ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வா? சி.எஸ்.கே. கேப்டன் தோனி என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Images
“நான் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது சென்னையில்தான். ஏலத்தில் சென்னை அணியால் தேர்வு செய்யப்படுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இது, நான் பிறந்த ஊரில் இருந்து மிகவும் வேறுபட்ட கலாச்சாரத்தை அறிந்துகொள்ள எனக்கு உதவியது.
இங்குள்ள ரசிகர்கள் அவர்களின் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரத்தில் மற்ற அணிகள் தோற்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். என் கடைசி ஆட்டம் சென்னையில் தான் நடைபெறும்” சிஎஸ்கே கடந்த 2021ஆம் ஆண்டு 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோனி பேசிய வார்த்தைகள் இவை.
2020ல் சுதந்திர தினத்தன்று அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இருந்தாலும் ஐபிஎல் தொடரில் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வி தோனியை அந்த ஆண்டில் இருந்தே துரத்தி வருகிறது.
2020ல் ஓய்வு குறித்த கேள்வியை எதிர்கொண்ட தோனி, `நிச்சயமாக இல்லை` என்று பதிலளித்தார். 2021ல் ஐபிஎல் கோப்பையை வென்றப் பின் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய தோனி, `எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான்` என்றார். கொரோனா காரணமாக 2020, 2021 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் துபாயை நடைபெற்ற நிலையில், 2022ல் ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க மஹாராஷ்டிராவிலேயே நடைபெற்றது. தற்போதைய ஐபிஎல் தொடர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஹோம் கிரவுண்ட்களில் நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 21ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
போட்டிக்கு பின் பேசிய தோனி, ' நாம் எவ்வளவு விளையாடினாலும் ஐபிஎல்லை ரசிப்பது மிகவும் முக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இங்கு கூட்டமாக கூடி ஆட்டத்தை ரசிக்கின்றனர். இங்கு விளையாடுவது நல்ல உணர்வை ஏற்படுகிறது. சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பு நெகிழச் செய்கிறது` என்று குறிப்பிட்டார்.
தற்போதும் வேகமாக ஸ்டம்பிங் செய்வது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தோனியிடம் கேட்டப்போது, 'நிச்சயமாக எனக்கு வயதாகிவிட்டது, அதை நான் மறைக்க முடியாது. என் கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி கட்டம் இது` என்றார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் வரலாற்றில் தோனி செய்த சாதனைகள்
2008ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தற்போதுவரை அந்த அணியின் கேப்டனாகவே தொடர்கிறார். சூதாட்ட புகார் காரணமாக சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் 2016, 2017 ஆண்டுகளில் புனே அணிக்காக தோனி விளையாடினார். இருந்தபோதும், சிஎஸ்கேவே தோனியின் தாய்வீடாக இருந்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்ஏவிற்காக 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் தோனி தலைமை தாங்கியுள்ளார். இது யாராலும் நெருங்க முடியாத சாதனையாக இருக்கிறது. 2016, 2017 ஆண்டுகள் நீங்கலாக சிஎஸ்ஏ அணிக்கு 14 ஆண்டுகள் தலைமை தாங்கியுள்ள தோனி, 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டிராப்பியையும் அவர் தலைமையிலான சென்னை அணி வென்றுள்ளது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஓய்வுக்கு தயாராகிறாரா தோனி?
இந்த ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் சூழலில், தோனியின் தற்போதைய கருத்து அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். நடப்பு தொடரில் சிஎஸ்கே அணிக்கு சென்னையில் இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. பஞ்சாப், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் அந்த அணி விளையாடவுள்ளது. இதுபோக, இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கான முதல் தகுதி ஆட்டம் மற்றும் வெளியேற்றுதல் ஆட்டம் ஆகியவையும் இந்த முறை சென்னையில் நடைபெறுகிறது.
சென்னையில் தான் தனது கடைசி ஆட்டம் என தோனி முன்னரே அறிவித்திருந்த நிலையில், தற்போதைய அவரது பேட்டியையும் தொடர்புப் படுத்தி பார்க்கும்போது, அவர் இந்த தொடரோடு ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என தோனியின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
அதுமட்டுமல்ல, நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதை விட அணியை முன்னிலைப்படுத்துவதிலேயே அவர் அதிக மும்முரம் காட்டி வருகின்றார். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தோனி களமிறங்கவே இல்லை.
நடப்பு தொடரைப் பொறுத்தவரை சிஎஸ்கே 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. தோனி தொடர்ந்து 8வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி வருவதால், இந்த தொடரில் 4 ஆட்டங்களில் மட்டுமே அவர் பேட்டிங் செய்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 28பந்துகளை எதிர்கொண்டுள்ள தோனி 59 ரன்களை எடுத்துள்ளார். அவரது அதிகபட்சம் 32 ரன்கள் ஆகும். தான் அணியில் இல்லாவிட்டாலும் சிஎஸ்கே வலுவாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் பிற பேட்ஸ்மேன்களுக்கு அவர் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவே இதனை கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 2020ல் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்களும், 2021ல் 16 போட்டிகளில் விளையாடி 114 ரன்களும், கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் 14 போட்டிகளில் 232 ரன்களும் என தோனியின் பேட்டிங் தொடர்பாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. தோனி சென்னை அணிக்காக நிறைய செய்துவிட்டார். அவர் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழிவிடுவதே சரியாக இருக்கும் என ஒருசிலர் கூறுகின்றனர்.
இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தோனி குறித்து தெரிவித்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. `அவர் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பாருங்கள், இத்தனை ஆண்டுகளாக தான் கற்றுகொண்டதை அணியினரிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார். அவரைப் போன்ற கேப்டன் கிடைத்திருப்பதற்கு அவர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர் இல்லையென்றால்தான், அவரை எந்தளவு நாம் இழந்து வாடுகிறோம் என்பது தெரியும்`
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












