அர்ஜூன் டெண்டுல்கரின் ஒரே ஓவரில் 31 ரன்: வெற்றியை வேகமாக நெருங்கிய மும்பை தோற்றுப் போனது எப்படி?

MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைப்பது, கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை முடிவு தெரியாமல் இதயத்துடிப்பை எகிறவைப்பது, போட்டிபோட்டு காட்டடி அடித்து ஸ்கோர் செய்வது என நீண்ட காலத்துக்குப்பின் பரபரப்பான ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு ரசிகர்களுக்கு நேற்றைய மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டத்தில் கிடைத்திருக்கும்.

ஏற்கனவே ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் 2 முறை சூப்பர் ஓவர் வரை சென்றதால் இந்தமுறையும் அவ்வாறு நடந்து விடுமோ என்ற பதற்றம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட்செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

8 புள்ளிகளுடன் 5 அணிகள்

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி நிகர ரன்ரேட்டில் குறைவாக இருப்பதால் 5வது இடத்தில் இருக்கிறது.

முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் அனைத்தும் 8 புள்ளிகளுடன் உள்ள நிலையில், நிகர ரன்ரேட் மட்டுமே அணிகளை தரவரிசைப் படுத்துகிறது. ஆதலால், அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியிலும் அணிகள் நிகர ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தும். மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன், 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

IPL MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/ IPL

25 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகள்

மும்பை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு உண்மையான விருந்தாக அமைந்தது. கடைசி ஓவர், கடைசி பந்துவரை திக் திக் தருணமாகவே இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் மொத்தமாக 25 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகள் விளாசப்பட்டன.

மும்பை அணி சேஸிங் செய்யத் தொடங்கி, 15-வது ஓவரில் இருந்து ஆட்டத்தில் அனல் பறந்தது, ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறது. 30 பந்துகளில் 66 ரன்கள் தேவையுடன் மும்பை அணி வெற்றியைத் துரத்தியது.

அதிரடியாக ஆடிய கேமரூன் க்ரீன்(67), சிக்ஸர், பவுண்டரி அடித்து எல்லீஸ் வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் களத்தில் இருந்ததால், மும்பை அணி நிச்சயம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர். சூர்யகுமார் யாதவும், சாம் கரன் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 14 ரன்கள் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

ஆட்டத்தை மாற்றிய தருணம்

அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் டிம் டேவிட், 114 மீட்டர் தூர சிக்ஸர் அடித்து, 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தை சந்தித்த சூர்யகுமார், லோவர் ஃபுல்டாஸ் பந்தை அடித்தபோது மிட் விக்கெட்டில் டெய்டேவால் கேட்ச் பிடிக்கப்பட்டார். சூர்யகுமார் 26 பந்துகளில் 57 ரன்களுடன்(3 சிக்ஸர்,7பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

சூர்யகுமார் களத்தில் இருந்தவரை வெற்றி அவர்களிடம் இல்லை என்றுதான் பஞ்சாப் அணியினர் நினைத்திருந்தனர். சூர்யகுமார் ஆட்டமிழந்த இந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இங்கிருந்துதான் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணி கரங்களுக்கு மாறியது.

IPL MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/ IPL

கடைசி ஓவரில் 2 முறை ஸ்டம்பை உடைத்த அர்ஷ்தீப்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு யாரை உரித்தாக்குவது எனத் தெரியவில்லை. ஸ்கோர் உயர்வதற்காக காட்டடி அடித்த சாம் கரன் (29 பந்துகளில் 55), ஹர்ப்ரீத் சிங்(28 பந்துகளில் 41) ஆகியோரைச் சொல்வதா, கடைசி ஓவரில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி இரு யார்க்கர்கள் மூலம் ஸ்டெம்பை உடைத்து வெற்றியை வசமாக்கிய அர்ஷ்தீப் சிங்கைக் கூறுவதா எனத் தெரியவில்லை.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது சாம் கரனுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், உண்மையில் ஹீரோ அர்ஷ்தீப் சிங்தான். “டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான” அர்ஷ்தீப், கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் கடைசி ஓவரை வீசினார்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட டிம் டேவிட் ஒரு ரன் எடுத்தார். மறுமுனையில் இருந்த திலக் வர்மா 2வது பந்தில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 3வது பந்தை அர்ஷ்தீப் யார்க்கராக வீச, ஸ்டெம்ப் உடைந்து, திலக் வர்மா க்ளீன் போல்டாகினார்.

4வது பந்தைச் சந்திக்க வந்த, வதேராவும் அதிரடிக்கு முயல அவருக்கும் அர்ஷ்தீப் சிங் யார்க்கராக வீச, ஸ்டெம்ப் 2வது முறையாக உடைந்தது. கடைசி இரு பந்துகளில் 15 ரன்கள் சாத்தியமில்லை என்பதால் பஞ்சாப் வெற்றி உறுதியானது.

“வானத்தில் பறக்கவில்லை”

கடைசி ஓவரில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் கூறுகையில் “ நான் விக்கெட் வீழ்த்தும்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வேன், அதிலும் விக்கெட்டுடன் வெற்றி கிடைத்தது சிறப்பு. ஐபிஎல் தொடருக்கு முன்பாக, நான் பந்துவீச்சில் மாற்றம் செய்து, நோபால் வீசுவதை நிறுத்தினேன். என்னுடைய பந்துவீச்சை நான் ரசிக்கிறேன். வெற்றியால் நான் வானத்தில் பறக்கவில்லை, அமைதியாகவே இருக்கிறேன். என்னுடைய இதயத்துடிப்பு 120க்கு மேல் செல்லவில்லை” எனச் சொல்லி சிரித்தார்.

IPL MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/ IPL

6 ஓவரில் 109

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் ஹர்ப்ரீத் சிங், சாம் கரன், மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய மூவரின் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. 14-வது ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்திருந்தனர்.

சாம் கரன் 8 பந்துகளில் 12 ரன்கள், ஹர்ப்ரீத் சிங் 16 பந்துகளில் 15 ரன்கள் என்று பேட் செய்திருந்தனர். அதன்பின் இருவரும் கியரை மாற்றி, டாப் கியரில் ரன் குவிக்கத் தொடங்கினர். அடுத்த 6 ஓவர்களில் பஞ்சாப் அணி, மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, 109 ரன்களைச் சேர்த்தது.

வள்ளலாக மாறிய அர்ஜூன் டெண்டுல்கர்

பஞ்சாப் கிங்ஸ் அணி 15வது ஓவரில் 13 ரன்கள் சேர்த்து. 16-வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் ஓவரை சாம்கரன், ஹர்ப்ரீத் சிங் இருவரும் விளாசி 31 ரன்கள் சேர்த்தனர். ஐ.பி.எல்.லில் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பந்துவீச்சாளர் பட்டியலில் அர்ஜூனும் இணைந்தார். அனுபவமின்மை, யார்க்கர்களை வீச துல்லியத்தன்மை இல்லாதது, நெருக்கடி நேரத்தில் பந்துவீசத் தெரியாதது போன்றவற்றுக்கு அர்ஜூன் விலை கொடுத்தார். இந்த ஆட்டத்தில் ஏற்குறைய 50 ரன்களை அர்ஜூன் மட்டும் பஞ்சாப் கிங்ஸுக்கு வழங்கினார்.

ரன் மெஷின்கள்

அதன்பின் 17-வது ஓவரில் 13 ரன்கள்,18-வது ஓவரில் 25 ரன்கள் என பஞ்சாப் கிங்ஸ் அணி, கடைசி 5 ஓவர்களில் ரன் மெஷினாக மாறியது. மைதானத்தில் சிக்ஸர்களும், பவுண்டர்களும் பறந்தவாறு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.

அதிரடியாக ஆடிய சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் இருவரும் 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். ஹர்பிரீத் சிங் 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சில் போல்டாகினார்.

சாம் கரன் 29 பந்துகளில் 55 ரன்கள்(4 சிக்ஸர், 5 பவுண்டரி) சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜிதேஷ் சர்மா 7 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 3 பேட்ஸ்மேன்கள்தான் கடைசி நேர ரன்குவிப்புக்கு காரணமாகும்.

IPL MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/ IPL

“கேப்டன் ப்ரோடெக்ட்”

காயம் காரணமாக ஷிகர் தவன் கேப்டன் பொறுப்புக்கு வராத நிலையில் சாம் கரன் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகிறார். அவர் கேப்டன் பொறுப்பில் பெறும் 2வது வெற்றி இதுவாகும். “கேப்டன் ப்ரோடக்ட்” என்று கிரிக்கெட்டில் சொல்வார்கள், அந்த ரகத்தில் சாம் கரனை வைக்க வேண்டும்.

அணியை வழிநடத்திச் செல்வது, இக்கட்டான நேரத்தில் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை தருவது, தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்டுவது என கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டார். இருப்பினும், சாம் கரன் பேட்டியளிக்கும்போது, “ நான் தற்காலிகக் கேப்டன்தான்” என்ற வார்த்தையை மட்டும் எச்சரிக்கையாக உச்சரிக்க மறக்கவில்லை.

“நான் காரணமில்லை”

வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் சாம் கரன் கூறுகையில் “ ஸ்பெஷல் வெற்றி, அற்புதமான மைதானம், ரசிகர்கள். பல போட்டிகளில் பல அணிகளுக்காக இங்கு விளையாடி இருக்கிறேன். நான் ஆட்டநாயகன் விருதுக்கு பொருத்தமானவர் இல்லை, எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் காரணம். அர்ஷ்தீப், நாதன் எல்லீஸ் இருவரும் அற்புதமாகப் பந்துவீசினர், சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். நான் பேட்டிங் செய்யவரும்போது, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது தெரியும். அதை சரியாகப் பயன்படுத்தினேன். ஷிகர் தவன் காயத்திலிருந்து விரைவில் திரும்பி கேப்டன் பொறுப்பேற்பார் அவருக்கு துணையாக இருப்போம்” எனத் தெரிவித்தார்

IPL MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/ IPL

ரோஹித் சர்மா மைல்கல்

மிகுந்த சவாலான இலக்கை எட்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் சளைக்காமல் களத்தில் சண்டை செய்தது. தொடக்கத்திலேயே இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா, கேமரூன் க்ரீன் இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகள், சிக்ஸர்களை விளாசி அதிரடியாக ஆடினார்கள். பவர் ப்ளேயில் 51 ரன்களை மும்பை அணி சேர்த்தது.

ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் கிறிஸ் கெயில்(357), 2வது இடத்தில் டிவில்லியர்ஸ்(251), உள்ளனர். ரோஹித்துக்கு பின் தோனி(235), கோலி(229) உள்ளனர்.

டி20-ல் 6 ஆயிரம் ரன்களை கடந்த சூர்யகுமார்

ரோஹித் சர்மா(44 ரன்கள்) ஆட்டமிழந்தபோதிலும், அடுத்துவந்த சூர்யகுமார், க்ரீனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் மும்பை அணியின் பக்கம்தான் இருந்தது. சூர்யகுமார் நேற்றைய ஆட்டத்தில் விரைவாக அரைசதம் அடித்து, டி20 போட்டியில் 6,000 ரன்களை எட்டினார். குறைந்த பந்துகளில் அதாவது 4,107 பந்துகளில் 6 ஆயிரம் ரன்களை சூர்யகுமார் எட்டினார்.

கடைசி 10 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது. லிவிங்ஸ்டன் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து சூர்யகுமார் ரன்ரேட்டை டாப் கியருக்கு மாற்றினார். சூர்யகுமார் அடித்த 57 ரன்களில் 33 ரன்கள் “ஸ்கொயர் லெக்” திசையில் இருந்தே கிடைத்தது. மறுபுறம் கேமரூன் க்ரீனும் சளைக்காமல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை வறுத்தெடுத்து சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார்.

IPL MI vs PBKS

பட மூலாதாரம், BCCI/ IPL

திருப்புமுனை தருணங்கள்

எல்லீஸ் வீசிய 16-வது ஓவரில் கேமரூன் சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில், ஸ்லோபாலாக வீசப்பட்ட 3வது பந்தில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி, வெற்றி அருகே நகர்த்திச் சென்றது.

செட்டிலான பேட்ஸ்மேனை வெளியேற்றியதன் மூலம் பஞ்சாப் அணி மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சுவிட்டது. அதன்பின் சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தியதும் ஆட்டம் முழுவதும் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் எல்லீஸ், அர்ஷ்தீப் சிங்கை வைத்து ஆட்டத்தை முடித்தது.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ களத்தில் சில தவறுகளைச் செய்தோம், ஆனால் அதை பெரிதாகப் பார்க்கவில்லை. கடைசி 3 போட்டிகளை வென்றோம், அதற்கு முன் வரிசையாக 3 போட்டிகளில் தோற்றோம். ஆதலால் நம்பிக்கையுடன் இருங்கள் என வீரர்களிடம் தெரிவித்தேன். இந்த தொடரில் எங்களைத் தக்கவைக்க, உயர்ப்புடன் இருப்பது அவசியம், அதற்கு அவகாசம் இருக்கிறது. க்ரீன், சூர்யா பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது, இருவரும் கடைசிவரை ஆட்டத்தை கொண்டு சென்றனர். அர்ஷ்தீப் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது, நன்றாக சண்டை செய்தாலும், இந்த நாள் எங்களுடையது அல்ல” எனத் தெரிவித்தார்

மும்பை அணியின் டிம் டேவிட் சிக்ஸர் அடிக்கும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன், இந்த ஆட்டத்தில் நல்ல ஃபார்மில் இருந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்று இருந்தபோது, முதல் பந்தைச் சந்தித்த டிம் டேவிட், ஒரு ரன் ஓடாமல் ஸ்ட்ரைக்கை தக்கவைத்திருக்கலாம். . அவ்வாறு தக்கவைத்திருந்தால், டிம் டேவிட் இரு பெரிய ஷாட்களை ஆடி ஆட்டத்தை திருப்பி இருக்கலாம். ஆனால் டிம் டேவிட் ஒரு ரன் ஓடிய தவறுதான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: