இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: அமித் ஷா அறிக்கையால் கொந்தளிக்கும் தென்னிந்திய மாநிலங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்

- அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது.
- இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் இந்தியிலோ பிராந்திய மொழிகளிலோதான் இருக்க வேண்டும், விரும்பினால் ஆங்கிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
- அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டுமென்ற பரிந்துரை இந்தி பேசாத மாநிலத்தவர்களின் வாய்ப்புகளை தடுக்கும் என விமர்சிக்கப்படுகிறது.
- இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியில் பயிற்றுவிக்கப்பட்டால் அங்கு இந்தி தெரியாத மாணவர்கள் சென்று படிப்பது கடினமாகும் என அச்சம் எழுந்துள்ளது.
- 1976ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் விதிகள் தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மூலம் மட்டுமே பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டுமென அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருப்பது, இந்தி பேசாத மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கடும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் கடந்த மாதம் அளித்திருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் இந்தியிலோ அல்லது பிராந்திய மொழியிலோதான் கற்பிக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விரும்பினால் வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் ஒன்று இந்தியிலோ அல்லது பிராந்திய மொழிகளிலோதான் இருக்க வேண்டுமென்ற புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியின் பயன்பாட்டைப் பொறுத்து இந்திய மாநிலங்கள் A, B, C எனப் பிரிக்கப்பட்டு, அதில் A பிரிவு மாநிலங்களில் இந்தி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.
உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, அந்தமான் நிகோபார் ஆகிய மாநிலங்கள் A பிரிவின் கீழ் வருகின்றன. குஜராத் மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டீகர், டாமன், டையூ, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவை B பிரிவின் கீழ் வருகின்றன. பிற மாநிலங்கள் அனைத்தும் C பிரிவின் கீழ் வருகின்றன.


அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை தனது பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இது 11வது அறிக்கையாகும்.
1963ஆம் ஆண்டில் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, 1976ல் இந்தக் கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் மக்களவையில் இருந்து இருபது பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெறுவார்கள். அலுவல் ரீதியில் இந்தியைப் பயன்படுத்துவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குழு ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கும்.
என்னென்ன பரிந்துரைகள்?
இந்தக் குழு தற்போது அளித்திருக்கும் அறிக்கையில், 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டுமென்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் இந்தி மொழிபெயர்ப்பை வழங்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வேண்டுமென்றே இந்தியில் பணியாற்றவில்லையென்றால் முதலில் எச்சரிக்க வேண்டுமென்றும் அந்த எச்சரிக்கையை மீறி நடந்தால், அவர்களது வருடாந்திர பணிக்குறிப்பேட்டில் இது பற்றிக் குறிப்பிட வேண்டும்.
மேலும், மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளில் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் பேச வேண்டும். மத்திய அரசு ஒருங்கிணைக்கும் எல்லா நிகழ்வுகளிலும் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் அழைப்பிதழ்கள், பேச்சுகள், நிகழ்ச்சித் தொகுப்பு ஆகியவை இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
உள்துறை அமைச்சர் தலைமையிலான இந்தக் குழு அளித்த அறிக்கை அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும் ஊடகங்களில் இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் தற்போது இந்தப் பரிந்துரைகளுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
இந்தச் செய்தி வெளியானவுடன், "இது இந்திய மொழிகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அப்பட்டமான தாக்குதல். இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி" எனக் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.
இதற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தப் பரிந்துரைக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், M. K. Stalin facebook page
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ, அவசியமோ எங்கிருந்து வந்தது? ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?
இந்தி படித்தால் மட்டுமே வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.
இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. அந்தத் தனித்துவமான பண்பாட்டுச் சிறப்பைப் பாதுகாக்கவும், இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காப்பதற்குமான வேலியாகத்தான் ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி, ஒன்றிய அரசின் இணை அலுவல் மொழியாக நீடிக்கிறது.


இந்தியைத் திணிக்க முற்பட்டபோது அதனை எதிர்த்து 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் தாய்மொழியாம் தமிழைக் காக்கத் தீக்குளித்தும், துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயிர்த் தியாகம் செய்த தீரமிகு இளைஞர்களின் வரலாற்றை மறந்து விடவேண்டாம். கடந்த செப்டம்பர் 16ஆம் நாள் 'இந்தி திவஸ்' கடைப்பிடிக்கப்பட்டபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திதான் அலுவல் மொழி என்றார். இப்போது அவர் தலைமையிலான குழு இந்தியைப் பொதுமொழி என்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாகத் திணிப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்." என்று கூறினார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இது தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். "இளம் தலைமுறையினர் தங்கள் தாய் மொழியைத் தவிர வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றாலும், ஏதாவது ஒரு மொழியைத் திணிப்பது போன்ற உணர்வு லேசாக ஏற்பட்டாலும்கூட பொதுமக்களிடமும் வேலை வாய்ப்புத் தேடுவோரிடமும் சந்தேகங்களை எழுப்பும். தேவையான சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும்
இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. எந்த ஒரு மொழியையும் இதுதான் நாட்டின் மொழி என்று கூற முடியாது.
அரசுத் துறையில் நம்முடைய இளைஞர்களுககு மிகக் குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கின்றன. அதிலும் ஒரு பிரிவினரை மொழி காரணமாக தள்ளிவைப்பது இந்த சமூகத்திற்கு நன்மை பயக்காது" என்று கூறியிருக்கிறார் பினராயி விஜயன்.

பட மூலாதாரம், Pinarayi Vijayan facebook
இந்திய அரசை ஆதரிப்பவர்கள் சொல்வதென்ன?
எதிர்பார்த்ததைப் போலவே தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றன.
ஆனால், இந்த அறிக்கையை ஆதரிப்பவர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதாவது, இந்தியை முழுமையாகப் பயன்படுத்தப்படும் A பிரிவு மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் மட்டும்தான் இந்தி வழி கல்வி இருக்கும். மற்ற மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் அந்தந்த மாநில மொழிகளில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆகவே இந்த எதிர்ப்பு தேவையற்றது என்கிறார்கள் அவர்கள்.
"இது ஏமாற்றக்கூடிய வாதம். இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை என்பது அகில இந்திய அளவில்தான் நடக்கும். ஆகவே எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பார்கள். தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு படிப்பார்கள். அங்கு இந்தியில் பாடம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?" என்கிறார் சு. வெங்கடேசன்.
மேலும், மருத்துவக் கல்வியை இந்தியில் பயில்வதற்கு, தேர்வுகளை எழுதுவதற்கு இரு மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொறியியல் மற்றும் மருத்துவப் பாடங்களை தமிழில் பயிலவும் தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார் வெங்கடேசன்.
மேலும், மத்திய அரசு வெளியிட்ட அலுவல் மொழி விதிகள், 1976ன் படி, மாநிலங்களே A,B,C எனப் பிரித்து இந்தியை அறிமுகப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 1976ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் விதிகளின்படி, அந்த விதிகளின் துவக்கத்திலேயே, தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை என்பதால், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே முன்வைக்காமல், இந்த அறிக்கைகைய மத்திய அரசு நேரடியாக அமல்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
#Hindiimposition என்ற ஹாஷ்டாகின் கீழ் இந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துகள் தற்போது பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













