"மனைவி வேலைக்கு போகிறாள், நான் வீட்டைப் பராமரிக்கிறேன்" - ஓர் இல்லத்தரசனின் கதை #HisChoice

என் மனைவியின் சகோதரியின் திருமணத்திற்காக மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தோம். மனைவி திருமண கொண்டாட்டங்களிலும், ஆடல் பாடல்களிலும் ஈடுபட்டிருந்தாள்.
மகள் என்னுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் எப்போதும் என்கூடவே இருப்பாள், அவளுக்கு தேவையான அனைத்தையும் நானே செய்வேன்.
நாங்கள் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். என் மகளின் டயாப்பர் ஈரமாகிவிட்டது. அதை மாற்றி சுத்தப்படுத்துவதற்காக மகளுடன் நான் கழிவறைக்கு சென்றபோது, என் மாமியார் என்னைத் தடுத்தார்.
என்னை தனியாக அழைத்துச் சென்று, நீ இந்த வீட்டின் மருமகன், கூடியிருக்கும் சொந்தக்காரர்கள் தவறாக நினைப்பார்கள். சோனாவை கூப்பிடுகிறேன், அவள் குழந்தையை கழுவிவிட்டு டயாப்பர் மாற்றட்டும் என்று சொன்னதுடன், என் மனைவிக்கு குரல் கொடுத்தார்.
இதுவும் என்னுடைய வேலைதான், நான் எப்போதும் செய்வதுதான் என்று சொல்வதற்குள் அவர் என் மனைவியை அழைத்து, போய் குழந்தையை சுத்தம் செய் என்று சொல்லிவிட்டார்.
நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்ப்பது ஒன்றும் புதிதல்லவே? நான் ஹவுஸ்-ஹஸ்பண்ட் என்பது எனது மாமியாருக்கு தெரியும், பிறகு ஏன் அவர் இப்படி சொல்கிறார் என்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருந்தது.
ஆனால் வீட்டில் உறவினர்கள் இருப்பதால் நான் இந்த வேலையை செய்வது மாமியாருக்கு அவமானமாக இருந்திருக்கலாம். பலரின் முகத்தில் எள்ளல் சிரிப்பு இருந்ததை கவனித்தேன். இதுவும் எனக்கு புதிதல்ல, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இவன் ஹவுஸ் ஹஸ்பண்ட் என்று எனது காதுபடவே நையாண்டித் தொனியில் பேசியதும் எனக்கு புதிதல்ல.
நான் ஹவுஸ் ஹஸ்பண்ட் என்பது உண்மையாக இருந்தாலும், அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்பதுதான் என் மாமனார் மாமியாரின் கவலை.
ஒரு விஷயம் உங்களுக்கு அவமானம் தருவதாக இருந்தால், அதை மீண்டும் மீண்டும் பேசி உங்களை குத்தி பேசி, கேலி செய்வதுதான் நம் மக்களின் பழக்கம் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.
ஆனால், ஒரு விஷயத்தில் நான் தெளிவாகவே இருந்தேன். நான் தேர்ந்தெடுத்தது தவறான விஷயம் அல்ல, எனவே என்னுடைய நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தேன்.

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.
இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்து கொண்டேன். யாருக்கு நல்ல வேலை கிடைக்கிறதோ அவர்கள் வேலைக்கு போகலாம் என்றும், மற்றவர் வீட்டை கவனித்துக் கொள்வது என்றும் நாங்கள் காதலித்த காலத்திலேயே முடிவு செய்துவிட்டோம்.
நான் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தேன், ஆனால் மிகவும் நல்ல வேலை என்று சொல்ல முடியாது. ஆனால், என் மனைவிக்கு கிடைத்த வேலை அவளுக்கு பிடித்தமானதாகவும், முன்னேற்றம் கொடுக்கும் வேலையாகவும் இருந்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது.
எனவே எங்கள் முடிவுப்படியே அவள் வேலையை தொடர்ந்தாள், நான் வீட்டைப் பார்த்துக் கொண்டேன். வீட்டு வேலைக்காக நான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை, எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன்.
வீட்டை சுத்தம் செய்வது, பெருக்கித் துடைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது, குழந்தையை பார்த்துக் கொள்வது என சகல வேலைகளையும் நான் செய்கிறேன்.
ஒரு வேளை நாங்கள் வீட்டு வேலைக்கு யாரையாவது வைக்க நினைத்தாலும்கூட, வேலைக்கு வருவதற்கு வேலையாட்கள் தயங்குவார்களோ என்னவோ?
என் வீட்டில் நான் கடைக்குட்டி, இரண்டு அண்ணன்கள் இருந்தாலும், அம்மாவுக்கு நான் உதவி செய்வேன். நான் சிறுவனாக இருந்தபோதே, என்னை 'பொம்பளைச்சட்டி' என்று எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால் நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அம்மா ஒரு வேலையை செய்யும்போது, நாம் அதை செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எந்த வேலையாக இருந்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
ஆனால், இன்று டெல்லியில் இருக்கும் படித்த நல்ல வேலைக்கு போகும் என் நண்பர்கள் கூட என்னுடைய 'வேலைத் தெரிவு' குறித்து புரிந்துக் கொள்கின்றனர். ஆனால் நான் என்னுடைய சொந்த ஊரான போபாலுக்கு போகும்போது, அங்கு கேலிப் பேச்சுகளை சந்திக்கிறேன்.
அரசியல் அல்லது பொது விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசும்போது நான் பேசும்போது, என்னை தடுத்து உனக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் வீட்டு வேலை மாதிரி சுலபமானது இல்ல, என்று கூறி என்னை மட்டம் தட்டுவதாக நினைத்து மகிழ்ச்சியடைவார்கள்.
ஒருமுறை என் நண்பர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது, நான் எனதை கருத்தை சொல்லத் தொடங்கியது, அதெல்லாம் எதுக்கு? போய் டீ போடு என்று ஏளனம் செய்தார்கள். நான் சிரித்துக் கொண்டே, டீ மட்டும் போதுமா? பக்கோடாவும் போடட்டுமா என்று எதிர்கேள்வி கேட்டேன்.
நான் எதிர்கொள்ளும் கேள்விகள், கேலிகள், நையாண்டி நக்கல்கள் அனைத்தையும் இயல்பாக எதிர்கொள்கிறேன். ஏனெனில் நான் செய்வது என்ன? அது சரியா தவறா என்ற ஆழமான புரிதல் எனக்கு இருக்கிறது.
நான் இயல்பாக இருந்தாலும், சில சமயம் எனக்குத் தெரிந்தவர்கள் என்னை சீண்டி வெறுப்பேற்றுவதற்காக போன் செய்து, இன்னைக்கு சமையலில் என்ன ஸ்பெஷல்? சாப்பிட வரட்டுமா என்று கேட்பார்கள்.
வீட்டு வேலைகளுக்கு யாரும் பெரிய அளவு மதிப்பு கொடுக்காததும், வீட்டு வேலை என்பது பெண்களுடையது, ஆண் என்றால் வெளியில் சென்று பணம் சம்பாதித்து வருவது என்ற நமது சமூகத்தின் எண்ணமும்தான் இதற்கு காரணம் என்பது எனக்கு தெரியும்.
நான் சோம்பேறியாக வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு, ஜாலியாக இருக்கிறேன் என்று நண்பர்கள் விமர்சிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல, வீட்டு வேலைகள் மட்டுமல்ல, ஒரு ஆண் வெளியில் சென்று செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் நான் செய்கிறேன்.
ஆனால் உண்மையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒரு பெண்ணை எப்படி மட்டமாக நினைக்கிறார்கள் ஆண்கள் என்பதை என்னால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது. அதே மனோபாவம்தான் என்னை வசைபாடும்போதும் வெளிப்படுகிறது.
திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மகள் பிறந்தாள். ஒரு குழந்தையை பராமரிப்பது என்பது முழு நேர வேலை, அதற்கு பொறுப்பும் பொறுமையும் அதிகம் தேவை.
வீட்டைப் பார்த்துக் கொள்வது, குழந்தையை குளிக்க வைப்பது, உணவு ஊட்டுவது, வெளியில் அழைத்துச் செல்வது என குழந்தையைப் பற்றிய எண்ணங்களே எனக்கு சுற்றிவருகிறது.
குழந்தையை பூங்காவிற்கு விளையாட அழைத்துச் செல்லும்போது முதலில் அங்கிருந்த தாய்மார்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள், என் மகளை கொஞ்சுவார்கள்.
ஆனால், சில நாட்களில் அவர்களின் பேசும் தொனியே மாறிவிட்டது. இன்றைக்கும் வந்திருக்கிறீர்களே? வேலைக்கு போகவில்லையா? உடல்நிலை சரியில்லையா? மனைவி எங்கே? இப்படி பலவிதமான கேள்விகளை கேட்டார்கள்.
என் மனைவி வேலைக்கு போகிறாள், நான் வீட்டில் இருந்து குடும்பப் பொறுப்புகளை கவனிக்கிறேன் என்றதும் கேள்விக்கணைகள் வேறுவிதமாய் மாறின.

இவ்வளவு சிறிய குழந்தையை எப்படி பராமரிக்க முடிகிறது? உங்களை எல்லா வேலைகளையும் செய்ய வைக்க எப்படி மனைவிக்கு மனசு வருகிறது? குழந்தைக்கு உடை மாற்றிவிடுவது, டயாப்பர் மாற்றுவது, உணவு ஊட்டுவது எல்லாம் உங்களால் எப்படி செய்ய முடிகிறது என்பது போன்ற சந்தேகங்களுக்கு நான் பதிலளித்தாலும், அவை மீண்டும் மீண்டு எழுகின்றன.
நான் வேற்றுலகத்து மனிதன் என்பதைப் போல் பார்ப்பார்கள். அவர்களின் பேசுபொருளாய் எல்லா இடத்திலும் நான் மாறியிருப்பேன் என்பதும் எனக்கு தெரியும். வீட்டு வேலைகளை ஆண்கள் செய்வதை தரக்குறைவாக நினைப்பதும், பெண்களை மட்டமாக நினைப்பதும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான் என்று புரிந்தது.
தன் கணவன் வீட்டு வேலைகளை செய்தால் நன்றாக இருக்கும் நினைக்கும் பெண்கள்கூட ஒரு அளவுக்கு மேல் அதை விரும்புவதில்லை என்பதையும் நான் நிதர்சனமாக உணர்ந்தேன்.
மதிப்பேயில்லாத வேலையை நான் செய்வதுபோலவும், எனக்கு திறமையில்லை என்றும், அதனால்தான் நான் வீட்டு வேலை செய்கிறேன் என்றும் சமூகத்தினரின் பொதுப்பார்வை என்னை சுட்டிக்காட்டுகிறது. 'பொறுப்பில்லாதவன்' என்று எனக்கு முத்திரை குத்துகின்றனர்.
திருமணம் ஆகி நாங்கள் தனிக்குடித்தனம் இருந்தபோது, வீட்டுக்கு பெற்றோர் வந்தபோது, வீட்டு வேலைகளை நான் செய்வதை பார்த்த அம்மாவுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் அதை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், சாடைமாடையாக உணர்த்தினார். ஆனால் அம்மாவுக்கு நான் வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது அவருக்கு அது தவறாக தெரியவில்லையே?
ஏன் வேலைக்கு போகவில்லை? வெளியில் போய் வேலைத் தேடினால்தானே கிடைக்கும்? வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத வேலைகளை பார்த்தால் யார் உன்னை மதிப்பார்கள்? இப்படி பல கேள்விகள்...
என் தாயின் சங்கடத்தை புரிந்துக் கொண்டு என் மனைவியும் அப்போது வீட்டில் என்னுடன் சேர்ந்து வேலை செய்வாள். ஆனால் அவளால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை, ஒரு பெண் வேலைக்கு சென்றால், வீட்டு வேலையும் பார்க்கவேண்டும் என்பது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது?
ஒரு பெண் வேலைக்கு செல்லத் தயாரானால் இரட்டை வேலை பார்க்க வேண்டியது அத்தியாவசியமா? ஓர் ஆணிடம் யாரும் அப்படி எதிர்பார்ப்பதில்லையே? எனவே வேலை செய்யவேண்டாம் என்று மனைவியை தடுத்துவிட்டேன். ஆனால் என் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், அந்த விஷயத்தில் அவர் என்றுமே வாய் பேசா மெளனிதான். அவர் எதாவது சொன்னால், அதற்கு நான் பொறுமையாக, ஏற்றுக் கொள்ளும் பதிலை சொல்லிவிடுவேன் என்று அவருக்கு தெரியும்.
இப்போது மகள் பள்ளிக்கு செல்கிறாள். வீட்டுப்பாடமாக 'ஃபேமிலி ட்ரீ' வரையச் சொல்லியிருந்தார்கள். நான் வெளிவேலையாக சென்றிருந்தேன். என் மனைவி மகளுக்கு உதவி செய்தாள். அதில் குடும்பத் தலைவன் என்ற இடத்தில் என்னுடைய பெயர் எழுதியிருந்தார்கள்.
வீட்டிற்கு வந்த நான் இதைப் பார்த்து, இது தவறு என்று சொன்னேன். வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் ஒருவர்தான் குடும்பத் தலைவர், எனவே என் மனைவி சோனாலியின் பெயர்தான் அந்த இடத்தில் இடம்பெறவேண்டும் என்று நான் சொன்னேன்.
ஆனால் அதற்கு சோனாலி ஒத்துக் கொள்ளவில்லை.
ஹெட் ஆஃப் த ஃபேமிலி என்பவர் ஆணோ அல்லது பெண்ணோ யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்பத்திற்காக எல்லா வேலையும் செய்பவர்தான், குடும்பத்தலைவர், ஒரேயொரு வேலையை செய்பவர் அல்ல என்று கூறி, என் பெயரை மாற்ற மறுத்துவிட்டாள்.

இறுதியாக, தனிமனிதனாக என்னைப் பற்றி சொல்லட்டுமா? நான் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர், எழுதுவதில் ஆர்வம் உண்டு. வேலைகளை முடித்துவிட்டு எழுத உட்கார்ந்துவிடுவேன். நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன, ஒன்று பதிப்பில் இருக்கிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை.
மாற்றங்கள் என்னும்போது, தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, கல்வி, வேலை, இடம் மாறுதல் என பல்வேறு விஷயங்களை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் நமது இந்திய சமூகம், வீட்டு வேலை என்னும்போது மட்டும் சற்றே பின்தங்கி நிற்கிறது. இதிலும் மாற்றம் வரும். ஆனால் சற்று காலம் எடுக்கும்.
இன்று கூட்டுக் குடித்தனங்கள் அரிதாகிவிட்ட நிலையில், தனியாக வசிக்கும் தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றால் குடும்ப பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என இருவரும் ஓடிக் கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. மன அழுத்தம், மனச் சோர்வு என்று பலவித அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அப்போது யாராவது ஒருவர் வேலை பார்க்கலாம், மற்றொருவர் வீட்டைப் பராமரிக்கலாம் என்று முடிவு செய்வதற்கான மாற்றங்கள் தொடங்கிவிட்டன. அது வெளிநாட்டில் சற்று அதிகமாகவும், நம் இந்திய சமூகத்தில் பெருநகரங்களில் மட்டும் சாத்தியமாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.
வேலை எதையுமே செய்யாமல், வேலைக்கு செல்வதற்கான தகுதிகூட இல்லாமல் சுற்றித் திரியும் ஆண்கள்கூட, வீட்டு வேலை செய்வதை அவமானமாக நினைக்கிறார்கள். அவர்கள்கூட என் அளவுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளமாட்டார்கள் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
நான் மட்டுமல்ல, என் மனைவியும் பல சங்கடமான கேள்விகளை எல்லா இடங்களிலும் எதிர்கொள்கிறாள். அலுவலகத்திலும் அவளை கேலி செய்வார்கள். ஆனால் நாங்கள் இருவரும் பரஸ்பர புரிதல் கொண்டவர்கள். நமக்கு சரி என்று தெரிந்த விஷயத்தை வெளியில் இருப்பவர்கள் விமர்சித்தால் அது அவர்களுடைய கோணம் என்று புரிந்துக் கொள்ளும் அளவு பக்குவம் கொண்டவர்கள்.
நான் வீட்டு வேலை செய்வது பற்றி என் சகோதரர்கள் எதுவும் சொல்வதில்லை என்றாலும், அதைப் பாராட்டியதும் இல்லை. ஆனால், வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து எல்லா வேலைகளையும் பார்க்கும் பெண்கள் என்னை பாராட்டுவார்கள்.
நாம் வித்தியாசமாக எதாவது செய்யும்போது, முதலில் எதிர்ப்புகள் வரும், கேலி செய்வார்கள், பிறகு கொஞ்சம் யோசிப்பார்கள் இறுதியில் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விஷயத்தை நான் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன். நான் எடுத்து வைத்திருக்கும் அடி, மாறிவரும் காலத்தில் ஆண்கள் எடுக்கவேண்டிய முதல் அடி...
(வீட்டு வேலைகளை செய்து ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் ஆண் ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை பேசும் இந்த கட்டுரை பிபிசி செய்தியாளர் நிலேஷ் தோத்ரேவால் எழுதப்பட்டது. இந்த #hischoice சிறப்புத் தொடர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்கால் தயாரிக்கப்பட்டது.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












