திருப்பதி கோவிலுக்கு போறீங்களா - ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணும் போது இதை கவனிக்க மறக்காதீங்க

திருப்பதி கோவில், போலி இணையதளம்
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக

ஐதராபாத்தைச் சேர்ந்த சுந்தரம், கோடை விடுமுறையில் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று கோவிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

திருப்பதிக்கு செல்ல முடிவு செய்த அவர் உடனடியாக, 'TTD online booking' என்று இணையத்தில் டைப் செய்து தேடினார்.

அதில் காட்டப்பட்ட இணையதளத்திற்கு சென்று தரிசன தேதி, பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து ஆன்லைன் வழியாக கட்டணத்தையும் செலுத்தினார். இறுதியாக அவருக்கு கிடைத்த ஆன்லைன் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டார் சுந்தரம்.

குடும்பத்துடன் கோவிலிக்கு செல்ல வேண்டிய தேதியன்று, திருமலை அடிவாரத்தில் உள்ள நுழைவாயில் அருகே டிக்கெட்டைக் காட்டினார்.

அவற்றை ஸ்கேன் செய்த ஊழியர்கள், 'இது போலி டிக்கெட்' என கூற சுந்தரத்தின் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர், விசாரித்த போது, அவர் பதிவு செய்ய பயன்படுத்திய இணையதளம் போலி என்றும், அதில் பெற்ற டிக்கெட் செல்லாது என்பதும் தெரியவந்தது.

சுந்தரம் விஷயத்தில் மட்டுமல்ல, பலரும் இது போல ஏமாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பதி கோவில், போலி இணையதளம்

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது ஏற்படும் சிறு தவறு, பணத்தையும், நேரத்தையும், திட்டமிடலையும் வீணடிக்கும்.

சைபர் குற்றக்குழுக்கள் போலி இணையதளங்களை உருவாக்குவதால் இதுபோன்ற சிக்கல்கள் வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிகாரப்பூர்வ இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற போலி இணையதளங்களால், பக்தர்கள் மட்டுமின்றி, TTD-க்கும் பெரும் நஷ்டமும், கெட்ட பெயரும் ஏற்பட்டு வருகிறது.

திருப்பதி பெருமாள் கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் வசதியை TTDயின் இணையதளம் வழங்குகிறது.

பக்தர்கள் டிக்கெட் புக் செய்வது மூலமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால் சில சைபர் கிரிமினல்கள் போலியாக இணையதளங்களை உருவாக்கி பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர்.

TTD இணையதளம் மூலம் உண்மையான முன்பதிவு எவ்வாறு செய்யப்படுகிறது மற்றும் இணைய மோசடி செய்பவர்கள் அதை எவ்வாறு பணமாக்குகிறார்கள் என்பதை பிபிசி ஆராய்ந்தது.

TTDயின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ன?

திருப்பதி கோவில், போலி இணையதளம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 300 ரூபாய் தரிசன ஸ்லாட்டை முன்பதிவு செய்ய ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.

இந்த டிக்கெட்டுகளை TTDயின் அசல் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியும். திருப்பதி கோவிலுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் அசல் இணையதளம் இது.

TTD இணையதளத்தில் முதலில் உள்நுழையும்போது, ​​அது நமது மொபைல் எண்ணைக் கேட்கும். நமது மொபைலில் வந்த OTPயை உள்ளிட்ட பிறகு, உள்நுழைய முடியும். இந்த செயல்முறை முழுமையடைய சிறிது நேரம் எடுக்கும்.

ஒருமுறை உள்நுழைந்தால் ஆறு பேருக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், அந்தந்த மாதங்களுக்கான சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல பெட்டிகளைப் பார்க்க முடியும். பச்சை நிறத்தில் உள்ள தேதிகள் மட்டுமே காலி எனக் கணக்கிடப்படும்.

சிவப்பு நிறத்தில் இருந்தால், கோட்டா நிரம்பியுள்ளது என்றும், மஞ்சள் நிறத்தில் இருந்தால், விரைவில் முடியவுள்ளது என்றும், நீல நிறத்தில் இருந்தால், கோட்டா விடுவிக்கப்படவில்லை என்றும் அர்த்தம்.

நாம் கோவிலுக்கு செல்ல விரும்பும் தேதி பச்சை நிறத்தில் இருந்தால் அதை கிளிக் செய்யும் போது, டிக்கெட்டை முன்பதிவு செய்ய பல்வேறு விருப்பங்களைப் பெறுவோம். எந்த நேரம், எத்தனை டிக்கெட்டுகள் உள்ளன என்பது அங்கு காட்டப்படும்.

நமக்குத் தேவையான நேரத்தைத் தேர்ந்தெடுத்து விருப்பங்களைத் தேர்வுசெய்த பிறகு, அங்கே லட்டுகளை முன்பதிவு செய்யும் நேரத்தை காண முடியும்.

அதற்கு பிறகு தரிசனம் செய்ய வரும் நபர்களின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தகவலை பதிவு செய்து அவர்களின் அரசு அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆதார் அட்டை உள்ளிட்ட அரசின் ஏதாவது ஒர் அடையாள அட்டையைக் கொண்டு பதிவு செய்யலாம்.

இறுதியாக பணம் செலுத்தும் விருப்பத்தைக் கேட்கும். அங்கு UPI, Net Banking, Google Pay, Phone Pay, Paytm, Debit Card போன்ற ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்திய பிறகு ​​டிக்கெட் உறுதி செய்யப்படும்.

அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் அல்லது மொபைல் போனில் கொண்டு சென்று, திருமலை நுழைவு வாயிலில் காட்டினால் அங்குள்ள ஊழியர்கள் அதை ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகு கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பார்கள்.

போலி இணையதளம் எப்படி இருக்கும்?

திருப்பதி கோவில், போலி இணையதளம்

TTDயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள செயல்முறையைப் போலவே போலி இணையதளங்களிலும் நாம் பார்க்கிறோம். அவை அசல் போலவே அனைத்து அம்சங்களிலும் இருக்கின்றன.

உற்று நோக்கினால் மட்டுமே அசல் எது, போலி எது என கண்டறிய முடியும்.

அசல் இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பல்வேறு வண்ண ஸ்லாட்டுகளைப் பார்க்கும் முடியும். ஆனால் ​​போலி இணையதளத்தில் டிக்கெட்டுகள் எப்போதும் பச்சை நிறத்தில் இருப்பது போல காட்டும்.

அப்போதே உஷாராகும் நபர்களால், இந்த போலிகளின் வலையில் விழாமல் தப்பிக்க முடியும்.

ஆனால் அதை கவனிக்காமல், நாம் எல்லா விவரங்களையும் அறியாமல் உள்ளீடு செய்து அதைச் செயல்படுத்தினால், இறுதியாக நம்மிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியாக ஒரு டிக்கெட்டை உருவாக்கி தரும்.

அப்படி உருவாகும் டிக்கெட்டில் ஒரு ஸ்கேன் குறியீடு உள்ளது, இதனால் அசல் மற்றும் போலிக்கு இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண முடியாது. முன்பதிவு செய்தவர்களும் உண்மையான டிக்கெட்தான் என்ற மாயையில் பயண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால் கோவில் ஊழியர்கள் அதை ஸ்கேன் செய்யும் வரை அது போலியானது என்பதை அடையாளம் காண முடியாததால் அவர்கள் மோசமாக ஏமாற்றப்படுகிறார்கள்.

சமீபத்தில், திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, போலி டிக்கெட்டுகள் பற்றி எழுந்த ஏராளமான புகார்களை அடுத்து, விசாரணை நடத்தியது. ஆனால் அடையாளம் காணப்பட்ட ஒரு போலி இணையதளத்தை முடக்க தவறிவிட்டது.

அசல் vs போலி எவ்வாறு வேறுபடுத்துவது?

திருப்பதி கோவில், போலி இணையதளம்

இது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த போலி இணையதளத்தின் முகவரி.

https://tirupatibalaji-ap-gov.org/

ஒரிஜினல் வெப்சைட்டிற்கும் போலி வெப்சைட்டிற்கும் மிக சிறிய வித்தியாசங்கள் இருப்பதை சற்று கவனமாக பார்த்தால் அடையாளம் காணமுடியும்.

அசல் தளத்தில் திருப்பதி பாலாஜிக்கு அடுத்துள்ள APக்கு முன்னால் ஒரு புள்ளி(.) உள்ளது, ஆனால் போலி இணையதளத்தில் ஹைபன்(-) உள்ளது.

அசல் தளத்தில் gov-ஐ தொடர்ந்து .in இருக்கும்; போலி இணையதளத்தில் gov-ஐ தொடர்ந்து .org இருக்கும்.

TTD, இந்த போலி இணையதளத்தை அகற்ற முயற்சித்தது. போலி இணையதளத்தில் சைபர் பாதுகாப்பினால் அது நடக்கவில்லை. இதையடுத்து மாநில அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தது.

இதன் விளைவாக, ஆந்திர காவல்துறை இந்த இணையதளத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த டொமைன் ஹோஸ்டிங் நிறுவனமான Godaddy-யிடம் புகார் அளித்துள்ளது.

TTDக்கும், பக்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த இணையதளத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலி இணையதளம் மூடப்பட்டதாக தெரிகிறது. தற்போது கூகுள் தேடலில் மட்டும் இந்த இணையதளம் தெரிகிறது. அதை கிளிக் செய்தால் திறக்கவில்லை.

போலி டிக்கெட் பிரச்னை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த காலங்களில் இதுபோன்ற பல போலி இணையதளங்கள் குறித்து TTD புகார் அளித்து அவை அகற்றப்பட்டுள்ளன.

இதுவரை 40 போலி இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், போலி தளங்களின் சிக்கல் இன்னும் நீடிக்கிறது. அவையும் அசல், போலி என பிரித்து பார்க்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அவ்வப்போது பக்தர்களை எச்சரிப்பது TTD அதிகாரிகளுக்கு தலைவலியாக உள்ளது.

OTP மூலம் அடையாளம் காண முடியவில்லையா?

திருப்பதி கோவில், போலி இணையதளம்

அடையாளம் காண முடியும். ஆனால், அதையும் மிகக்கூர்ந்து கவனிக்க வேண்டும். தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்த பிறகு, நமக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக கிடைக்கும் OTP, JD-TPTBLJ இலிருந்து வரும். ஆனால் போலி இணையதளம் அனுப்பிய OTP, AD-ADVTOP இலிருந்து வருகிறது.

TPTBLJ என்பதிலிருந்து வரும் OTP என்பது திருப்பதி பாலாஜியைக் குறிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், போலியான OTP-ஐப் பெறும்போது நாம் ஏமாறுவதைத் தவிர்க்கலாம்.

ஆனால், ஓடிபியில் நுழையும் அவசரத்தில் பக்தர்கள் இதை அலட்சியப்படுத்தினால், பாதிக்கப்படுவது பக்தர்கள் மட்டுமே.

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறுகையில், போலி இணையதளங்கள் குறித்து நாங்கள் கடுமையாக கண்காணிக்கிறோம் என்றார்.

“பக்தர்களை குழப்பி, அவர்களின் பணத்தை திருடி, ஏமாற்றும் வகையில், சில மர்ம நபர்கள் போலி இணையதளங்களை உருவாக்கி வருகின்றனர். எங்கள் விஜிலென்ஸ் துறை அதில் கவனம் செலுத்துகிறது. 30க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை நாங்கள் மூடிவிட்டோம். அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: