சல்மான் கான் சொல்லும் 'பெண் ஆடை கட்டுப்பாடு' சர்சையானது ஏன்? ஓர் அலசல்

சல்மான் கான்
    • எழுதியவர், நசீருதின்
    • பதவி, பிபிசி இந்திக்காக

சல்மான் கான் இன்று சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய பேசுபொருளாக உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்ற அவரது பார்வை மூலம் அவர் மீதான சர்ச்சை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

தன்னை பெண்களின் நலம் விரும்பி என்றும் பெண்களின் பாதுகாவலர் என்றும் சல்மான் கான் கருதி வருகிறார். சல்மான் ஒரு 'பாய் ஜான்' (அன்பான சகோதரர்) என்று கூட சினிமா உலகில் பெண்கள் அழைப்பர்.

பல மேடைகளில் பெண்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் கைதட்டல்களை குவித்தார். ஆனால் உண்மையிலேயே அவர் பெண்களின் நலம் விரும்பியா? நலம் விரும்பி ஆவதற்காக அவர் தெரிவித்த கருத்துகளால் பெண்களின் வாழ்க்கை சிறப்பாகுமா?

நடிகை பலக் என்ன சொல்கிறார்?

பலக் திவாரி
படக்குறிப்பு, பலக் திவாரி

பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகை பலக் திவாரி.

நடிகையாக அவரது முதல் படம் சல்மான் கானுடன் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்'.

ஷூட்டிங் செட்டில் சல்மான் கான் கடைப்பிடிக்கும் ஒரு விதிமுறை பற்றி அவர் பகிர்ந்து கொண்டார்.

அந்த விதிமுறை பெண்களுக்கானது. சல்மானின் செட்டுக்கு எந்தப் பெண் வந்தாலும் அவர் தமது கழுத்து வரை உடை அணிந்து வர வேண்டும். அது ஏன்?

ஏனெனில் கழுத்திற்கு கீழே உடை சென்றால் ஆண்களின் பார்வை அங்குதான் போகும். இது சல்மானுக்கு பிடிக்காது.

நல்ல பெண்களைப் போல எல்லா பெண்களும் முழுமையாக உடலை மறைக்கும் ஆடைகளை அணியவேண்டும். இதுமட்டுமின்றி, பெண்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்பது சல்மான் கானின் கருத்து.

பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சல்மானின் இந்த கொள்கையுடன் பலக் உடன்படுவதாகத் தெரிகிறது.

பலக் திவாரி கூறிய இந்த விஷயங்கள் கடந்த சில நாட்களாக அதிகம் விவாதிக்கப்பட்டன.

சல்மான் தெளிவுபடுத்திய நிலைப்பாடு

சல்மான் கான்

பட மூலாதாரம், INDIA TV

படக்குறிப்பு, சல்மான் கான்

சமீபத்தில் துபாயில் நடந்த, 'இந்தியா டிவி' செய்தி சேனலின், ரஜத் ஷர்மா நடத்தும் 'ஆப் கி அதாலத்' நிகழ்ச்சியில் சல்மான் கான் விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, பலக் திவாரியின் பேச்சு தொடர்பானது.

"உங்கள் சட்டையை விரைவாகக் கழற்றி விடுகிறீர்கள். ஆனால் பெண்கள் ஆடை அணிவதற்கு விதிகளை உருவாக்குகிறீர்கள். நீங்கள் இரட்டை முகம் கொண்டவரா,?” என்று ரஜத் ஷர்மா வினவினார்.

பலக்கின் வார்த்தைகளை நியாயப்படுத்த சல்மான் தன்னால் இயன்றவரை முயன்றார்.

"பெண்ணின் உடல் மிகவும் விலைமதிப்பற்றது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு அதிகமாக அது மூடி வைக்கப்படுகிறதோ அத்தனை நல்லது என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் பதிலளித்தார்.

சல்மானின் இந்த பேச்சுக்கு ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் கைதட்டுகிறார்கள்.

இந்த விஷயத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைத்தபடி கைதட்டியவர்களில் பெண்களும் இருந்தனர்.

பலக் திவாரி

சல்மான் மேலும் தமது பேச்சைத் தொடர்ந்தார்.

'இது பெண்கள் தொடர்பான விஷயம் அல்ல. ஆண்கள் தொடர்பான விவகாரம். ஆண்கள் பெண்களை பார்க்கும்விதம் அதாவது உங்கள் சகோதரிகளை, உங்கள் மனைவிகளை, உங்கள் தாய்களை அவர்கள் பார்க்கும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. இந்த எல்லா சூழ்நிலைகளையும் அவர்கள் சந்திப்பதை நான் விரும்பவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

சல்மான் ஆண்களுக்கு என்ன கற்பிக்க விரும்புகிறார் என்று ரஜத் அவரிடம் கேட்டபோது, ”எல்லோருக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்களின் எண்ணம் மோசமாகி விடுகிறது. எனவே நாங்கள் படம் தயாரிக்கும்போது, நம் ஹீரோயின்களை, நம் பெண்களை அப்படி யாரும் பார்க்கக்கூடாது. இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கக்கூடாது என்று முயற்சி செய்கிறோம்,” என்று சல்மான் பதிலளித்தார். மீண்டும் அரங்கில் கைதட்டல் ஒலிக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சல்மான், ”என்ன கேட்கப்படும் என்பதில் பிரச்னை இல்லை. பிரச்சனை என்னவென்றால் நான் என்ன பதில் சொல்வது?” என்று குறிப்பிட்டார்.

உண்மையில் பிரச்னை சல்மானின் அணுகுமுறையிலும் பதிலிலும் உள்ளது.

நல்ல பெண்ணுக்கு இலக்கணம் என்ன?

சல்மான் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சல்மான் கான்

சல்மானை மேற்கோள்காட்டி பலக் ’ஒரு நல்ல பெண்’ பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவரும் குறிப்பிடும் 'நல்ல பெண்' எப்படி இருப்பார் என்பதுதான் கேள்வி.

சல்மான் போன்ற ஆணழகருக்கு ’நல்ல பெண்’ வெறும் ஆடைகளால் மட்டுமே உருவானவள் அல்ல. அது ஆடையுடன் மட்டுமே நிற்பதில்லை. அது ஆடைகளில் தொடங்கி நீண்ட தூரம் செல்கிறது. இவரைப் பொருத்தவரை நல்ல பெண் என்றால் எல்லோரும் சொல்வதை கேட்பவர். அப்பா, அண்ணன், கணவர் கட்டளைப்படி நடப்பவர். எதிர்த்து பதில் சொல்லாதவர்.

மனதில் இருப்பதை வெளியே சொல்லாதவர். தான் விரும்புவதை செய்யாதவர். அதிக சத்தமாகப்பேசாதவர். மாலையில் நேரம் கழித்து வெளியே சுற்றாதவர். வெளி ஆண்களுடன் பழகாதவர்.

வீட்டு ஆண்கள் மற்றும் அனைவரின் மகிழ்ச்சியையும் கவனித்துக்கொள்பவர். பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் பின்பற்றுபவர். குடும்பம் மற்றும் சமூகத்தின் 'மரியாதையை' பாதுகாப்பவர்.

வீட்டை சரியாக பராமரிப்பது எப்படி என்று தெரிந்தவர்.…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நல்ல பெண்களின் குணங்களின் நீண்ட பட்டியலை உருவாக்கலாம் என்கிறார் பலக்.

சல்மான் பார்வையில் இன்றைய பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

பலக் திவாரி

பட மூலாதாரம், TWITTER/PALAKTIWARII

ஒரு நல்ல பெண்ணின் சமூக வடிவில் பொருந்த விரும்பும் பலக் போன்ற பெண்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.

மறுபுறம், எதிர்மறையாக சிந்திக்கும் பெண்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. இன்றைய காலகட்டத்தில் உருவாகி வரும் பெண்கள், உருவாக வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள், சல்மான் போன்றவர்களின் பார்வையில் 'கெட்ட பெண்ணாக' இருப்பார்கள்.

மதிப்புமிக்க உடல்கள் - தந்திரமான பேச்சு

'சல்மானின் வார்த்தைகள்', முதல் பார்வையில் ஒருவருக்கு பிடிக்கக்கூடும். அதில் பெண்கள் மீதான அக்கறை உள்ளது. அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமும் உள்ளது.

அதனால்தான் அவரது வார்த்தைகளுக்கு தொடர்ந்து கைதட்டல் கிடைக்கிறது. அதாவது அவருடைய வார்த்தைகளுக்கு சமூகத்தில் ஒரு அடிப்படை இருக்கிறது. சமுதாயத்தில் பெண்களைப் பற்றி அவர் மட்டும் சிந்திக்கவில்லை. அதாவது, இது ஒரு வலுவான யோசனை. இது நமக்குள் ஆழமாக நுழைந்துள்ளது.

சல்மான் உண்மையில் பெண்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாரா என்பதுதான் கேள்வி.

ஒரு பெண்ணின் உடல்தான் மதிப்புமிக்கதா?

ஆண் உடல் ஏன் மதிப்புமிக்கதாக இல்லை?

ஒரு பெண்ணின் உயிருக்கு அதிக மதிப்பு உள்ளதா அல்லது அவளது உடலுக்கா?

விலைமதிப்பற்றவராக ஒருவரை நாம் கருதினால், அவரை பாதுகாப்பாக மறைத்து வைப்பதைப் பற்றி நாம் பேசுவோம். அதனால்தான் பலர் ஒரு பெண்ணின் உடலை மதிப்புமிக்க பொருட்களுடன் ஒப்பிடுகிறார்கள். சிலர் இனிப்புகளுடன் கூட ஒப்பிடுகிறார்கள்.

ஒரு பெண்ணின் உடல் விலைமதிப்பற்றது என்பதால் பெண்ணின் உடலானது, உறவு, குடும்பம் மற்றும் சமூகத்தின் மரியாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விலைமதிப்பற்ற உடலுக்கு ஏதாவது நேர்ந்தால் சமூகத்தின் படி கறை படிந்துவிடுகிறது.

பெண்ணின் உடல்தான் விலைமதிப்பற்றது மற்றும் அதனுடன் மரியாதையும் இணைந்திருப்பதால், அதன் பாதுகாப்பு அவசியமாகிறது. பாதுகாப்பு என்றால் பெண்ணின் மீது கட்டுப்பாடு. பெண் மீது கண்காணிப்பு. அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது.

அதனால் தான் பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை சல்மான் தன் மீது அதாவது 'ஆண் சமூகத்தின்' மீது சுமக்கிறார்.

கவலை தோய்ந்த அவரது இந்த கருத்துகள், உண்மையில் பெண்ணை ஒருவரின் பிடியில் வைத்திருப்பதைத் தவிர வேறில்லை. அதாவது நாங்கள் இருந்தால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று சொல்வதாக உள்ளது.

ஆடைதான் வன்முறைக்கு காரணம்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

வன்முறைக்கும் ஆடைக்கும் சம்பந்தம் உண்டா?

சல்மானின் வார்த்தைகளில் இருந்து இப்படித்தான் தெரிகிறது.

அதனால்தான் பெண்களின் கழுத்துக்குக் கீழே வரும் ஆடைகளை அவர் எதிர்க்கிறார்.

ஏனெனில் கீழே செல்லும் ஆடையுடன், ஆண்களின் பார்வையும் கீழே செல்கிறது. சல்மான் சொல்வதைப்பார்த்தால், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அவர்களது உடைகளே காரணம் என்று தோன்றுகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்குப் பிறகு நம் சமூகம் அடிக்கடி கூறுவதைப் போலத்தான் இந்த வாதமும் உள்ளது.

உதாரணமாக, பெண்களின் ஆடைகள் இறுக்கமாக இருந்தன, உணர்வுகளை தூண்டக்கூடியதாக இருந்தன. குட்டையான ஆடைகளை அணிந்திருந்தார்கள். உடல் தெரிந்தது...

ஆனால் பெண்கள் மீதான வன்முறைக்கு ஆண்களே காரணம், உடைகள் அல்ல என்பது நமக்குத் தெரியும். பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை அணிந்தாலும், வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் ஆடைகளைப் பார்ப்பதில்லை.

வீட்டிற்குள் நடக்கும் பாலியல் வன்முறை அல்லது தெருவில் நடக்கும் சிறுமிகள் மீதான வன்முறைகளுக்கு உடைகள் காரணம் அல்ல. பால் குடிக்கும் குழந்தை அல்லது வயதான ஒருவருடன் பாலியல் வன்கொடுமை நடக்கும்போதும் அதற்கு காரணம் உடைகள் அல்ல.

ஒரு கெட்ட எண்ணம் கொண்ட ஆணுக்கு தலை முதல் கால் வரை துணியால் சுற்றப்பட்ட எந்த சிறுமியையும் அல்லது பெண்ணையும் துகிலுரித்துப்பார்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால்தான் பெண்கள் மீதான வன்முறை அவர்களின் ஆடைகள் காரணமாக நிகழ்கிறது என்று சிந்திப்பதே தவறு.

ஆண்களைப் பற்றி...

சல்மான் கான்

பட மூலாதாரம், Getty Images

இவை எல்லாமே ஆண்கள் பற்றிய விவகாரம், பெண்களின் விவகாரம் அல்ல என்று சல்மான் மிக அழகாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆண்களின் எண்ணம் கெட்டுவிடும். ஆண்களின் கெட்ட எண்ணங்களில் இருந்து காப்பாற்ற பெண்களை கட்டுப்படுத்துவது அவசியம் என்கிறது சல்மானின் வார்த்தைகள்.

ஆனால் இந்த பிரச்சனை பெண்களுடையது அல்ல. இது ஆண்மை மனோபாவத்தின் விஷயம். ஆண்களின் பொறுப்பற்ற செயல்கள் மற்றும் அவர்களின் வளர்ப்பு தொடர்பான விஷயம்.

சல்மான் அவர்களே, ஆண்களின் எண்ணம் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறது, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் எண்ணங்கள் அசைக்கப்படுவது ஏன் என்று யாரும் அவரிடம் ஏன் கேட்கவில்லை? ஒரு பெண்ணை பார்த்தாலே ஏன் ஆண்களின் மனம் ஆட்டம் காண்கிறது? ஒரு பெண்ணின் உடல் தெரிந்தாலே கெட்ட எண்ணம் ஏன் வர ஆரம்பிக்கிறது? எனவே எங்கே, எதில் பிரச்சனை?

பெண்களிடமா அல்லது பெண்களின் ஆடைகளிலா? ஒரு தீவிர நோய்க்கு சல்மான் தவறான மருந்து சொல்கிறார். இந்த நோய்க்கு காரணம், ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் அல்லது சிறுவர்கள். எனவே ஆண்கள் அல்லது சிறுவர்களுக்கு மருந்து தேவை.

பெண்களுக்கு அல்ல. இந்த நோய்க்கு ஆண்களின் பார்வை தான் காரணம் என்றால், அந்த பார்வையை மாற்ற வேண்டும், ஆடையை அல்ல.

எனவே சிறுவர்கள் மற்றும் ஆண்களைப் பற்றி மட்டுமே பேசப்பட வேண்டும். சிறுவர்களை கருணையுள்ள ஆண்களாக மாற்றுவதில் தனது சூப்பர் ஹீரோ இமேஜை சல்மான் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவர்களின் பார்வை மற்றும் கண்ணோட்டத்தை மேம்படுத்த அவர்களை அறிவுறுத்தும் வார்த்தைகளை சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், திரைபடங்களில் தயக்கமே இல்லாமல் தனது ஆடைகளை கழற்றும் சல்மான், படங்களில் எந்த ஆண் பிம்பத்தை உருவாக்குகிறாரோ அந்த ஆண்களால் பெண்களின் நண்பர்களாக-அனுதாபமுள்ளவர்களாக மாற முடியாது. ஆகவே ஒரு புதிய மனிதனின் பிம்பத்தை அவர் உருவாக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: