வினேஷ் போகாட்: "பிரிஜ் பூஷண் பற்றி பிரதமர் மோதியிடம் முன்பே புகார் சொன்னேன்"

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வினேஷ் போகாட்

பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தொடர்பான புகார்களை 2021 டோக்யோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதியிடம் குறிப்பிட்டதாக, பிபிசி உடனான உரையாடலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் கூறினார். இருப்பினும் அந்த உரையாடலில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் பற்றி எதுவும் பேசப்படவில்லை என்றார் அவர்.

பிரதமர் மோதியிடம் சொன்ன பிறகு விளையாட்டுத்துறை அமைச்சரிடம், "கொஞ்சம் வெளிப்படையாக விஷயங்களைச் சொன்னதாக" வினேஷ் கூறினார். ஆனால் நான் பேசிய விஷயம் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் சென்றது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடமிருந்து நேரடியாக கருத்துக்களைப் பெற முடியவில்லை.

ஆனால் விளையாட்டுத் துறையும், விளையாட்டு வீரர்களும் இந்திய அரசாங்கத்திற்கு முக்கியமானவர்கள் என்றும், எனவே இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்வதற்கு வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அனுராக் தாக்கூரை வீரர்கள் சந்தித்துத் திரும்பிய பிறகும் அவர்களின் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமைச்சரை சந்தித்த போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வினேஷ் கூறினார். மேற்பார்வை குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்வது சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் `மேரி கோமை குழுவின் தலைவராக நியமிப்பதற்கு முன்பு, அவர் இதற்கு தயாராக இருக்கிறாரா என்று ஏன் கேட்கவில்லை` என்றும் வினேஷ் போகாட் கேள்வி எழுப்பினார்.

"சர்வதேச விளையாட்டு போட்டிகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், இது யாருடைய காதுகளிலாவது விழுகிறதா இல்லையா" என்று வினேஷ் கேள்வி எழுப்புகிறார்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

மல்யுத்த வீரர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அதே வேளையில், இது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் காவல்துறையிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வியும் முன்வக்கப்பட்டு வருகிறது.

இதனுடன், பிரிஜ் பூஷண் சரண் சிங்குடன் மல்யுத்த வீரர்கள் உள்ள சில படங்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதனால் அவர்களின் உள்நோக்கங்கள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

டெல்லி ஜந்தர் மந்தர் தளத்தில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் பிற சக மல்யுத்த வீரர்களும், அவர்களுடைய பயிற்சியாளர்களும் , பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷண் மறுத்து வருகிறார்.

வினேஷ் போகாட், விளையாட்டு, இந்தியா

உச்ச நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு, டெல்லி காவல்துறை இந்த விஷயத்தில், இரண்டு வழக்குளை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. அதன் பிறகும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, டெல்லி காவல்துறை தன்னை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் விசாரணைக்குழு தொடர்பு கொண்டால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாகவும் பிபிசி செய்தியாளர் ஆனந்த் ஜனானே உடனான உரையாடலில் பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறினார்.

பிரதமர் மோதி உட்பட அரசின் பல மூத்த அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“டோக்யோ ஒலிம்பிக்கிற்கு பிறகு பிரதமரை சந்தித்தபோது, அவர் என்னைத் துன்புறுத்துகிறார், பிரச்னை ஏற்படுத்துகிறார் என்று சில விஷயங்களை சொன்னேன். பாலியல் துன்புறுத்தல் பற்றி நான் அவரிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் மனரீதியாக சித்ரவதை செய்கிறார் என்று சொன்னேன்,” என்று வினேஷ் போகாட் தெரிவித்தார்.

அதைக் கேட்ட பிரதமர் "கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நீங்கள் சோகமாக இருக்க நான் விடமாட்டேன் என்று பதிலளித்தார்,”என்றும் குறிப்பிடுகிறார் வினேஷ்.

"இதன் பிறகு நான் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லா விஷயங்களையும் கூறினேன். இந்த விஷயங்கள் அமைச்சகத்திலிருந்து வெளியே கசிந்துவிட்டதால் எனது நம்பிக்கை உடைந்துவிட்டது,” என்று வினேஷ் கூறுகிறார்.

"உயிருக்கு ஆபத்து"

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வினேஷ் கூறி வருகிறார்.

"அவர் (பிரிஜ் பூஷண் சரண் சிங்) வெளியில் இருந்தால் நாங்கள் எப்படி மல்யுத்தம் செய்ய முடியும்? அவருக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பி இருக்கிறோமே. இதனால் எங்களுடைய குடும்பங்கள் மிகவும் வருத்தப்படுகின்றன. அவருக்கு (பிரிஜ் பூஷண் சிங்) எதிராக புதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளின்படி இந்நேரம் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமா, இல்லையா? அவருடைய இடத்தில் ஒரு சாதாரண ஆள் இருந்திருந்தால் கைதாகி இருக்க மாட்டாரா" என்று வினேஷ் போகாட் கேள்வி எழுப்புகிறார்.

ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மல்யுத்த வீரர்களின் ஆர்ப்பாட்ட இடம், போலீஸ் தடுப்புகளால் நாலாபுறமும் வழி மறிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி உள்ளே செல்லும் மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் பைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

சாலையில் நிறுவப்பட்டுள்ள மேடையின் கீழே மெத்தைகள் போடப்பட்டு, அதில் வீரர்களின் ஆதரவாளர்கள் அமர்ந்துள்ளனர். சில சமயம் தெரிந்தோ தெரியாமலோ காலணிகளை அணிந்து கொண்டு சிலர் அந்த மெத்தை மீது ஏறுவதையும் கவனிக்க முடிந்தது.

வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் கூடாரத்தின் கீழே ஒரு மூலையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் சில நேரங்களில் ஓய்வெடுப்பதையோ கைபேசியில் பிஸியாகவோ உள்ளனர்.

கடந்த ஒன்பது நாட்களை வெப்பம், மழை மற்றும் கொசுக்கடிகளுடன் வீரர்கள் கடந்துள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாததால் பலர் கோபத்துடன் காணப்பட்டனர். அருகே உள்ள சில இடங்களில் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், பிரிஜ் பூஷண் சரண் சிங் ராஜிநாமா செய்ய தயாராக இல்லை.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Empics

"நான் யாருக்கும் எந்த அநியாயமும் செய்யவில்லை. தவறாக நடந்து கொள்ளவில்லை. நான் அவர்களை குடும்பத்தின் குழந்தைகளைப் போல நடத்தினேன், நான் அவர்களுக்கு மிகுந்த அன்பையும் மரியாதையையும் கொடுத்துள்ளேன். என் அன்பும் மரியாதையும் என் கழுத்துக்கு சுருக்குக்கயிறாக மாறியிருப்பது என் துரதிருஷ்டம்,” என்று பிபிசி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகிறார்.

போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ள போதிலும் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு, "டெல்லி காவல்துறைதான் இதற்கு பதிலளிக்க முடியும்ஸ" என்று கூறுகிறார்.

தனது கட்சிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது தனது இமேஜை பாதிக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"தற்போது போராடும் வீரர்கள், இவ்வளவு காலமாக ஏன் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை? ஏன் விசாரணைக்கு காத்திருக்கவில்லை? அவர்கள் ஏன் தர்ணாவில் அமர்ந்திருக்கிறார்கள்? டெல்லி காவல்துறையை அவர்கள் நம்பவில்லையா? என் ராஜிநாமாவால் டெல்லி காவல்துறையின் விசாரணை முடிந்து விடுமா? நீதித்துறையை விட நான் பெரியவனா? ஒரு குற்றவாளி என்ற பெயருடன் நான் பதவி விலக மாட்டேன்,” என்று பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்தார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

வினேஷ் போகாட், விளையாட்டு, இந்தியா
படக்குறிப்பு, சானியா, போராட்டத்தில் கலந்து கொண்டவர்

இந்த போராட்டத்தை காணவும், அதில் பங்கேற்கவும் சமூகத்தின் பல பிரிவுகளில் இருந்து மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

துக்ளகாபாத்தில் வசிக்கும் சானியா, கபடி விளையாடுபவர். தனது சகோதரர் யாசிருடன் சேர்ந்து இந்த போராட்டத்திற்கு வந்தார். 17 வயதான சானியா, மூன்று ஆண்டுகளாக கபடி கற்று வருகிறார்.

ஆரம்பத்தில் இது ஒரு பொழுதுபோக்காக இருந்தது, பிறகு நான் இதைத்தான் விளையாட வேண்டும் என்று உணர்ந்தேன். இப்போது கபடியில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று அவர் கூறுகிறார்.

“இன்று அவர்களுக்கு நடந்தது, நாளை எங்களுக்கும் நடக்கலாம். இதனால் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக பெண்கள் அனைவரும் வந்து உட்கார வேண்டும்.இன்று நான் தனியாக வந்திருக்கிறேன். நாளை முழு அணியுடன் வருவேன்,” என்றார் அவர்.

ராகுல் பில்வாரா தனது ஆறு வயது மகளுடன் டெல்லி கரோல்பாக்கில் இருந்து வந்திருந்தார்.

வினேஷ் போகாட், விளையாட்டு, இந்தியா
படக்குறிப்பு, பிரிஜ் பூஷண் சரண் சிங்

"இவர்கள் பிரபல விளையாட்டு வீரர்கள். இவர்களால் குரல் எழுப்ப முடியும். ஆனால் குரலை உயர்த்த முடியாத ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? நமது மகள்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

இம்ரான் கிளேருக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை 15-20 ஆண்டுகளாக தெரியும்.

"நாங்கள் அவரை கடவுளாக கருதுகிறோம். மாநில அளவில் பதக்கம் வாங்குபவர் சிறந்த மல்யுத்த வீரராக கருதப்படுகிறார். இவர் ஒலிம்பிக் மல்யுத்த வீரர். இவர்களுக்காக நாம் எதை செய்தாலும் அது தகும். இந்த குழந்தைகளின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் மிகப் பெரிய பிரபலங்கள். சல்மான் கான், ஷாரூக் கான் இவர்களுக்கு முன்னால் ஒன்றுமில்லை. எந்த பிரபலத்தின் குழந்தையாவது பதக்கம் வென்றுள்ளதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்கிறது.

"இந்த விவகாரத்தில் நான் செய்வதறியாது தவிக்கிறேன். விளையாட்டில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவது போல தெரிகிறது ," என்று வினேஷ் கவலையுடன் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: