போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை

மல்யுத்த வீராங்கனைகள்

பட மூலாதாரம், SAJAD HUSSAIN

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாகவும், பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும் கூறி போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் இரண்டாவது நாளாக ஜனவரி 19, வியாழனன்று புது தில்லியின் ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகாட், தர்ணாவில் ஈடுபட்டருக்கும் வீரர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பபிதா போகாட் மத்திய அரசின் மத்தியஸ்தராக வந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பஜ்ரங் பூனியா தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். நாங்கள் நாட்டிற்காக சண்டையிடுவது போல எங்கள் உரிமைகளுக்காகவும் சண்டையிடுவோம்,” என்றார் பூனியா.

மத்திய அரசாங்கம் எப்போதும் வீரர்களின் நலனைப் பேணும் என்று போராடுபவர்களிடம் கூறியதாக பபிதா போகாட் தெரிவித்தார்.

முன்னதாக காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்யுத்தம்

பட மூலாதாரம், ANI

போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகாட், "பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்பின் ஆதரவுபெற்ற சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடக்கின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பின்னர், என்னை அவர் எதற்கும் பயனற்றவர் என்று அழைத்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள ரீதியாக என்னை துன்புறுத்தியது. என் வாழ்வை முடித்துகொள்ளலாமா என்று ஒவ்வொரு நாளும் எண்ணத் தொடங்கினேன். எந்த மல்யுத்த வீரர்களுக்கு எதாவது ஆனாலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு. பெண்கள் மல்யுத்த வீரர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய 10-20 சம்பவங்கள் எனக்குத் தெரியும். இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். எந்த ஒரு விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள் ” என்று தெரிவித்ததாக ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

“அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். எங்களைச் சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை. நாங்கள் குரல் எழுப்பியதால், நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம்” என்று ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர்கள் தற்போதைய சர்வாதிகாரத்தை பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம். இங்குள்ள பெண்கள் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு நம் சகோதரிகள் & மகள்கள் பாதுகாப்பாக இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. கூட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சாக்‌ஷி மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய மல்யுத்த வீரர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். புதிய கூட்டமைப்பு அமைய வேண்டும். கீழ் நிலையில் இருந்து அழுக்கு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி விவரங்களை கூறுவோம். சில விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மல்யுத்தம்

தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டியளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், “போராட்டத்தில் அமர்ந்திருக்கும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கிற்குப் பிறகு எந்த தேசியப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கூட்டமைப்பு துன்புறுத்தியதாக முன்னால் இருக்கும் வீரர்கள் யாராவது கூறுகின்றனரா? கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்புடன் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா? புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும்போது சிக்கல்கள் எழுகின்றன. பாலியல் துன்புறுத்தல் எதுவும் நிகழவில்லை. அப்படி நடந்திருந்தால் நானே தூக்கிட்டு கொள்வேன்.பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. இதில் எனது சொந்த பெயர் இழுக்கப்பட்டுள்ள நிலையில் நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? எந்த விசாரணைக்கும் நான் தயார் ” என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: