'360 டிகிரி' வாண வேடிக்கையால் நம்பர் ஒன் அணிக்கு புதிய சிக்கல்

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக்ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றாலும், அது கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்த்த வெற்றி அல்ல.

குஜராத் டைட்டன்ஸ் அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்லலாம் என்று மும்பை இந்தியன்ஸ் கனவை கடைசி நேரத்தில் ரஷித் கான் தனது அதிரடியான பேட்டிங்கால் தவிடுபொடியாக்கினார்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியின் முடிவு பிளே ஆப் கனவுடன் இருக்கும் பல அணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யகுமாரின் ஒரு சிக்சரை பார்த்து ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கரே வியந்து போனதைக் காண முடிந்தது.

மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட காலத்துக்குப்பின் ஃபார்முக்கு வந்திருப்பது கூடுதல் பலமாகும். இந்த ஆட்டத்தில் தனது வழக்கமான ஷாட்களை ஆடிய ஹிட்மேன் 18 பந்துகளில் 29 ரன்கள்(2சிக்ஸர்,3பவுண்டரி) அடித்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

7-வது ஓவரை வீசிய ரஷித் கான் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(31) இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி நெருக்கடி அளித்தார். நடுவரிசை வீரர் நேஹல் வதேரா (15) ரன்னில் ஆட்டமிழந்தாலும், சூர்யகுமாருக்கு துணையாக ஆடிய விஷ்ணு வினோத்(30) சிறிய கேமியோ ஆடி, ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் அசத்தல் சதம்

360 டிகிரி வீரர் என்று வர்ணிக்கப்படும் சூர்யகுமார், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை நேற்று பதிவு செய்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்கை(சூர்யகுமார்), அடுத்த 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

மும்பை அணியின் கடைசி ஓவர் வரை சூர்ய குமார் 87 ரன்கள்தான் அடித்திருந்தார். கடைசி ஓவரில் ஒருசிக்ஸர் உள்ளிட்ட 10 ரன்களுடன் 5-வது பந்துவரை சூர்யகுமார் யாதவ் 97 ரன்களே சேர்த்திருந்தார், ஸ்கை சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஜோஸப் வீசிய கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி தனது முதல் ஐபிஎல் சதத்தை சூர்யகுமார் நிறைவு செய்தார்.

சூர்யகுமார் யாதவுக்கு 4-வது டி20 சதமாகும். இதற்கு முந்தைய 3 சதங்களும் சர்வதேச அரங்கில் அடிக்கப்பட்டவை, அந்த 3 சதங்களும் 50 பந்துகளுக்குள் சூர்யா அடித்திருந்தார்.

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல்முறையாக சதம் அடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் எனும் பெருமையை சூர்யகுமார் பெற்றார். மும்பை அணிக்காக இதுவரை 4 வீரர்கள் சதம் அடித்தநிலையில் 5வதுவீரராக ஸ்கை சேர்ந்தார்.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே சேர்த்து ஃபார்மில் இல்லை என்ற விமர்சனத்தைப் பெற்றார். ஆனால், கடைசி 7 ஆட்டங்களில் ஸ்கை 413 ரன்கள்(204பந்துகள்) சேர்த்துள்ளார். இந்த ஆட்டத்தில் சூர்ய குமார் 16-வது ஓவர் முடிவுவரை அரைசதம் அடிக்காமல் 47 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், ஆட்டத்தின் முடிவில் 49 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து கம்யூட்டர் கேம் போல் ஸ்கை விளையாடிவிட்டார்.

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

குஜராத் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை சந்தித்தப் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்னமாகவே இருந்தது. ஆனால், பேட்ஸ்மேன்களின் தோல்வி அந்த அணியால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்கூட ரன்களைச் சேர்க்க முடியவில்லை.

தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்(6), சாஹா(2), ஹர்திக் பாண்டியா(4) ஆகியோர் ஆட்டமிழந்தபோதே குஜராத் வெற்றி ஆட்டம் கண்டது. நடுவரிசை விஜய் சங்கர்(29), திவேட்டியா(14) , மனோகர்(2) ஆகியோர் தேவைப்படும் நேரத்தில் ஆடாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், நிதானமாக ஆடிய மில்லர் (41) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வான்ஹடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி, இந்தஆட்டத்தில் 8 ஓவர்களுக்குப்பின் பனிப்பொழிவு இருந்ததால், பந்தை பிடித்து மும்பை பந்துவீச்சாளர்களால் பந்துவீச முடியவில்லை, சரியான லென்த்தில் வீசமுடியவில்லை. அப்படி இருந்தும், விக்கெட்டுகளை குஜராத் அணி கோட்டைவிட்டுள்ளது.

48 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி, அடுத்த 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், 8-வது விக்கெட்டுக்கு அல்சாரி ஜோஸப், ரஷித் கான் கூட்டணி குஜராத் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது.

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

மும்பையின் கனவை சிதைத்த ரஷித் கான்

219 ரன்களை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களுடன் தோல்வியின் பிடியில் இருந்தது. எப்படியும் 120 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம், 80 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தலாம் என்ற கனவில் ரோஹித் சர்மா இருந்தார்.

ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ரஷீத் கான், அல்சாரி ஜோஸப் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிம்ம சொப்னமாக இருந்தது. கடைசியில் மரண அடி அடித்த ரஷித் கான் 32 பந்துகளில் 79 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், ரஷித் கான் கணக்கில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

அதாவது, ரஷித் கான் தான் சேர்த்த 79 ரன்களில் 72 ரன்களை சிக்ஸர், பவுண்டரி மூலமே சேர்த்து மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். 20 ஓவர்கள் முடிவுவரை ரஷித் கானை ஆட்டமிழக்க வைக்க மும்பை பந்துவீச்சாளர்களால் முடியவில்லை என்பது வியப்புக்குரியது. அல்சாரி ஜோசப் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

9-வது விக்கெட்டுக்கு ரஷித் கான், ஜோஸப் இருவரும் சேர்ந்து, 88 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் 9-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

கடைசிப் பந்துவரை போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. வலுவான பேட்ஸ்மேன் ரஷித் கானுக்கு துணையாக இருந்திருந்தால், ஆட்டம் நிச்சயம் குஜராத் டைட்டன்ஸ் பக்கம் மாறியிருக்கும்.

இந்த போட்டியில் சதம் அடித்து மும்பை வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்ய குமார் யாதவ் ஆட்டாயநாயகன் விருது வென்றாலும், ஆட்டத்தின் ஹீரோ ரஷித் கான். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும், கடைசி நேரத்தில் வெளுத்துவாங்கி 79 ரன்களும் சேர்த்து வான்ஹடே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ரோகித் முகத்தில் தோல்வி பயம்

ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த ஒவ்வொரு ஷாட்களைப் பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா முகத்தில் தோல்விப் பயம் தொற்றிக்கொண்டது, சிக்ஸர் அடித்தபோதெல்லாம் முகத்தை மூடிக்கொண்டும், தலையில் கை வைத்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஜோர்டான் பந்துவீச்சை ரஷித் கான் விளாசித் தள்ளியபோது, என்ன செய்வதென்று தெரியாமல் பலமுறை ஆலோசனைகளை ரோஹித் சர்மா வழங்கினார்.

15 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 30 பந்துகளில் 61 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. ஜோர்டானின் 17-வது ஓவரில் 2பவுண்டரி, ஒருசிக்ஸர் உள்ளிட்ட 15 ரன்கள், கேமரூன் க்ரீன் வீசிய 18-வது ஓவரில் 2 சிஸ்கர் உள்ளிட்ட 13 ரன்கள், கார்த்திகேயா வீசிய கடைசிஓவரில் 3 சிக்ஸர் உள்ளிட்ட 19 ரன்களை ரஷித் கான் சேர்த்தார்.

மும்பைக்கு ஜாக்பாட்

கேரள மாநில வீரரான விஷ்ணு 2017ல் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றாலும் வாய்ப்புப் பெறவில்லை, சன்ரைசர்ஸ், டெல்லி அணியால் வாங்கப்பட்டாலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

6 ஆண்டுகள் உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக ஆடியதையடுத்து, கடந்த ஏலத்தில் மும்பை அணி வினோத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. ஆனால், தனக்கு வழங்கப்பட்ட விலைக்கு நான் ஒர்த் என்பதை வினோத் வெளிப்படுத்திவிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ஆகாஷ் மத்வால்(ரூ.20லட்சம்), நேபல் வதேரா(ரூ.20லட்சம்), விஷ்ணு வினோத்(ரூ.20லட்சம்) ஆகியோரை அடிப்படை விலையில் வாங்கிப்போட்டது. இந்த 3 பேருமே இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை, வெற்றிக்கு துணையாக இருந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் மூத்த வீரர் பியூஷ் சாவ்லாவையும் ரூ.50 லட்சத்துக்கு அடிப்படைவிலையில் மும்பை அணி வாங்கிப்போட்டது. ஆனால், இந்த சீசனில் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீரர்களில் ஒருவராக சாவ்லா இருந்து வருகிறார். மும்பை அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் சாவ்லாவின் பங்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்த 4 வீரர்களை மும்பை அணி வாங்கியது ஜாக்பாட் அடித்தது போலத்தான்.

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

‘ஸ்கை’யால் பெருமை

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக்குப்பின் கூறுகையில் “ ஸ்வரஸ்யமான ஆட்டம், 2 புள்ளிகள் தேவையாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்து அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்ய நினைத்தோம், கடைசியில் வேறுவிதமாக முடிந்தது. பனிப்பொழிவு இருந்ததால் பந்துவீச்சாளர்களுக்கு சூழல் ஒத்துழைக்கவில்லை. சூர்யகுமார் ஆட்டம் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது.

இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்களோடு களமிறங்குவோம் என சூர்யாவிடம் தெரிவித்தேன், ஆனால் சூர்யா அவரே களமிறங்கினார். இந்த நம்பிக்கைதான் முக்கியம், இது பேட்ஸ்மேன்களுக்கு அவசியம். ஸ்கையை நினைத்து பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

“தீர்மானத்தோடு வந்தோம்”

ஆட்டநாயகன் விருது வென்ற சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “ இதுதான் எனது சிறந்த இன்னிங்ஸ். 200 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு முதலில் பேட் செய்தோம். சேஸிங் செய்தாலும், 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். 8 ஓவர்களுக்கு பின் பனிப்பொழிவு இருந்ததால் ஸ்ட்ரைட்டில் பந்தை அடிக்க முயலவில்லை.

மாறாக, தேர்டு மேன், ஸ்குயர் லெக் திசையில்தான் அடித்தேன். என்னுடைய 360 டிகிரி ஆட்டத்துக்குப்பின்னால் ஏராளமான பயிற்சி எடுத்திருக்கிறேன். நடுவரிசையில் களமிறங்கும்போது, என் மனதை தெளிவாக வைத்து வருவேன்” எனத் தெரிவித்தார்.

'திட்டமிடல் இல்லை'

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ பந்துவீச்சு, பேட்டிங்கில் எங்கள் அணியை ரஷித் கான் மாற்றிவிட்டார், நாங்கள் அதிகமாக முயற்சிக்கவில்லை, குழுவாக இன்று சிறப்பாகச் செயல்படவில்லை. சரியான திட்டமிடல் இல்லாததால், அதை செயல்படுத்தவும் முடியவில்லை. 200 ரன்களுக்குள் சுருட்ட நினைத்து கூடுதலாக 25 ரன்கள் வழங்கிவிட்டோம்.

வெற்றியை இழந்துவிட்டோம் என்று நினைக்கையில் ரஷித் கான் ஆட்டம் நிகர ரன்ரேட்டை தக்கவைத்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சூர்யகுமார். உங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தாவிட்டால் இதுதான் நடக்கும். பந்துவீச்சாளர்கள் மீதுதான் அழுத்தம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை

இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் மும்பைஅணி 5 முறை அடித்துள்ளது, ஒரு சீசனில் அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணி மும்பை அணியாகும்.

மும்பை வான்ஹடே மைதானத்திலும் 4-வதுமுறை தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் மும்பை இந்தியன்ஸ் சேர்த்துள்ளது, ஒரே மைதானத்தில் தொடர்ந்து 4முறை 200ரன்கள் சேர்த்தது என்பது ஆர்சிபி அணி 2016ல் பெங்களூரு சின்னசாமி அரங்கில் அடித்திருந்தது. அதன்பின் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அடித்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆப் சென்றுவிட்டதா?

MI vs GT

பட மூலாதாரம், BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றி மூலம் 12 ஆட்டங்களில் 7 வெற்றிகள், 5 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் நிகர ரன்ரேட் இன்னும் 0.117 என மைனசில்தான் இருக்கிறது.

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மும்பை அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன, இதில் இரண்டிலும் மும்பை அணி வென்றால், பாதுகாப்பாக ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லும், ஒரு வெற்றி மட்டும் பெற்றால், 16 புள்ளிகளுடன் இருக்கும், நிகர ரன்ரேட் அந்த அணிக்கு கடைசி நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆதலால், அடுத்துவரும் ஆட்டங்களில் நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியமாகும்.

மும்பை அணி வென்றதன் மூலம், ராஜஸ்தான், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் , ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட மும்பை அணி 16 புள்ளிகளை எட்டிவிடும். ஆனால், மும்பை அணிக்கு ஈடாக புள்ளிகளைப் பெற மற்ற அணிகளான ராஜஸ்தான் அடுத்த 2 போட்டிகளை வெல்லவேண்டும், ஆர்சிபிக்கு 3 வெற்றியும், லக்னோவுக்கு 3 வெற்றிகளும்,பஞ்சாப் அணிக்கு 3 வெற்றிகளும் தேவை நல்ல ரன்ரேட்டும் அணிகளுக்கு அவசியம். இதனால் அடுத்துவரும் போட்டிகள் நாக்அவுட் சுற்று போன்று, ஒவ்வொரு அணிக்கும் வாழ்வா சாவா ஆட்டமாக இருக்கும்.

நம்பர் ஒன் அணிக்கு புதிய சிக்கல்

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருந்திருக்கும். தற்போது குஜராத் அணியின் நிகர ரன்ரேட் 0.951 என்ற ரீதியில் இருந்த நிலையில் இந்த தோல்வியால் 0.762 ஆகக் குறைந்துவிட்டது.

ஆதலால், 16 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களில் நுழைவதற்கான தகுதியைப் பெற்றாலும், அடுத்துவரும் 2 போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களில் இடம் பெறுவதை உறுதி செய்யும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: