்கு ஒரு வீரர் பெறும் ஊதியம் எவ்வளவு என்பதை அதன் அடிப்படையில் கணக்கிட்டு அபராதமாக வசூலிக்கப்படும். அதன்படி பார்க்கும் போது, ஒரு சீசனுக்கு 17 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறும் விராட் கோலி, ஒரு போட்டிக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளமாக வாங்குகிறார். லக்னோ போட்டிக்கு வாங்கிய ஊதியம் மொத்தமும் அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்படுகிறது.

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், BCCI/IPL

மோசமான செயல்களைத் தடுக்க அபராதம் மட்டும் போதுமா?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், மேற்கூறிய ஊதிய கணக்கீடுகளைக் குறிப்பிட்டு, "விராட் கோலியிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் வசூலிப்பது கடுமையான நடவடிக்கைதான்" என்று குறிப்பிட்டார்.

அபராதம் விதிப்பதால் களத்தில் மோசமான செயல்கள் மீண்டும் நடக்காமல் தடுத்து விட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். அறிமுக தொடரில் ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் மோதலின் போது ஐ.பி.எல். நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையை நினைவூட்டினார். அதேபோல், கோலி - கம்பீர் ஆகிய 2 பேருக்கும் சில போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தால் மட்டுமே இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டார்.

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?

பட மூலாதாரம், Getty Images

2008-ல் ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் இடையே என்ன நடந்தது?

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். அறிமுக தொடரில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய ஆட்டத்தின் போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தை மும்பை அணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்து விட்டார். முதல் தொடரிலேயே நடந்துவிட்ட இந்த மோசமான நிகழ்வால் அதிர்ச்சியடைந்த ஐ.பி.எல். நிர்வாகம், ஹர்பஜன் சிங் எஞ்சியிருந்த போட்டிகளில் விளையாட தடை விதித்துவிட்டது.

அந்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்றாவது போட்டிதான். மீதமிருந்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால், ரூ.3.24 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஹர்பஜன் சிங் சுமார் 3 கோடி ரூபாயை இழந்துவிட்டார். கோலி - காம்பீர் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங்கும், 2008-ம் ஆண்டு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். 2008-ம் ஆண்டு நிகழ்வுக்காக தான் வெட்கப்படுவதாகவும், கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் கோலி இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஸ்லெட்ஜிங் ஏன்? மகளிர் கிரிக்கெட்டிலும் அது நடக்கிறதா?

கோலி - கம்பீர் மோதலுக்கு வித்திட்டதாக கருதப்படும் நவீன் உல்ஹக்கை கோலி சீண்டிய நிகழ்வே கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் என்று அழைக்கப்படுகிறது. ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் எதிரணி வீரரை வார்த்தைகளால் சீண்டுவதன் மூலம் அவரது கவனத்தை திசை திருப்பவும், மன வலிமையை சீர்குலைக்கவும் ஸ்லெட்ஜிங்கை ஓர் உத்தியாகவே சில வீரர்கள் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீராங்கனை ஷைலஜா சுந்தரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஆஸ்திரேலிய வீரர்கள்தான் ஸ்லெட்ஜிங்கில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். இந்தியாவில் அது மிகவும் குறைவுதான். அண்மைக்காலமாக இங்கும் நிலைமை மாறி வருகிறது. ஐ.பி.எல். போன்ற போட்டி நிறைந்த உள்நாட்டுத் தொடர்களில் ஸ்லெட்ஜிங் தலைதூக்குகிறது. கோலி - கம்பீர் சர்ச்சையைப் பொருத்தவரை நான் நேரலையில் அதனைப் பார்க்கவில்லை. சமூக வலைதளங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன். இருவரையும் சமாதானப்படுத்த தயார் என்று ரவி சாஸ்திரி கூறியிருப்பதாக செய்திகளில் அறிந்தேன்.

கோலி vs கம்பீர்: அபராதம் போதுமா?
படக்குறிப்பு, கிரிக்கெட் வீராங்கனை ஷைலஜா சுந்தர்

விளையாட்டில் ஸ்லெட்ஜிங் சகஜமான ஒன்றுதான். அப்போது வெளிப்படும் வார்த்தைகள் விளையாட்டு சார்ந்ததாக மட்டும் இருக்கும் பட்சத்தில் பிரச்னை இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் வார்த்தைகளை உதிர்க்கும் போதுதான் பிரச்னையாகி விடுகிறது." என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த ஷைலஜா சுந்தர், "மகளிர் கிரிக்கெட்டைப் பொருத்தவரை ஸ்லெட்ஜிங் பெரிய அளவில் இல்லை. ஏனெனில், மகளிர் கிரிக்கெட்டிற்கு இப்போதுதான் படிப்படியாக அங்கீகாரம் கிடைத்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டிலும் கூட வீராங்கனைகளுக்கு இடையே நல்ல நட்புணர்வு நிலவுகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வோம். விளையாடும் போதும் நான் ஸ்லெட்ஜிங் செய்ததும் இல்லை. ஸ்லெட்ஜிங்கை எதிர்கொண்டதும் இல்லை. என் கண்ணெதிரே ஸ்லெட்ஜிங் நடந்ததும் இல்லை" என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: