கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபிலிப்பா ராக்ஸ்பி & ஜிம் ரீட்
- பதவி, சுகாதார செய்தியாளர்கள்
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வின் பின்னணியில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் மாத்திரை "நல்லதல்ல" என்றும், கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்க "கடுமையாகப் போராட வேண்டும்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். அதற்கு மாறாக அமைந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு "நிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் கருத்துகள் அந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டன. 'தி லான்செட்' மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வு மிகவும் துல்லியமானது என்றும், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இன்னும் கூறி வருகின்றனர்.
கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமாலை (அமெரிக்காவில் 'அசிட்டமினோஃபென்' என்று அழைக்கப்படுகிறது), கர்ப்ப காலத்தில் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படக்கூடும் என்று டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாதங்கள் பெண்களிடையே குழப்பத்தையும், சுகாதார நிபுணர்களிடையே கவலையையும் ஏற்படுத்தின. இதுவே இந்தப் புதிய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது.
'லான்செட் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்' (The Lancet Obstetrics, Gynaecology & Women's Health) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, லட்சக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்ட 43 வலுவான ஆய்வுகளை ஆராய்ந்தது. குறிப்பாக, பாராசிட்டமால் உட்கொண்ட தாய்மார்களின் கர்ப்ப காலத்தையும், உட்கொள்ளாதவர்களின் கர்ப்ப காலத்தையும் ஒப்பிட்ட ஆய்வுகளை அது ஆராய்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
உடன் பிறந்தவர்களைக் கொண்டு செய்யப்பட்ட உயர்தர ஆய்வுகளைப் பயன்படுத்தியதன் மூலம், மரபணுக்கள் மற்றும் குடும்ப சூழல் போன்ற பிற காரணிகளைத் தங்களால் நிராகரிக்க முடிந்ததாகவும், இதனால் இந்த ஆய்வு 'மிகவும் உயர்தரமானது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சி பாரபட்சமற்ற ஆய்வுகளையும், ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கண்காணித்த ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது.
"நாங்கள் இந்த ஆய்வைச் செய்தபோது, பாராசிட்டமால் ஆட்டிசம் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படும் கூற்றுடன் எந்தத் தொடர்போ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை," என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், மகப்பேறு மருத்துவருமான பேராசிரியர் அஸ்மா கலீல் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "வழிகாட்டுதல்படி உட்கொள்ளும்போது, கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான தேர்வாகவே நீடிக்கிறது என்ற செய்தி தெளிவாக உள்ளது," என்று கூறினார். இது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய மருத்துவ அமைப்புகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்துகிறது.
பாராசிட்டமால் மருந்துக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தொடர்புகள், மருந்தின் நேரடி விளைவைவிட பிற காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
"கர்ப்பிணிகளுக்கு வலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து பாராசிட்டமால் என்பதால் இது மிகவும் முக்கியமானது," என்று லண்டன் சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக் கழகத்தின் தாய்-சேய் மருத்துவப் பேராசிரியர் அஸ்மா கலீல் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கர்ப்ப காலத்தில் அதிக வெப்பநிலையைக் குறைக்கவோ அல்லது வலியைப் போக்கவோ பாராசிட்டமால் எடுக்காவிட்டால், அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார ஆலோசனைகள் எச்சரிக்கின்றன. இது கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத மருத்துவ நிபுணர்களும் இதன் முடிவுகளை வரவேற்றுள்ளனர். இது பெண்களிடையே உள்ள கவலையைக் குறைக்க உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கிரெய்ன் மெக்கலோனன் இதுகுறித்துப் பேசியபோது, "தலை வலிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியால் எழும் மன அழுத்தத்திற்கு கர்ப்பிணிகள் ஆளாக வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் இயன் டக்ளஸ், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத தாய்மார்களுக்கு இடையே இருக்கும் அடிப்படை நோய்கள் போன்ற முக்கிய வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாத தரம் குறைந்த ஆய்வுகளைத் தவிர்த்துள்ள காரணத்தால் இந்த ஆய்வு "சிறப்பாக நடத்தப்பட்டது எனக் கூறலாம்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பெர்கன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு நரம்பியல் விஞ்ஞானியும் மனநல மருத்துவருமான பேராசிரியர் ஜான் ஹாவிக், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது ஆட்டிசம், ஏடிஹெச்டி அல்லது அறிவுசார் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்காது என்பதற்கு இந்த ஆய்வு "வலுவான ஆதாரங்களை" வழங்குவதாகவும், "இந்தக் கேள்விக்கு இது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனவும் கூறினார்.
ஆட்டிசம் என்பது மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் உள்படப் பல சிக்கலான காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது என்பது இந்தத் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பொதுவான கருத்தாகும்.
அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் (பாராசிட்டமாலுக்கான அமெரிக்க பெயர்) பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளனர்" என்றார்.
உதாரணமாக, ஆகஸ்ட் 2025இல் ஹார்வர்ட் டி.ஹெச். சான் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் மருத்துவர் ஆண்ட்ரூ பாக்கரெல்லி தலைமையிலான ஆய்வு ஒன்றில், கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆட்டிசம் மற்றும் ஏடிஹெச்டி அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக "அதிகமான அல்லது நீண்ட காலப் பயன்பாடு" குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், ஆட்டிசம் பாதிப்புகள் திடீரென அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறியப் போவதாக உறுதியளித்திருந்தார்.
செப்டம்பர் மாதம் ஓவல் அலுவலகத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையில், கர்ப்பிணிகளுக்கு இந்த வலி நிவாரணியைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து இதுதான் என்றும் குறிப்பிட்டது.
தனது இணையதளத்தில், இந்த மருந்துக்கும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையே "நேரடித் தொடர்பு" இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் எஃப்டிஏ கூறுகிறது.
பாராசிட்டமால் இன்னும் கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான வலி நிவாரணியாகவே உள்ளது என்பதை பிரிட்டனின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












