தமிழ்நாடு வீரரின் அசத்தல் ஆட்டம் வீண்; எளிய இலக்கை எட்ட முடியாமல் ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயித்த எளிய இலக்கை எட்ட முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியில் விளையாடும் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரின் அசத்தல் ஆட்டம் ஆடி கடைசிப் பந்து வரை நடத்திய போராட்டம் வீணாகிப் போனது. பேட்டிங்கில் அந்த அணி மீண்டும் சொதப்பியதற்கு பரிசாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியடைந்துள்ளது.
கிரிக்கெட்டில் ஓர் அணியின் வெற்றி என்பது அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால்தான் முழுமையாகவந்து சேரும். ஆனால், வெற்றிக்காக சிலர் மட்டுமே கடின உழைப்பது என்பது போதுமானதாக இருக்காது. இந்த தொடரில் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் தந்தாலும் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்து மிடில் ஓவர்களில் மந்தமாக செயல்பட்டது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதித்துவிட்டது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி குலைத்த வாஷிங்டன் சுந்தர், கட்டுக்கோப்பாக 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர், கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கிளாசன், வாஷிங்டன் சுந்தர் என பட்டியலிட்டாலும் இறுதியில் வெற்றி என்னமோ டெல்லி கேபிட்டல்ஸிடம் சரணடைந்தது.
டேவிட் வார்னரின் முதல் சிக்ஸர்
சர்வதேச போட்டிகளோ, ஐ.பி.எல். போட்டிகளோ டேவிட் வார்னரின் ஸ்டைலே தடாலடியாக ஆடி ரன்களைக் குவிப்பது தான். அவரது பேட்டில் இருந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்த வண்ணம் இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் வார்னரின் ஆட்டம் வழக்கமான ஒன்றாக அமையவில்லை.
வழக்கமான அதிரடியை காட்ட முடியாமல் தடுமாறி வரும் வார்னர், இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக டாட் பந்துகளை விட்ட பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெல்லி அணியில் அதிக ரன் சேர்த்த வீரர் என்றாலும் கூட, நேற்றைய போட்டிக்கு முன்பு வரை இந்த சீசனில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காதவராக வார்னர் இருந்தார்.
அந்த குறை நேற்றைய ஆட்டத்தில்தீர்ந்தது. வாஷிங்டன் பந்துவீச்சில் வார்னர் சிக்ஸர் விளாசினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
தொடர்ந்து சொதப்பி வரும் ப்ரித்வி ஷா நீக்கம்
கடந்த 5 போட்டிகளில் சொதப்பிய ப்ரித்வி ஷாவுக்குப் பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட பில் சால்ட்டும் ஏமாற்றம் அளித்தார்.
மிட்ஷெல் மார்ஷ் அதிரடியாக ஆடி 25 ரன்கள் சேர்த்தாலும் பொறுப்புடன் பேட் செய்யவில்லை. டி20 கிரிக்கெட்டுக்கு மார்ஷ் ஒன்றும் புதிதானவர் அல்ல, ஏறக்குறைய 160 போட்டிகளில் விளையாடியவர், ஐபிஎல் தொடருக்கும் புதியவர் அல்ல.
இருப்பினும் தொடர்ந்து சொதப்பி வரும் மார்ஷுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது எனத் தெரியவில்லை. ரோமன் பாவல் என்ற அதிரடி பேட்ஸ்மேன் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை ஏன் பயன்படுத்த டெல்லி தயங்குகிறது.
அதுமட்டுமல்ல மார்ஷ் தனது பேட்டிங்கில் எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு திணறக்கூடியவர். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மார்ஷ் சராசரி ரன் குவிப்பு 24 என இருக்கும்போது, இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 17 மட்டுமே வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 16 முறை இடதுகை வேகப்பந்துவீச்சில் மார்ஷ் ஆட்டமிழந்துள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
டெல்லிக்கு 'நம்பிக்கை' பார்ட்னர்ஷிப்
டெல்லி அணியில் அக்ஸர் படேல்(34), மணிஷ் பாண்டே(34) இருவரும் 6-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 69 ரன்கள் சேர்த்துதான் ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை எட்டமுடிந்தது. இல்லாவிட்டால், டெல்லி அணியின் கதை 100 ரன்களுக்குள் முடிந்திருக்கும். பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த அக்ஸர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
குறிப்பாக 131 ரன்களில் இருந்து, அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே அதன் பேட்டிங் வரிசை வலுவின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
புவனேஷ்வர் கட்டுக்கோப்பான பந்துவீச்சு
சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஏற்று ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகத்தான் இருந்தது. குறிப்பாக ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீசினார்.
உம்ரான் மாலிக் அதிகபட்சமாக 152 வேகத்தில் பந்துவீசியும், பெரிதாக ரன்களை வழங்கவில்லை, விக்கெட்டும் வீழ்த்தினார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவில்லை. மார்கோ ஜான்ஸனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை உம்ரான் மாலிக்கிற்கு வழங்கியிருக்கலாம்.
சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்க்கண்டே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் வழங்கினாலும், விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
சரிவில் இருந்து மீண்டு வந்த நடராஜன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடந்த 2 போட்டிகளில் சரிவர விளையாடத நடராஜன் நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தது போல் தெரிந்தது. பவர் பிளேவில் நான்காவது ஓவரை வீசிய அவர், மிட்செல் மார்ஷை காலி செய்தார். சரியான லைன், லென்த்தில் நடராஜன் வீசிய அந்த பந்தை, மார்ஷ் சரியாக கணிக்கத் தவறி கால் காப்பில் வாங்கினார். களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால், டி.ஆர்.எஸ். முறைப்படி சன்ரைசர்ஸ் அணி அப்பீல் செய்தது. அதில், பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரிந்ததால் மார்ஷ் வெளியேற்றப்பட்டார்.
இதேபோல், டெல்லி கேபிட்டல்ஸ் இன்னிங்சின் கடைசிக் கட்டத்தில் 19-வது ஓவரை வீசிய நடராஜன் சிக்கனம் காட்டினார். அந்த ஓவரில் டெல்லி வீரர்களால் பவுண்டரி, சிக்சர்கள் ஏதும் அடிக்க முடியவில்லை. 5 ஒற்றை ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த போட்டியில் பீல்டிங்கில் சொதப்பிய வாஷிங்டன் சுந்தர், இந்த ஓவரில் அசத்தலாக பீல்டிங் செய்து மணிஷ் பாண்டேவை ரன் அவுட் செய்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஒரே ஓவரில் 3 விக்கெட் - வாஷிங்டன் சுந்தர் அசத்தல்
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் துருப்புச் சீட்டாக திகழ்ந்த வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் நடப்பு சீசனில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை 6 போட்டிகளில் 14.3 ஓவர்களை வீசியும் அவர் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. வழக்கமாக பவர் பிளேவில் அணிக்கு கைகொடுக்கும் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு இந்த சீசனில் எடுபடவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் வீசிய மூன்றாவது ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்சரையும் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் வலுவாக மீண்டு வந்த வாஷிங்டன் சுந்தர் 8-வது ஓவரில் வார்னரை அவுட்டாக்கி பதிலடி கொடுத்தார். அந்த ஓவரில் அமன் கான், சர்பிராஸ் கான் ஆகியோரையும் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டத்தை சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அவர் மாற்றினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
முதல் ஓவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்த வாஷிங்டன் சுந்தர், அடுத்த 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இக்கட்டான நேரத்தில் அவர் கைகொடுத்தார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல ஸ்கூப் ஷாட் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். கடைசிக் கட்டத்தில் அணிக்கும் தேவையான நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டினாலும், அது வெற்றிக்குப் போதுமானதாக இருக்கவில்லை. 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்த அவர், அணி தோல்வியடைந்ததால் ஏமாற்றமடைந்தார்.
பரபரப்பான கடைசி ஓவர்
கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. வாஷிங்டன் சுந்தர், ஜான்ஸன் களத்தில் இருந்தனர். ஆனால், டெல்லி கேபிட்டல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ், மிகுந்த அமைதியுடன், கட்டுக்கோப்பாக யார்கர்களை வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றியை தங்கள் வசமாக்கினார்.
வாஷிங்டன் சுந்தர், ஜான்ஸன் இருவரும் தொழில்முறை பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், தோல்விக்கான சுமையை அவர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.
ஐ.பி.எல். டி20 தொடரில் குறைந்த ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்து, எதிரணியை அதற்குள் சுருட்டி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் இருவரும் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்து, சன்ரைசர்ஸ் அணியை ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
சேஸிங்கில் பவுண்டரி, சிக்ஸர் அவசியம்
இதுபோன்ற குறைவான ஸ்கோரை துரத்தும்போது, சேஸிங் அணி அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிப்பது ரன்ரேட்டை சீராக கொண்டு செல்ல உதவும். ஆனால், நேற்று சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து நேற்று வெறும் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ரன்ரேட்டுக்கு பெரிய ஸ்பீடுபிரேக்அமைத்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி, 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பட மூலாதாரம், BCCI/IPL
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்விக்கு காரணம் என்ன?
சன் ரைசர்ஸ் அணியைவிட டெல்லி கேபிடல்ஸ் அணிதான் அதிகமான டாட் பந்துகளை விட்டபோதிலும், வெற்றி மட்டும் சன்ரைசர்ஸ் பக்கம் செல்லாதது வியப்புக்குரியதுதான். டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் 44 டாட் பந்துகளை அதாவது ஏறக்குறைய 7 ஓவர்களில் ரன் இன்றி கழித்தனர்.
சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 39 பந்துகள்தான் டாட் பந்துகளாக இருந்தன. இது டெல்லி அணியைவிட 8 பந்துகள் அதிகம், ஏறக்குறைய 6 ஓவர்கள் ரன் அடிக்காமல் கழிந்தது. டாட் பந்துகளை குறைவாக எடுத்தநிலையிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்றது, முழுமையாக பேட்ஸ்மேன்கள் மனநிலையோடு தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டம் மட்டுமல்ல கடந்த சில போட்டிகளாகவே சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஃபார்மின்றி தடுமாறி வருகிறார்கள். எந்தப் பந்தில் பெரிய ஷாட்களை அடிப்பது, எந்த பந்தை டிபெண்ட் செய்து விளையாடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது என்பது நேற்றைய ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் செய்வது ஏன்?
சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் தங்களின் பேட்டிங் யுத்தியை மாற்றி பேட்டிங் செய்யவில்லை. குறிப்பாக ரிஸ்க் ஏதும் எடுக்கத் தயாராக இல்லை என்பது நேற்றைய ஆட்டமிழந்த பேட்ஸ்மேன்கள் ஸ்டைல் மூலம் தெரிந்தது. குறிப்பாக ஹேரி ப்ரூக், திரிபாதி, அபிஷேக் சர்மா, கேப்டன் மார்க்ரம் ஆகியோர் ஆட்டமிழந்த விதமே சாட்சி.
அதுமட்டுமல்ல பேட்டிங் வரிசையை தொடர்ந்து மாற்றுவது வீரர்களின் மனநிலை, நிலைத்தன்மையை பெருமளவு குலைத்துவிடும். கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட அபிஷேக் இந்த ஆட்டத்தில் நடுப்பகுதிக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆட்டத்தில் 6வது வரிசையாக இறக்கப்பட்ட மயங்க்அகர்வால் தொடக்கம் அளிக்கவந்தார். இதுபோன்ற குழப்பமான முடிவுகள் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.
குறிப்பாக கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை ரன்ரேட் குறைவாக இருக்கும்போது களமிறக்கி விளையாடச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் ரன்ரேட் அழுத்தம் இருக்கும்போது அவரை களமிறக்கியதற்கு விலையை சன்ரைசர்ஸ் அணி நேற்று கொடுத்தது.
சன்ரைசர்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் அதாவது 7 முதல் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
தோல்வியின் பாதையில் தள்ளிய அகர்வால் - திரிபாதி ஜோடி
மயங்க் அகர்வால் கடந்த போட்டிகளை விட இந்த ஆட்டத்தில் சற்று நிதானமாகவும், பொறுப்புடனும் பேட் செய்தார். ஆனால் ஆட்டத்தில் பவுண்டரி, சிக்ஸருக்கு ஏற்பட்ட பஞ்சம், தேவைப்படும் ரன்ரேட்டை தொடர்ந்து அதிகரிக்க வைத்தது.
ஹைதராபாத் மைதானம் ரன் அடிக்க முடியாத மோசமான ஆடுகளமும் இல்லை. அப்படி இருந்தும், பவுண்டரி, சிக்ஸர் அடிக்க சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சோம்பேறித்தனம் காட்டியதன் விளைவு, கடைசிவரிசை பேட்ஸ்மேன்களுக்கு ரன்ரேட் வீதத்தை உயர்த்தி நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதுபோன்ற நெருக்கடி நிலையிலும்கூட கிளாசன் களமிறங்கி அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை கட்டுக்குள் கொண்டுவந்து, வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். ஆனால், 19பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த கிளாசனும் ஆட்டமிழக்கவே டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கான பிரகாசம் தெரிந்தது.
ஆனால், வாஷிங்டன் சுந்தர் தலையில் மட்டுமே வெற்றிக்கான பாரத்தை கடைசி நேரத்தில் வைத்தது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 15 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்தும், அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
தொடக்க வரிசை, நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்கால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் எகிறி, கடைசி வரிசை பேட்ஸ்மேன்களுக்கு சுமையாக மாறிப் போனது.

பட மூலாதாரம், BCCI/IPL
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் காட்டிய தீவிரம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களிடம் இருந்ததா என்பது கேள்விக்குறியே. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்த விதத்தைப் பார்க்கும் யாருக்கும் அந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
இந்த போட்டியில் தொடக்கம் முதல் கடைசி வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆதிக்கம் செய்தது போல் தெரிந்தாலும் இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத்தான் வெற்றி கிடைத்தது.
'வீரர்களிடம் நம்பிக்கை இல்லீங்க' - மார்க்ரம்
சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ மீண்டும் நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை, போதுமான அளவு நம்பிக்கையுடன் பேட்ஸ்மேன்கள் செயல்படவில்லை. வெற்றியைப் பெறாதாநிலையால் அணிக்குள் வீரர்களிடம் உற்சாகமின்மை தொற்றிக்கொண்டது துரதிர்ஷ்டம். இந்த குறைந்த ஸ்கோரை எவ்வாறு சேஸிங்செய்திருக்கலாம் என்று ஆலோசிப்போம். வீரர்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கி, ஆலோசனை கேட்போம், அது அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த உதவும்.
நாங்கள் ஒருவகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வந்திருக்கிறோம். அதில் தவறு ஏற்படாமல் செயல்பட்டால்தான் நிம்மதியாக உறங்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டமாக வீரர்களிடம் அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. எங்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் இருந்தும், நம்பிக்கை என்ற அம்சம் குறைந்துவிட்டது தோல்விக்கு காரணமாகும்.

பட மூலாதாரம், BCCI/IPL
வெற்றி கிடைக்க சிறப்பாக விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டது பெருமையாக இருக்கிறது, ஆடுகளத்தை சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆனால், பேட்ஸ்மேன்கள்தான் அவர்கள் பணியைச் செய்யவில்லை. தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் ஒருபோதும் காரணமல்ல” எனத் தெரிவித்தார்
ஹைதராபாத்தை வென்றதில் வார்னர் பெருமகிழ்ச்சி
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் வார்னர் கூறுகையில் “ ஹைதராபாத்தை விரும்புகிறேன், ஏராளமான ரசிகர்கள் கூட்டம். நீண்டகாலத்துக்குப்பின் சந்திக்கிறேன். இங்கு வெற்றியுடன் செல்ல வேண்டும் என விரும்பினேன், அது நடந்துவிட்டது. சில சவால்களை இந்தப் போட்டிஅளித்தது. கடைசி ஓவரில் முகேஷ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, இரு சுழற்பந்துவீச்சாளர்களும் அருமையாக செயல்பட்டனர். இசாந்த் சர்மா கடின உழைப்புக்குப்பின் ஐபிஎல்க்கு திரும்பி வந்துள்ளார். இந்த வெற்றி அடுத்த வெற்றிக்கு எங்களைத் தயார்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
புவனேஷ்வர் காலில் விழுந்த வார்னர்
சன்ரைசர்ஸ் அணியின் முன்ளாள் கேப்டன், ஏறக்குறைய 7 சீசன்களில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், போட்டி தொடங்கும் முன் புவனேஷ்வர் காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத புவனேஷ்வர் அவரை எழுப்பி, கட்டியணைத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












