ஆகாஷ்வாணி: பிரசார் பாரதியின் புதிய சுற்றறிக்கை கூறுவது என்ன? தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏன்?

அகாஷ்வாணி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய அரசின் அதிகாரபூர்வ வானொலி சேவையான அகில இந்திய வானொலியின் பெயரை 'ஆகாஷ்வாணி' என்று மட்டுமே அழைக்க வேண்டுமென சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், வானொலி ஆர்வலர்களும் இந்தப் பெயர் மாற்றத்தை ஏற்கவில்லை.

இந்தியாவின் அதிகாரபூர்வ வானொலியாக உள்ள அகில இந்திய வானொலி(All India Radio)யின் பெயரை இனிமேல் 'ஆகாஷ்வாணி' என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்த வானொலியை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பின் தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக பிரசார் பாரதியின் கொள்கைப் பிரிவு, இந்தியா முழுவதுமுள்ள வானொலி நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், "1990ஆம் ஆண்டின் பிரசார் பாரதி சட்டத்தின் பிரிவு 2 -ஏ கூறுவதை அனைத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகாஷ்வாணி என்பது அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநரின் கீழ்வரும் நிலையங்கள், அலுவலகங்கள், பிற அமைப்புகள் போன்ற அனைத்தையும் குறிப்பிடுகிறது.

சட்டவிதிகளின்படி, பிரசார் பாரதியின் வானொலிப் பிரிவின் அதிகாரபூர்வ பெயர் ஆகாஷ்வாணி என்பதாகும். சட்டத்தின் இந்த விதியை மனதில் கொண்டு வானொலி அறிவிப்புகளில் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆகாஷ்வாணி என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும். அதிகாரபூர்வ தகவல் தொடர்புகள் அனைத்திலும் இந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.

அதேபோல, ஆங்கிலத்தில் அறிவிப்புச் செய்யும்போது "This is All India Radio" என்பதற்குப் பதிலாக "This is Akashvani" என்றே அழைக்க வேண்டும். எல்லா மொழிகளிலும் இதே பாணியையே பயன்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

பிரசார் பாரதியின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாட்டில் அரசியல் மட்டத்திலும் வானொலி ஆர்வலர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என கண்டனம் தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் எஸ். ராமதாஸ்.

"அனைத்திந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல் சார்ந்த கடிதங்களிலும் இனி 'ஆல் இந்தியா ரேடியோ' என்ற பதத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக 'ஆகாஷ்வாணி' என்ற பதம்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப்பிரிவு ஆணையிட்டுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பாகும்.

"இந்தியை திணிக்கும் முயற்சி"

அகில இந்திய வானொலி தலைமை அலுவலகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆங்கிலச் செய்திகளில் 'ஆல் இந்திய ரேடியோ' என்பதற்கு மாற்றாக 'ஆகாஷ்வாணி' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏற்க முடியாது. என்னென்ன வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு துடிக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் செய்திகளிலும், அறிவிப்புகளிலும் கூட 'ஆகாஷ்வாணி' என்று அறிவிக்க கட்டாயப்படுத்துவதாகும்.

திமுக டி.ஆர். பாலு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டி.ஆர். பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர்

வானொலி வேண்டுமானால் தேசிய அளவிலானதாக இருக்கலாம். ஆனால், அதன் நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவிலானவை. அதனால் அதற்கான அறிவிப்புகளும், வானொலி சேவையின் பெயரும் கூட உள்ளூர் மொழிகளில் தான் இருக்க வேண்டும்.

அனைத்திந்திய வானொலி என்று அழகுத் தமிழில் அழைப்பதற்கு மாற்றாக, ஆகாஷ்வாணி என்று இந்தியில் அறிவிப்பதைக் கேட்க சகிக்காது. அதையும் மீறி தொடர்ந்து இந்தியைத் திணித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது. எனவே, ஆகாஷ்வாணி அறிவிப்பு ஆணையை ரத்து செய்து விட்டு, தமிழில் ஆல் இந்தியா ரேடியோ என்பதை அனைத்திந்திய வானொலி என்று அறிவிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்." என்று அவர் கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்த முயற்சி தேவையில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை மோதலாக மாற்றாமல், யாருக்கும் பிரச்சனை வராமல் பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார் சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரான விஜய திருவேங்கடம்.

அகில இந்திய வானொலி

"நிறுவனத்தின் பெயரை மொழிபெயர்ப்பதற்கில்லை. அதனைத் தமிழில் தருகிறபோது தமிழ் மொழி மரபுக்கேற்பத் தருவது நல்லது. அப்பெயருக்கு ஏற்ற தமிழ்ச் சொல் இருக்குமேயானால் அந்தச் சொல்லை, நிறுவனப் பெயரின் விளக்கமாகப் பயன்படுத்தலாம்" என்கிறார் விஜய திருவேங்கடம்.

ஆகாஷ்வாணி என்ற சொல்லுக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்ததை நினைவுகூர்கிறார் அகில இந்திய வானொலியின் முன்னாள் அலுவலரான வெ. நல்லதம்பி.

"1958 ஆகஸ்டில் 'ரேடியோ' என்பதற்கு 'ஆகாஷ்வாணி' என்ற பெயரைப் பயன்படுத்துவதைக் கைவிட முடியாது என்பதை வலியுறுத்தி அப்போதைய ஒலிபரப்புத்துறை அமைச்சர் கேஸ்கர் ஒரு கடிதத்தை தமிழக அரசுக்கு எழுதினார். இதையடுத்து அந்த ஆண்டு டிசம்பரில் திருச்சியில் பாலசுந்தரம் என்ற இளவழகன் என்பவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 1959 மே மாதம் என். ரங்கரத்தினம் என்பவர் உண்ணாவிரத்தில் இறங்கினார்" என்கிறார் நல்லதம்பி.

இப்போது அனுப்பியுள்ள ஆணையில் நிலையங்களுக்கும் அலுவலகங்களுக்கும்தான் ஆகாஷ்வாணி என்ற பெயரைக் குறிப்பிட வேண்டும் என்கிறார்கள். ஆகாஷ்வாணி என்ற பெயரே வரக்கூடாது என்பதுதான் எப்போதுமே தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருந்தது என்கிறார் நல்லதம்பி. "பிரதமர் தாய் மொழியை வளர்க்க வேண்டும் என்கிறார். அப்படியானால் வானொலி என்ற பெயர் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

இந்தியாவில் வானொலியின் பெயர் மாற்றங்கள்

அகில இந்திய வானொலி

1930ஆம் ஆண்டில் தொழில்துறை மற்றும் தொழிலாளர் துறையின் கீழ் இந்தியன் ஸ்டேட் பிராட்காஸ்டிங் சர்வீஸ் தனது சேவையை சோதனை அடிப்படையில் துவங்கியது. பிபிசியின் மூத்த தயாரிப்பாளராக இருந்த லயனல் ஃபீல்டன் என்பவர் 1935ல் ஒளிபரப்புக் கட்டுப்பாட்டாளராக (controller of Broadcasting) நியமிக்கப்பட்டார்.

ஐந்தாண்டுகள் இந்தப் பணியில் இருந்த ஃபீல்டன், 'இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்' என்பதற்குப் பதிலாக 'ஆல் இந்தியா ரேடியோ' என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென அப்போதைய வைசிராய் லார்ட் லிங்க்தோவை தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

அதன்படி, 1936 ஜூன் 8ஆம் தேதியன்று இதற்கு All India Radio என்ற பெயர் ஏற்கப்பட்டது. 1941ல் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஆல் இந்தியா ரேடியோ கொண்டுவரப்பட்டது.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அகில இந்திய வானொலியின் அப்போதைய தலைமை இயக்குநர் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், ஆல் இந்தியா ரேடியோ என்பதை எந்த இந்திய மொழியிலும் மொழிபெயர்க்கக்கூடாது என உத்தரவிட்டார். இதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சி வானொலியின் நிலைய இயக்குநராக இருந்த ஜி.டி. சாஸ்திரி வானொலி நிலையம் என்ற சொல்லை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை.

1957ல்தான் முதன் முறையாக ஆகாஷ்வாணி என்ற சொல்லை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பரில் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு உத்தரவில் இந்திய மொழிகள் அனைத்திலும் ஆகாஷ்வாணி என்றே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆங்கில நிகழ்ச்சிகளில் மட்டும் ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த திருச்சி நிலைய இயக்குநர், அமைச்சகத்தின் உத்தரவு செயல்படுத்தப்படுவதாகவும், சென்னை மாகாணத்தில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒளிபரப்புத்துறை அமைச்சரும் முதலமைச்சர் காமராஜரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ரேடியோ என்று வரும் இடங்களில் வானொலி என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு மே மாதம் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் கமிட்டி வெளியிட்ட ஒரு உத்தரவில் அகில இந்திய வானொலியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் 'ஆகாஷ்வாணி' என்றே பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அப்போதைய ஒளிபரப்புத் துறை அமைச்சர் வசந்த் சாத்தே, இதனை உத்தரவாகப் பிறப்பித்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் புயலையே கிளப்பியது. இதையடுத்து அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் வெளிநாட்டில் இருந்த பிரதமர் இந்திராவிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல, அமைச்சரின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போதைய உத்தரவு வருவதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்கள் அனைத்தும் "ஆல் இந்தியா ரேடியோவின்" என்று கூறி, வானொலி நிலையத்தின் பெயரைக் குறிப்பிடுவது வழக்கம். உதாரணமாக, ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையம் என்று குறிப்பிடப்படும்.

ஆகாஷ்வாணி என்ற பெயர் வந்தது எப்படி?

அகில இந்திய வானொலி

1950களுக்கு முன்பாக, ஆகாஷ்வாணி என்ற பெயர் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1930களில் மைசூர் ராஜ்ஜியத்தில் 'ஆகாஷ்வாணி' என்ற பெயரில் ஒரு வானொலி நிலையம் இயங்கிவந்தது. அதேபோல, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் இந்த வார்த்தையை பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

1939ல் கல்கத்தா வானொலி நிலையத்தின் துவக்க நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். தன்னால் அந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போன நிலையில், வானொலி என்பதைக் குறிப்பிட 'ஆகாஷ்வாணி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கடிதம் ஒன்றை எழுதினார். இதற்குப் பிறகு அந்த வார்த்தை, வானொலிக்கு இணையான வார்த்தையாக பிரபலமானது.

தற்போது 262 ஒளிபரப்பு நிலையங்களுடன் இந்தியாவின் 92 சதவீத நிலப்பரப்பில் கேட்கும்வகையில் செயல்படுகிறது அகில இந்திய வானொலி. 23 மொழிகளிலும் 146 பேச்சு வழக்குகளிலும் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: