பா.ஜ.க எம்.பி மீது பாலியல் புகார்: மீண்டும் வீதிக்கு வந்த ஒலிம்பிக் நட்சத்திரங்கள் - பயிற்சியில் வீராங்கனைகளுக்கு என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி செய்தியாளர்
2023, ஜனவரி 18ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் மல்யுத்த சாம்பியன் வினேஷ் போகத் தர்ணாவில் அமர்ந்த போது விளையாட்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளானது.
அந்த தர்ணாவில் வினேஷ் போகத்துடன், பஜ்ரங்க பூனியா, சாக்ஷி மாலிக் ஆகிய வீராங்கனைகளும் இணைந்திருந்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் 10-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது அவர்களின் புகார். இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் ஷரன்சிங் மறுத்தார்.
3 நாட்கள் நீடித்த அந்த போராட்டத்தின் விளைவாக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தலையீட்டின் பேரில் விசாரணைக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த விசாரணை முடியும் வரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து விலகியிருக்குமாறு பிரிஜ் பூஷன் ஷரன் சிங் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
விசாரணை தொடங்கி ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வீராங்கனைகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மொத்த பிரச்னையும் பழைய விவாதம் ஒன்றுக்கு புத்துயிரூட்டியுள்ளது.
இந்திய விளையாட்டு உலகின் 'மீ டூ' தருணம் இது என்று சிலர் கருதுகிறார்கள். வேறு சிலரோ, இந்த வீராங்கனைகள் இந்த பிரச்னையை முன்கூட்டியே எழுப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒரு ஆண் தரும் பாலியல் தொல்லையை எப்போதெல்லாம் ஒரு பெண் பொதுவெளியில் எழுப்புகிறாளோ, அப்போதெல்லாம் இதுகுறித்து முன்கூட்டியே புகார் செய்யாதது ஏன்? என்ற கேள்வி தவறாமல் எழுப்பப்படுகிறது.
ஆனால், பாலியல் தொல்லை குறித்துப் பேசுவது எப்போதுமே கடினமானது என்று உளவியலாளர்களும், ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், ANI
இந்திய விளையாட்டு உலகில் நிலவும் ஆணாதிக்கம்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு அமைப்புகளுக்கு அரசியல்வாதி, அதிகாரமிக்க அதிகாரி அல்லது பெரும் தொழிலதிபர் ஆகியோரில் ஒருவரே தலைமை தாங்குகிறார் என்பதை நன்கறிவோம்.
இது தேசிய அளவில் மட்டும் நடக்கிறது என்று கருதி விடாதீர்கள். உள்ளூர் மட்டத்திலும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன.
"சமூகத்தில் வல்லமை பொருந்திய ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்" என்று ஒரு பளு தூக்குதல் வீராங்கனை கூறுகிறார்.
"வல்லமை பொருந்திய நபரே விளையாட்டுக்குத் தேவையான உள் கட்டமைப்புகள், கருவிகள் போன்றவற்றை செய்து தருகிறார். அது விளையாட்டுக்கு நல்லது. அவர்களில் சிலருக்கு, அந்த விளையாட்டு அமைப்புக்கும், வீரர்களுக்கும் தாங்களே உரிமையாளர்கள் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதுபோன்ற நபர்களின் தன்னிச்சையான நடத்தைகளை அம்பலப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல" என்கிறார் பளு தூக்கும் வீராங்கனை ஒருவர்.

பட மூலாதாரம், VINESH PHOGAT@TWITTER
விளையாட்டில் ஆக்ரோஷம்
விளையாட்டைப் பொருத்தவரை, ஆக்ரோஷம் காட்டுவது ஒரு வீரரின் உள்ளார்ந்த தரமாக கருதப்படும். ஆனால், ஆக்ரோஷத்தில் அதிக கவனம் செலுத்தினால், அதுவே துன்புறுத்தலாகி விடுகிறது. அது பாலியல் தொல்லை என்கிற அத்துமீறல் நிலையை அடையும் போதும் மக்கள் கண்டுகொள்வதில்லை.
"பாலியல் தொல்லை மட்டுமல்ல, வலிமை பொருந்திய நபர்களிடம் மற்றவர்களை அலட்சியமாக நடத்தும் மனோபாவத்தை பார்க்க முடியும். வினேஷ் போகத், ஷாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோரை பார்க்கும் போது, குறிப்பாக பஜ்ரங் பூனியா ஊடகங்களிடம் பேசியதை கேட்ட போது மேற்கூறிய வகையில்தான் என்ற கவனம் சென்றது." என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் உரிமை ஆர்வலர் பயோஷ்னி மித்ரா.
என்.டி.டி.வி.யிடம் பேசிய பயோஷ்னி மித்ரா, "விளையாட்டு உலகில் மேலிருந்து கீழ் வரை அதிகாரப் படிநிலை இருக்கிறது. அதிகார மிக்க மனிதர்கள் தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவது உண்டு. பெரிய விளையாட்டு நட்சத்திரங்கள் இதுபோன்ற வெளியே வந்து பொதுவெளியில் குரல் கொடுப்பது பெரிய விஷயம்" என்றார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வலிமையான, முன்மாதிரி மனிதர்களாக மற்றவர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், அவர்களும் மனிதர்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Reuters
பல மட்டங்களிலும் காணப்படும் நெருக்கடி
2018ஆம் ஆண்டு 150 ஜிம்னாஸ்டிக் வீரர், வீராங்கனைகள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழு மருத்துவர் லாரி நாசருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்கள். அதன் பேரில் அவருக்கு 175 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பிரச்னையை வெளியே சொல்லாமல் இருக்க தனக்கு தரப்பட்ட நெருக்கடிகள் குறித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் பெல்ஸ் பகிரங்கமாக பேசினார்.
இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "விஷயங்களைப் புறக்கணிப்பதில் நாம் வல்லவர்கள் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி யாரும் சிந்திக்கக்கூடாது என்று எண்ணி அதனை பின்புறம் தள்ளிவிட்டோம். நாமும் கூட அதுபற்றி சிந்திக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வளர்ந்த நாடு, விளையாட்டுக்கான தொழில்முறை கட்டமைப்புகளைக் கொண்ட நாடு என்று பெயரெடுத்த அமெரிக்காவில் கூட பயிற்சியாளர்களும், வழிகாட்டிகளும் வீரர், வீராங்கனைகளை சுரண்ட முடியும் என்பதை நாசர் வழக்கு உணர்த்துகிறது.
சாதிக்க விரும்பும் வீரர்கள் தங்களது குறிக்கோளில் கவனத்தை குவிக்கிறார்கள். மிக அதிக போட்டி நிறைந்த, எப்போதும் தங்களை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் இருக்கும் அவர்கள் இதுபோன்ற சுரண்டல்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசுவது கடினமான ஒன்று.
இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூட்டமைப்பின் தலைவரும், அர்ஜூனா விருது வென்றவருமான அடில் சுமரிவாலா கூறுகையில், "களத்தில் வீரர், வீராங்கனைகள் போட்டியை மட்டுமல்ல, உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியிலான சவால்களையும் சந்திக்கிறார்கள். அந்த தருணங்களில் அவர்களுடன் எப்போதும் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார். அதனால்தான் சில வேளைகளில் எல்லை மீறிவிடுகிறார்கள்" என்று கூறினார்.
விளையாட்டைப் பொருத்தவரை, உங்களது வெளியுலக தொடர்பும் துண்டிக்கப்பட்டு விடும். ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவர், வீரர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP
பெண் பயிற்சியாளர் பற்றாக்குறை
விளையாட்டு உலகில் நிலவும் ஆணாதிக்கம் வீரர், வீராங்கனைளுக்கு பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டிகளுடனான உறவையும் பாதிக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை திரட்டிய தகவல்களின் படி, 2010 முதல் 2020-ம் ஆண்டு வரை இந்திய விளையாட்டு ஆணையம் பெற்றுள்ள 45 பாலியல் தொல்லை புகார்களில் 29 புகார்கள் பயிற்சியாளர்களுக்கு எதிரானவை. அந்த பயிற்சியாளர்கள் மீது சிறிய அளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5 பேரின் ஊதியம் குறைக்கப்பட்டது, ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், 2 பேரின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன.
பெண் பயிற்சியாளர்களும், உதவியாளர்களும் அதிகரிக்கும் பட்சத்தில் வீராங்கனைகளுக்கான சூழல் சிறப்பாகும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், தற்போதைய நிலையில் பெண் பயிற்சியாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதுகுறித்து வர்ஷா உபாத்யாயா பேசுகையில், "ஆண் பயிற்சியாளர் இருந்தால் அங்கே ஒரு பெண் உதவியாளர் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால் பல நேரங்களில் இந்த விதி மீறப்படுகிறது. காலம் மாறிவிட்டது என்பதை பயிற்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.
இவ்வளவு பிரச்னைகளையும் மீறி, ஒரு வீராங்கனை துணிச்சலாக முன்வந்து தனக்கு நேரிட்ட பாலியல் தொல்லையை வெளிப்படுத்த விரும்பினால் அவர் எங்கே செல்ல வேண்டும்? அவர்கள் முன்னுள்ள வாய்ப்புகளும் குறைவுதான்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
பயிற்சியில் மட்டுமின்றி விளையாட்டு நிர்வாகத்திலும் அதிக பெண்கள் வர வேண்டும் என்று அடில் சுமரிவாலா வலியுறுத்துகிறார்.
“விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும், விளையாட்டு கூட்டமைப்புகள் வீரர்களுடன் சிறந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும். தடகள கூட்டமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தி, உச்சபட்சமாக 50 சதவீத இலக்கை எட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இதனை செய்து வருகிறோம்." என்று அவர் கூறினார்.
பாலியல் தொல்லைகளைத் தடுக்க கமிட்டி
பாலியல் தொல்லை வழக்குகள் குறித்துப் பேசுகையில், "பாலியல் தொல்லைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அவை நடக்கக் கூடாது. இதுபோன்ற தருணங்களில் கொஞ்சமும் சமரசத்திற்கு இடமின்றி நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும். ஏனெனில் பாதுகாப்பே இன்றியமையாதது. பெண்களுக்கு மட்டுமே பாலியல் தொல்லை நடப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், சில வீரர்கள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளானதும் உண்டு." என்று அடில் சுமரிவாலா கூறுகிறார்.
தேசிய விளையாட்டு மேம்பாட்டுச் சட்டம்-2011ன் படி, விளையாட்டு கூட்டமைப்புகளும், அதன் நிர்வாகிகளுமே பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க கடமைப்பட்டவர்கள். பாலியல் தொல்லை புகார்களை கையாள பாலியல் தொல்லைத் தடுப்புக் கமிட்டி அமைப்பது கட்டாயம்.
ஆனால், இந்திய விளையாட்டு அமைப்புகள் பெரும்பாலானவற்றில் அந்த கமிட்டியே இல்லை. அந்த கமிட்டி எங்கே இருக்கிறது என்பது குறித்த விவரம் இணையதளத்தில் காணக் கிடைக்கவில்லை. சில அமைப்புகளில் கமிட்டிகள் இருந்தாலும் அவை விதிகளை முழுமையாக பின்பற்றுவது இல்லை.
தற்போது பிரச்னையில் சிக்கியுள்ள மல்யுத்த கூட்டமைப்பைப் பொருத்தவரை, அதன் பாலியல் தொல்லைத் தடுப்புக் கமிட்டியில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்.
துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளரிடம் பேசும் போது, "பாலியல் தொல்லை தடுப்புக் கமிட்டி கட்டாயம்தான். ஆனால், மேலும் பல விஷயங்கள் இந்தியாவில் அமலாக்கப்படவே இல்லை. அவை செயல்படுத்தப்பட வேண்டும்.
பெரும்பாலான கூட்டமைப்புகள் அது குறித்து அறிந்து வருகின்றன என்று நினைக்கிறேன். அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவது முக்கியமான ஒன்று. அதுவே மாற்றத்திற்கான சூழலை உருவாக்கும்" என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












