ப்ளே ஆஃப் வாய்ப்பை பறித்த டெல்லி: கோட்டைவிட்ட பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் - சென்னைக்கும் சிக்கலா?

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் அந்த அணியின் ப்ளே ஆஃப் கனவை ஏறக்குறைய முடிவுக்கு வர வைத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இனிமேல் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது என்பது மற்ற அணிகளின் வெற்றி தோல்வியில்தான் இருக்கிறது.

ஆனால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாவதில் இருந்து வெளியேறிய டெல்லி கேபிடல்ஸுக்கு இந்த வெற்றியால் எந்தப் பயனும் இல்லை என்றாலும், பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் பயணத்துக்கு ப்ரேக் போட்டுள்ளது.

ரூஸோவின் அதிரடியான பேட்டிங், பிரித்விஷாவின் அரைசதம் ஆகியவற்றால் தரம்ஷலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 64-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதல்முறையாக 200 ரன்கள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

தரம்ஷலாவில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் ஐபிஎல் ஆட்டம் நேற்று நடந்தது. ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம், முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய முடிந்தது.

இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியும் 200 ரன்களை அடித்தது. இதற்கு முக்கியக் காரணம் டெல்லி அணியின் வார்னர், பிரித்விஷா, ரூசோ ஆகியோரின அரைசதம்.

ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் பல போட்டிகளில் சொதப்பலாக பேட்டிங் செய்த பிரித்வி ஷாவுக்கு நேற்று வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தனது வாய்ப்பை இறுகப்பிடித்த பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரிலே ரூஸோ அதிரடியாக பேட் செய்து 37 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர்,6 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களின் பங்களிப்புதான் டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர் உயர்வுக்குக் காரணம்.

ஃபார்முக்கு வந்த டெல்லி

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறுவதற்கு முன் இதுபோன்ற பெரிய ஸ்கோரை ஒருமுறைகூட அடித்தது இல்லை. ஆனால், இப்போதுதான் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஃபார்முக்கு வந்துள்ளனர்.

அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைக்க அந்த அணியின் பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டோன் கடைசிவரை போராடியும் வீணானது. லிவிங்ஸ்டோன் 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தும்(9சிக்ஸர்,5பவுண்டரி) பலன் இல்லை.

ப்ளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் நிலைமை

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் கடைசி லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது.

ஆனால், சிஎஸ்கே அணியை வீழ்த்தினால், அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே பஞ்சாப் அணியின் வாய்ப்பை பறித்துவிட்ட டெல்லி, சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ப்ளே ஆஃப் ரேஸ் இன்னும் ஸ்வாரஸ்யமாக மாறும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் அதில் பஞ்சாப் அணி வென்றாலும் 14 புள்ளிகள்தான் கிடைக்கும்.

ஆனால் பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 308ல் இருக்கிறது. அதாவது கொல்கத்தா அணியைவிட ரன்ரேட் குறைந்துள்ளது. கடைசி லீக்கில் வென்றாலும் பஞ்சாப் அணியால் ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகம்தான். அவ்வாறு வென்று 14 புள்ளிகள் பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுக்காக கடைசிவரை காத்திருக்க வேண்டும்.

மந்தமான தொடக்கம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

214 ரன்கள் எனும் கடினமான இலக்கை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கலீல் அகமது தனது முதல் ஓவரை மெய்டனாக வீச, இசாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் ஷிகர் தவண் கோல்டன் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். கலீல் அகமது தனது 2வது ஓவரையும் மிகுந்த கட்டுக்கோப்பாக வீச பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பிரப்சிம்ரன், அதர்வா ரன் சேர்க்கத் திணறினர்.

அதன்பின் பிரப்சிம்ரன் , அதர்வா அதிரடியில் இறங்கி பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினர், இதனால் பஞ்சாப் அணியின் ரன்ரேட் உயரத் தொடங்கினாலும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 12 ஆக இருந்தநிலையில் பஞ்சாப் அணி மீது தொடர்ந்து நெருக்கடி அதிகரித்தது. இருவரையும் ரன் அவுட் செய்ய பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் கோட்டை விட்டனர்.

பிரப்சிம்ரன் 22 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு அதர்வாவுடன், லிவிங்ஸ்டோன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் ஷாட்களை ஆடத் தொடங்கினர்.

ஃபீல்டிங் மோசம்

லிவிங்ஸ்டோன் 3 ரன்கள் சேர்த்திருந்தபோது குல்தீப் யதாவ் பந்தில் டீப்மிட் விக்கெட்டில் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க நார்ஜே கோட்டைவிட்டார்.

அடுத்து குல்தீப் வீசிய 2வது ஓவரில் அதர்வா அடித்த ஷாட்டை யாஷ் துல் கேட்ச் பிடிக்கத் தவறினார். இருவருக்கும் கிடைத்த வாயப்புகளை சரியாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர்.

இதில் லிவிங்ஸ்டோன் தனது வழக்கான அதிரடியில் ஷாட்களை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களை அனாசயமாக லிவிங்ஸ்டோன் விளாசினார்.

பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு இல்லை

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

ஆனால், லிவிங்ஸ்டோன் அளவுக்கு அதர்வா ஷாட்களை ஆடவில்லை, பெரிய ஷாட்களை ஆடுவதற்கு திணறினார். அதர்வா 38 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில், 55 ரன்களில் காயம் காரணமாக ரிட்டயர்ஹர்ட ஆகினார். 3வது விக்கெட்டுக்கு அதர்வா, லிவிங்ஸ்டோன் கூட்டணி 78 ரன்களைச் சேர்த்தநர்.

அதன்பின் களமிறங்கிய எந்த பேட்ஸ்மேனும் லிவிங்ஸ்டோனுக்கு ஒத்துழைத்து பேட் செய்யவில்லை. தனி ஒருவனாக களத்தில் நின்று லிவிங்ஸ்டோன் ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தார். எந்த பெரிய பார்ட்னர்ஷிப்பும் அமையாதது பஞ்சாப் அணி தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

ஜிதேஷ் சர்மா(0), ரூ.9 கோடிக்கு வாங்கப்பட்ட ஷாருக்கான்(6), ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கரன்(11) ஹர்பிரீத் பிரார் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இந்த 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர், லிவிங்ஸ்டோனுக்கு ஒத்துழைப்பு அளித்திருந்தால்கூட அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருப்பார். 180 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அடுத்த 18 ரன்களுக்குள் 3விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசிய 18 –வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்ளிட்ட 21 ரன்களை லிவிங்ஸ்டோன் விளாசினார்.

நார்ஜே 19-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த சாம் கரன், 2வது பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்தவந்த பிரார் ரன்அவுட் ஆகி பெவிலியின் திரும்பினார். இந்த ஓவரில் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியில் பிடியில் இருந்தது.

நார்ஜே வீசிய இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஓவரை மட்டும் லிவிங்ஸ்டன் சந்தித்து இருந்தால், ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறியிருக்கும். ஆனால், 2 விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. சற்று கடினமான இலக்கு என்றாலும், லிவிங்ஸ்டோன் போராட முடிவு செய்தார். இசாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை தவறவிட்ட லிவிங்ஸ்டோன் அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார்.

4-வது பந்து நோபால வீசப்பட அதில் சிக்ஸர் விளாசி 7 ரன்கள் கிடைத்தன. அடுத்த 4வது 5-வது பந்துகளிலும் லிவிங்ஸ்டோனால் ரன் சேர்க்க இயலவில்லை, கடைசிப்பந்தில் லாங்ஆனில் படேலிடம் கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டோன் 94 ரன்களில்(48பந்து 9சிக்ஸர்,5பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளேவை பயன்படுத்த தவறினோம்

தோல்விக்குப்பின் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண் கூறுகையில் “இந்தத் தோல்வி வெறுப்பை வரவழைக்கிறது. பவர்ப்ளேவில் நாங்கள் சிறப்பாகப் பந்துவீசவில்லை.

சில விக்கெட்டுகளை பவர்ப்ளேவில் எடுக்கத் தவறிவிட்டோம். லிவிங்ஸ்டோன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஹர்பிரீத்தை பந்துவீசச் செய்ய நான் எடுத்த முடிவும் தவறுதான்.

வேகப்பந்துவீச்சாளர்களும் பவர்ப்ளேவில் லென்த்தில் வீசவில்லை, சரியான திட்டம் இருந்தது. அதை வீரர்கள் செயல்படுத்தவில்லை. இது வேதனையாக இருக்கிறது. பவர்ப்ளேவில் 60 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்பது வேதனைதான். பவர்ப்ளே ஓவர்கள்வரை பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பது தெரி்ந்தும், ரிஸ்க் ஏதும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்

பிரித்வி ஷா, ரூஸோ அதிரடி ஆட்டம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

டெல்லி அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர்கள், வார்னர், பிரித்வி ஷா நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஜோடி சேர்த்த அதிபட்சமாகும்.

முதல் 16 பந்துகளில் இருவரும் பவுண்டரிகூட அடிக்கவில்லை, ஆனால், அதன்பின் சாம் கரன் ஓவரில் வார்னர் தொடர்ந்து பவுண்டரிகளும், ரபாடா ஓவரில் இருசிக்ஸர்களையும் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

பிரித்விஷாவும் தனது பங்கிற்கு ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். அர்ஷ்தீப் ஓவரில் 2 பவுண்டரி, சிக்ஸர் உள்ளிட்ட 16 ரன்களைச் சேர்த்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் டெல்லி கேபிடல்ஸ் அணி 61 ரன்கள் சேர்த்தது. வார்னர் 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு சாம்கரன் பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். வார்னர் 39 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர்.

அடுத்துவந்த ரூஸோ, இந்த சீசனில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். களத்துக்குக்குள் வந்தது முதல், ரூஸோ அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரூஸோ தான் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரியும், 3வது பந்தில் பவுண்டரியும் விளாசி ரன்களைக் குவித்தார்.

ரபாடா வீசிய 13-வது ஓவரில் ரூஸோ 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரிகள் உள்ளிட்ட 17 ரன்களைக் குவித்தார். சாஹர், சாம்கரன் பந்துவீச்சையும் ரூயோ வெளுத்து வாங்கினார். பிரித்வி ஷா 36 பந்துகளில் அரைசதத்தையும், ரூஸோ 25 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர்.

பிரித்வி ஷா 54 ரன்கள் சேர்த்தநிலையில், சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷா, ரூஸோ கூட்டணி 54 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் பில் சால்ட் வந்து, ரூஸோவுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து பஞ்சாப் பந்துவீச்சை சிதறிடித்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் அணி 50 ரன்களைக் குவி்த்தது.

அதிலும் பிரார் வீசிய கடைசி ஓவரில் ரூஸோ இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் என 20 ரன்களை விளாசினார். எல்லீஸ் வீசிய 19-வது ஓவரில் சால்ட் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து துவம்சம் செய்தார்.

ரூஸோ 82(37பந்துகள், 6சிக்ஸர், 6பவுண்டரி) ரன்களுடனும், சால்ட் 26 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மோசமான ஃபீல்டிங்

டேவிட் வார்னர் கூறுகையில் “ பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டோம், இருப்பினும் வெற்றி கிடைத்துள்ளது. டாஸில் தோற்றாலும், நன்றாக பேட் செய்தோம். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. டெல்லியில் நடக்கும் அடுத்த ஆட்டத்திலும் இதேபோன்று விளையாட வேண்டும். நாங்கள் போதுமான அளவு பங்களிப்பு முழுமையாக அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: