சூடானில் போர் விமானங்களின் குண்டு மழைக்கு நடுவே பிபிசி செய்தியாளரின் ஆபத்தான பயணம்

பட மூலாதாரம், MOHAMED OSMAN/ BBC
- எழுதியவர், முகமது ஒஸ்மான்
- பதவி, பிபிசி செய்தியாளர், சூடானிலிருந்து
பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் முகமது ஒஸ்மான் தனது வாழ்நாள் முழுவதும் சூடானில் வாழ்ந்தவர். கடந்த மாதம் ராணுவத்தின் இரண்டு தரப்பு பிரிவுகளுக்கு இடையில் மோதல் வெடித்தபோது, அவர் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். ஆனால் நாளடைவில் அங்கு நிலைமை மோசமானது.
அவர் தனது தாய்நாட்டை விட்டு எகிப்துக்கு தப்பிச்செல்ல ஆபத்தான தரைவழி பயணத்தை மேற்கொள்ளும் கடினமான முடிவைப் பற்றி சிந்தித்தார்.
பிறந்த ஊரை விட்டு வெளியேறி…
சூடான் தலைநகர் கார்தூமின் மேல் வானில் கருப்பு நிற புகை மண்டலங்கள் தென்பட்டன. இது எனக்கு வரவிருக்கும் அழிவை உணர்த்துவதாக இருந்தது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஓம்துர்மான், கார்தூம் பஹ்ரி போன்ற பகுதிகளில் ஏற்கனவே ராணுவத்திற்கும் துணை ராணுவக் குழுவான ராபிட் சப்போர்ட் போர்ஸுக்கும் (RSF) இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.
மிகவும் கவலையளிக்கும் வகையில், வெடிகுண்டுகளின் சத்தம் என் வீட்டின் அருகே அதிகமாகிக் கொண்டே வந்தது. மேலும் RSF படையினரால் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டதாக செய்திகளும் வந்தன. அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதாகவும், கார்களை திருடுவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இவை அனைத்தும் கார்தூமில் இருந்து வெளியேறும் முடிவை என்னை எடுக்கத் தூண்டியது.
களத்தில் நடக்கும் மோதலை செய்தியாக்கும் ஒரு ஊடகவியலாளராக, என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு தெரிவிப்பது முக்கியம்.
ஆனால் நகருக்குள் பயணிக்க முடியாத நிலை, மோசமான இணைய வசதி, முடக்கப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள் அதை சவாலாக்கின. அனைத்திலும் முக்கியமாக எனது குடும்பம் மற்றும் எனது பாதுகாப்பு போன்ற பெரிய சிரமங்கள் என் பணியை கடுமையாக்கின. அதன் முடிவில் கார்தூமை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

பட மூலாதாரம், Getty Images
ஆபத்தான பயணம்
எங்கள் பயணம் ஏப்ரல் 28 அன்று தொடங்கியது. வழக்கமாக சண்டையின் தீவிரம் நண்பகலில் ஓரளவு குறையும் என்பதால் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினோம். ஓம்துர்மான் நகரிலிருந்து எகிப்து எல்லையை நோக்கிச் சென்ற பேருந்தில் நாங்கள் ஒரு குழுவினருடன் சேர்ந்து பயணித்தோம்.
ஆனால் எங்கள் பயணம் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு போர் விமானம் வானில் பறந்தது. பின்னர் எங்களுக்கு மிக அருகில் இருந்த RSF வீரர்கள் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நாங்கள் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் என்பதை அறிய விரும்பிய ஆயுதம் தாங்கிய படையினர் எங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி திடீரென சுற்றி வளைத்தனர்.
ஆர்எஸ்எஃப் படையினர் எங்களை நோக்கி துப்பாக்கியை காட்டியதால் எனது மனைவியும், குழந்தைகளும் பயந்தனர். எங்கள் பேருந்தின் உள்ளே சோதனை செய்த பிறகு, எங்களை வெளியேற அவர்கள் அனுமதித்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு குழு எங்களை மீண்டும் தடுத்தது. ஆனால், இம்முறை அதிக நேரம் எடுக்கவில்லை. உடனடியாக அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
ஓம்துர்மானின்புறநகரைக் கடந்தபோது, முற்றிலும் காலியாக இருந்த தெருக்களைக் கண்டோம். RSF-க்கு சொந்தமான வாகனங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன, பெரும்பாலும் அப்பகுதிக்கு மேல் சூடானின் விமானங்கள் அடிக்கடி பறக்கின்றன. அதனால் அவற்றிடம் இருந்து தப்பிக்க பக்கவாட்டுத் தெருக்களில் அல்லது மரங்களுக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்தன.
நாங்கள் மேற்கு நோக்கிச் சென்றபோது, துணை ராணுவத்தின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு வாழ்க்கை காணப்பட்டது. பெண்கள் நடத்தும் பல கடைகள், பிரபலமான காபிக்கடைகள் திறந்திருந்தது மட்டுமல்லாமல் பரபரப்பாக இயங்கின. பொது போக்குவரத்து வழக்கத்தை விட மெதுவான வேகத்தில் இயங்கியது.
இருப்பினும், அவ்வப்போது சோதனைச் சாவடிகள் மற்றும் ஆயுதமேந்திய கும்பல்களின் வடிவத்தில் ஆபத்து மறைந்திருந்தது. பாதுகாப்பு படையினர் இல்லாததால், வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதிர்ஷ்டவசமாக, நாங்கள் ஓம்துர்மானை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நமக்கு தெரிந்தவர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பகுதிகளை தவிர்த்து பயணம் செய்ய முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
தப்பி ஓடும் மக்கள் கூட்டம்
கார்தூமுக்கும் வட மாநிலத்திற்கும் இடையிலான மாநில எல்லையை நாங்கள் அடைந்தபோது, சூடான் பாதுகாப்புப் படையினரால் வழக்கமாக அமைக்கப்படும் சோதனைச் சாவடிகளை நாங்கள் காணவில்லை.
அதற்கு பதிலாக, அதிக எண்ணிக்கையிலான தனியார் போக்குவரத்து வாகனங்கள் இருந்தன. அவை அனைத்தும் வடக்கு நகரங்களான மெரோவி, டோங்கோலா மற்றும் வடி ஹல்ஃபாவை நோக்கிச் செல்லும் மக்களால் நிரம்பியிருந்தன.
நாங்களே வடி ஹல்ஃபாவை அடைய விரும்பினோம். அதை அடைய நாங்கள் 24 மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
கரடுமுரடான சாலைகளில் இது மிகவும் கடினமான பயணமாக இருந்தது. பாலைவனத்தில் உள்ள மணல் மேடுகளில் இருந்த மணல் வீசிய காற்றின் மூலம் எங்கள் கண்களில் வந்து விழுந்தது.
இரவில் டோங்கோலா நகரில் உள்ள ஒரு காபிக்கடையில் எங்கள் வாகனம் நின்றது. குளிர்ந்த இரவிலிருந்து எங்களைப் பாதுகாக்க எந்த போர்வைகளும் இல்லாமல் இருந்ததால், திறந்த வெளியில் தூங்க படுக்கைகளை வாடகைக்கு எடுத்தோம்.
கார்தூமில் நடைபெற்ற மோதலால் தப்பியோடிய ஏராளமான மக்களை தங்க வைப்பதற்கு வடி ஹல்ஃபா நகரில் ஹோட்டல்கள், தங்குமிடங்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எதிர்கொள்ளும் குழப்பமான காட்சியை நாங்கள் கண்டோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பொது இடங்களிலும், பள்ளிகளிலும் தரையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
எல்லையில் நிலவும் குழப்பம்
50 வயதான ஒரு பெண், நான்கு நாட்களாக இந்த பரிதாபகரமான சூழ்நிலையில், போதுமான உணவு, தண்ணீர் இல்லாமல் பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தையும், இரவில் கடுமையான குளிரையும் தாங்கிக் கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார்.
எகிப்துக்கு செல்ல தனது மகனுக்கான விசா இன்னும் கிடைக்காத நிலையில் அவர் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
எல்லையில், சூடான் மட்டுமின்றி, இந்தியா, ஏமன், சிரியா, செனகல், சோமாலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்தேன்.
அவர்களில் பெரும்பாலானோர் கார்தூமின் சர்வதேச ஆப்ரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள்.
அதில் ஒருவரான கானாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஷெல் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் கார்தூமில் "மிகவும் கடினமான தருணங்களை" அனுபவித்த பிறகு எப்படியாவது வெளியேற விரும்புவதாக என்னிடம் கூறினார்.
இத்தகைய இடர்பாடுகளுக்கு நடுவே மக்களின் கருணையும் வெளிப்படுகிறது. வடி ஹல்ஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள சூடான் - எகிப்து எல்லைப் பகுதியில் வசிக்கும் பலரும் வெளியேறும் மக்களுக்கு உதவ தங்கள் வீடுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றனர்
உள்ளூர் மக்கள் பணம் ஏதும் கேட்காமல் புதிதாக வருபவர்களுடன் உணவு, தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர். வடி ஹல்ஃபாவில் ஒரு பெரிய வீட்டை வைத்திருக்கும் படேரி ஹாசன், டஜன் கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக என்னிடம் கூறினார்.
"இந்த மக்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பு. வழிப்போக்கர்களுக்கு வழங்க இங்குள்ள அதிகாரிகளிடம் எதுவும் இல்லை," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் எல்லையில் நிலைமை குழப்பமாக இருந்தது. டஜன் கணக்கான பேருந்துகளும், சொந்த கார்களும் அணிவகுத்து நின்றன. எல்லையை கடக்க விரும்பும் மக்களை சமாளிக்கும் அளவுக்கு ஊழியர்களின் அளவு மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே காணப்பட்டது.
அனைத்து நடைமுறைகளையும் முடித்த பிறகு எகிப்து செல்லும் படகில் ஏறினோம். ஆனால் மாலை 5 மணிக்கு அந்த படகு நிறுத்தப்பட்டது. அதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரவு முழுவதும் கடினமான சூழலில் தூங்க வேண்டியிருந்தது.
ஒரு கடுமையான இரவுக்குப் பிறகு, அடுத்த நாள் காலை நாங்கள் எகிப்துக்குப் புறப்பட்டோம்.
நைல் நதியை படகில் கடக்கும்போது, மகிழ்ச்சி, சோகம் என முரண்பட்ட உணர்வுகள் என்னை ஆட்கொண்டது
என் மனைவி, குழந்தைகளை காப்பாற்றியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் என் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை கடுமையான போரின் விளைவுகளை எதிர்கொள்ள, அவர்களைப் பாதுகாக்க எந்த கேடயமும் இல்லாமல் விட்டுச் சென்றதற்காக வருத்தப்படுகிறேன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












